கைப்பேசியும் இணையமும் பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், கருத்துரிமை எனப் பல புதிய வாய்ப்புகளையும் கதவுகளையும் திறந்துவிட்டுள்ளன. ஆனால், அதே இணையவெளி பல பெண்களுக்கு அச்சமும் பாதுகாப்பின்மையும் நிறைந்த களமாகவும் மாறியிருக்கிறது.

நவம்பர் 25 அன்று “பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான பன்னாட்டு நாள்” கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றுமுதல் டிசம்பர் 10 வரை 16 நாள் விழிப்புணர்வுப் பிரச்சாரமும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐ.நா. சபையின் ‘UNiTE’ இயக்கம், “நீதி வழங்குவோம்; பாதிக்கப்பட்டோரைக் காப்போம்; தண்டனையின்மைக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளது. இணையவெளி வன்முறையில் தண்டனைவிலக்கு மிக அதிகமாக உள்ள நிலையில், இந்த முழக்கம் மிகுந்த பொருத்தமுடையதாக இருக்கிறது.

lady on internetஇணையவெளியிலும் பாதுகாப்பில்லை

தொழில்நுட்பம் மூலம் நிகழ்த்தப்படும் பாலின அடிப்படையிலான வன்முறை (Technology-Facilitated Gender-Based Violence – TFGBV) என்பது இதற்கான பொதுவான பெயர். அனுமதியின்றி அந்தரங்கப் படங்களைப் பகிர்தல், இணையவழிப் பின்தொடர்தல், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுதல், மிரட்டிப் பணம் பறித்தல், அவதூறு மற்றும் வெறுப்புப் பேச்சைப் பரப்புதல், செயற்கை நுண்ணறிவு மூலம் போலிப் படங்களை உருவாக்குதல் எனப் பல வடிவங்களில் இது நிகழ்கிறது. இத்தகைய செயல்கள் பெண்களின் மனநலம், சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன.

இணையவழி வன்முறை இணையத்துடன் முடிவதில்லை; அது பெண்களின் நேரடிப் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இணையத்தில் விடுக்கப்படும் மிரட்டல்கள் நேரடிப் பின்தொடர்தலாகவும் உடல்ரீதியான தாக்குதலாகவும் மாறக்கூடும். இதனால் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புகளை இழப்பதுடன், அச்சத்தின் காரணமாகச் சமூக ஊடகப் பயன்பாட்டிலிருந்தும் விலகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

புள்ளிவிவரங்கள் உணர்த்தும் அதிர்ச்சியான உண்மை

உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், பெண்களும் சிறுமிகளும் தொழில்நுட்பம் சார்ந்த வன்முறையைப் பெருமளவில் எதிர்கொள்வதை வெளிப்படுத்துகின்றன. வெவ்வேறு ஆய்வுகளின்படி, உலகளவில் 16 முதல் 58 சதவீதம் வரையிலான பெண்களும் சிறுமிகளும் ஏதாவது ஒரு வகையில் இத்தகைய வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.

எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (EIU) 2021ஆம் ஆண்டு நடத்திய உலகளாவிய ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 38% பேர் நேரடியாக இணையவழி வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளையில், 85% பேர் பிற பெண்கள் இணையத்தில் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாவதைக் கண்டுள்ளனர்.

பிராந்திய அளவிலான ஆய்வுகளும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உறுதிப்படுத்துகின்றன. அரபு நாடுகளில் ஐ.நா. பெண்கள் அமைப்பு (UN Women) நடத்திய ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களில் 60% பேர் ஓராண்டுக்குள் இணையவழி வன்முறையை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் 12 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 50%க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்நாளில் தொழில்நுட்பம் சார்ந்த வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். துணை சஹரா ஆப்பிரிக்காவின் ஐந்து நாடுகளில் 28% பெண்களும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் எட்டு நாடுகளில் 23% பெண்களும் இணையவழித் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறையின் தாக்கம் இணையத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. பிலிப்பைன்ஸில் இணையவழி வன்முறைக்கு ஆளான பெண்களில் 83% பேர் உணர்வுரீதியான பாதிப்புகளையும், 63% பேர் பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதல்களையும், 45% பேர் இணையவழி வன்முறையுடன் தொடர்புடைய நேரடியான உடல்ரீதியான பாதிப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானில் இணையவழித் துன்புறுத்தல்கள் பெண்களுக்கு எதிரான உடல்ரீதியான வன்முறை, பெண் படுகொலைகள், சமூகத் தனிமைப்படுத்தல், வேலைவாய்ப்பை இழத்தல், மாணவிகள் கல்வியை இடையில் கைவிடுதல் போன்ற தீவிரமான விளைவுகளுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இணையப் பயன்பாடு அதிகரிப்பு; பாதுகாப்பு விழிப்புணர்வு போதுமா?

