தோழர்களே!

உங்களுடைய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேற்றை எனக் களித்து இந்த சந்தர்ப்பத்தில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்ள வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னைப்பற்றிப் பல தோழர்கள் கவிராயர்கள் போல் புகழ்ந்துகூறிய தற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாகிலும் அப்புகழ்ச்சி உரை களுக்கு நான் தகுதியுடையவனல்ல என்றும், அப்புகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பாகத்துக்காவது தகுதியுடையவனாக என்னை ஆக்கிக் கொள்வதற்கு அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்னைப்பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பற்றி பிரஸ்தாபித்து அதை நடத்துவித்ததும் அது வெற்றியாய் முடிவு பெற்ற காரணமாய் இருந்ததும் நானேயாவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக்கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாக் கிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும் அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத்தன்மையும், கட்டுப்பாடுமே காரணமாகுமென்று தெரிவித் துக் கொள்ளுகிறேன்.

periyar 282நிற்க, தோழர்களே! தொழிலாளர் பிரச்சினை என்பது உலக மக்கள் சமூகத்தின் பிரச்சினையேயாகும். ஏனெனில் உலக மக்களில் 100-க்கு 90 பேருக்கு மேம்பட்டவர்கள் தொழிலாளிகள் என்னும் தலைப்பின் கீழ்தான் வருவார்கள். எப்படியெனில் தொழிலாளிகள் என்றாலே மனித சமூகத்தில் சரீரத்தினால் பாடுபட்டு வேலை செய்து ஜீவனம் செய்யும் மக்களாவார்கள்.

இந்தப்படி ஜீவனம் செய்வதிலும் அன்னியருக்காக என்று பாடுபட்டு அன்னியர் சுகமாய் போக போக்கியத்துடன் சரீரத்தினால் பாடுபடாமல் வாழக் கூடிய ஒரு கூட்டத்திற்காக என்று உழைத்துவிட்டு மேலும் மேலும் உழைப்ப தற்கும், தாங்கள் சீக்கிரம் இறந்து விடாமல் இருப்பதற்கும், தங்கள் ஜீவ தசைக்குப் பிறகும் அன்னியருக்கு உழைத்துப் போடுவதற்காக சந்ததிகளை ஏற்படுத்தி அவர்களையும் அன்னியருக்கு உழைக்கவே தற்பித்து செய்யவும், எவ்வளவு வேண்டும் அவ்வளவை மாத்திரமே அடைவதற்கு தகுதியுடைய வர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருக்கிற வர்களாவார்கள்.

ஆகவே இப்படிப்பட்ட மக்கள்கள் உலக மக்கள் சமூகத்தில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலானவர்களாய் இருப்பதால் தான் இப்படிப்பட்ட தொழி லாளர்களுடைய பிரச்சினையை உலக மக்கள் பிரச்சினை என்று சொல்ல வந்தேன். ஆனால் இப்படிப்பட்ட பெரும் சமூகப்பிரச்சினையை ஒரு தனிப் பிரச்சினை என்பதாக (தொழிலாளர் பிரச்சினை என்று) ஒதுக்கி வைத்திருப் பதும் மிக சிறுதொகை கொண்ட தனிப்பட்ட வகுப்பார்களது பிரச்சினையை அதாவது பாடுபடாமல் அன்னியர் உழைப்பால் வாழும் மக்களாகிய எஜ மானத் தன்மை-முதலாளித் தன்மை கொண்ட 100 க்கு 10 பேர்களாய் உள்ள மக்களின் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக ஆக்கி அதைப்பற்றியே எல்லா மக்களும் கவனிக்கும்படியானதா யிருந்து வரும் காரணம் என்ன என்று உங்களில் பலர் கருதலாம். அதற்குக் காரண மெல்லாம் உலகம் பாடுபடாத சோம்பேறிக் கூட்டத்தார், சூழ்ச்சிக் கூட்டத் தார் ஆகிய முதலாளித் தன்மை, புரோகிதத்தன்மை கூட்டத்தார் என்பவர் களின் ஆதிக்கத்தில் இருப்பதால் அப்படிப்பட்ட அவர்களுடைய பிரச்சி னையை உலகப் பொதுப்பிரச்சினையாக ஆகிவிட்டது. முன் குறிப்பிட்ட தொழிலாளிக் கூட்டத்தார் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர் களாய் இருந்தும், ஆதிக்கமற்றவர்களாகவும் அடிமைத்தனத்தின் பேரி லேயே தங்களது வாழ்வை நிர்ணயித்துக் கொண்டவர்களாகவும் இருந்து கொண்டு இந்தத் தன்மையையே உலக இயற்கை என்று கருதிக் கொண்டி ருப்பதால் (தொழிலாளர் பிரச்சினை) 100-க்கு 90 மக்களது பிரச்சினை பொது பிரச்சினையாகக் கருதப் படுவதற்கில்லாமல் போய் விட்டது.

