கடந்த கட்டுரையில் உலகிலுள்ள ஒவ்வொன்றிலும் எதிரெதிர்த் தன்மைகளைக் கொண்ட இருமைகள் கூட்டாக இருக்கின்றன என்பது முரண்பாடுகளின் விதி; ஒவ்வொன்றின் சாரத்திலும் இருக்கும் எதிரெதிரான அந்த இருமைகளின் கூட்டை ஆய்ந்தறிவது இயக்கவியல் பொருள்முதல்வாதம்; ஒவ்வொன்றிலும் இருக்கும் முரணான எதிர்மறைகளின் கூட்டொருமைகளினால் ஒவ்வொன்றும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்றன; இந்த முரண்களின் இயக்கமும் மாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையது; ஒவ்வொன்றிலும் பல முரண்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன; அதில் ஒன்று முதன்மையானதாக இருக்கிறது; முதன்மையான முரணில் உள்ள இரண்டு கூறில் எந்தக் கூறு ஒன்றில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதுவே அதன் பண்பைத் தீர்மானிக்கிறது; அது எப்போதும் இயங்கி மாறக்கூடியது; இந்தப் பண்பு மாற்றத்தில் அதன் அகநிலையே தீர்மானகரமானது; புறநிலை இந்த மாற்றத்திற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது என்று கண்டோம். அதைத் தனிமனிதர்களின் வாழ்வுக்குப் பொருத்திப் பார்த்தோம்.

ஆனால் வாழ்க்கை குறித்த முழுமையான புரிதலுக்கு அந்தத் தனிமனிதர் வாழும் சமூகத்தையும் அதன் உருவாக்கம், இயக்கம், மாற்றத்தினை இயங்கியல் அறிவியல் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் வாழும் தமிழ்ச் சமூகத்தின் சாரத்தில் இருக்கும் எதிரெதிரான அந்த இருமைகளின் கூட்டை ஆய்ந்தறிய வேண்டும். அதற்குச் சமூகம் குறித்த பொதுவான இயங்கியல் அறிவியல் என்ன என்பதை அறிய வேண்டும்.

இயங்கியல் பார்வையில், மனிதரிலும் வாழ்விலும் இருக்கும் முரண்பட்ட இருமைகள் நம்மை இயக்கி மாற்றிக் கொண்டிருப்பதைப் போல நமது வாழ்வுடன் தொடர்புடைய அரசியல், பொருளாதாரம், கருத்தியல், பண்பாடு ஆகியவற்றிலும் இருமைகள் இருந்து இயக்கி நாம் ஒன்றாக வாழ்ந்து வரும் சமூகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றன. முரண்பட்ட இருமைகளினாலான உலகத்தின் ஒவ்வொன்றின் இயக்கமும் மாற்றமும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதைப் போல சமூகத்தின் இயக்கமும் மாற்றமும் இவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

எப்படித் தொடர்புடையது என்று கேட்டால் சமூகம் என்ற மாபெரும் அமைப்பில் எண்ணற்ற முரணான இருமைகள் இருந்தாலும் அதில் தீர்மானகரமானது பொருளாதார அடித்தளம் (economic base) மற்றும் பண்பாட்டு மேல்தளம் (superstructure) ஆகிய முரண்பட்ட இருமைகள் என்கிறது முரண்பாட்டு விதி. இதன்படி சமூகத்தின் சாரத்தில் உள்ள இந்த இருமையின் முரணான இயக்கத்தில்தான் இதுவரையிலுமான இனக்குழு சமூகத்தில் தொடங்கி நிலபிரபுத்துவ, முதலாளித்துவ, ஏகாதிபத்திய, சோசலிசச் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இது உண்மையா? என்று இதுவரையிலுமான இந்தச் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய பொருளாதார, பண்பாட்டுத் தளங்களைத் தொகுத்துப் பார்ப்போம். இனக்குழு சமூகத்துக்கு இயற்கையான காடுகள் அடித்தளமாகவும் அந்த இனக்குழுவுக்குள் மணம் அவர்களுக்கு “மட்டுமான” விடுதலை, சமத்துவம், சகோத(ர)ரித்துவச் சனநாயகப் பண்பாடு, இயற்கையையும் பெண்தெய்வ வழிபாட்டையும் கொண்ட பழக்கம் என்று மனித குலத்தின் பயணம் தொடங்கியது. பின்பு இயற்கையை வென்று உணவைச் செயற்கையாகக் கால்நடை வளர்ப்பு, விவசாயம் வழியாக உற்பத்தி செய்வது என மாறியது. அந்த இயற்கையில் இருந்து செயற்கையான பொருளாதார அடித்தள மாற்றத்துக்கு ஏற்ப அந்தந்தத் தொழில்களைச் செய்பவர்களுக்குள் மணம் அந்தப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்திய ஆண்களுக்கும் அதிலும் ஆண் இராணுவத் தலைமைகளுக்கும் கூடுதலான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவச் சனநாயகப் பண்பாடு, ஆண்தெய்வ முன்னோர் வழிபாட்டுப் பழக்கம் கொண்ட ஆணாதிக்க சமூகம் என்று மாறியது.

