கர்நாடக மாநில அரசு ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’ என்று பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்கு பா.ஜ.க. சங்பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கி வருகின்றன. திப்புசுல்தான் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012 பிற்பகுதியில் பாஜகவிலிருந்து வெளியேறி கர்நாடக ஜனதா பக்சா கட்சி யினை துவக்கிய எடியூரப்பா, திப்பு சுல்தான் மாடல் தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்து மீண்டும்அதன் தலைவராகி தற்போது நவம்பர் 10ல் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழா எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார்.

மைசூர் மன்னரான திப்பு சுல்தான் (1750-1799) சமூக அடையாளங்களைக் கடந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒவ்வொருவருடைய உருவ மாகத் தோற்றமளிக்கிறார். மைசூரின் வேங்கையாக திப்பு சுல்தான் கருதப்பட்டார். 19ஆம்நூற்றாண்டின் கன்னட நாட்டுப்புற பாடல்களில், போர்க்களத்தில் மரணமடைந்த திப்புவின்மரணம் பாடல்களாக வலம் வந்தன. கர்நாடகாவின் வேறு எந்தப் பகுதி மன்னர்களின் மரணத்திற்கும் இவ்வாறு நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டதில்லை.

ஆங்கிலேயர்களின் கைகளில் சிக்கி துயர மரணத்திற்கு ஆட்பட்ட கதாநாயகர்களான திப்பு மற்றும் அவரது தளபதிகளுக்கு மட்டுமே இவ்வாறு வருத்தம் தோய்ந்த நாட்டுப்புற பாடல்கள் இயற்றப்பட்டன.19 மற்றும் 20ம் நூற்றாண்டில் மாநிலம் முழு வதும் திப்புவைப் பற்றி ஏராளமான நாடகங்கள் அரங்கேற்றப்பட் டுள்ளன. வரலாற்று நூலகங்களி லும் “அமர்சித்திரகதா” போன்ற பிரபலமான கார்ட்டூன் இலக்கியங்களிலும் ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்த வீரத்தியாகி திப்புஎன்றே ஐயத்திற்கு இடமின்றி கூறப்பட்டுள்ளது. 1970இல் ஆர்எஸ்எஸ் “பாரத பாரதி” நிறுவனம் வெளியிட்ட கன்னட வரலாற்றிலும் திப்புவின் தேசபக்தி மற்றும் தனித்துவமான வீரப்பண்புகள் எந்தவிதமான எதிர்மறை விமர்சனமுமின்றி போற்றப்படுகிறது. திப்புவை மதவெறி கொண்டவராக முன்னிறுத்தும் சமீபத்திய இந்துத்துவ வலதுசாரி குழுக்களின் முயற்சிகள் என்பது அவர்களுடைய மதவெறுப்பு அரசியலுக்கு பயன்படுகின்றன. கூர்க் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கோடவர்களை கொன்ற தாகவும், மங்களூர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும் திப்பு மீது கூறப் படும் புகார்களே இதற்கு சாட்சி.

18ஆம் நூற்றாண்டின் கடைசி இரு பத்தாண்டு களில் அதாவது திப்பு ஆங்கிலப் படைகளை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு போரிட்ட அந்த காலகட்டத்தில் ஆங்கிலேய அதிகாரிகளாலும், எழுத்தாளர்களாலும், ஓவியர்களாலும், கேலிச் சித்திரம் தீட்டுபவர்களாலும் திப்பு மதவெறி யராகவும், கோவில்களை உடைத்து இந்து, கிறிஸ்தவ மக்களை மத மாற்றம் செய்பவராகவும் சித்தரிக்கப்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்குவதற்கு காரணங்கள் உருவாக்கப்பட்டன என்று கல்வி யாளர் மைக்கேல் சொராக்கோ குறிப்பிடுகின்றார்.

அந்த காலகட்டத்தில் ஊழல் நிறைந்த கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற மக்களின் கருத்தை திசை திருப்புவதற்கும் ஏகாதிபத்தியத்தின் சதி திட்டங்களுக்கும் திப்புவைப் பற்றிய எதிர்மறையான இந்தப் பிரச்சாரம் உதவி புரிந்ததாக பேராசிரியர் சொராக்கோ வாதிடுகிறார். மதவெறியன், கொடுங்கோலன் என்று19ம் நூற்றாண்டு முழுவதும் ஆங்கிலேய எழுத்தாளர் களால் புனைந்து வளர்த்தெடுக்கப்பட்ட கட்டுக் கதைகள்தான் தற்போது இந்துத்துவ வலது சாரிகளால் மீண்டும் கூறப்படுகிறது.

