kanimozhiஇந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடித்துக் கிளம்பியுள்ளன. திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம், விமான நிலையத்தில் ஒரு காவலர், "இந்தி தெரியாத நீங்கள் ஒரு இந்தியரா?" என்று கேட்டதாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி "இந்தி தெரியாது போடா" என்ற முழக்கத்துடனான சமூக வலைதள பிரச்சார இயக்கத்தின் தொடக்கமாக அமைந்தது. சில இடங்களில் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்களை தார் பூசி மறைப்பது போன்ற களப் போராட்டங்களும் நடைபெற்றன.

இப்போது அரசியல் ரீதியான கருத்தியல் போராட்டங்களும், செயல்பாடுகளும் சமூக வலைத் தளங்களுக்கு நகர்ந்து விட்டிருக்கின்றன என்பதைக் காட்டும் படியாக பாஜகவினரும் இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர்வினையாக "டீ ஷர்ட் போடுவதால் தமிழ் வளர்ந்து விடாது, இந்தி தெரியாது போடா என்று சொல்வதற்கு பதிலா தமிழ் கற்றுக் கொள் வாடா" என்று பேச வேண்டும் என்று பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

“இந்தியனாக இருந்து கொண்டு இந்தி தெரியாது என்கிறாயே", “இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை" இது போன்ற வார்த்தை தாக்குதல்களை இந்தி மேலாதிக்கவாதிகளிடம் எதிர்கொண்ட பலர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

உண்மையில், மேலே சொல்லும் தாக்குதல்களுக்கு இந்தியா என்ற கட்டமைப்பின் ஆவணங்களே ஆதாரத்தையும் அடிப்படையையும் எவ்வாறு வழங்குகின்றன என்று பார்க்கலாம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 343-ன் கீழ் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்துக்களுடன் கூடிய இந்தியானது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகள் வரை ஒன்றிய அரசின் அலுவல்களில், அதுவரை பயன்படுத்தப்பட்ட பணிகளில், ஆங்கிலத்தை பயன்படுத்தி வர வேண்டும் என்று அது விதிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 344(1)-ன்படி ஒன்றியத்தின் அலுவல் தேவைகளுக்காக இந்தியை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். 

அதில் இடம் பெற வேண்டிய பிரதிநிதிகள் எந்தெந்த மொழி பேசும் பிரிவினரிடமிருந்து வர வேண்டும் என்பதற்கான மொழிகளின் பட்டியல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

அவ்வாறு இந்தி மொழியின் பயன்பாட்டை ஊக்கவிக்கவும் ஆங்கில மொழி பயன்பாட்டை தடுக்கவும் மாநில அரசுகளுடனான தகவல் தொடர்புக்கான மொழி போன்ற விஷயங்களிலும் இந்த ஆணையம் பரிந்துரைகளை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யும் போது இந்தியாவின் தொழில், கலாச்சாரம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியையும், பொதுப் பணிகளைப் பொறுத்தமட்டில் இந்தி பேசாத பகுதிகளில் வாழும் மக்களிடையே கோரிக்கைகளையும் அக்கறைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் சொல்லப்படுகிறது.

பிரிவுகள் 345, 346, 347 ஆகியவை மாநில அளவில் அந்தந்த மாநில மொழிகளை அல்லது இந்தியை பயன்படுத்துவதையும், ஒன்றிய அரசுடனும் பிற மாநிலங்களுடனும் தகவல் பரிமாற்றத்துக்கு மத்திய அரசின் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டதைப் (முதன்மையாக இந்தி, காலநீட்டிப்பு தொடரும் வரை ஆங்கிலமும்) பயன்படுத்தவும் விதிக்கின்றன.

பிரிவு 351-ன் கீழ்

  • இந்தி மொழியைப் பரப்புவதற்கும், இந்தியாவின் பல்வகையான பண்பாடுகளை வெளிப்படுத்தக் கூடிய மொழியாக அதனை வளர்ச்சியுறச் செய்வதற்கும்
  • ஹிந்துஸ்தானியிலிருந்தும் எட்டாவது அட்டவணையிலுள்ள மற்ற இந்திய மொழிகளிலிருந்தும், இந்தியின் மூலம், வடிவம், நடை மற்றும் விளக்கம் ஆகியவற்றை மாற்றாமல் அம்மொழியைச் செறிவும் செம்மையும் அடையச் செய்வதற்கும்,
  • அதனுடைய சொல்வளத்துக்காக முதலில் சமஸ்கிருதத்திலிருந்தும் பிறகு மற்ற மொழிகளிலிருந்தும் தேவைப்படும் மற்றும் விரும்பத்தக்க சொற்களைக் கையாண்டும்