அடுத்து சொந்தத் தேவைக்கு உணவையும் பொருளையும் உற்பத்தி செய்வது மாறி விவசாயமும் தொழிற்துறையும் வளர்ச்சி கண்டு சந்தையில் விற்றுப் பணத்தின் வழியாகப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கான சரக்கு உற்பத்தி தோன்றியது. இந்தப் பொருளாதாரத்தின் ஆதாரமான நிலத்தைக் கைக்கொண்ட நிலபிரபுக்களுக்குள் மணம் அவர்களுக்குச் சனநாயகமும் சர்வாதிகாரமும் வழங்கும் ஓரிறை கோட்பாடு, மதநெறிப் பண்பாடு கொண்ட நிலபிரபுத்துவ சமூகம் என்பதாக மாறியதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது.

four fold structure of contradictionsஅதனை அடுத்து விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளித் தொழிற்துறை வளர்ந்து பணத்தின் பயன்பாடு மேலும் பெருகி உற்பத்தியைத் தீர்மானிக்கும் ஒன்றாக மூலதனம் மாறியது. உற்பத்தியின் ஆதாரமான இந்த மூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் முதலாளிகள் கைப்பற்றிய செல்வந்தர்களுக்குள் மணம் அவர்களுக்குச் சமமாகச் சனநாயகம் வழங்கும் தேர்தல் சனநாயகப் பண்பாடு ஏற்பட்டது. பின்னர் உற்பத்தி இயந்திரமயமானபோது தொழிற்துறை மூலதனமும் வங்கி மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்த ஏகாதிபத்திய பொருளாதாரமும் அந்த ஒருசிலரின் ஒற்றை உலக ஆதிக்கத்துக்கான தனியார்மய, தாராளமய உலகமயப் பண்பாடு ஏற்பட்டது.

இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மூலதனத் தொழில்நுட்ப உற்பத்தியைச் சமூகமயமாக்கிய சோசலிசப் பொருளாதார மாற்றத்துக்கு உலக உழைப்பாளர்களுக்கு “மட்டுமான” சனநாயகப் பண்பாடு (dictatorship of proletariat) முன்வைக்கப்படுகிறது. இப்படி உலகில் ஏற்பட்ட பொருளாதார அடித்தள மாற்றத்துக்கு ஏற்பப் பண்பாட்டு மேல்தளம் தொடர்ந்து மாறி வந்திருப்பது முரண்பாட்டு விதி சொல்வது உண்மைதான் என்று உறுதி செய்வதாக இருக்கிறது.

சமூக மாற்றத்தின் பொறிமுறை (mechanism)

இதில் பொருளாதாரம் பண்பாட்டை மாற்றுகிறதா? இல்லை பண்பாடு பொருளாதாரத்தை மாற்றுகிறதா? என்ற கேள்வி முக்கியமானது. இதற்குப் பொருளாதார அடித்தள மாற்றம்தான் புதிய பண்பாட்டுத் தேவையை ஏற்படுத்திப் பழைய பண்பாட்டை மாற்றுகிறது; அதுவே முதன்மையானதும் தீர்மானகரமானதுமாக இருக்கிறது எனப் பதிலுரைக்கிறது முரண்பாட்டு விதி.

அதெப்படி என்று கேட்டால் அணுவுக்குள் இருக்கும் நேர்-எதிர் மின்னூட்ட இருமையில் ஒன்றான எதிர் மின்னூட்ட எலக்ட்ரானுக்குள் நேர், எதிர் சுழற்சி என்ற இன்னொரு இருமை இருப்பதைப் போல சமூக மாற்ற இருமையில் உள்ள பொருளாதார அடித்தளத்துக்குள் உற்பத்திமுரண் அதனுள் வர்க்கமுரண் ஆகிய இருமைகளும் பண்பாட்டு மேல்தளத்தில் அரசியல்முரண், கருத்தியல்முரண் ஆகிய இருமைகளும் இருக்கின்றன; பொருளாதாரத்தில் உள்ள இருமைகள் இயங்கி அடித்தளத்தை மாற்றி அந்த மாற்றத்துக்கு ஏற்பப் பண்பாட்டு மேல்தளத்தில் உள்ள இருமைகளை மாற்றுகிறது; எனவே பொருளாதார அடித்தளம்தான் முதன்மையானது; அதனைச் சமூகத்தில் நிலைப்படுத்தும் பண்பாடு இரண்டாம் நிலையை வகிக்கிறது என்று இந்த அறிவியலை மேலும் விரித்துரைக்கிறது. ஆனால் சிலநேரங்களில் பண்பாட்டு மேல்தளமும் முதன்மையாக மாறும்; அதனால் இந்த அறிவியலை மாறாத மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் எச்சரிக்கையும் செய்கிறது.

