ஒருதாய் மக்களில் உயர்வெனத் தாழ்வென
இருந்த போதிலும் அவரவர் நிறைவாய்
வாழ்ந்திட விழையும் தாய்மனம் அல்ல
ஆழ்ந்த அறிவின் சமதர்ம முறையும்
திறமையும் உழைப்பும் அடிப்படை கொண்டு
பிறழா ஊதியம் பெறுவதைத் தொடர்ந்து
மெதுவாய் உழைப்பில் மகிழ்ச்சி வருமே
அதுவே பொதுமைச் சமூகம் ஆகும்
ஆங்கே தாய்க்குச் சஞ்சலம் இல்லை
(ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மக்களில் உயர்வு தாழ்வு என இருந்தாலும் (அவர்கள் நிலையில் மாற்றம் கொண்டு வருவதை விட) அவர்கள் நிறைவாக வாழ வேண்டும் என்று தான் தாய் நினைக்கிறாள். (ஆனால்) ஆழ்ந்த அறிவின் சிந்தனையால் விளைந்த சோஷலிசத் தத்துவம் அப்படிப்பட்டது அல்ல. அது திறமையையும் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ப ஊதியம் வழங்கும் முறையைத் தொடர்ந்து, மெதுவாக உழைப்பது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்ற நிலைக்குக் கொண்டு செல்கிறது. (அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் போது) அது பொதுவுடைமைச் (கம்யூனிஸ்ட்) சமூகம் எனப்படுகிறது. அச்சமூகத்தில் (ஏற்றத் தாழ்வு இருக்காது என்பதால்) தாய்க்கு மனச் சஞ்சலம் இருக்காது)
- இராமியா