1.தற்கொலை

மின்விசிறியில்
சேலையைக் கட்டி
இறுக்கி
பளு தாங்குமாவென்று
பரிசோதித்துக் கொண்டிருக்கையில்
ஒத்திகைப் பொருளறிந்த
பாவனையில்
உத்தரக் கட்டைகளைத்
தாவிக்குதித்தபடி
ஓடி ஓளியுதொரு
மரப்பல்லி.

2.கொலை

பெரிதாகவொன்றுமில்லை.
என் முகத்தில்
தலையணையை
வைத்து
சற்று
அழுத்திக்கொண்டிருங்கள்.
அது போதும்.

3.ஆயுதம்

கத்தியோ
துப்பாக்கியோ
அது பிரச்சினையில்லை.
கையாளுகிற கரம் தான்
பிரச்சினை

4.சம்பவம்

கனவொன்றின் தீவிரத்தில்
எப்படியும்
இந்த அரசாங்கம்
என்னைக் கொன்றுவிடும்
என்று நம்பி
மோசம் போனேன்.
"இதற்கெல்லாம்
நீ இனிமேல்
விண்ணப்பிக்கக் கூடாது.
அதற்கெல்லாம்
ஏதாவது செய்தாக வேண்டும்"
என்று ஏளனமாய்
ஒரு குரல் சொல்லிப்போனது.

5.நம்பிக்கை

எனக்குத் தெரிந்த
காவல் அதிகாரி ஒருவர்
என்னை
அடுத்தமுறை
என்கவுண்டர் பார்க்க
அழைத்துச் செல்வதாக
உறுதியளித்துள்ளார்.