ஆவன செய்வது ஒன்றிய அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

இதிலிருந்து, 8-வது அட்டவணையில் பட்டியலிடப்படும் இந்தி, சமஸ்கிருதம் அல்லாத பிற இந்தியாவின் மொழிகளை இந்திக்கு தொண்டூழியம் செய்ய வேண்டிய மாற்றாந்தாய் பிள்ளைகளாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் பார்க்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மொழிகளின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் உறுதிச் செய்வதற்கு ஒன்றிய அரசுக்கு எந்தக் கடப்பாட்டையும் அரசமைப்புச் சட்டம் விதிக்கவில்லை. அந்தந்த பகுதி மொழிகளை தமது ஆட்சி மொழியாக வைத்துக் கொள்ள மட்டும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.

அதாவது அதிகாரங்கள் குவிக்கப்பட்ட, நிதி ஆதாரங்கள் மேலும் மேலும் மையப்படுத்தப்படும் ஒன்றிய அரசு இந்தி மொழி வளர்ச்சிக்கும் அது பிற இந்திய மொழிகள் மீது ஆதிக்கம் செல்வதற்கும் வேண்டிய எல்லா விஷயங்களையும் செய்வதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது.

இந்தி, சமஸ்கிருத மொழிகளுடன் முதலில் அசாமீஸ், வங்காளி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 12 மொழிகளும் பின்னர் கொங்கணி, மணிப்பூரி, நேபாளி, சிந்தி, போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகிய 8 மொழிகளும் என மொத்தம் 22 மொழிகள் 8-வது அட்டவணையில் உள்ளன.

இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த மற்ற மொழிகள் சேர்க்கப்பட்டிருப்பதன் நோக்கமே அந்த மொழி பேசும் மக்களை இந்தியின் பயன்பாட்டை அதிகரித்துச் செல்லவும் அந்த மொழிக்கு செறிவூட்டவும் அதை வளர்க்கவும் ஏற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை முறைப்படுத்தத்தான் என்று தெளிவாகிறது.

அதன்படி இம்மொழி பேசும் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவும், இந்தி அல்லாத மொழிகளை இரண்டாம் நிலை, பிராந்திய அளவிலான, இந்திக்கு கீழ்ப்பட்ட மொழிகளாகவும் மாற்றுவதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் விதிக்கிறது.

1963-ம் ஆண்டின் “அலுவல் மொழிகள் சட்டம்”, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட 15 ஆண்டுகள் என்ற வரம்புக்குப் பிறகும், ஆங்கிலம் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக நீடிக்க வழிவகுக்கிறது.

அதுவரை ஆங்கிலத்தில் செய்யப்பட்டு வந்த ஒன்றிய அரசின் பணிகளுக்கும், நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கும், இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுடன் ஒன்றிய அரசும் பிற இந்தி அலுவல் மொழி மாநிலங்களும் தகவல் பரிமாறிக் கொள்ளவும் ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது.

இங்கும், எந்த இடத்திலுமே தமிழ் முதலான பிற 8-வது அட்டவணை மொழிகளை அலுவல் மொழியாகவும் தகவல் தொடர்பு மொழியாகவும் பயன்படுத்துவது பற்றியோ அவற்றை வளர்ப்பது பற்றியோ குறிப்பு கூட இல்லை.

'இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாக தொடரும்' என்ற அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் வாயுறுதியும் இந்தி அல்லாத பிற மொழிகள் பேசும் மக்களை பணிய வைக்கும் வரை ஆங்கிலத்தையும் பயன்படுத்தலாம் என்ற அலுவல் மொழி சட்டத்தின் சலுகையும் மட்டுமே ஒன்றிய அரசின் அரசியல் சட்ட ரீதியான இந்தி பரப்பும் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரே வாதமாக இருக்கிறது.

எனவே, அரசியல் சட்ட ரீதியாக இந்திய நாட்டின் குடிமக்களாக வாழும் அனைத்து மக்கள் பிரிவினரும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், இந்திய சட்டங்களுக்கு பணிந்து வாழும் ஒவ்வொருவரும், இந்தியின் மேலாதிக்கத்தையும் பயன்பாட்டையும் ஏற்றுக் கொள்ள விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றிய அரசில் அலுவல் மொழித் துறை என்று தனித்துறை உள்ளது. அதற்கான தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது அலுவல் மொழியான இந்தியை வளர்ப்பதும் பரப்புவதும் என்ற தலைப்பில் நடவடிக்கைகளை செய்து வருகிறது.

