1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர்  பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.அப்போது இந்தியைத் திணிக்கப் பலமுறை முயன்று தோல்வி அடைந்த மத்திய அரசு, 1965 ஜனவரி 26ந்தேதி குடியரசு தினம் என்ற முகடிமூயைக் கொண்டு  இந்தி ஆட்சி மொழி  என்று அறிவித்தது.

இத்தகைய தேசிய இனங்களின் உரிமைகளையும் ஒடுக்குமுறையை எதிர்த்துப் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடக்கத் துவங்கின.இதுவே இந்தியா என்ற மாயக் கட்டமைப்பை தேசிய இனங்களுக்கு உணர்த்த கலகக் குரலாக இந்திய துணைக்கண்டத்தில் ஒலித்தது. அனைத்து தேசிய இனமக்களின் உரிமைகளை ஒடுக்கி அவர்களை அடிமைகளாக மாற்றவே இந்தி ஆட்சி மொழி என்ற ஆயுதத்தை மத்திய அரசு தன்கையில் எடுத்தது. அதற்குக் குடியரசு தினம் எனச் சதிவலையை உருவாக்கியது, அந்த வலைகளை கிழித்தது எறியவே அப்போது தமிழகத்தில் குடியரசு தினம் என்பது துக்க நாளாக மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

 அப்போது, வயது 24. இவர் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு, பெற்றோர் இல்லை. அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சியில், மாதம் ரூ.75 சம்பளத்தில் சிப்பந்தியாக (அட்டெண்டர்) வேலை பார்த்து வந்தார். 2 பெட்ரோல் டின்களுடன் சென்றதை சிலர் பார்த்தார்கள்.

"இந்த பெட்ரோல் டின் எதற்கு?" என்று கேட்டதற்கு, "ஆபீசுக்கு வாங்கிப் போகிறேன்" என்று பதிலளித்தார். குடியரசு தினத்துக்கு முந்தின நாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, "நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்" என்றார்.

 வழக்கமாகச் சிவலிங்கம் வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்குவது வழக்கம். குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவும், வழக்கம்போல், வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தார். அதிகாலை 4 மணிக்கு அவர் அண்ணன் காளிமுத்து எழுந்து பார்த்தார். சிவலிங்கத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிடித்து எரிவது போல தெரிந்தது. அருகில் சென்று பார்த்தார்.

 தீப்பிடித்து எரிந்த இடத்தில் சிவலிங்கம் உடல் முழுவதும் கருகி பிணமாகக் கிடந்தார். அருகில் 2 பெட்ரோல் டின்கள் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்திலும், வீட்டிலும் "உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு" என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன.குடியரசு தினத்தன்று நள்ளிரவில் ரெங்கநாதன் (வயது 32) என்ற இன்னொரு தமிழர் தீக்குளித்தார். இவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர். கல்யாணம் ஆனவர். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். ரெங்கநாதன், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சேவகராக (பியூன்) வேலை பார்த்து வந்தார்.

 அரசாங்க ஊழியராக இருந்தாலும், தி.மு.கழகத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். தமிழ்ப்பற்று உள்ளவர். குடியரசு தினத்தன்று இரவு, நண்பர்களுடன் ரெங்கநாதன் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் தீக்குளித்த சிவலிங்கம் பற்றியும், பஞ்சாயத்துத் தேர்தல் பற்றியும் அவர்கள் பேசினார்கள். பிறகு ரெங்கநாதன் வீட்டுக்குப் போய்விட்டார்.

 ரெங்கநாதன் வீட்டில் அவர் மனைவியும், மற்றவர்களும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவு சுமார் 3 மணிக்கு ஏதோ அலறல் சத்தம் கேட்டது. அவர்கள் விழித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். மற்ற குடிசைகளில் இருந்தவர்களும் வெளியே வந்தார்கள். விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்து சற்று தூரத்தில் காட்டிற்குள் வெளிச்சம் தெரிந்தது. அங்கு ஓடினார்கள்.

 ஒரு மரத்தடியில், ரெங்கநாதன் தீயில் எரிந்து கொண்டு இருந்தார். பக்கத்தில் பெட்ரோல் டின் ஒன்றும் எரிந்து கொண்டு இருந்தது. இந்தப் பயங்கர காட்சியைக் கண்டு, ரெங்கநாதனின் மனைவியும், உறவினர்களும், குழந்தைகளும் கதறி அழுதார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும், காவல்துறை வந்து பிணத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். 

 ரெங்கநாதன் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:-

 "இந்தியைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்துப் பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே இந்திக்கு வால் பிடிப்பவர்களே எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியைப் புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! 1965 ஜனவரி 26 முதல் அட்வான்ஸ். தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! வணக்கம். - ரெங்கநாதன்.

 மேற்கண்டவாறு கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது..

 (தமிழகத்தில் இந்தியை எதிர்த்து முதன் முதலில் தீக்குளித்தவர் சின்னசாமி என்ற ஆசிரியர். அவர் 1964 ம் ஆண்டு ஜனவரி 25 ந்தேதி காலை திருச்சி ரயில் நிலையமருகே, "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக" என்று முழக்கமிட்டபடி தீக்குளித்தார். அதற்குச் சரியாக ஒரு ஆண்டுக்குப்பிறகு சிவலிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்தனர்.)

சென்னையில் சிவலிங்கமும், ரெங்கநாதனும் தீக்குளித்ததைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம் கீரனூரில் முத்து என்பவர் இந்தித் திணிப்பைக் கண்டித்து விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார். விராலிமலையில் சண்முகம் என்பவரும் இதேபோல் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார்.

 தமிழ்நாட்டில், இந்தியை எதிர்த்து 2 பேர் தீக்குளித்த சம்பவம் ஐ.நா.சபையில் எதிரொலித்தது. 

ஒரு காலத்தில் தமிழகத்தில் ஒலித்த தனித் தமிழ்நாடு என்ற தேசிய இன விடுதலைக்கான குரல், காஷ்மீரில், எண்பதுகளில் பஞ்சாபில் ஒலித்த காலிஸ்தான் குரல்கள், மணிப்பூரில், திரிபுராவில், அஸ்ஸாமில், நாகாலாந்தில் வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் ஒலிக்கின்றன. தன்னுடைய சமுதாயத்தில் கல்வியில்,நீதியில்,வழிபாட்டுத் தலங்கள் என எதிலும் தேசிய இன மக்கள் பேசும் மொழி இல்லை.  இதனால் வெறும் மொழி மட்டுமா அழியப் போகிறது? இல்லை இதனால் அழிவது ஒரு தேசிய இனத்தின் வரலாறு. ஆனால் நாம்  இத்தகையை வரலாற்றையும் நம்மை அடிமைகளாக மாற்றக் கட்டமைக்கப்பட்டு இன்று வரை நம்மீது இந்தியைத் திணித்து வரும் இந்திய தரகு பார்ப்பனிய அரசின் நயவஞ்சக தனத்தை அறியாமலும் குடியரசு தினத்தைக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மொழிக்காகப் போராடிய நம் மக்களை ராணுவத்தால் ஈழத்தில் நடந்தேறியது போன்று கொன்று குவித்த  இந்திய அரசின் திட்டமிட்ட சதிகளை மறந்து குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறோம். இது நம்மை நாமே அடிமைகளாக்கவும், நம்முடைய அடிமைத்தனத்தை தகர்க்கப்  போராடிய மொழிப் போர் ஈகியர்களையும் இழிவுப்படுத்தும் செயல் என்று நாம் மறந்து விட  வேண்டாம்.

-          உமா கார்க்கி

Pin It