ஆகவே தொழிலாளி மக்கள் பிரச்சினை உலக மக்கள் பிரச்சினை என்கின்ற கருத்தின் மீதே அது சம்மந்தமாக எனக்குப் பட்ட சில விஷயங் களை உங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

தோழர்களே! இன்றைய உலக நிலை அதாவது மனித சமூகத்தின் வாழ்க்கைத் தன்மையானது துக்கம் கவலை அதிர்ப்தி, சாந்தியற்ற தன்மை, ஒருவருக்கொருவர் தாழ்ந்த தன்மை, ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மை ஆகியவைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கத் தக்கதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையானது இன்று நேற்று ஏற்பட்டது என்று சொல்லி விடுவதற்கு இல்லாமல், உலகம் தோன்றியதாகச் சொல்லப் படும் காலமுதல் நாளது வரையிலும் எவ்விதமான மாறுதலும் இல்லாமலே இருந்து வருகிறது. மனித சமூகத்தில் உள்ள இவ்விதமான கஷ்டங்களையும், கொடுமைகளையும் குறைகளையும் நிவர்த்திப்பதற்காக வென்று வெகுகால மாகவே அதாவது நமக்கு சரித்திர பூர்வமாய் விளங்கும் பல ஆயிரக் கணக் கான வருஷங்களாகவே அநேக மனிதர்கள், கடவுள், கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன், கடவுள் தன்மை பெற்றவர் என்னும் பெயர்களாலும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், மகாத்மாக்கள், ஞானிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்ற பெயர்களாலும் தோன்றி எவ்வளவோ காரியங்கள் திருத்தப்பாடுகள் உண்டாக்கியதாக எழுதி வைக்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றது. மேல்கண்ட ஒவ்வொருவருடைய தோன்றுத லுக்கும் காரணமாக, பெரிதும் உலகத்தில் தர்மம் குன்றிவிட்டதாகவும், அதர்மம் அதிகரித்துவிட்டதாகவும், துஷ்டர்களால் சாதுக்கள் கஷ்டப்படு வதாகவும், வலியோரால் எளியோர்கள் துன்பப்படுவதாகவும் அவைகளை யெல்லாம் போக்குவதற்காகவென்றே தோன்றி அதர்மத்தை ஒழித்து துஷ்டர்களை சிக்ஷித்து சாதுக்களையும், ஏழைகளையும், கஷ்டப்படும் மக்களையும் ரக்ஷிப்பதற்காகவே தோன்றினார்களென்றும் சொல்லப்பட்டு வருகிறது.

மற்றும் இந்த “தெய்வாம்சம் பெற்றவர்கள்” என்ற கூட்டத்தவர்களால் மனித சமூக வாழ்க்கையின் ஒழுங்குக்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேதங்கள், நீதி சாஸ்திரங்கள், மற்றும் நீதியைப் போதிக்கும் சாதனங்கள் என்பவைகளும் எண்ணிக்கைக்கும், எல்லைக்கும் கட்டுப்படாத அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. இவைகளின் பயனாகவெல்லாம் அநேக காலமுதல் நாளது வரையில் பெரும்பான்மையான மனித சமூகத்திற்கு சிறிதாவது கஷ்டமோ துன்பமோ, கவலையோ, ஒழிந்திருப்பதாகச் சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