  • இந்தி மொழி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது,
  • இந்தி பிரச்சார சபைகளை ஏற்படுத்துவது,
  • மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்திலும் இந்தியில் பேசுவது, எழுதுவது, கற்றுக் கொள்வதை ஊக்குவித்தல்

ஆகியவற்றை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

பொதுத்துறை வங்கிகள், அரசின் தொலைக்காட்சி, வானொலி சேவைகள், ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகங்கள், ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு என தொடர்ந்து இந்தி மொழி இந்தியாவின் அனைத்து மாநில மக்கள் மீதும் மேலும் மேலும் அதிக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையிலான, சட்ட ரீதியிலான இந்தியின் ஆதிக்கமும் செல்வாக்கும் ஓசையின்றி இவ்வாறாக படிப்படியாக பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு மேல், அரசு வேலைக்கான தகுதித் தேர்வுகளில் மாநில மொழிகள் ஒதுக்கப்படுவது, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்துவது என வெளிப்படையாக தெரியும் திணித்தல்களும் நடைபெறுகின்றன. அவையும் சட்டப்படியே நடைபெறுகின்றன என்பது தெளிவு.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் முதன்மையாக கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிராத மாநில மக்களின் வாய்ப்புகள் பறி போவதை மையமாக வைத்தே வீச்சடைகின்றன. மாணவர்களும், குட்டி முதலாளித்துவ இளைஞர் அமைப்புகளும் அவற்றில் குதிக்கின்றனர்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டில் கூட அரசியல் கட்சிகள் பள்ளியில் மொழிப்பாடம் போன்ற குறிப்பான விஷயங்களில் மட்டும் இந்தித் திணிப்பு எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு நின்று விடுகின்றன.

மேலே, விளக்கியபடி இந்திய அரசியல் கட்டமைப்பிலேயே இந்தித் திணிப்புக்கான, இந்தி மேலாதிக்கத்துக்கான உறுப்புகளும், அவற்றை வலுப்படுத்தும் சட்டங்களும் இருப்பதை எதிர்ப்பதில்லை; அவற்றை ரத்து செய்யவும், 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்கவும், அவற்றை வளர்ப்பதற்கான கடப்பாட்டை ஒன்றிய அரசுக்கு விதிப்பதையும் கோருவதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதுவரை 104 தடவை திருத்தப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 பாஜக அரசால் நீர்த்து போகச் செய்யப்பட்டது. அம்மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, அது இரண்டாக பிரிக்கப்பட்டது.

இவ்வாறு, ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுகிறது. எனவே, மக்களின் உரிமைகளையும் நாட்டின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையிலான அட்டவணை 8-ல் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்கும் மேற்சொன்ன திருத்தம் சட்ட ரீதியாக சாத்தியமானதும் அவசியமானதுமே.

தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும், முதலாளித்துவ கூட்டமைப்புகளும் ஆகிய வர்க்க அமைப்புகள் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடாமல் இருப்பது இது இன்னமும் மொழி, கலாச்சார வடிவிலான திணிப்பாகவே பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்த வர்க்கங்களும் அடங்கிய பொது மக்களின் குறிப்பாக உள்ளூர் நடுத்தர முதலாளித்துவ வர்க்கம் இந்தப் போராட்டங்களுக்கு பொருள் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் ஆதரவாக இருப்பது அதன் பொருளாதார அடித்தளத்தையும் காட்டுகிறது.

என்ன பொருளாதார அடித்தளம்?

இந்தியா என்ற ஒற்றை நாடு, அதன் 'தேசிய' மொழியாக இந்தி, அதன் 'தேசிய' கலாச்சாரமாக 'இந்து மதக் கலாச்சாரம்' என்ற கருத்தாக்கமும் நடைமுறையும் 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் காலனிய முதலாளித்துவ உற்பத்தி முறை திணிக்கப்பட்ட பிறகே உருவாகத் தொடங்கின.

இந்தியத் துணைக்கண்டம் கடல்களால் பிரிக்கப்படாத ஒற்றை நிலப்பரப்பாக பௌதீக ரீதியில் ஒன்றுபட்டு இருந்தாலும், பொதுவான மொழி, பொதுவான கலாச்சாரம், பொதுவான மத்திய அரசு, பொதுவான பொருளாதாரம் என்ற அடிப்படையில் இந்தியா என்ற ஒற்றை நாடு நிலவுவதற்கான பொருளாயத அடிப்படை வரலாற்றில் ஒரு போதும் நிலவியதில்லை.

