ஒவ்வொரு முறையும் மறுக்காமல்
உனக்குப் பிடித்ததை, பிடிக்காததைச்
சொல்லிப் போகிற நீ,
ஒரு முறை கூட எனைக் கேட்டதில்லை
உனக்கு எது பிடிக்கும்... பிடிக்காதென்று

ஒவ்வொரு முறையும் மறுக்காமல்
உனக்கான உரிமையை என்னுள்
நிலைநிறுத்திப் போகிற நீ
ஒரு முறை கூட எடுத்துக் கொள்ள அனுமதித்ததில்லை
எனக்கான உரிமையை

ஒவ்வொரு முறையும் மறுக்காமல்
உனக்கான தேவையை என் வழியே
பூர்த்திசெய்கிற நீ
ஒரு முறை கூட நிறைவேற்றியதில்லை
எனக்கான தேவையை…

ஒவ்வொரு முறையும் மறுக்காமல்
என்னை சந்தேகித்துப் போகிற நீ
ஒரு முறை கூட நேர்மையாயிருந்ததில்லை
என்னுடனான வாழ்க்கை பந்தத்தில் ……

ஆணெனும் அதிகாரம் கொண்டு
நீ விரும்பிய பொருளாய் எனை வடிவமைத்துக்கொள்கிறாய்
எதிர்மொழி பேசாமல் நானும்
உனக்கேற்ற பொருளாய் மாறிப்போகிறேன்
நீ மாறுவாய் என்கிற நம்பிக்கையில்…

- வழக்கறிஞர் நீதிமலர்

Comments

1 comment

1
seema
very nice.i like very much

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.