மேலும் உற்பத்தி-வர்க்கம், அரசியல்-கருத்தியல் ஆகிய இருமைகளுக்குள் எது முதன்மையானது என்று கேட்டால் உற்பத்தியும் அரசியலும்தான் முதன்மையானது; அதாவது உற்பத்திதான் வர்க்கத்தைத் தீர்மானிக்கிறது; அரசியல்தான் நடைமுறையில் அதிகாரத்தைக் கைப்பற்றிப் பழைய கருத்தியல் விதிகளை உடைத்துப் புதிய கருத்தியலை நடைமுறைப்படுத்துகிறது என்று நுணுக்கமாகப் பார்க்கச் சொல்கிறது.

உற்பத்தி மாற்றத்தில் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கும் மனிதர்களின் உழைப்பையும் கணக்கில் கொண்டால் சமூகத்தை மாற்றும் பொறிமுறை (mechanism) என்பது “உழைப்பின் வளர்ச்சி உற்பத்தியை மாற்றி அது உற்பத்தியுடன் மனிதர்கள் கொண்டிருக்கும் உறவை மாற்றி வர்க்கத்தைத் தோற்றுவித்து அந்த வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம் அரசியலாக வெளிப்பட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிப் பழைய கருத்தியலை உடைத்துப் புதிய கருத்தியலை நடைமுறைப்படுத்திச் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என்று தொகுத்துப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் நிலவும் இருமைகள்

இந்தச் சமூக இயங்கியல் புரிதல் அடிப்படையில் தமிழ்ச்சமூகத்தில் தற்போது நிலவும் இருமைகள் என்னவென்று பார்க்கலாம். அதிமுகவைப் பாஜக கைப்பற்றியது முதல் தமிழ்நாட்டின் அரசியல் சாதிய ஆதிக்கத்தை மையப்படுத்திய பார்ப்பனிய அரசியல் அதனை எதிர்த்த சாதியச் சமத்துவத்தை மையப்படுத்திய சமூகநீதி அரசியல் எனத் தெளிவாக இரண்டாகப் பிரிந்தது. அதன்பிறகு தீவிர பார்ப்பனிய சாதியவாதிகள் ஒருபக்கமும் மிதவாத சனநாயக சமத்துவ எண்ணம் கொண்டவர்கள், சாதிய எதிர்ப்பாளர்கள் மறுபுறமும் நின்று தேர்தலை எதிர்கொண்டார்கள். பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் சனநாயக சமூகநீதி அரசியல் வெற்றிபெற்றது. பார்ப்பனிய அரசியலின் வலிமையைக் கூட்டக் கையில் எடுத்த இந்துத்துவ எழுச்சி அரசியல், எதிரணியை உடைக்கவும் அவர்களின் வாக்குகளைப் பிரிக்கவும் செய்த முசுலிம் வெறுப்பு, முருகன் வேல் யாத்திரை, தீபத்தூண் கலவர அரசியல் என அனைத்தும் தோல்வி அடைந்தது. இறுதியாகச் சினிமா கவர்ச்சியை மூலதனமாக்கி நடைமுறையில் இருந்த மதச்சார்பற்ற சனநாயக சமூகநீதி அரசியலுக்குப் பதிலாக அதேபோன்று ஒரு போலியான (pseudo) கொள்கை அரசியலைப் பேச வைத்து அந்தக் கொள்கையின் தலைமையாக இருந்த திமுகவின் மீதான வெறுப்பு அரசியலைக் கட்டமைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். அந்த முற்போக்கு அணியை வெற்றிகரமாக உடைத்து இருக்கிறார்கள்.