17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் முதன்மையாக இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில அரசுகள் தேசியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தோன்றின.

ஐரோப்பிய தேசிய அரசுகள் ஒரே மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களை ஒரே அரசின் கீழ் இணைப்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. கூடுதலாக, கத்தோலிக்க, புரோட்டஸ்டன்ட் மத அடிப்படையும் தனித்தனி தேசிய அரசுகளின் ஆதாரமாக அமைந்தன.

ஐரோப்பாவின் மத்திய காலத்தின் இறுதியில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து அடங்கிய பிரிட்டிஷ் தீவு அங்கிருந்த மொழி வேறுபாடுகளையும் இனக்குழு மத கலாச்சார அடையாளங்களையும் துடைத்தெறிந்து ஆங்கில மொழி, ஆங்கில திருச்சபை ஆகியவற்றின் கீழ் ஒற்றை தேசிய அரசாக ஒருங்கிணைக்கப்பட்டது. பிரிட்டன் 17-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ புரட்சிகளின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயக முடியரசாக முதலில் பரிணமித்தது.

பிரான்ஸ் நாடு 12-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளை இணைத்த ஒற்றை நாடாக இருந்தது. 1789 பிரெஞ்சுப் புரட்சி, அதற்குப் பிந்தைய நெப்போலிய போர்கள் அதை இன்னும் நெருக்கமாக பிணைத்து முதலாளித்துவ தேசிய அரசை உருவாக்கின.

ஸ்பெயின் நாடும் மத்திய காலத்திலிருந்து முதன்மை மொழி, முதன்மை மதம் அடிப்படையில் ஒற்றை அரசு பாரம்பரியத்தைக் கொண்டதாக மாற்றப்பட்டது. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த இசுலாமியர், யூதர் ஆகிய மதப் பிரிவினர் கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

இத்தாலியும் ஜெர்மனியும் 19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில்தான் ஒற்றை புவியியல் இணைப்பு, ஒற்றை மொழி அடையாளம் என்ற அடிப்படையில் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ந்து முழுமை பெறும் நிலையை அடைந்த பிறகே ஒரே நாடாக இணைக்கப்பட்ட ஜெர்மனியும் இத்தாலியும் 20-ம் நூற்றாண்டில் முறையே நாஜிக்கள் மற்றும் பாசிஸ்டுகளின் விளைநிலமாக இருந்தன என்பதும் ஆய்வுக்குரிய பொருளாக உள்ளது.

நாடு

மொழி

மதம்

 

மக்கள் தொகை

பிரிட்டன்*

ஆங்கிலம்

 கிறித்துவம்

இங்கிலாந்து திருச்சபை

6.8 கோடி

பிரான்ஸ்

பிரெஞ்சு

 கிறித்துவம்

கத்தோலிக்கம்

6.7 கோடி

ஜெர்மனி

ஜெர்மன்

 கிறித்துவம்

கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட்

8.3 கோடி

ஸ்பெயின்

ஸ்பானிஷ்

 கிறித்துவம்

கத்தோலிக்கம்

4.7 கோடி

இத்தாலி

இத்தாலியன்

 கிறித்துவம்

கத்தோலிக்கம்

6.0 கோடி

* வட அயர்லாந்தையும் சேர்த்து


இவ்வாறு பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி போன்ற பெரிய மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் சுமார் 4 கோடி முதல் 8 கோடி வரையிலான ஒற்றை மொழி பேசும் மக்கள் தொகையையும் ஒற்றை மதப் பெரும்பான்மை அடையாளத்தையும் கொண்டுள்ளன.

இந்தியாவை தமது காலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவின் அரசுக் கட்டமைப்பையும் அதே அடிப்படையில் அணுகினார்கள். தாம் கைப்பற்றிய இந்திய துணைக்கண்டத்துக்கான ஆட்சியமைப்ப்பை அவர்கள் கட்டியமைக்க முயன்ற ஒற்றைச் சந்தையை ஆள்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கினார்கள்.

ஒன்றுபட்ட முதலாளித்துவச் சந்தையை திணிப்பதற்கான பௌதீக உள்கட்டமைப்புகளான தபால்-தந்தி, ரயில்வே மட்டுமின்றி நாடு முழுவதற்கும் பொதுவான இந்திய சிவில் சர்வீஸ், குற்றவியல் சிவில் சட்டங்கள், கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர் நீதிமன்றங்கள் வரை நீதித்துறை கட்டமைப்பு, இந்தியா முழுவதற்கும் பொதுவான ராணுவம், சுங்க வரி, கலால் வரி விதிப்பு என மையப்படுத்தலை தொடங்கினார்கள். இந்திய ரூபாயை பொதுவான நாணயமாக முறைப்படுத்துவதைத் தொடங்கினார்கள்.