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இணையம் மற்றும் கைப்பேசிப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்கும் கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று கைப்பேசி என்பது ஆடம்பரப் பொருளாக இல்லை. நடுத்தர, ஏழை எளிய குடும்பங்கள் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைத்துத் தரப்பினரிடமும் ஸ்மார்ட்போன்கள் சென்றடைந்துவிட்டன. இணையமும் சமூக ஊடகங்களும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன.

தேசியக் குடும்ப நல ஆய்வின் (NFHS) தரவுகளின்படி, 15–49 வயதுப் பெண்களிடையே இணையப் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இணையப் பயன்பாட்டில் இன்னும் இடைவெளி நீடிக்கிறது. இணையம் பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், தகவல் பரிமாற்றம், கருத்துப் பகிர்வு எனப் பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. அதேவேளையில், முதல் தலைமுறை இணையப் பயனர்களாக இருக்கும் பல பெண்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் போதுமான அளவில் இல்லை என்பதும் கவலைக்குரியது.

சிறுமிகளின் நிலையும் இதற்கு விதிவிலக்கல்ல. ASER 2024 ஆய்வின்படி, 14–16 வயதுடைய சிறார்களில் 82.2 விழுக்காட்டினர் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். சிறுவயதிலேயே இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான இணையப் பழக்கவழக்கங்களையும் தனியுரிமை குறித்த புரிதலையும் அவர்களிடம் ஏற்படுத்துவது அவசியமாகிறது.

ரீல்ஸ் கலாசாரம்: வெளிப்பாட்டுச் சுதந்திரமா, இழிவுபடுத்தும் களமா?

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பதிவிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களும் சிறுமிகளும் தங்களது திறமைகள், கலை ஆர்வம், அன்றாட அனுபவங்கள், கருத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்த இந்தத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களது கருத்துரிமை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்.

ஆனால், இத்தகைய பதிவுகளின் கீழ் இடம்பெறும் சில பின்னூட்டங்கள் ஆபாசமாகவும், இழிவுபடுத்துவதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் இருக்கின்றன. ஒருவரது தோற்றம், உடை, உடல் அமைப்பு, பேச்சு ஆகியவற்றைக் கேலி செய்வதும், பாலியல் கருத்துகளைப் பதிவிடுவதும், தனிப்பட்ட விவரங்களைக் குறிவைத்து அவமதிப்பதும் இணையவெளியில் இயல்பான ஒன்றாக மாறி வருவது ஆபத்தானது. பண்பான விமர்சனத்திற்கும் தனிநபர் கண்ணியத்தைச் சிதைக்கும் இழிவான தாக்குதலுக்கும் இடையே உள்ள எல்லை திட்டமிட்டே மீறப்படுகிறது.

இதற்குப் பொறுப்பு ரீல்ஸ் பதிவிடும் பெண்ணுக்கோ சிறுமிக்கோ அல்ல. அவர்களை இழிவுபடுத்தும் நபர்களும், இத்தகைய துன்புறுத்தல்களைத் தடுக்கத் தவறும் சமூக ஊடகத் தளங்களுமே பொறுப்பேற்க வேண்டும்.

தேசிய இணையக் குற்றப் புகார் தளத்தின் (NCRP) தரவுகளின்படி, பெண்கள் தொடர்பான இணையக் குற்றப் புகார்கள் 2020ஆம் ஆண்டில் 22,188 ஆக இருந்தன. 2024ஆம் ஆண்டில் அவை 48,475 ஆக உயர்ந்துள்ளன. இந்தத் தரவுகள் பெண்கள் தொடர்பான இணையக் குற்றப் புகார்கள் அதிகரித்துள்ளதையும், அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன. இந்தப் புகார்கள் ரீல்ஸ் தொடர்பான துன்புறுத்தல்களை மட்டும் குறிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

போலி அடையாளங்கள், பாலியல் மிரட்டல்கள்; நீதிக்கான தடைகள்

பெண்களை இழிவுபடுத்துவதுடன் இணையவெளித் துன்புறுத்தல் முடிந்துவிடுவதில்லை. போலிக் கணக்குகள் உருவாக்குதல், பெண்களின் பெயரிலும் படங்களிலும் போலியான சுயவிவரங்களைத் தொடங்குதல், தனிப்பட்ட படங்களை அனுமதியின்றிப் பகிர்தல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களை உருவாக்குதல், பாலியல் மிரட்டல் (Sextortion) மூலம் பணம் பறித்தல் போன்ற குற்றங்களும் நிகழ்கின்றன. இத்தகைய குற்றங்கள் பெண்களின் தனியுரிமையையும் கண்ணியத்தையும் மட்டுமல்லாமல், அவர்களின் மனநலத்தையும் சமூக வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கின்றன.

