கீற்றில் தேட...

குடை பிடித்து வந்தவன்
"நல்ல மழை" என்றான்
ஒதுங்கி நின்றவன்
"பேய் மழை" என்றான்
தெருவோர வியாபாரி
"சனியன் பேஞ்சி பொழப்ப கெடுக்குது "
என்றான்
உழுது உழைப்பவன்
"எஞ்சாமி ..வயிறு குளிர பொழியுது "
என விழுந்து வணங்கினான்
மொட்டை மாடியில்
துணியெடுக்கப் போன அம்மா
"கெரகம் புடிச்ச மழை செத்த பொறுத்து பெய்யக் கூடாது ?"
என சலித்துக்கொண்டாள்
"வண்ணமற்ற தூரிகையால்
வான் எழுதும் நீரோவியம் "
என்று குறித்துவைத்தான்
கவிஞன் ஒருவன்
ஜன்னல் வழியே கைகளால்
மழையை கொண்டாடும் சிறுவர்கள்
"ஹய்யா மழை மழை .." என குதூகலித்தார்கள்
மழை எப்போதும் போல
மழையாகத்தான் வந்தது
மழை எப்போதும் போல
மழையாகத்தான் இருந்தது
மழை என்பது
மழை மட்டும் தான்
என்பதை
எப்படி சிலருக்கு புரியவைப்பது ?

- க.உதயகுமார்