வரையப்பட்ட படத்திலிருக்கும்
செயற்கைப் புன்னகையைப் போன்றதொன்று
ஒட்டிக் கொண்டு விடுகிறது
என் முகத்திலும்...உங்களின் முகத்திலும்
நாம் சந்திக்க நேர்கையில்.

ஊற்றாய்ப் பெருகும் குசல விசாரிப்புகள்
பெருகி வழிகின்றன...
நம் பற்களுக்கும்...உதடுகளுக்கும் இடையே.

பிரிந்திருந்த இடைவெளியை...
விரல்களைக் கோர்த்துக் குறைக்கிறோம்.
ததும்பி விழும் விழிகளால்
பெரும் தவிப்பைச் சொல்கிறோம்.
சொற்களால்... 'குகனொடும் ஐவரானோம்'
சொல்லாத கம்பனாகிறோம்.

நாம் பார்த்துக் கொள்ளாத நாட்களுக்கு
செய்யாத 'பணி'யைக் காரணமாக்குகிறோம்.
எல்லாம் பேசி... இறுதியில்...
வாரம் ஒருமுறை அலைபேசியிலாவது
பேசிவிடுவதாய்...
சத்தியம் செய்கிறோம்.

பேசிக் கலைந்தபின்....
பத்திரமாய் ஒளித்துவைத்துக் கொள்கிறோம்
வரையப்பட்ட புன்னகையை..
நாம் சந்திக்கப்போகும் இன்னொருவனுக்காக.