எப்படிப்பட்ட கடவுளோ, அவதாரமோ, கடவுள் தன்மை பெற்றவர் களோ, ஞானிகளோ, மகான்களோ தோன்றிய காலங்களிலும் மற்றும் அவர் களது ஆதிக்கத்திலும் ஆக்ஷியிலும் உலகம் இருந்துவந்த காலங்களிலுங் கூட ஜனசமூகத்திற்கு இன்று இருக்கிற கஷ்டமேதான் இருந்துவந்திருக் கின்றதென்பதை எந்த சரித்திரத்திலும் காணலாம்.

“தர்மராஜ்யம்” “ராமராஜ்யம்” “சத்தியகீர்த்தி ராஜ்யம்” என்று சொல்லும்படியான காலங்களில் எல்லாம்கூட இன்று காணப்படும் கொடு மையும், அதர்மமும், கஷ்டமும், தரித்திரமும், அடிமைத் தன்மையும் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது என்பது சரித்திரங்களிலும், சாஸ்திரங் களிலும், புராணங்களிலும் தாராளமாய் காணப்படுகின்றன.

எனவே இவற்றிற்கெல்லாம் காரணமென்ன? இப்படிப்பட்ட பெரியார் கள் என்பவர்களால் மனிதச் சமூகத்திற்குள்ள கஷ்டங்கள், துன்பங்கள் ஏன் ஒழிக்கப்படவில்லை? இவர்களால் எல்லாம் ஆகாத காரியம் நம்மால் ஆகி விடுமா? என்பனபோன்ற விஷயங்களை யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகேதான் நாம் இன்று என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம் என்பதை யோசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அப்படிக்கெல்லாம் இல்லாமல் கூடிக்கூடிப் பேசி பழைய பாடங்களையே படித்து கஷ்டப்படுபவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு அவர்களது கஷ்டங்களை இவர் வந்துப்பேசி கண்ணீர்விட்டுப் போவதென்பது ‘அரைத்த மாவை அரைத்ததுபோலும், சிரைத்த தலையை சிரைத்தது போலும்’ ஆகுமே யொழிய பலன் தரத்தக்க காரியம் எதுவுமே நம்மால் முடியப்போவதில்லை.

ஆகவே ஏன் இந்த பழைய நிலை மாறவில்லையென்றும், மாற்றுவதற்காக தோன்றிய பெரியார்கள் எல்லாம் ஏன் தோல்வி அடைந்துவிட் டார்கள் என்றும் யோசித்துப் பார்ப்போமேயானால் முறையே அதன் காரணமும் அப்படிப்பட்டவர்களின் தவறுதலும் நமக்கு நன்றாய் விளங்கும்.

எனக்குத் தோன்றியவரையிலும் “பெரியார்”களுடைய முயற்சிகளெல்லாம் வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம் அப்பெரியார்கள் கஷ்டநிலை என்பதற்குக் காரணம் என்ன என்பதையே அவர்கள் சரியாய் உணரவில்லை என்றுதான் சொல்லுவேன். அஸ்திவாரத்தில் உள்ள கோளாறுகளை லக்ஷியம் செய்யாமல் மேலும் மேலும் கட்டிடங்கள் கட்டியதாலேயே கட்டின கட்டிடங்களெல்லாம் இடிந்து விழுந்து கொண்டே வந்துவிட்டன. இதனால் இன்று இடிந்து விழுந்த-பழுதுபட்ட சாமான்களும், வாழ்வுக்கு தவாக் குட்டிச்சுவர்களுமாகத்தான் அம்முயற்சியின் பலன்கள் காணப்படு கின்றன. ஆதலால் தான் பயன்படவில்லை.

