‘மழை வரும் பாதையில்..’ கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் கிருஷி. திருநெல்வேலிக்காரரான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆவார். “ உள்ளங்கையில் பிடித்துச் சேமிக்க முடியாதபடி பூமியெங்கும் சிதறுகின்றன நனைந்த இந்த ஈர வார்த்தைகள் விதைகளாக” என்கிறார் பவா செல்லதுரை! இப்புத்தகத்திற்குக் கல்யாண்ஜி அழகான அணிந்துரை தந்துள்ளார்.
இத் தொகுப்பிலுள்ள 53 கவிதைகள் வாழ்க்கையின் வசீகரத்தை வாழ்ந்து பார்த்த ஒருவரின் கலைப்பதிவாக நமக்குச் சொல்கின்றன. எளிமையும் நேரடித் தன்மையும் கொண்டவை சில. சில பூடகத்தன்மை கொண்டவை. சுயமான கவிமொழி கொண்ட இவரது வெளிப்படுகள் புதுமையும் அசாதாரணக் கருத்தேற்றங்களையும் கொண்டவை. பேசாப் பொருள்களைப் பேச வைத்தல் உத்தியும் கையாளப்பட்டுள்ளது.
‘சொற்கள்’ ஒரு முக்கியமான கவிதை!
சாம்பல் மூடிய கண்கள்
தபஸியின் மூடிய இமையில்
கனிந்து கொண்டிருக்கும் விழிகள்
என்ற வரிகளில் ஊடுருவிச் செல்லும் வித்தியாசமான பார்வை தெரிகிறது.
பூவிதழ்ச் சொற்களைக்
கண்டு கொள்கின்றன.
வண்டுகளும் தேனீக்களும்
என்பதில் ஒரு நுணுக்கம்… ‘பூவிதழ்ச் சொற்கள்’ என்பது ஒரு மௌன அழைப்பு. கவிதையின் எடுப்பில் ஆங்காங்கே புதமையான கருத்துகள் மனத்தை ஈர்க்கின்றன.
காலத்தின் தூசி படிந்து
பாசியேறிய பழஞ்சொற்கள்
அகராதி மடிப்பில்
சுருக்கம் விழாமல்
சுடர் விடக் காத்திருக்கின்றன
போன்ற வரிகள் இதமானவை.
அன்னையின் மூச்சிலிருந்து
…………………………….
…………………………….
பால்மணம் வீசும் - அவரவர்
தாய்மொழி!
என்பதில் ‘பால்மணம்’ என்ற சொற்கள் இனிமை கூட்டுகின்றன.
‘கல்’ கவிதை, ஒரு மொட்டு மெல்ல மெல்ல மலர்வது போன்ற வளர்ச்சி கொண்டது. தன் கூற்றில் அமைந்துள்ளது.
ஜெயிக்க முடிவதில்லை ஒரு போதும்
கலைஞனை
என்பதில் கல்லின் இசைவு சிருஷ்டிக்கான கதவு திறப்பதை மகிழ்ந்து அனுமதி அளிப்பது போல் உள்ளது.
வீழ்கின்ற உளியின்
ஒவ்வொரு மெல்லோசையிலும்
ஜீவ களை துள்ளுகிறது என்
மேனியெங்கும்
என்ற கருத்து கல்லுக்கு உயிர் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாத ஒரு நம்பிக்கையை முன் வைக்கிறது. அடுத்த வரிகள் கவிதையை இன்னும் ஒருபடி மேலே உயர்த்துகின்றன.
கலைஞனின் ஆலிங்கனத்தில்
இதயம் துடிக்க
இளைய கன்னியாகிறேன்
என்பதில் நமக்குக் கிடைக்கும் முடிவுகள் இரண்டு. கல்லின் நோக்கமும் இணைகிற புள்ளி, கலைத் தாகம் தீர்த்து அமைதி நிலவச் செய்கிறது. எனவே ‘கல்’ கவிதை வாசகன் மனத்தில் கல்வெட்டாகிறது!
‘ஏதேனும் ஒரு புள்ளியில்’ எறும்புகள் பற்றிய கவிதை. இதில் பாதி வரையுள்ள பூடகத் தன்மை திடீரென மறைந்து கவிதைப் பாதைத் தெளிவுபடுகிறது.
பனித் துளியின் உயிர்க் கருவோ
இந்த எறும்பின் வெண் முட்டைகள்
என்பது புதியபார்வை. இக் கவிதையின் முடிவு மனித மன விசித்திரத்தை வியந்து முடிகிறது.