இது எப்படிச் சாத்தியமானது, தவறுகள், படிப்பினைகள் என்று விரிவாகப் பேச வேண்டும். அதைவிட முக்கியமானது இந்த வெற்றி இனியும் தமிழ்நாட்டில் பார்ப்பனிய சாதியவாத அரசியல் வெற்றி பெறமுடியாது; சமூகம் குறிப்பிடத்தக்க அளவு பண்பு மாற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்தது. அது தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கும் அடிப்படை சமூக மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டியது. அதேசமயம் ஒரு போலியால் வீழ்த்த முடியுமளவுக்கு அது முழுமையற்றதாகவும் நீடித்து நிலைத்து நிற்கும் பொருளாதார அடிப்படையற்றதாகவும் இருக்கிறது.

இந்த மாற்றங்களை ஒரு சுருக்கமான கருத்துருவாக்கமாக தமிழ்ச் சமூகத்தில் சாதியக் குழுவாத மதிப்பீடுகள் உடைந்து தன்னல வர்க்க மதிப்பீடுகள் ஆதிக்கம் பெற்று வருகின்றன.

தமிழக அரசியலில் பார்ப்பனிய மற்றும் சமூகநீதி அரசியல் கருத்தியல்களுக்கு இடையிலான முரண் கூர்மை அடைந்து வருகிறது.

இந்த அரசியல் கருத்தியல்களின் அடித்தளமான பொருளாதாரத்தில் பார்ப்பனிய ஆதிக்க முதலாளிகள் அதனை எதிர்த்த சமமான வாய்ப்பு கோரும் சமூகநீதி முதலாளிகள் என இரு முரண்பட்ட கூறுகள் வளர்ந்து இணைந்து இயங்க முடியாத நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன என்று சாரமாகத் தொகுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் சமூகநீதி அரசியலையே துணைக்கண்ட அளவில் பாஜகவின் பார்ப்பனிய இந்துத்துவக் கருத்தியலுக்கு மாற்றாகக் காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளும் பின்பற்ற வேண்டிய நிலைக்கு வந்திருப்பது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்த இருமைகள் தொடர்ந்து இயங்கி வந்திருப்பதையும் தற்போது இரண்டுக்கும் இடையிலான முரண் கூர்மையடைந்து வருவதையும் உரத்துக் கூறுகின்றது.

இப்படிப் பொருளாதாரத்தில் பார்ப்பனிய - சமூகநீதி முதலாளித்துவம், அரசியலில் சாதிய ஆதிக்கம் - சாதியச் சமத்துவம், கருத்தியலில் ஏற்றத்தாழ்வான பார்ப்பனிய இந்துத்துவம் - சமமான சமூகநீதி, சமூகத்தில் சாதியக் குழுவாத- வர்க்க தன்னல மதிப்பீடுகள் எனத் தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரம், அரசியல், கருத்தியல், பண்பாடு ஆகியவற்றின் ஒவ்வொன்றிலும் இருமைகள் நிலவுகின்றன என்று முடிவுக்கு வரலாம்.

இயங்கியலின்படி இவை நமது சமூகத்தின் சாரத்தில் நிலவும் முரணான இருமைகளும் அந்த முரண்பாடுகளின் இரு கூறுகளும் (two aspects). இதுவல்லாத முதலாளித்துவம் சோசலிசம் ஆகிய முரணான கூறுகளும் நமது சமூகத்தில் இயங்குகின்றன. அது இன்றைய சூழலில் முதன்மையான முரணல்ல; அது துணைமுரண். இவை ஏதோ திடீரென நம்மிடம் தோன்றியது கிடையாது; தோன்றவும் முடியாது. அது ஒரு நீண்ட நெடிய வரலாற்று வளர்ச்சியின் போக்கில் பல்வேறு நிலைகளையும் வடிவங்களையும் எடுத்த பின்பே (long processes and developments) இந்நிலைக்கு வர முடியும்.

அப்படி வளர்ந்து மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் இந்த இருமைகளின் வரலாற்று வளர்ச்சிப் போக்கை முழுமையாக இயங்கியல் வழியிலான புரிதலின் மூலமே முரண்பட்ட இந்தக் கூறுகளுக்கு இடையிலான போராட்டத்தில் நாம் சரியான முறைகளைக் கையாண்டு வெற்றிபெற்று வேகமாக இந்தச் சாதியச் சமூகத்தை மாற்றியமைக்க முடியும். அதுவல்லாத அவசரகதியிலான முன்னெடுப்புகள் அரைகுறை புரிதலின் ஊடான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அல்லது பின்னடைவையே தரும்.

ஆகவே தமிழ்ச் சமூகத்தில் தோன்றி வளர்ந்திருக்கும் சாதி, சமூகநீதி ஆகிய இருகூறுகளின் வரலாற்று வளர்ச்சிப் போக்கை இயங்கியல் வழியில் புரிந்துகொள்வது அவசியம். அதனை அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.