கீற்றில் தேட...

நான், நீ மற்றும் ஒரு கோப்பை தேநீர்
என்பதோடு முற்றுப்புள்ளியைத் தேடுகிறது
நமக்கான உரையாடல்..
விரல்கள் நுழைந்த கோப்பையின் பிடி
சுடுகிறதென உணர
தெளிந்த உப்பு அமிலமாய்
பிடியெங்கும் வியர்வையின் ஈரக்கறை.
அருந்திய மீதத்தின் துளியினூடே
வழியும் மௌனத்தைத் தாங்கி நிற்கும்
கோப்பையின் வசம்
அழுகைக்கான சுவடுகள் சிறிதும் இருப்பதில்லை...
உதடுகளைப் பிதுக்கி ஊசியின் கூர்மை கொண்டு
சொற்களைக் கோர்க்க வரும் வெளிச்சம்
இம்மியளவும் அரவமல்லாத ஓர் உரையாடலைக் கண்டு
துணுக்கமுற்று ஒரு மூலை வலையை நோக்கி
விரைந்து  மறைகிறது..
நான், நான் மற்றும் ஒரு கோப்பை தேநீர்
என்பதோடு முடிகிறது
இன்றைக்கான உரையாடலும்...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]