முதலியம் துரத்தும் உற்பத்தி முறையில்
சிதலையாய்த் தோன்றிய புவிவெப்ப உயர்வு
மெதுவாய் வலுவாய் வளர்கின்ற தன்றோ
புதுமை நோயைத் தீர்க்கும் மருந்து
சந்தைப் பொருட்களின் உற்பத்திக் குறைவும்
செந்தழல் தணிக்கும் வேளாண் சோலையே
மருந்திது தன்னை ஏற்றிடும் மக்கள்
பெருகிட வேண்டும் நோய்முற்றும் முன்னே
(முதலாளித்துவம் கட்டடாயப்படுத்துகின்ற உற்பத்தி முறையில் (இலாபம் கிடைக்கிறது என்பதற்காக புகை உமிழும் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அவற்றின் தொடர் விளைவாக) கரையான் (தோன்றி வளர்வது) போல் தோன்றியுள்ள புவி வெப்ப உயர்வு, மெதுவாகவும் வலுவாகவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. சந்தையில் விற்க முடிகின்ற பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதும், (கரியமில வளியை உறிஞ்சி, உயிர் வளியை வெளியிடுவதின் மூலம்) புவி வெப்பத்தைக் குறைக்கும் வேளாண் பொருட்களையும் மரங்களையும் (அதிக அளவில்) வளர்ப்பதும் தான், புதிதாகத் தோன்றியுள்ள இந்த நோயைத் தீர்க்கும் மருந்தாகும். (புவி வெப்ப) நோய் முற்றும் முன்பே இதைச் செய்தாக வேண்டும் என்பதை ஏற்றுப் போராடும் மக்களின் எண்ணிக்கை பெரும் அளவில் பெருகிட வேண்டும்)
- இராமியா