முதுமை வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று நினைவுகளில் வாழ்தல் என்பதாகும்; அடுக்கடுக்காக நினைவு வெள்ளம் பாய்ந்தபடியே இருக்கின்றது; ஆனால் ஓர் ஆச்சரியம் அவற்றைப் பதிவு செய்து விட வேண்டும் என்று எழுத அமர்ந்தால் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கின்றன; நினைவுகளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் இருக்கும் போலும்; ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் கவிஞர் மீரா குறித்த நினைவு அலைகளைப் பதிவு செய்ய முயன்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் தான் இப்படி எழுத வைத்தது; ஆனாலும் "இலக்கிய வெளி" ஆசிரியர், நண்பர் அகிலுக்காக அந்த நினைவுகளை இங்கே பிடித்துத் தர முயன்று இருக்கிறேன்;

meera 460அதற்கு முன்பு மனித மனத்தின் விசித்திரமான பண்புகள் ஏராளம், ஏராளம்; அவற்றுள் ஒன்று இந்த நினைவுகளாகும். இதுகுறித்துச் சில சொல்லத் தோன்றுகிறது;

இந்த நினைவாற்றல்தான் நமது அறிவுக்கண்ணின் அடிப்படை ஆதாரமாகும்; எல்லாவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளும் மிகப்பெரிய இலக்கியப் படைப்புகளும் இந்த நினைவாற்றலில் இருந்து தான் பிறப்பெடுத்துள்ளன;

"இலக்கியப் படைப்பு என்பது நினைவாற்றலைத் தவிர வேறொன்றுமில்லை"

என்கிறார் உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் அக்ரோ குருசோவா; இப்படிப்பட்ட நினைவாற்றல் முதுமைக் காலத்தில் குறைந்து கொண்டே போவதை உணர முடிகிறது; மனிதர்களுக்கு இறப்பு என்பது நினைவாற்றல் இறப்பது தான் போலும்.

கூடுதலாக இந்தக் கணினி யுகத்தில் மனிதர்களுக்குப் புதியதாக ஓர் ஆபத்து நிகழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது; அதாவது மனிதர்களின் கையில் இந்தக் "கையடக்கப் பேசி" வருவதற்கு முன்பு மனிதர்களுக்கு என்று தனிமை இருந்தது; அந்தத் தனிமையில் அம்மாவைப் பற்றிய நினைவுகளும் காதலி பற்றிய நினைவுகளும் படித்தவை, ரசித்தவை, பேசிக் களித்தவை, சிரித்து மகிழ்ந்தவை அல்லது அழுது ஓய்ந்தவை பற்றிய நினைவுகளும் திரும்பத் திரும்ப வந்து மனதிற்குள் பலவிதமான மாய இன்பங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன; ஆனால் இன்று நிலைமை என்ன? நம் தனிமைகளை எல்லாம் - அங்கே எழும் நினைவு அலைகளை எல்லாம் - நம் உடம்பின் உறுப்பாகவே மாறிவிட்ட இந்தக் கைபேசி கொன்று அழித்து விட்டது என்றே சொல்லி விடலாம்; தனக்கென்று நினைவுகள் அற்ற ஒரு மரமாக, புழுவாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது; நினைவுகள் அற்றுப் போனால் மனிதர்களை விட்டு அறிவும் அகன்று ஓடிவிடும்; மனிதர்கள் வெறும் இயந்திரமாகி விடுவார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது. சரி, கவிஞர் மீரா குறித்த நினைவுகளுக்கு வருவோம்;

மீ. ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் மீரா (1938-2002) அவர்களை முதன்முதலில் எங்கே எப்பொழுது சந்தித்தேன் என்று என் நினைவுகளைத் தோண்டிப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது; அதாவது சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை படிப்பதற்காக 1970-இல் சேர்ந்து அங்குள்ள விக்டோரியா விடுதியில் கவிஞர் முகமது இக்பால், அண்ணன் ஞானசேகரன் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி இருந்தபோதுதான் அவரைச் சந்திக்க நேர்ந்தது என்று நினைக்கிறேன்; சிவகங்கையில் இருந்து ஏதாவது வேலை நிமித்தமாகச் சென்னைக்கு வரும்போது எல்லாம் அவர் நெஞ்சுக்கு நெருக்கமான கவிஞர் இக்பாலைப் பார்ப்பதற்கு எங்கள் அறைக்கு வந்து விடுவார். வந்தவுடன் பேசிக் கொண்டே கையில் எடுத்து வந்த பெட்டிக்குள் இருந்து ஒரு துண்டை எடுத்துக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விடுவார்; முகம், கால், கைகளைக் கழுவி முடித்துத் துடைத்துக் கொண்டே வந்து உட்காருவார், "கிளம்புங்க டீ சாப்பிட்டு வரலாம்" என்று விடுதிக்கு எதிரே இருக்கும் பைக்ராப்ட் சாலைக்கு (இப்பொழுது பாரதியார் சாலை) நடக்கத் தொடங்கி விடுவார்; அவர் வந்து விட்டால் ஒரே சிரிப்பும் கும்மாளமும்தான்; இப்படிப் பல தடவை வந்து எங்களுக்குள் மகிழ்ச்சியை அள்ளித் தெளித்து விட்டுப் போயிருக்கிறார்; இப்படித்தான் அவரோடு பழக்கம் ஏற்பட்டது; பழக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அவர் என் முழுப் பெயரைப் பயன்படுத்தியதாக நினைவில்லை; "பஞ்சு" என்றுதான் பாசத்தோடு அழைப்பார்.