இணையக் குற்றங்களுக்கு எதிராகப் புகார் அளிப்பதும், விசாரணையை விரைவுபடுத்துவதும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதும் இன்னும் பெரும் சவாலாகவே உள்ளன. 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இணையக் குற்ற வழக்குகளின் விசாரணைத் தேக்க விகிதம் 91.8 விழுக்காடாக இருந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது இணையக் குற்ற வழக்குகளின் விசாரணையில் பெரும் தேக்கம் நிலவுவதைச் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், குடும்பக் கட்டுப்பாடுகள், பொருளாதாரச் சார்பு, சமூகப் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்களால் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்புகளை வெளியில் சொல்லவோ, காவல்துறையில் புகார் அளிக்கவோ தயங்குகின்றனர். இதனால், இணையவழி வன்முறையின் உண்மையான பாதிப்பு அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களில் முழுமையாகப் பதிவாவதில்லை.

இணையவழி வன்முறையைத் தடுக்கப் பெண்களும் சிறுமிகளும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டும் போதாது. சமூக ஊடக நிறுவனங்கள் போலிக் கணக்குகள், ஆபாசப் பதிவுகள், இழிவான பின்னூட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் புகார்களைத் தாமதமின்றிப் பெற்று, முறையான விசாரணை நடத்த வேண்டும். குடும்பங்களும் கல்வி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறாமல் அவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.

இணையவழிப் பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இணையக் குற்றங்கள் தொடர்பான புகார்களை cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இணையவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களது தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல; அரசும், தொழில்நுட்ப நிறுவனங்களும், சமூகமும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும்.

பொதுவெளியில் செயல்படும் பெண்களுக்குக் கூடுதல் அச்சுறுத்தல்

அரசியல், ஊடகம், மனித உரிமைகள், சமூகப் பணிகள் போன்ற பொதுவெளிகளில் செயல்படும் பெண்கள் “திட்டமிட்டு நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களுக்கு” அதிகம் இலக்காகின்றனர். அவர்களின் கருத்துரிமையை ஒடுக்கவும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும், பொதுவாழ்வில் அவர்கள் தொடர்ந்து பங்கேற்பதைத் தடுக்கவும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

யுனெஸ்கோ அமைப்பும், சர்வதேசப் பத்திரிகையாளர் மையமும் (ICFJ) இணைந்து நடத்திய உலகளாவிய ஆய்வில், பெண் பத்திரிகையாளர்களில் 73% பேர் தங்கள் பணியின் காரணமாக இணையவழி வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 25% பேர் உடல்ரீதியான வன்முறை குறித்த மிரட்டல்களையும், 18% பேர் பாலியல் வன்முறை குறித்த மிரட்டல்களையும் பெற்றுள்ளனர். மேலும், 20% பேர் இணையவழித் தாக்குதல்களுடன் தொடர்புடைய நேரடித் தாக்குதல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் (IPU) 2025ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வின்படி, ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60% பேர் இணையவழி வெறுப்புப் பேச்சு, தவறான தகவல் பரப்புதல், படங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி வெளியிடுதல் போன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இந்த விகிதம் 46% ஆக உள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களில் 80% பேர் இணையவழித் துன்புறுத்தல் குறித்த அச்சத்தால் சமூக வலைதளங்களில் தங்களது செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டுள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் பெண்களின் குரலைப் பொதுவெளியில் ஒலிக்கவிடாமல் தடுக்கும் கருவியாகவும் மாறியுள்ளன.

சிறுமிகளும் விளிம்புநிலைப் பெண்களும்

இளம் பெண்களும் சிறுமிகளும் இணையவழி வன்முறைக்கு விதிவிலக்கல்ல. Plan International அமைப்பு 22 நாடுகளைச் சேர்ந்த 15 முதல் 25 வயதுக்குட்பட்ட 14,000 பெண்கள் மற்றும் இளம்பெண்களிடம் நடத்திய ஆய்வில், 58% பேர் இணையவழித் துன்புறுத்தலை எதிர்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் முதன்முதலில் இத்தகைய துன்புறுத்தலை 14 முதல் 16 வயதுக்குள் எதிர்கொண்டுள்ளனர். அதாவது, பள்ளிப் பருவத்திலேயே பல சிறுமிகள் இணையவழி வன்முறையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், மாற்றுத்திறனாளிப் பெண்கள், பழங்குடியினர் பெண்கள், சமூக மற்றும் பண்பாட்டு அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள பெண்கள், புலம்பெயர்ந்த பெண்கள் ஆகியோர் இணையவழி வன்முறையால் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர். பாலினப் பாகுபாட்டுடன் சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பாகுபாடுகளும் இணைந்து கொள்ளும்போது, இப்பெண்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மேலும் தீவிரமடைகின்றன. ஏற்கெனவே பல்வேறு தடைகளை எதிர்கொள்ளும் இவர்களுக்கு, இணையவெளியும் மற்றொரு பாதுகாப்பற்ற வெளியாக மாறிவிடுகிறது.