ஒரு விவகாரத்தை ஒழிக்க (பைசல் செய்ய) முன்வந்த ஒருவன் ஐந்தும் + ஐந்தும் =பனிரெண்டு (5+5=12) என்று கருதிக்கொண்டு விவகாரத்தை தீர்க்க முற்படுவானேயானால் அப்படிப்பட்டவனால் விவகாரம் சரியான தீர்ப்பு அடைய முடியுமா? அதுபோலவே உலகக் கஷ்டத்தைப் போக்குவதற்குத் தோன்றிய அவதாரங்கள் (பெரியார்கள்) எல்லாம் மனித சமூகத்தின் கஷ்டங் களுக்கு காரணமாயிருப்பது மனித சமூகத்திலுள்ள சிலரின் சூழ்ச்சியென்றும் அக்கிரமமான நடத்தையென்றும் கருதாமல் தங்களால் நிரூபிக்கச் சாத்தியமற்றதும் தங்களுக்கே புரியாததுமான ஒரு வஸ்துவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கே சகல சக்திகளையும் கொடுத்து எல்லாவற்றிற்கும் அதையே பிணையாக்கி அதன்பேரிலேயே எல்லாப் பழிகளையும்போட்டு அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இருப்ப தாகக் காட்டி அதன் தயவினா லேயே உலகக் கஷ்டங்களைப் போக்க முயற்சிப்பதாகச் சொல்லி அந்தப் படியே மக்களையும் நம்பச் செய்துவிட்டு போய்விட்டார்கள். இப்பொழுது தோன்றுகிறவர்களும் தங்களை “மகான்கள்” என்றும் “ஞானிகள்” என்றும் உலகக் கஷ்டத்தை ஒழிப்பதற்கு கடவுள் அருளால் தோன்றி கடவுள் அரு ளால் இருந்து, கடவுள் கட்டளைப் படி நடந்து வருவதாகவும் சொல்லுகிற படியால் அவர்கள் ஒரு காரியத் தையும் செய்ய முடியாமல் இருப்பதோடும், கஷ்டங்களையும், கஷ்டத்திற்கு ஆதாரமாக இருப்பவைகளையும் என்றும் நிலைத்திருக்கக்கூடியதாகவே செய்துவருகிறார்கள்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இத்தனை பெரியார்கள் என்பவர்களும் தங்கள் முயற்சியால் வெற்றி பெறாமல் போனதற்குக் காரணம் என்ன வென்பதைக் கண்டுபிடிக்க சக்தி இல்லாமல் போய்விட்டதால் அவர்கள் அச்சக்தியற்ற தன்மையைத் தைரியமாய் ஒப்புக்கொள்ள இஷ்டப்படாமல் “இவ்விதக் கஷ்டங்களும், துன்பங்களும் கீழ்மேல் நிலையும், அதிருப்தி யும், சாந்தமற்ற நிலையும் மனித சமூகத்திற்கு தவிற்க முடியாதது” என்றும் “இதுவே உலக இயற்கை” என்றும் சொல்லிவிட்டுப்போய் இருக்கிறார்கள். இதைத்தான் இன்று சகல துரைகளிலும் அடக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதசமூகம் ஒட்டும் நம்பிக்கொண்டு இயற்கையையோ, தெய்வத்தின் அருளையோ, எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதன்றி இனி மற்றொரு காரணம் என்னவென்றால் அதாவது இன்றைய மேல்கண்ட நிலைகள் மனித சமூகத்துக்கு பெருந்துன்பமாய் இருந்தும் மனிதனுக்கு பகுத்தறிவு என்பதான ஒரு விசேஷ சிந்தனா சக்தி இருந்தும் அத்துன்பத்தை ஒழித்துக் கொள்ள அது பயன்படாமல் போன தற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் மனித வாழ்க்கையில் மனிதன் தான் இன்று உயிருடன் இருக்கும்போது அனுபவிக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவை எல்லாம் லட்சியம் செய்யத்தக்க தல்லவென்றும் அதாவது இந்த வாழ்வே நிலையற்றதென்றும் “மனிதன் இறந்தபிறகு தீர்ப்பு நாளிலோ, அல்லது மற்றொரு உலகமாகிய மேல்லோகத்திலோ” அனுப விக்கப்போகும் விஷயங்களே முக்கியமானதென்றும் அதைப் பற்றியே மனிதன் கவலை செலுத்தவேண்டும் என்றும் மதங்கள் மூலம் கற்பிக்கப் பட்டதும் ஒரு முக்கிய காரணமாகும். இத்தியாதி காரணங்களே-இந்த விதமான கற்பனைகளே மனித சமூகத்தின் துக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு இடையூராய் இருந்து வந்திருக்கின்றன.