இது எல்லாம் ஓராண்டு தான்; நான் இரண்டாம் ஆண்டு முதுகலை வரும் பொழுது அவர்கள் இருவரும் முதுகலை முடித்துவிட்டு வெளியேறி விட்டார்கள்; கவிஞர் மீரா வருகையும் குறைந்து போய் விட்டது; ஏறத்தாழத் தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன்; நான் அடிப்படையில் கூச்ச சுபாவம் உள்ளவன், உள்முகப் பயணி; எனவே தொடர்புகளைத் தொடர்பு விடாமல் காப்பாற்றிப் பேணும் பழக்கம் எனக்குள் இன்று வரை ஏற்படவில்லை என்றே சொல்லிவிடலாம்; இத்தகைய என் பழக்கத்தால் நான் இழந்தவை, இழந்த மனிதர்கள், உறவுகள் ஏராளம் என்று சொல்லலாம்; இதற்காகப் பல தடவை மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருந்தியிருக்கிறேன்.

பிறகு எப்படி மீராவோடு இறுக்கமான உறவு ஏற்பட்டது என்றால் அது ஒரு விபத்துப் போல நடந்தது; கால ஓட்டத்தில் நானும் முதுகலை முடித்து வேலைக்குச் சேர்ந்து திருமணமும் முடிக்க நேர்ந்தது. ஆனால் திருமணம் முடித்த ஓராண்டில் மனைவியை இழக்க நேர்ந்தது; தாங்க முடியாத அந்தத் துக்கத்தைத் தனியனாய்த் தன்னந்தனியனாய் எதிர்கொள்ள வேண்டிய என் வாழ்க்கைப் பின்புலத்தில், நான் பல உத்திகளைக் கையாண்டேன்; வாசிப்பது, பயணம் செய்வது, கவிதை எழுதுவது, வாசித்தவற்றில் மனதுக்கு இதமான வார்த்தைகளை, பத்திகளை எழுதி வைப்பது, அழத் தோன்றினால் அழுவது இப்படிப் பல; அப்பொழுது தான் ஒன்று தோன்றியது; இவ்வாறு எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டால் அது மனதிற்குள் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்து தருமே என்று தோன்றியது; உடனே அந்த வேலையைத் தொடங்கி விட்டேன்; மனத்தின் துக்கமும் துயரமும் சரியத் தொடங்கியது போல் உணர்ந்தேன்; அப்பொழுதுதான் கவிஞர் மீரா மீண்டும் எனக்குள் எழுந்து வந்து நின்றார்; அவர் அப்பொழுது சிவகங்கையில் "அன்னம்" பதிப்பகத்தைத் தொடங்கியிருந்தார்; அதில் நானும் ஒரு பங்குதாரராகச் சேர்ந்திருந்தேன்; அவரிடம் போய் நின்றேன்; பரிவோடு என்னை அணுகினார்; என் கையெழுத்துப் படியை அவர் கையில் நீட்டினேன்; "இவன் இந்தக் கவிதைகளை இந்தக் கவிதைகளுக்காக வெளியிடவில்லை; மனத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் இறக்கி வைக்கத் தவிக்கிறான்" என்று புரிந்து கொண்டவராய் "ஒட்டுப் புல்" என்று என் கவிதை ஒன்றின் தலைப்பையே நூலுக்கும் தலைப்பாக்கி வெளியிட்டார்; பக்கத்துக்குப் பக்கம் சிலையைச் செதுக்குவது போலச் செதுக்கித் தானே அற்புதமான ஓர் அணிந்துரையும் எழுதி வெளியிட்டார்; வெறும் பஞ்சுவாக இருந்த என்னை "ஒட்டுப்புல் பஞ்சு" என்று தமிழ்க் கவிதை வெளியில் என்னை நிலைநிறுத்தினார்; கவிஞர் மீரா எத்தகைய மேன்மைமிகு மனிதர் என்பதை என்னைப் போல் வேறு யாரும் உணர்ந்திருக்க முடியுமா? பாரதி சொல்வது போல இங்கிவரை யான் பெற வே என்ன தவம் செய்து விட்டேன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது; இப்படிப் பல நினைவுகள்.