இந்தியா முழுவதிலும் புதிதாகத் தொடங்கப்பட்ட நவீன பள்ளிகளில் ஆங்கிலேய காலனிய கல்வி முறையான மெக்காலே கல்வியை புகுத்தினார்கள். கல்வியிலும், நிர்வாகத்திலும் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக புகுத்தினார்கள். இந்த நிர்வாக மத்தியப்படுத்தல் ஒன்றிணைந்த சந்தையாக இந்தியாவை உருவாக்குவது என்ற காலனிய ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கான அடிப்படை தேவையாக இருந்தது.

ஆனால், இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இன மக்களின் நிலமாக உள்ளது.

எண்

மாநிலம்

மொழி

மக்கள் தொகை

 

1

கேரளா

மலையாளம்

3.3 கோடி

 

2

கர்நாடகா

கன்னடம்

6.1 கோடி

 

3

தமிழ்நாடு

தமிழ்

7.2 கோடி

 

4

ஆந்திரா

தெலுங்கு

8.4 கோடி

(தெலங்கானா 3.5 கோடி)

5

வங்காளம்

வங்காளம்

25.3 கோடி

16.3 கோடி (கிழக்கு) + 9.1 கோடி (மேற்கு)

6

பஞ்சாப்

பஞ்சாபி

14.0 கோடி

3 கோடி (கிழக்கு) + 11 கோடி (மேற்கு)

7

குஜராத்

குஜராத்தி

6.0 கோடி

 

8

மகாராஷ்டிரா

மராத்தி

11.2 கோடி

 

9

ஒடிசா

ஒரியா

4.1 கோடி

 

10

அசாம்

அசாமீஸ்

3.1 கோடி

 

11

ராஜஸ்தான்

ராஜஸ்தானி

6.8 கோடி

 

மொத்தம்

95.5 கோடி

 

19-ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஒடியா, வங்காளி மொழி பேசும் ஒவ்வொரு மக்கள் பிரிவினரும் ஒவ்வொரு ஐரோப்பிய தேசிய அரசின் கீழ் வாழும் அளவிலான மக்கள் தொகையையும் ஐரோப்பிய மொழிகளை விட பழமையான மொழி, கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டிருந்தனர்.

இத்துடன் பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளின் பல்வேறு சிறு மொழிக் குழுக்களையும் இணைத்து இந்தி மொழி பேசும் பகுதிகளாகவும், அசாம் மற்றும் பிற வடகிழக்கு துணை தேசிய இன பகுதிகளையும், ஜம்மு காஷ்மீரையும் இணைத்து காலனிய இந்திய அரசுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் அலுவல் மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆங்கிலம் இருந்தது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் வாழும் மக்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில், இசுலாம், கிறித்தவம் இவற்றைச் சாராத மற்ற எல்லா மதம் பிரிவினரும் இந்துக்கள் என்று பட்டியலிடப்பட்டார்கள். இதில் சைவம், வைணவம், பார்ப்பன மதம், கௌமாரம், சாக்தம், சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற மதப் பிரிவுகளும், நூற்றுக்கணக்கான பழங்குடி வழிபாட்டு பிரிவுகளும் அடங்கும். இவ்வாறு இந்து என்ற ஒற்றைமத அடையாளம் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களின் இந்த ஒற்றை இந்தியா என்ற கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துக்கு சேவை செய்யும் வகையில் இந்துத்துவ சக்திகளின் ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற ஒற்றை தேசிய உந்துதல் தோன்றி வளர்ந்தது. அதற்கு எதிரான இசுலாமிய இயக்கங்களும் வளர ஆரம்பித்தன.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹெட்கேவர், சாவார்க்கர், கோல்வால்கர் முதலான மராத்திய பார்ப்பனர்களின் இந்துத்துவ சித்தாந்தமும் அதற்கான அமைப்பாக ஆர்எஸ்எஸ்-ம் தோன்றின. அவற்றின் சித்தாந்தம் சாதிய வருணாசிரம கட்டமைப்பு. நாக்பூரைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பன சித்தாந்தவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்துத்துவத்துக்கு பின்புலமாக குஜராத், மும்பை, மார்வாடி முதலாளிகளின் ஆதரவும், அவர்களது நலன்களும் உள்ளன.

