புத்தகம் சுமக்கும்
மஞ்சள் பையோடு
நண்பர்களுடன்
நடக்கையில்
முதலில் மூக்கைத்
தாக்குவது
அரசு மருத்துவமனையின்
மருந்து வாடைதான்.

தொடர்ந்து செல்கையில்
நீதிமன்ற
வளாகத்திலிருந்து
மகிழம்பூ மணம்
ஒத்தடம் கொடுக்கும்
மருந்து வாடை தாக்கிய
நாசிக்கு.

மேலும் மேலும்
நடக்கையில்
மெதுவாய் வந்து மோதும்
நாகலிங்கப்பூ மரத்தின்
வாசம்
பள்ளிக்கூடம்
நெருங்கிவிட்டதை
அடையாளம் காட்டும்.

சரக்கொன்றையும்
இலும்பையும் பூவும்
ஏதோ ஒரு விதத்தில்
வாசனையூட்டும்
பள்ளி வளாகத்தில்.

ஒற்றைவிரல் காட்டிவிட்டு
கழிவறை சென்று
திரும்பிய
தெட்சிணாமூர்த்தியை
ஊதச் சொல்லி
வாத்தியார் கண்டுபிடித்தார்
திருட்டு தம் வாசனை.

அவன் முதுகில்
டின் கட்டிய
வாத்தியார் ஊதிய
சார்மினார் வாசனையை
நுகரலாம்
அரச மரத்தடியில்.

எட்டாம் வகுப்புகளுக்கு
பக்கத்தில்
எப்போதாவது பூக்கும்
மனோரஞ்சித பூவுக்கு
தனி மரியாதை.

மனதில் நினைக்கும்
வாசனையை வீசுமாம்
மனோரஞ்சிதம்.

ஆண்டுகள் கழிந்த
நிலையில்
புத்தக கண்காட்சி
பார்ப்பதற்காக
பள்ளிக்கு போனபோது
பூத்திருந்த
மனோரஞ்சிதத்திலிருந்து
மனதுக்குள் வீசியது
பழைய ஞாபகங்களின்
வாசனை.

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It