அப்படிக்கில்லாமல் இருக்குமானால் உலகில் உள்ள ஜீவராசிகளில் எல்லாம் விசேஷமானது என்றும் மனித ஜீவனுக்கு உயர்ந்த ஞானமும், அறிவும், சிந்தனாசக்தியும் இருந்து வருகின்றது என்றும் சொல்லப்பட்ட ஒரு சமூகம் இவ்வித கீழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

இது இப்படி இருக்க தொழிலாளிகளுக்கு உள்ள கஷ்டங்களைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

தோழர்களே! உலகமானது தொழிலாளர்களாலேயே நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களாலேயே நடைபெற்று வருவதாய் இருந்தாலும் உலக வாழ்க்கையில் உள்ள சகலவிதமான தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் தொழிலாளிகளே ஆளாகிவருகின்றார்கள். சகல ஐஸ்வர் யங்களும், சுகபோகத்துக்கு வேண்டிய சகல சாதனங்களும் தொழிலாளி களாலேயே உண்டாக்கப்படுவதாய் இருந்தாலும் தொழிலாளிகளுக்குத் தான் வயிரார உண்ண உணவில்லை என்கின்ற குறையும், இடுப்பார துணி இல்லை என்கின்ற குறையும், இருக்க இடமில்லை என்கின்ற குறையும், நாளைக்கு என்ன செய்வது என்கின்ற கவலையும் மற்றும் காயலா வந்தால் வைத்தி யத்துக்கு என்ன செய்வது, பெண்ஜாதி பிரசவத்திற்கு என்ன செய்வது, பிள்ளை படிப்புக்கு என்ன செய்வது, சாவு, கல்யாணம் ஆகியவை களுக்கு என்ன செய்வது என்பதுபோன்ற அனேக கவலைகள், குறைகள் இருந்து வருகின்றன. தொழிலாளிகள் அல்லாத மனிதருக்கோ இவ்வித கவலைகள் ஏதுமில்லை இவர்களுக்குள்ள கவலையெல்லாம் தொழிலாளி களின் உழைப்பால் சமித்த பொருளை எப்படிப் பத்திரப்படுத்துவது, எப்படி மேலும் மேலும் பெருக்குவது, எப்படி அதிகமான சுகபோகங்களை அனுப விப்பது என்பது போன்ற கவலைகளேயாகும். இன்னும் ஏதாவது கவலை இருக்குமானால் அது நாமே உலகில் பெரிய சீமானாக எப்படி ஆவது நாம் செத்த பிறகும் நமது பெருமையும், புகழும், செல்வமும் நமது பிள்ளை களுக்கும், நமது பேரன்களுக்கும் உலகமுள்ள அளவும் எப்படி நிலைத் திருப்பது என்பது போன்றவைகளுமேயாகும்.

இவைகள் தவிர முதலாளிகள் என்பவர்கள் தங்கள் நிலை என்றும் நிலைத்திருக்கவும், தொழிலாளிகள் என்னும் பேரால் உலக பெரும்பான்மை யான மனித சமூகம் தங்களை எதிர்க்காமலும், தாக்காமலும் இருப்பதற்காக வேண்டிய பந்தோபஸ்துக்காக ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுமாகின்றார்கள். நாளாவட்டத்தில் அந்த ஆட்சியின் ஆதிக்கத்தையும் தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிடவே முயற்சிப்பவர் களாகவுமிருந்து வருகிறார்கள். இதனால் முதலாளிகளின் வாழ்வுக்கும், செல்வம் சேர்ப்பிப்பதற்கும் மாத்திரம் தொழிலாளிகள் பாடுபடுகிறார்கள் என்பதில்லா மல் இந்த முதலாளிகளை காப்பாற்றவும் தொழிலாளிகளை அடக்கவுமான காரியத்தின் செலவுக்கும் இந்த தொழிலாளிகளே பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இத்தியாதி காரணங்களால் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகளுடைய நிலை மையை நாளுக்குநாள் அடிமைத் தனத்திலும், தரித்திரத்திலுமே அமிழ்த்தப் படுகின்றது.