1780லிருந்து 1799 வரை இடைவிடாது தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்ட திப்புமைசூர் எல்லைக்கு அருகிலுள்ள கூர்க் மற்றும் மங்களூர் பகுதியிலிருந்து ஆங்கிலேயப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட கோட வர்கள் மற்றும் மங்களூர் கிறிஸ்தவர்களை நோக்கிய படையெடுப்பின் நோக்கம் அந்த பகுதிகளை தனது அரசாட்சியின் கீழ் விரிவுபடுத்து வதற்குத்தான்; மதவெறுப்பு அல்ல என்று வரலாற்று ஆய்வாளர் கதே பிரிட்டில் பேங்க் என்பவர் கூறுகிறார். இராஜராஜ சோழன், கிருஷ்ணதேவராயர் போன்ற பல அரசர்கள் மிகப்பெரும் போர் வீரர்களாக சித்தரிக்கப்படு கிறார்கள். இந்தப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை மறைத்து முன்னிறுத்தப்படு கிறார்கள்.

அரசர்கள் காலத்தில் நடைபெற்ற வன்முறைகளை பொதுவாக வன்முறைகள் என்று குறிப்பிடுவதுதான் நியாயம். அப்படியில்லாமல் இன அடிப்படையில் முஸ்லிம் மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை தங்களுடைய சொந்த மதத்துக்காரர்கள் என்று மதச்சாயம் பூசி இந்து விரோதி என்று குற்றம் சாட்டுவது தற்போதைய மதவெறி அரசியலில் கடைப்பிடிக்கப்படுகிறது.

திப்புவின் மைசூர் ஆட்சிப்பகுதியில் நிர்வாகம் பாரசீகம், கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது. முக்கியமான அமைச்சர்கள் அனைவரும் பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர்கள். பெரிய கோவில்களுக்கு மானி யங்கள், மடங்கள் திப்பு ஆட்சியில் வழங்கப் பட்டன என்பதற்கான பதிவுகள் உள்ளன. 10 நாட்கள் மிகப்பெரிய தசரா விழா, உடையார் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் தலைமையில் நடைபெற்று வந்துள்ளது.

கட்டாயமான மதமாற்றம் நடை பெற்றதற்கான ஆதாரங்கள் ஏது மில்லை. அவரை மதச்சார்பு கொண்டவர் என்று கருத இயலாத அளவிற்கு மைசூரில் திப்பு ஆட்சி நடத்தியுள்ளார். அவரது தனித் தன்மையான பல்துறை திறமை களையும் திப்புவின் மதம் சார்ந்த அடையாளத்தோடு பொருத்தி அவரை மதவெறியர் என்று சித்தரிக்கின்றார்கள்.

ஆங்கில ஆட்சியால் தேசத்தின் எதிர்காலம் கடுமையாக பாதிப்பிற் குள்ளாகும் என்று நிஜாமிற்கும், மராத்தியர்களுக்கும் திப்பு எழுதிய கடிதங்கள் அவரை காலத்திற்கு முந்திய விடுதலை போராட்டக்காரராக தகுதிப்படுத்துகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் இராணுவம் நவீனப்படுத்தப் பட்டது. இதை அறிந்த பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் வியக்கிறார்கள்.  

மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளை உருவாக்கி வருவாயைத் திரட்டும் வலைப்பின்னல் அமைப்புகளை ஏற்படுத்தி நன்றாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்த ஆட்சியாக திப்புவின் ஆட்சியை மதிப்பீடு செய்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்கும், கல்கத்தாவில் உள்ள வில்லியம் கல்லூரி மற்றும் ராயல் ஆசிய சொசைட்டிக்கும் திப்புவின் சொந்த நூலகத்திலிருந்து விண்வெளி ஆய்வு, சட்டம், கணக்கியல் துறைகளைச் சார்ந்த இரண்டாயிரம் நூல்கள் அவரது இறப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் பசவ ஜெயந்தி, கனக ஜெயந்தி, வால்மீகி ஜெயந்தி எனப் பல கொண்டாட்டங்கள் நடக்கின்றன.

இவர்களெல்லாம் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட ஜாதி மக்களோடு அடையாளப் படுத்தப்பட்டு அரசியலில் ஜாதிக் குழுக்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இந்த கொண்டாட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக் குழுக்கள் மதிக்கும் தலைவர்களுக்கு மட்டுமே விழா எடுத்து, அதன் வழியாக அந்த ஜாதிக் குழுவினரை கொண்டாடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கெல்லாம் எதிர்ப்பு கிடையாது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட ஒரு  போராளியை இஸ்லாமியர் என்பதற்காக புறக்கணிக்கக் கோருவது என்ன நியாயம்?

‘தி இந்து’  9.11.2016 ஆங்கில இதழிலிருந்து

(திப்புக் குறித்த மேலும் செய்திகள் அடுத்த இதழில்)

Pin It