karunananthanகேள்வி: பனகல் அரசர் சமஸ்கிருத நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என்று நெடுஞ்செழியன் மற்றும் சக்குபாய் எழுதிய "நீதிக்கட்சி சாதனைகள்" என்ற புத்தகத்தில் ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் அதற்கான அரசாங்க உத்தரவு எதுவும் கிடைக்கப் பெறவில்லையே?

பேராசிரியர் கருணானந்தன்: நமக்கு அது சம்பந்தமான அரசாங்க உத்தரவு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அருப்புக்கோட்டை கல்லூரியின் முதல்வர் பு. இராசதுரை எழுதிய "நீதிக்கட்சி அரசின் சாதனைகள்" என்ற ஆய்வுப் புத்தகத்தில் இது பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது.

பேராசிரியர் ராஜாராமன் ஆங்கிலத்தில் "ஜஸ்டிஸ் பார்ட்டி - ஒரு வரலாற்று ஆய்வு 1916-1937" என்ற நூலை வெளியிட்டுள்ளார். அது அவருடைய முனைவர் பட்டப் படிப்பின் ஆய்வறிக்கையாகும். அதிலும் இந்த செய்தி இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற ஆய்வறிக்கைகளில், ஆவணங்களின் அடிப்படையிலேயே இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஆவணக் காப்பகத்தில் ஏற்பட்ட தவறுகளால் சில முக்கிய ஆவணங்களை அணுகுவதில் (அ) கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

கேள்வி: சென்னை மாகாணத்தில், சென்னை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பும், நான்கு மருத்துவப் பள்ளிகள் இருந்துள்ளன. இதைப் பற்றி உங்கள் கருத்து.

பதில்: மருத்துவப் பள்ளி படிப்பெதற்கு லைசென்ஸியேட் மெடிசன் (Licentiate Medicine) அல்லது மருத்துவச் சான்றிதழ் படிப்பு (Medical Certificate Course) எனப்படும். அவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆரம்பக்கட்ட சிகிச்சையை மட்டுமே இவர்கள் அளிப்பர். சிறுநகரங்களில் மருத்துவப் பட்டப்படிப்பை படித்தவர்களைக் காட்டிலும் சான்றிதழ் படிப்பை பயின்றவர்களே அதிகம்.

கேள்வி: அனைத்து மருத்துவக் கல்லூரி படிக்க நுழைவுத் தேர்வாக அனைத்து கல்லூரிகளிலும் சமஸ்கிருத பாடம் நுழைவுத்தேர்வில் இருந்ததா அல்லது ஏதேனும் ஒரு கல்லூரியில் மட்டுமே இருந்ததா?

பதில்: அக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. பிறகு 1923 இல் தான் ஆந்திரப் பல்கலைக்கழகமும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் சட்டமியற்றி உருவாக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்ட மருத்துவ பட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் சமஸ்கிருத பாடமும் இடம் பெற்றிருந்தது. எதன் அடிப்படையில் இது நிகழ்ந்தது என்று தெரியவில்லை. 

ஒப்பீட்டு மருத்துவம் (comparative medicine) என்ற ஒரு பாடம் அப்படிப்பில் இருந்தது. அதில் ஆங்கில மருத்துவம் ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற பிற மருத்துவத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டது. ஆயுர்வேதத்தின் அஷ்டாங்க சங்கிரகம் போன்றவையெல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பதால், சமஸ்கிருதம் அறிந்தவர்களால் மட்டுமே ஒப்பீட்டு மருத்துவத்தை சிறப்பாக செய்ய இயலும் என்ற ஒரு வேடிக்கையான காரணத்தை பார்ப்பனர்கள் கூறியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

கேள்வி: சென்னை பல்கலைகழகத்தில் ஆங்கிலேயர்களும் மருத்துவம் பயின்றார்கள் என்றொரு தகவலும் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஆங்கிலேயர்களுக்கும் இதே சமஸ்கிருத நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டதா?

பதில்: ஆம். ஆங்கிலேயர்கள் பலர் சமஸ்கிருதத்தை கற்றனர். இந்தியாவின் பழமையான மொழி என்ற முறையில் அவர்கள் சமஸ்கிருதத்தைப் படிப்பதன் மூலம் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தனர். ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் விதிவிலக்காக 1900-களுக்குப் பிறகு நிலைமை மாறியது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கேள்வி: சங்கராச்சாரியாரின் புத்தகத்தில், நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்திற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இதுபற்றி….

பதில்: ஆம். உண்மையே! பூர்வீக மருத்துவ சிகிச்சை என்று அந்தஸ்தை அவர்கள் அளித்தனர். ஆயுர்வேதம் ஏற்கனவே சில இடங்களில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் சித்தா போன்ற பிற மருத்துவத்திற்கு எல்லாம் நீதிக்கட்சியின் காலத்தில்தான் அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

- பேராசிரியர் கருணானந்தம்

Pin It