சோவியத்து நாட்டில் வினைஞர் அரசு
யாவினும் மேலாய் ஆண்ட காலை
வளரும் நாட்டினர் உயர்தொழில் நுட்பம்
வளம்பெறப் பெற்றனர் நட்பின் பேரிலே
உள்ளும் புறமும் வஞ்சம் நிறைந்த
குள்ள நரிகளால் வீழ்ந்த பின்னும்
முன்பே முடித்த சாகசப் பணிகள்
இன்றைய சந்தையின் அரசுக்குத் தானும்
உதவிக் கிடக்கும் வசதியாய் உளவே
(சோவியத் நாட்டில் தொழிலாளர்களின் சோஷலிச அரசு (உலகில்) ஆற்றல் வாய்ந்த அரசாக ஆண்டு கொண்டு இருந்த பொழுது,வளரும் நாடுகள் நட்பின் அடிப்படையில் உயர்ந்த தரம் கொண்ட தொழில் நுட்பங்களைத் தங்கள் நாடு வளம் பெறும் பொருட்டு எளிதாகப் பெற்றுக் கொண்டு இருந்தன. (சோவியத் நாட்டிற்கு) உள்ளேயும் வெளியேயும் இருந்த வஞசம் நிறைந்த எதிரிகளால் (அவ்வரசு) வீழ்ந்த பின், (சோஷலிச முறை அமலில் இருந்த) அன்றைய நாட்களில் செய்து முடிக்கப்பட்ட (முதலாளித்துவ அறிஞர்கள் முடியவே முடியாது என்று அறுதியிட்டுக் கூறிய பாதாள ரயில் போன்ற) பல சாகசம் நிறைந்த பணிகள் இன்றைய முதலாளித்துவ அரசுக்கும் உதவி செய்யும் வசதிகளாக இருக்கின்றன.)
- இராமியா