ஆதலால் தொழிலாளிகளது கஷ்டமும், துன்பமும், அடிமைத்தனமும், கவலையும் குறையும் நீங்க வேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது இல்லாமல் போயே ஆக வேண்டும். அப்படிக்கில்லாமல் வேறு எப்படிப்பட்ட காரியம் செய்தாலும் தொழிலாளி துன்பமும், இழிவும், தரித்திரமும் ஒருநாளும் ஒழியாது மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறைவு என்பதெல்லாம் மற்றவனை விட நாம் அதிகமாய் கஷ்டப்படுகின்றோமே மற்றவரைவிட நாம் தாழ்மையாய் வாழ்கின்றோமே மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என்கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மை இருக்கவேண்டுமானால் மற்றவனுக்கும் நமக்கும் வித்தியாசம் காணப்படாத ஒரு நிலையை உண்டாக்குவதேயாகும்.

உதாரணமாக 100 வருஷத்திற்கு முன் 50 வருஷத்திற்கு முன் மனிதர் களின் சாதாரண வாழ்க்கை இருந்ததைவிட இன்றைய வாழ்க்கைத் திட்டங்கள் அனேக வழிகளில் ஒரு அளவுக்கு உயர்ந்திருக்கின்றது என்பது பிரத்தியட்சம். அப்படியிருந்தும் அந்த அளவுக்கே மற்ற நிலையில் உள்ளவர்கள் திட்டமும் உயர்ந்து விட்டதால் திட்டம் உயர்ந்தாலும் நிலைமையும் தன்மையும் முன்போலவேதான் இருக்கின்றது. தொழிலாளிகளின் கவலையெல்லாம் தங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதல்ல. தங்களுடைய நிலைமை மற்ற யாருடைய நிலைமைக்கும் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந் திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்த வும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கிய தத்துவமாய் இருக்கவேண்டும்.

அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படு வதற்காக போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சி யில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால் தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின்பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்தி விடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்து சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலதுகையில் கூலி அதிகம் கொடுத்து இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்ளுவார்கள். முதலாளி களுடன் கூலித் தகரார் என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூட்சியேயாகும். 4 அணா கூலிக்கு வேலை செய்ய மக்கள் இன்று 14 அணா கூலி பெருவது எனக்குத் தெரியும். இதன் பயனாய் அவனுடைய நிலை சிறிதுகூட உயர்ந்ததாக சொல்ல முடியாது. அடிமைத்தன்மையும், தரித்திரமும் அவனைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. 4 அணா கூலிகொடுத்த முதலாளி அப்போது இருந்ததைவிட இப்போது 14 அணா கொடுக்கும் போது எத்தனையோ பங்குமேன்மையாய் மோட்டாரிலும், ஆகாய ரதத்திலும் செல்லுகிறான். சந்திரகாந்த மண்டபத்தில் வசிக்கிறான். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 கையெழுத்துப் போடுவதுடன் அவனது வேலை முடிவடைந்து விடுகின்றது. இந்த நிலையை அவர் பிள்ளைபிள்ளை தலைமுறைக்குப் பத்திரப் படுத்திக் கொள்ளுகிறான். தொழிலாளி நிலை இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதா பாருங்கள். அவன் பிள்ளைகள் 3-வது, 4-வது பாரம்வரையில் கூட படிக்க முடியவில்லை. ஓதம் (ஈரம்) இல்லாத இடத்தில் படுக்க முடிய வில்லை. இடுப்புக்குத் தவிர மேலுக்குத் துணியில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.

(தொடரும்)

(குறிப்பு : 05.09.1933 (கொச்சி) 10.09.1933 (ஆலப்புழை) 23.09.1933 (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாடுகளில் தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 01.10.1933)

Pin It