வார்த்தைகளற்ற மௌன தூரம்
நமக்கிடையே இப்பொதெல்லாம்.
குழந்தைத் தனத்துடன்
எதையும் அதிகம் எதிர்பார்த்து
கிடைத்தால் மகிழ்வதற்கோ
மறுதலிக்கப்பட்டால் துக்கிப்பதற்கோ
ஒன்றுமில்லை நமக்கிடையே.
நம் இருபத்தைந்து வருட
இயந்திர வாழ்க்கையில்
விட்டுக் கொடுத்தது ஏராளம்.
விட்டுப் போனதும் ஏராளம்.
காற்றில் ஆடும் வெற்று மிதவையென
இப்போது நம் கட்டுப்பாட்டிற்கு
வர மறுக்கிறது நம் வாழ்க்கை.
முதலில் இருந்து நாம்
தொடங்க வேண்டும்
முழுக்க முழுக்க அதே காதலுடன்
வார்த்தைகளற்ற அதே மௌனத்துடன்
உன் நெற்றியில் கவிழ்ந்த சுருள் நரைமுடி விலக்கி
பரஸ்பர நெருக்கத்துனூடேஒரு சிறிய முத்தம்
- பிரேம பிரபா