இந்தியா முழுவதும் பார்ப்பன மதம் பரப்பியிருந்த சாதி வருணாசிரம கட்டமைவு அவர்களது சமூக அடித்தளமாக உள்ளது. அந்த சமூக அடித்தளத்தை வலுப்படுத்தி அதன் மூலம் பார்ப்பன, பனியா முதலாளிகளின் நலனை உறுதி செய்வதும் அவர்களது நலனுக்கு ஏற்ற வகையில் சமூகத்தின் சுரண்டப்படும் பிற பிரிவினரை அரசியல் ரீதியாக இணைத்துக் கொள்வதும், நாட்டின் அரசியல் கட்டமைப்பை தமது ஆட்சிக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதும் அவர்களது செயல் திட்டமாகும்.

இந்தியத் துணைக்கண்டத்தை ஒற்றை தேசிய அரசாக வடிவமைப்பதில் ஆங்கிலேய ஆட்சியாளர்களும் அவர்களோடு ஒட்டுண்ணியாக சேர்ந்து கொண்டு தமது ஆதிக்கத்தை வளர்க்க முயன்ற இந்துத்துவ பெரும்பான்மைவாத சக்திகளும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.

ஒற்றை மத அடிப்படையில் இந்தியாவை கட்டியமைப்பதற்கு எதிராக அவர்கள் எதிர்கொண்ட முதல் முக்கியமான சவால் இசுலாமியர்களின் அமைப்புரீதியான எதிர்ப்பு. இந்துக்கள் என்று வகைப்படுத்தப்பட்ட இசுலாமியர் கிருத்துவர் அல்லாத பிரிவு முதலாளிகளுக்கும் இசுலாமிய முதலாளிகளுக்கும் இடையேயான பகைமையும் போட்டியும் இரு தரப்பு மக்கள் பிரிவினருக்கும் இடையேயான மோதலாக தூண்டி விடப்பட்டு வெடித்தது.

இரண்டாவதாக, ஒற்றை மொழி அடிப்படையிலான இந்திய தேசிய கோட்பாட்டுக்கு எதிராக மொழிவாரி தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான இயக்கமும் கோரிக்கைகளும் எழுந்தன.

இந்நிலையில் பார்ப்பனீயத்தின் மிதவாத உருவமான காந்தியின் காங்கிரஸ், முழு சுதந்திரம் என்ற கோரிக்கையைக் கூட முன் வைக்காத கட்சி. கம்யூனிஸ்டுகள் மற்றும் உழைக்கும் வர்க்கங்களின் அழுத்தத்தினால் மொழிவாரி மாநிலங்கள் உள்ளிட்ட கொள்கைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது.

அதே நேரம் காங்கிரஸ் கட்சியில் இருந்த காந்தி முதலான சனாதனவாதிகள் சாதி வருணாசிரம கட்டமைவின் உயர்வை தூக்கிப் பிடித்ததோடு இந்து சனாதன மதத்தையும், இந்துஸ்தானி மொழியையும், ஒற்றை இந்திய கலாச்சாரத்தையும் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடிப்படையாக பிரச்சாரம் செய்து வந்தனர்.

மறுபுறம் ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் திரளினரும் இந்துமத சாதியக் கட்டமைப்பின் கீழ் பிளவுபட்டுக் கிடந்தனர். படிநிலை ஏற்றத் தாழ்வு அமைப்பான அதன் உச்சத்தில் இருந்த இந்து பழமைவாதிகளுக்கு உகந்த வகையில், மொழிவாரி தேசிய இன உருவாக்கத்தை தடுக்கும் பிளவுசக்தியாக, சாதியக் கட்டமைவு இருந்து வருகிறது.

ஆங்கிலேய காலனிய ஆட்சியின் போது தொடங்கிய இந்திய அரசின் கட்டமைப்பு சாராம்சத்தில் இந்து பெரும்பான்மைவாதத்தைக் கொண்டிருந்தது. அதாவது, இந்து - இந்தி - இந்தியா என்ற அடிப்படையில் ஒற்றை தேசிய அரசைக் கட்டுவதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், சட்டங்களும், அதன் படியான நிர்வாக முறைகளும் வளர்ந்து சென்றன. அது தொடர்பான பல்வேறு கூறுகளும் அரசியல் அமைப்புச் சட்டத்திலும் அதிகார மற்றும் நீதித்துறை கட்டமைப்பிலும் இடம் பெற்றிருந்தன. அதன் ஒரு பகுதியாக, இந்தியின் பயன்பாடு பற்றியும் பிற இந்திய மொழிகள் இரண்டாந்தர மொழிகளாக இந்திக்கு சேவை செய்பவையாக அரசியலமைப்புச் சட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1947-ல் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவின் வடமேற்கில் உள்ள மேற்கு பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பகுதிகளையும், வடகிழக்கில் உள்ள கிழக்கு வங்காளத்தையும் கொண்டு பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கப்பட்டது. வங்கமொழி பேசும் கிழக்கு வங்காளப் பகுதி பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டு 1971-ல் வங்கதேசம் என்ற தனிநாடானது வரலாறு.