இறுதிக் காலத்தில் அவர் உடல் நலம் குன்றி ஊரெல்லாம் சுற்றிய ஒருவர் வீட்டுக்குள்ளேயே கிடக்க வேண்டிய காலக் கொடுமை வந்து சேர்ந்த போது இராசபாளையத்திற்கு அருகில் இருக்கும் என் புத்தூர் கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் மதுரைக்கு முன்னால் வரும் மேலூரில் இறங்கிக் காலையில் சிவகங்கைக்கு வண்டி ஏறி பார்த்து விட்டுச் செல்வேன்; அப்படி ஒரு தடவை சென்ற போது அதுதான் கடைசிச் சந்திப்பு என்று அப்போது எனக்குத் தெரியாது; ஆனால் அவர்க்குத் தெரிந்திருக்கிறது; ஒரு பக்கக் கை இயங்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்த அந்த மகா கவிஞர் தானே கஷ்டப்பட்டு எழுந்து சென்று ரூபாய் 2500 எடுத்து வந்து என் கையில் நீட்டினார்; நான் "இதெல்லாம் இப்ப எதுக்கண்ணே" என்று சொல்லி வாங்க மறுத்த போதும் விடாமல் என் மேற்சட்டைப் பையில் திணித்து விட்டார்; நான் அழுவதைப் பார்த்து அவரும் அழுது விட்டார்; "அன்னம்" பதிப்பகம் தொடங்கிய போது பங்குதாரராக ஆயிரம் ரூபாய் கொடுத்ததற்கான கணக்கை அவர் முடித்து வைத்திருக்கிறார்; அடுத்த ஓரிரு மாதங்களில் இறந்துவிட்டார்; புதுச்சேரியில் இருந்து நான் அவரது இறுதி ஊர்வலத்திற்குப் போய் வந்தேன்; மயானத்தில் நடந்த அந்த இரங்கற் கூட்டத்தில் பேசுவதற்கு என்னைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்து "பஞ்சு, மீரா போயிட்டாரப்பா" என்று அழுத கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட அனைவரும் என்னைத் தேடியதைப் பார்த்து எங்கள் நட்பின் ஆழத்தைத் தமிழகமே அறிந்திருக்கிறது என்று உணர்ந்து வியந்தேன்;

இறுதியில் மீரா எழுதிய ஒரு மேற்கோளோடு இந்த நினைவலைகளை முடித்தால் நன்றாக இருக்குமெனப்படுகிறது; தன்னோடு உறவாடிய பிற மனிதர்களை அவர் எப்படியெல்லாம் நேசித்து இருக்கிறார் என்பதை அறிய நேரும்போது அதிர்வு ஏற்படுகிறது; இதோ அது:

"கவிக்கோ அப்துல் ரகுமான் என் வலது கண்; கவிஞர் சிற்பி என் இடது கண்; தம்பி இன்குலாப் என் இடது கை; தம்பி காமராசர் என் வலது கை; தம்பி பாலாவும் தம்பி மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம்; கவியரசு வைரமுத்து, கவிஞர்கள் தமிழன்பன், பி சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, சேஷாசலம், கை.வை. பழனிச்சாமி, நாஞ்சில், ஆரிது வைகைவாணன், டி.எம். அப்துல் காதர், பஞ்சு, ரவி சுப்பிரமணியன், வசந்தகுமார் - இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்து இருக்கிறார்கள். எனவே நான் அல்ல, நான் மட்டுமல்ல, எல்லாரும் கலந்த ஓர் அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்"

உறவுக்களமும் போர்க்களமாகும் இந்த நாசகாரச் சமூகத்தில் இப்படி ஒரு மாமனிதர் நம்மோடு வாழ்ந்து முடித்திருக்கிறார்;

மகாகவி மீராவோடு இவ்வளவு நெருக்கமாகப் பழகுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே நானொரு பாக்கியசாலிதான்.

- க.பஞ்சாங்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.