முன்பை விட அதிகமாக கோபம் வருகிறது உன் கவிதைக்கு
இன்னும் அது திருந்தவில்லையென பேசிக்கொள்கிறார்கள்
அநீதிகள் இழுத்துச் செல்வதை அது விட்டு விடவில்லை
உரத்து குரல் கொடுப்பதை அது நிறுத்திக்கொள்ளவில்லை
துரத்தப்பட்டவனோடு கைகோர்த்து நிற்கிறது
வெளியே நிறுத்தப்பட்டவனோடு வெயிலில் கிடக்கிறது
பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும்
குழந்தைகளோடு ஏன் பேசிக்கொண்டிருக்கிறது
அவர்களின் கைகளைத் தடவிக் கொடுப்பதும்
இனி சுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்வதும்
கவிதையின் வேலையில்லை
மனு இன்னும் சாகவில்லை என்று குற்றம் சாட்டும்
உன் கவிதை என்ன வக்கீலுக்கா படித்திருக்கிறது
சாதியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள்
பங்கி குழந்தைகளை வண்டியில் ஏற்ற மறுப்பவர்கள்
வால்மீகி பெண்களுக்கு கட்டளையிடுபவர்களுடன்
ஏன் சண்டையிட வேண்டும் கவிதை
காசியில் வயிறு வளர்த்த சனாதான நாவின் வழியாக
காலில் பிறந்தவர்களென வியாக்கணம் பேசும் நாவுகளை
அறுத்தெறிவது யாருடைய வேலை
மேல்சாதித் தெருவில் கீழ்ச்சாதிக் கால்கள்
செருப்பணியக் கூடாதென உத்திரவிட்ட உதடுகள்
எல்லாவற்றுக்கும் ஒரே அப்பன் மனுதான் எனச் சொல்லும்
உன் சொற்கள் எப்படி கவிதையாக முடியும் என்கிறீர்கள்
மனுவின் சாவை எதிர்பார்க்கும் என் கவிதை
எப்படி கோபப்படாமலிருக்கும்
என் கவிதை மனுவை எரிக்கும் சிதை நெருப்பு
கவிதை தூங்கிவிடக்கூடாது
அதற்கு இன்னும் வேலைகளிருக்கின்றன
சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் வேலை
அதற்குப் பணிக்கப்படவில்லை
ஆதி இருளின் அந்தகாரத்தில் நுழைந்து
நீந்தும் சூன்யங்களைத் தின்னும்
ஒரு பறவையாக இருக்க அது பிறக்கவில்லை
உடல்களை மேயும் வேர்களின் கண்களாக
இருப்பதற்கு அனுமதியில்லை
அழுது கொண்டிருக்கும் விழிகளை உதாசினப்படுத்திவிட்டு
அது எந்த வெளியில் பறந்து கொண்டிருந்தால் எனக்கென்ன
இரண்டாயிரம் வருடங்களாக ஓர் அவமானம் உடலுக்குள்
வெளியேறாமல் இருக்கும்போது
என் கவிதை எப்படி கடவுளை செருப்பாலடிக்காமல் இருக்கும்?
- கோசின்ரா