அது போல இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் பகுதிகள் தனித்தனி நாடுகளாக பிரிந்து போய் விடாமல் தடுப்பதற்கு மதச்சார்பின்மை முகமூடி போட்டு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற புனுகு தடவிய கட்டமைப்பு உதவியாக இருந்தது. நேருவின் 'சோசலிசம்', தாராளவாத முற்போக்கு கொள்கைகள் இந்திய அரசுக் கட்டமைப்பின் சாராம்சத்தை திரையிட்டு மூடின.

அந்தக் கட்டமைப்பின் கீழ் திட்டமிட்ட பொருளாதாரம், பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ப்பு, அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடக்கம் என்று இந்தியச் சந்தைக்கான அடித்தளம் போடப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கை வலுப்பெற்று மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவ அமைப்புகள் தொடக்க முதலே மொழிவாரி மாநிலங்களை எதிர்த்து வந்தன. இந்தியாவை ஒற்றை கலாச்சார, ஒற்றை மொழி, ஒற்றை நிர்வாக அமைப்பாக மாற்றும் அவர்களது திட்டத்துக்கு இடையூறாகக் கருதினர்.

நேரு, இந்திரா காந்தி என்று தொடர்ந்த பொருளாதார, அரசியல் அமைப்பின் திவால் நிலையை ஒட்டி இந்துத்துவ இயக்கங்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. 1970-களில் தொடங்கி உலகெங்கும் பரவிய சோசலிச முகாமின் வீழ்ச்சியையும் முதலாளித்துவ மீட்சியையும் ஒட்டி இந்துத்துவ அமைப்புகளின் அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கியது.

ஒரே இந்தியா, ஒரே மொழி (இந்தி), ஒரே மதம் (இந்து), ஒரே கலாச்சாரம் (வருணாசிரம சாதியக் கட்டமைப்பு), ஒரே கடவுள் (ராமன்) என்ற இந்துத்துவ இந்திய தேசியம் ஒரே சந்தை, ஒரே வரி விதிப்பு முறை (ஜி.எஸ்.டி), ஒரே கல்வி முறை (தேசியக் கல்வித் திட்டம்), ஒரே தேர்வு (நீட்) என்ற கார்ப்பரேட் முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்தது.

புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளான - தனியார் மயம் தாராள மயம் உலக மயம் ஆகியவற்றை அமல்படுத்தலுக்கு சேவை செய்யும் வகையில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது, இசுலாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலைத் தூண்டுவது, மதக் கலவரங்கள், பயங்கரவாதச் செயல்கள் என்று ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.கவின் அரசியல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இந்துப் பெரும்பான்மை வாதம் என்பது பெரும்பான்மை உழைக்கும் சாதியினரை அதிகாரத்திலிருந்து விலக்கி வைப்பதை தனது கோட்பாடாகவும், நடைமுறையாகவும் கொண்டிருப்பது.

பொருளாதாரத் துறையில் இந்தியாவை ஒற்றைச் சந்தையாக இணைப்பது, அரசியல் ரீதியாக மத்தியப்படுத்தப்பட்ட அரசுக் கட்டமைப்பை உருவாக்குவது, இந்த இரண்டுக்கும் சேவை செய்யும் ஒற்றை மத, ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்கும் அதே சமயம் சாதிய கட்டுமானத்தை பராமரிக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் கடந்த 40 ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகின்றன.

ஒரு காலகட்டத்தில் பொருளாதார மையப்படுத்தல் மேலோங்கியும், இன்னொரு காலகட்டத்தில் கலாச்சார தாக்குதல் மேலோங்கியும் என்று ஏற்றத் தாழ்வாக இருந்தாலும் இந்தக் காலகட்டத்தின் பொதுவான போக்கு ஒற்றை இந்தியா என்ற இந்துத்துவ தேசியவாத கொள்கையை நோக்கியதாகவே இருந்தது.