ஏதேனும் ஒரு புள்ளியில் கூட
சந்திக்க முடிவதில்லையே
இப்போதெல்லாம்
நண்பனே…
இப்புத்தகத்தில் ஆழ்ந்து சிந்தித்தால் மட்டுமே புரியக் கூடிய ஒரு கவிதை ‘வண்ணங்களின் - கொந்தளிப்பு’ இது இருண்மையில் உறைந்து கிடக்கிறது. பாலியல் சார்ந்த ஒரு படிமம் கவிதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது.
கோடி கோடி
வால் சுழற்றும் பாம்புகளின்
படையெடுப்பு
ஆண்மை தொடர்பான இப்படிமத்தில் பாம்பு என்னும் குறியீடு ஆண் உயிரணுவைக் குறிக்கிறது. காமம் சார்ந்த போராட்டமே ‘ வண்ணங்களின் கொந்தளிப்பு’ என்பதை மறைமுகமாகச் சுட்டுகிறது. மாலைப் பொழுதில் வான் பார்த்து ரசிப்பதோடு மனப் போராட்டமும் சுட்டப்படுகிறது.
வர்ணங்களின் கொந்தளிப்பு
தளதளக்கிறது வான் தடாகம்
என்ற வரிகளில் கலை நேர்த்தி பளபளக்கிறது. புரிதலின் எல்லை தாண்டிச் சிந்திக்க வைக்கின்றன சில வரிகள்…
அலை கடலின் ஐந்து தலைப்
பாம்புப் படுக்கைக்கு
துவங்கி விட்டது
போட்டி
என்ற வெளிப்பட்டை எப்படிப் பொருள் கொள்வது
‘மாலையில் காமம் சார்ந்த உணர்வுகளின் போராட்டம் என்பதே இக்கவிதையின் ஒருவரிச் செய்தியாகும்.
குண ரூப வளைவுகளின்
ஆதி வரைபடம்
என்ற வரிகள் மரபணு சார்ந்த சிந்தனைகளைக் குறிக்கின்றன. இப்பத்தகத்திலுள்ள ஆகச் சிறந்த கவிதை இது என நான் கருதுகிறேன்.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘மழை வரும் பாதையில்…’ இதில் மழையின் இயல்புகள், பெருமைகள், அணுக்கழிவு பற்றிய கவலை ஆகியவை பேசப்படுகின்றன. இயற்கையைக் கண்டு ஒரு வியப்பு தோன்றுகிறது.
முடியுமா உன்னால்
வானையும் பூமியையும்
நெய்யும் மழைத்
தாரையில்
எத்தனை துளிகள் என்று.
வான்சிறப்பை எண்ணி மகிழும் கிருஷி மேலும் கேட்கிறார்:
சூரியனின் உக்ரத்தைத் தணிக்க
ஒரு மேகம் போல்
யாரால் இயலும்?
‘அசையும் பிம்பங்கள்’ ஒரு தத்துவக் கவிதை நதிக்கரை குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பூடகத் தன்மை யூகிக்க வைக்கிறது. இதைத் தன் வாழ்க்கைப் பதிவாகக் கொள்ள இடமிருக்கிறது. ‘அசையும் பிம்பம்’ என்பதைக் குழந்தையின் குறியீடாகக் கொள்ள இயலும்.
‘விளிம்புகளில்’ என்ற கவிதையில் நல்ல படிமங்கள் உள்ளன.
மனித முகத்தின்
விளிம்புகளில் மட்டும்
ஒளிக் கோடுகள்
இன்று
என்பதைத் தொடர்ந்து வரும்
காற்றில் அசைகிறது
புல்
நிலவை வருடியபடி
என்ற படிமம் வித்தியாசமாக இருக்கிறது.
இடையறாது சூழலும்
பூமகள் முகத்தில்
இடையறாது
தார் பூசும்
மயிரடர்ந்த கரங்கள்
என்ற படிமம் பூமி மாசுபடுவதை அழுத்தமாகச் சொல்கிறது.
இத்தொகுதியிலுள்ள புதிய சொற்றொடர்களை ஒரு பட்டியலே போடலாம். மொழிவளம் நன்கு அமைந்த நடைக்குச் சொந்தக்காரர் கிருஷி! நல்ல கவிதைகளைப் படிக்கக் காத்திருக்கும் வாசகர்களுக்கும் புதுக்கவிதை வளர்ச்சியில் அதிருப்தி கொண்டு கருத்து சொல்லும் இலக்கிய நோக்கர்களுக்கு இப்புத்தகத்தைச் சிபாரிசு செய்கிறேன்.
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்