சட்டங்கள் இருந்தும் நீதி கிடைப்பதில் ஏன் தாமதம்?

இணையவழித் துன்புறுத்தலைக் குற்றமாகக் கருதும் சட்டங்கள் உலகின் 40 சதவீதத்திற்கும் குறைவான நாடுகளில்தான் உள்ளன. இதனால், உலகளவில் சுமார் 180 கோடி பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் போதிய சட்டப் பாதுகாப்பு இல்லை என உலக வங்கியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டங்கள் இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் நீடிக்கின்றன. EIU ஆய்வு செய்த 86 நாடுகளில், 64 நாடுகளில் இணையவழி வன்முறை தொடர்பான புகார்களைக் காவல்துறையும் நீதித்துறையும் போதிய அளவில் கையாள்வதில்லை.

புகார்களை அலட்சியப்படுத்துவது, குற்றவாளிகளைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்கள், நாடுகளைக் கடந்து நடைபெறும் குற்றங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தாமதப்படுத்துகின்றன. குடும்பக் கட்டுப்பாடுகள், பொருளாதாரச் சார்பு, சமூகப் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் போன்ற காரணங்களால் புகார் அளிக்கத் தயங்கும் பெண்களின் நிலையும் இந்தச் சிக்கலை மேலும் அதிகரிக்கிறது. இணையவழிக் குற்றங்களில் தடயங்கள் எளிதில் அழிக்கப்படக்கூடும் என்பதால், விசாரணையில் ஏற்படும் தாமதம் நீதியை மறுப்பதற்குச் சமமாகிவிடும். இதுவே இணையவெளி வன்முறையில் தண்டனையின்மை அதிகரிக்க வழிவகுக்கிறது.

எனவே, சட்டங்களை இயற்றுவதோடு நின்றுவிடாமல், அவற்றைத் திறம்படச் செயல்படுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதிப்படுத்துவதும் அவசியம்.

யார் என்ன செய்ய வேண்டும்?

அரசு இணையவழி வன்முறைக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தி, காவல்துறையினருக்குச் சைபர் குற்றங்கள் குறித்த முறையான பயிற்சி அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்ய வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்கள் பெண்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் தங்களது தொழில்நுட்ப வடிவமைப்பிலேயே உறுதி செய்ய வேண்டும்; ஒப்புதலின்றிப் பகிரப்படும் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் இணையப் பாதுகாப்பு, ஒப்புதல், தனியுரிமை ஆகியவை குறித்த விழிப்புணர்வைச் சிறுவயதிலிருந்தே மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் அரசமைப்பு உரிமைக் கல்வியை ஒரு பாடமாக அறிமுகம் செய்திட வேண்டும். சமூக அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்ட உதவியும் உளவியல் ஆலோசனையும் வழங்க வேண்டும். ஊடகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தையும் கண்ணியத்தையும் பாதுகாத்துப் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்.

ஒவ்வொருவரும் பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகளைப் பகிராமல் இருப்பதுடன், இணையவழி வன்முறையைக் கண்டால் புகார் அளித்து, பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணை நிற்க வேண்டும். குடும்பங்களும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறாமல், குற்றம் செய்தவர்களையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

தனிநபர் பிரச்சினை அல்ல; மனித உரிமை மீறல்

இணையவெளி வன்முறையைத் தனிநபர் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. அது பெண்களின் கருத்துரிமை, தனியுரிமை, கண்ணியம், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றைப் பாதிக்கும் மனித உரிமை மீறல். இதில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பிலிருந்து அவை விலகிவிட முடியாது.

“பெண்கள் எல்லா ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறாதவரை சுதந்திரம் முழுமை பெறாது” என்றார் நெல்சன் மண்டேலா. பெண்களின் உரிமைக்கான போராட்டம் பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல; அது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொறுப்பு.

நவம்பர் 25 அன்று தொடங்கும் 16 நாள் பிரச்சாரம், வெறும் விழிப்புணர்வு நிகழ்வுகளோடு முடிந்துவிடக் கூடாது; பெண்களின் பாதுகாப்பும் மாண்பும் உறுதி செய்யப்படும் சமூகத்தை உருவாக்குவதற்கான தொடக்கமாக அமைய வேண்டும். அந்த மாற்றம் குடும்பங்களில் தொடங்கி, பள்ளிகள், பணியிடங்கள், சமூக அமைப்புகள் எனப் பரவி, அரசின் கொள்கைகளிலும் செயல்பாடுகளிலும் எதிரொலிக்க வேண்டும்.

- வழக்கறிஞர் கா. கணேசன், எழுத்தாளர், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.