இதை எதிர்த்து போராடும் வளர்ச்சி குன்றிய மொழிவாரி தேசிய சக்திகளும், இசுலாமிய முதலாளித்துவ சக்திகளும் தனித்தனியாக பிளவுபட்டு கிடக்கின்றன. மாநில வாரியான முதலாளித்துவ வளர்ச்சியின் பிரதிநிதிகளாக தோன்றிய மாநிலக் கட்சிகளான தமிழ்நாட்டில் தி.மு.க, பஞ்சாபில் அகாலி தளம், ஆந்திராவில் தெலுகு தேசம், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆகியவை புதிய தாராளவாத முதலாளித்துவ வளர்ச்சியில் கலந்து இந்துத்துவ அரசியலுடனும் ஐக்கியப்பட ஆரம்பித்தார்கள்.

வர்க்க அமைப்புகளுக்கு தலைமை தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளோ இந்தியா பற்றிய எந்திரகதியான வறட்டு சூத்திர அடிப்படையிலான கோட்பாட்டின் கீழ் இந்தப் போராட்டத்துக்கு வெளியில் தம்மை நிறுத்திக் கொண்டிருந்தனர். இந்துத்துவ தேசியவாத சக்திகளின் அடித்தளமாக இருக்கின்ற, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்ற சாதியக் கட்டமைப்புக்கு சவால் விடுத்து ஒழித்துக் கட்டும் செயல்திட்டத்தை முன்னெடுக்கவில்லை.

புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கத்தின் கீழ் கலாச்சார அடிப்படையிலான மொழிவாரி மாநில இயக்கங்களின் சித்தாந்த அடித்தளங்கள் பலவீனமடைந்தன. மாறாக, ஏக இந்தியா என்ற அடிப்படையிலான இந்துத்துவ கலாச்சார சித்தாந்தம் ஒற்றை இந்தியச் சந்தையை கட்டியமைப்பது என்ற ஏகாதிபத்திய மூலதன ஆதிக்கத்தின் கீழான கார்ப்பரேட் முதலாளித்துவ வளர்ச்சியின் முதுகில் ஏறி சவாரி செய்து ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்டது.

இப்போது கலாச்சார ரீதியாக இந்தித் திணிப்பு, கல்வி முறை மாற்றம், பெரும்பான்மை மத அரசு ஆகியவையும் பொருளாதார ரீதியாக மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமை பறிப்பு, கல்வி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவது, தேசிய புலனாய்வு ஆணையம் மூலமாக போலீஸ் துறையிலும் மத்திய அதிகாரத்தை சுமத்துவது, விவசாயச் சந்தையில் மாநில அளவிலான நடுத்தர முதலாளித்துவ (சுரண்டல்) சக்திகளை பலவீனப்படுத்தி அகில இந்திய கார்ப்பரேட் மயமாக்கலை ஊக்குவிப்பது என இந்தியாவின் பல்தேசிய கட்டமைப்பை அழித்து ஒற்றை தேசமாக இணைக்கும் எதிர்ப்புரட்சிகர தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

பொருள்முதல்வாத நோக்கில் வரலாற்றை அணுகும் கம்யூனிஸ்டுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அமைப்புகளையும், முறைகளையும் நேர்மறையாக பார்க்கிறார்கள். முதலாளித்துவம் முந்தைய உற்பத்தி முறைகளின் தேக்கத்தை உடைத்து வளர்த்துச் சென்ற வரையில் முதலாளித்துவ உற்பத்தி முறை முற்போக்கு பாத்திரத்தை வகித்தது.

அது ஏகபோக முதலாளித்துவமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வளரத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து, வளர்ந்து செல்லும் உற்பத்தி சக்திகளை முடக்கி தடுப்பதன் மூலமாக தனது லாப நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற நிலையை அடைந்தது. அப்போது முதல் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டிய உற்பத்தி முறையாக மாற்றமடைந்தது.

இந்தியாவிலோ இந்து தேசிய அடிப்படையிலான முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசிய இன பகுதிகளின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடங்கச் செய்து சர்வதேச கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் குஜராத், மார்வாடி கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கும் இரையாக்கும் போக்காகவே உள்ளது.

இந்நிலையில் பாட்டாளி வர்க்கம், இந்தியாவின் எதிர்ப்புரட்சிகர சர்வதேச கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கு சேவை செய்கிற, பார்ப்பன கலாச்சார திணிப்புகளுக்கு எதிரான போராட்டங்களை, வர்க்கப் போராட்டத்தின் பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாக

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திக்கு சிறப்பு தகுதிகளை வழங்கும் பிரிவுகளை ரத்து செய்வது
  • 8-வது அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக பயன்படுத்தவும், அவற்றின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கு ஒன்றிய அரசை பொறுப்பாக்கவும் செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது

என்பதை வைக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக சுய நிர்ணய உரிமை உறுதி செய்யப்பட்ட, பொருளாதார ரீதியில் ