அறிவியல் பல நிலைகளில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதன் பெரும் மாற்றத்தையும் போதுமான வளர்ச்சியையும் அடைந்ததாகக் கூறமுடிய வில்லை; மனிதனின் அறிவியலறிவு, சந்திர மண்டலத் தையும், பிறமண்டலங்களையும் அடையும் செல்வாக்குப் பெற்றிருந்த போதும், மனிதன் இன்னும் மந்திர- தந்திரங்களில் பெரும் நம்பிக்கை கொண்ட வனாகவே இருந்து வருகிறான்;
அறிவியலைப் போதிக்கும் பெரும்பான்மையான ஆசிரியர்களே அவற்றில் நம்பிக்கை கொண்டிருக்கும்போது, வெகுமக்களை தாம் எப்படிக் கண்டிக்க முடியும்? அறிவியல் ஒரு பக்கம் அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
மற்றொரு பக்கம் அதனைச் சற்றும் நோக்காமல், உணராமல், பெரும்பாலோர் பழைய மூடநம்பிக்கையைப் பின்பற்றுபவராகவே இருந்து வருகின்றனர். மூடநம்பிக்கையைப் பின்பற்றுவதால் மனித குலத்திற்கு காலந்தோறும் அவ்வப்போது இழப்புகளும் கேடுகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், வெகுமக்கள் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரைப் போன்று மூடநம்பிக்கையில் ஆழ்ந்துள்ளனர். இந்த மூடநம்பிக்கை, அவர்களுக்கு விஞ்ஞானத்தை ஏற்காத புதியதை ஏற்காத மன நிலையை ஏற்படுத்தி விடுகிறது.
மூடநம்பிக்கைகள் பெருகும் வாய்ப்புள்ள இந்நிலையில் பாடத்திட்டத்தில் விஞ்ஞானத்தை இன்னும் விரிவாக விளக்கும் நிலையை உருவாக்கிட வேண்டும். அதே சமயத்தில் மூடநம்பிக்கைகள் உண்மையில்லாதவை, அவை தவறானவை என்ப வற்றை மக்களிடத்தில் ஆதாரத்தோடு அறிவுப் பிரச்சாரம் செய்திடல் வேண்டும். இவ்வாறு இரு முனைகளில் நம் சிந்தனையைச் செயலாக்கிட வேண்டும். நம் சமுதாயத்தில் இப்படி இருமுனை களில் தம் சிந்தனை களைச் செயல்படுத்தி யவர் தான் சிங்கார வேலர். அதில் அவர் மூத்த முன்னோடி; தந்தை பெரியாரும் அப்படிப்பட்டவரே! மூடநம்பிக்கையால் நம் சமுதாயம் எப்படிக் கேடு அடைந்துள்ளது என்பதைச் சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொண்டு மேலே செல்வோம்.
1931-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் ஒரு சிற்றூரில் ஒரு குழந்தை கிணற்றில் விழுந்து விட்டது; கிணற்றைச் சுற்றி வாழ்ந்தவர்கள் தங்களை மேற்சாதி யாகக் கருதிக் கொண் டவர்கள். கிணற்றில் விழுந்த குழந்தை தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தை. அந்தக் குழந்தை கிணற்றில் விழுந்ததால் உயர் சாதி யினர் தீண்டாமையைக் கருதி, தீட்டெனக் கூறி வாளாயிருந்து விட்டனர்.
அப்போது அங்குச் சுற்றுப்பயணம் செய்த மேல் நாட்டினர் ஒருவர் மிகவும் வெகுண்டு குழந்தையை ஏன் காப்பாற்றவில்லையென வினவியபோது, உயர்சாதியினர் காப்பாற்றினால் தீட்டு ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளனர். தீண்டாமை, தீட்டு என்பவற்றை நெடுநேரம் அவருக்கு விளக்கியுள்ளனர். ஆனால், அவருக்கு ஒன்றும் புரியவில்லை; பின்னர் தான் அது சாதி மூடநம்பிக்கை என்பதைப் புரிந் துள்ளார்.
கஜினி முகமது குஜராத்திலுள்ள சோமநாத புரம் கோயிலில் கணக்கிலடங்கா தங்கம், வெள்ளி, வைரம் போன்ற பொருட்கள் உள்ளன என்பதைக் கேள்வியுற்று அக்கோயிலை முற்றுகையிட்டபோது, சோமநாதபுரத்து அரசன் வெளியே வந்து போரிடவோ, சரணடையவோ முயலாமல் கோயி லுக்குள் இருந்துகொண்டே, காவலர் களோடு கடவுளுக்குப் பூசை செய்து “எங்களைக் காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்” என்று வேண்டிக் கொண்டே இருந் தானாம்.
சில நாட்களுக்கு அப்பால் கஜினி முகமது, கோயிலின் வாயிலை உடைத்து உள்ளே சென்று அனைத்துப் பொருள் களையும் கொள்ளையடித்த தோடு எல்லோரையும் கொன்று உள்ளான்; சரண் அடைந்திருந்தால் அவர் களுக்கு உயிராவது மிஞ்சி யிருக்கும். ஆனால், கடவுள் காப்பாற்றுவார் என்ற மூடநம்பிக்கையால் உயிரும் போயிற்று; செல்வமும் போயிற்று.
இவைபோன்ற நிகழ்ச்சிகள் இந்திய வரலாற்றில் ஏராளம்; ஏராளம்; இவை கணக்கில் அடங்காதவை. இவற்றால் நம் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளும், நட்டங்களும், பின்னடைவுகளும், சாவு களும், அவமானங்களும் கணக்கற்றவை. இவற்றை யெல்லாம் எண்ணியே சிங்காரவேலர் மக்களிடையே அறிவியல் சிந்தனையை, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க நாளும் சிந்தித்துவந்தார். குறிப்பாக, மதம் சார்ந்த எண்ணங்கள் மக்களுக்கு எத்தகைய கேடு களை விளைவித்து உள்ளன என்பவற்றை அவர் கீழுள்ளவாறு விளக்கி யிருப்பது நம் கவனத்திற்கு உரியது.
“நமது நாடு விஞ்ஞான ஆராய்ச்சியைக் கை விட்டதன் முக்கிய காரணம் என்னவெனில் கற்பனை உலகத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நோக்கமேயாகும். நாம் வாழ வேண்டிய உலகமே பொய்யென்றால் அந்தப் பொய்யுலகை ஏன் விசாரித்தறிய வேண்டும்? என்ற மனப்பான்மையை இந்த மருள் வளர்த்தே வந்திருக்கிறது. இந்த மருளால் நமது நாடும் மற்ற உலக நாடுகளும் எவ்வளவு பொருளாதார நாசத்தை உண்டாக்கி வருகின்றன இந்த மருளை ஆதாரமாகக் கொண்ட மதங்களால் எத்தனை கோயில்கள், குருக்கள், மௌலானாக்கள், பிஷப்புகள் வயிறு வளர்க் கின்றனர். எத்தனை சோம்பேறிகள், பிச்சைக் காரர்கள், சன்னியாசிகள் உபயோக வேலை செய்யாமல் பாடுபடுவோருடைய உழைப்பில் ஜீவித்து வாழ்கின்றார்கள்; இவ்வளவு மனக்கிலேசமும், பொருளாதார நஷ்டமும், சோம்பேறித்தனமும், குழப்பமும், சண்டையும் இந்த மருளால் விளைந்த தென்றால் இந்த மருளை நீக்கி உலக ஞானத்தைப் பெருகச் செய்யும் விஞ்ஞானத்தை ஏன் வளர்க்க லாகாது? இந்த மருளின் ஆபாசத்தையும் அதனால் விளையும் தீமைகளையும் மக்களும் அறிஞர்களும் சிந்திக்கும்வரை இந்த மருள் மக்களை வாட்டியே தீரும்.” (சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் - பக் 1221)
மூடநம்பிக்கைகளை அடியோடு களைய வேண்டு மென்றால் விஞ்ஞான ஒளி மக்களிடம் பரவ வேண்டுமென்பதையே அவர் திரும்ப- திரும்ப வலியுறுத்தி வந்துள்ளார். அவர் எழுதிய எல்லா நூல்களிலும் அந்த உண்மையை வலியுறுத்தி யுள்ளார். ஓர் அரசியல் தலைவராக, தொழிற்சங்க இயக்க முன்னோடியாக இருந்த அவர், தாம் எழுதிய மொத்தக் கட்டுரைகளில் செம்பாதிக்கு மேல் அறிவியல் சார்ந்த கட்டுரைகளையே எழுதி யுள்ளார். இதனைச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.
விஞ்ஞானத்தைப் பரப்புவதில் அவர் எத்துணை அக்கறை கொண்டிருந்தார் என்பதை இதன்வழி நன்கு உணரலாம். தமிழ்ச் சமுதாயத்தில் அறிவியலை விளக்கிக் காட்டி, அதனைப் பரப்ப முயன்ற முதல் முன்னோடி அவர்தான். “விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்” என்றொரு தனி நூலே வெளிவந்துள்ளது. இந்நூலை முதன் முதலில் தந்தை பெரியார் தான் வெளியிட்டார். அந்நூல் அன்றிலிருந்து திராவிடர் கழகம் இப்போதும் வெளியிட்டுக் கொண்டு வருகிறது.
தமிழ்ச் சமுதாயம் நன்கு முன்னேற வேண்டு மென்றால் அவர்களுக்குப் புத்தக வாசிப்பு மிக இன்றியமையாதது என்பதை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழர்கள் வாசிக்க வேண்டு மென்பதில் அதுவும் விஞ்ஞானம் குறித்து அவர்கள் வாசிக்க வேண்டுமென்பதில் அவர் மிகக் கவலை கொண்டிருந்தார். அந்தக் கவலையைக் குடியரசில் 17-9-1933-இல் வெளியிட்டிருந்தார். அது குறித்து அவர் தம் எண்ணத்தைச் சிறு அறிக்கையாக வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையைக் கீழே காணலாம்.
“ஞானமின்றி எந்த இயக்கமும் உலகில் நிலைக்காதென்பது நமது கால அனுபவ மதங்கள் தழைத்தோங்குவதும், மதங்களைக் குறித்து எழுதப் படும் புத்தகங்களாலென அறிய வேண்டும். மூட நம்பிக்கைகள் இன்றும் உலகமெங்கும் பரவி யிருத்தலுக்குக் காரணம் பொய் நம்பிக்கைகளை வளர்க்கும் புத்தகங்களேயாகும். மெய்ஞ்ஞானமும் பகுத்தறிவும் உலகில் அதிகமாகப் பரவாததற்கு முக்கிய காரணம் அவைகளைப் பற்றிப் பிரசுரிக்கப் படும் புத்தகங்கள் அதிகமாக விலைபடாமையால் என அறிக.
உலகில் போலி தத்துவஞானம் (PSUEDO PHILOSOPHY)) தழைத்தோங்குவதும் குப்பை குப்பையாக அதனைப் பற்றி விற்பனையாகும் புத்தகங்களாலெனவும் அறிதல் வேண்டும். இவ்வாறாக நமது வாழ்வின் சுவைக்குதவாத புத்தகங்களைக் கோடானகோடி மக்கள் வாங்கிப் படிப்பதால் மூடநம்பிக்கைகளும், மூடப்பழக்க வழக்கங்களும் அடிமைத்தனமும், அறிவின்மையும் உலகில் நீடித்து வருகின்றன.
மேற்குறிப்பிட்ட விஷயமுகத்தானே நமது தென்னாட்டு நிலையைக் குறிப்பிட வேண்டு மானால், இந்நாட்டு மக்களும் அபாய நிலையில் தான் இருக்கின்றார்கள். சுயமரியாதை இயக்கம் ஒன்றே பகுத்தறிவை வளர்ப்பதற்கும், மூடத்தனத்தை நீக்குவதற்கும் உடன்பட்டுள்ளது. ஆனால், அதன் இலக்கியப் புத்தகங்கள் விலைபடும் விஷயம் அதிகமாகக் கோரிக்கையை வளர்ப்பதாக இல்லை.
நமது சமதர்மப் பிரசுரங்களும், பதினாயிரக் கணக்கான நிலையாக வேண்டியிருக்க, இதுவரை ஆயிரக்கணக்காகக்கூட விலையாகவில்லை. இது வரை சில தோழர்கள் பொருளுதவியால் சில புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. அவை களை விற்பதற்காகக் கொண்டுபோன தோழர்கள் அவைகளின் விற்பனை குறித்து யாதொரு தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்தக் கஷ்டத்தில் வேறு எந்தப் புத்தகங்களை அச்சிடுவது? இந்தக் கேவல நிலைமையைக் குறித்தே இனி அச்சிடும் புத்தகங்களைப் போதுமானவர்களின் வேண்டு கோள் இல்லாமல் அச்சிடப் போவதில்லை என்று தீர்மானித்தோம். சுயராஜ்யம் யாருக்கு? என்ற இரண்டு பாகப் புத்தகங்கள் 5000- இன்னும் இருப்பில் (STOCK) இருந்து வருகின்றன.
அதன் மூன்றாம் பாகம் அச்சுக்குத் தயாராக உள்ளது. மனித உற்பவத்திற்கு இதுவரை 100-க்குக் குறைவாகவே கேட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் என்ன செய்வதென்று ஒன்றும் தோன்றவில்லை. படிக்கின்ற வர்கள் முன்வந்தால் ஒழிய, நமது சமதர்மம் மழலையில் தான் இருந்துவரும். குடியரசு 17-9-1933
புத்தகங்களைப் படிக்காததனாலும், அவற்றின் கருத்து பரவாவதாலுமே மூடநம்பிக்கை வாழ்ந்து வருகிறது என்கிறார். மற்றும் பகுத்தறிவுக்கு மாறான புத்தகங்கள் மக்களிடையே செல்வாக்குப் பெருகு வதாலும் மூடநம்பிக்கை நிலைத்து வருகிறது என்கிறார். இவ்விரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று விரும்பியுள்ளார்.
அவர், முன்னர் எழுதிய “சுயராஜ்யம் யாருக்கு?” என்ற நூலின் படிகள் 5000- வாங்கப்படாமல் உள்ளனவென்றும், புதியதாக வெளியிட இருக்கும் “மனித உற்பவம்” என்ற நூலுக்குப் பலமுறை விளம்பரம் கொடுத்திருந்தும் 100-க்குக் குறை வாகவே பதிவு செய்திருப்பதையும் நமக்கு நினை வூட்டுகிறார். இதனால் கவலையுற்ற அவர் படிக் கின்றவர்கள் பெருக வேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தி உள்ளார். அவர் தெளிவுறுத்தி ஏறக்குறைய 80 ஆண்டுகள் கடந்தும் நம்நாடு இன்னும் அதே நிலையில்தான் உள்ளது.
தமிழகத்தில் பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் புத்தகக் காட்சிகளில் சமையல் குறிப்பைப் பற்றிய புத்தகங் களும், சோதிடத்தைப் பற்றிய புத்தகங்களுமே அதிகமாக விற்பனையாகியுள்ளதாகக் கூறுகின்றனர். இக்குறிப்பு எதனைக் காட்டுகிறது? இன்னும், சமூக முன்னேற்றம் அறிவியல் உண்மை ஆகியவை குறித்து நம் மக்கள் போதுமான அளவு அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இது பெரிதும் வருந்தத்தக்கது; இந்நிலையை நாம் மாற்ற முனைய வேண்டும்; அதுவே நாட்டுக்கு நல்லது. இதனை எண்ணித்தான் அக்காலத்திலேயே சிங்கார வேலர் கவலை கொண்டுள்ளார்.