கீற்றில் தேட...

man_208இன்றிரவு தூங்காமல் வெளியே நிற்கிறேன்
தூக்கத்தின் சாவியைத் தொலைத்துவிட்டேன்
தூக்கத்தின் பிம்பம் வந்து வந்து போகிறது
தூக்கம் என்னுடைய சிறந்த நண்பன்
அது நேசித்த பெண்களை சந்திக்க வைத்திருக்கிறது
தூக்கம் ஒரு செடிபோல தொட்டியில் வளர்ந்து கொண்டிருக்கிறது
அது சில சமயம் வாசனை மிக்க மலரைத் தருகிறது
சிலசமயம் நீரற்று வதங்கிப் போகிறது
தூக்கம் எனக்காக காத்திருக்கிறது
என் கவிதையை எழுதி முடிக்கும் வரை
ஆனாலும் தூக்கத்தை நம்பி விட முடியாது
ஒரு நாள் நடுவழியில்
நிராதரவாக விட்டுவிட்டுப் போய் விட்டது
அன்றைய இரவில் இறந்து போனவர்கள்
சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்
இளமைக்கால நண்பர்கள்
தன் முகங்களை புதுப்பித்துக் கொண்டார்கள்
தூக்கம் திடப்பொருளாகவோ திரவமாகவோ
காற்றாகவோ மாறிக் கொள்கிறது
தூக்கம் சில சமயம் இரவின் சாபமாகிறது
சில சமயம் காதலியைப் போல மடியில் விழுகிறது
மனைவியை விட தூக்கம் தான்
என் உடலை தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கிறது
தூக்கம் வராமல் ஏமாற்றும்போது
இரவின் குவளையை உடைப்பது
புதிய வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.