கீற்றில் தேட...

உயிரோடு மனிதர்களை புதைக்கும்
நிலச்சரிவுகள் என்னிடமில்லை.
கடக்க முயன்றவனை இழுத்துச் செல்லும்
காட்டாறுகள் இல்லை.
வழிப்பறி செய்ய சிறிதளவு வன்முறையோ
உருட்டு வழிகளோ எதுவுமில்லை.
எதிர்பாராமல் சந்திக்கும் மனிதர்களை
ரத்தச் சகதிலாழ்த்தும் விபத்துகள்,
தொடுவதறியாமல் தொட்டால்
சாகும் மின்சாரக் கம்பிகள்,
புராதான இருள் குடியிருக்கும்
பாழடைந்த மண்டபங்கள் என்னிடமில்லை.
நடந்து சென்ற ஒற்றையடிப் பாதை
என்னை ஒரு மலையிடம் சேர்த்தது.
மலை சொன்னது என் மீது ஏறலாம்.
ஆனால் இறங்கக் கூடாது என்றது.
மலையின் உச்சசிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நிலச்சரிவுகளில் சாகும் மனிதர்களை,
நதிகள் இழுத்துச் செல்லும் மனிதர்களை,
கத்தியை கக்கத்தில் வைத்துக் கொண்டு
உருட்டு விழிகளோடு அலையும் மனிதர்களை...
இறங்க வழியில்லாமல் நின்றுக் கொண்டிருக்கிறேன்.
உச்சியிலிருந்து கொண்டு மௌனமாயிருப்பதைவிட
அடிவாரத்திலிருந்து கொண்டு போராடு என்கிறது உடல்.
போராடிக் கொண்டிருக்கிறேன்
அநீதிகள் வார்த்தைகளாய் மாறியிருக்கும் ஊர்களில்.

- கோசின்ரா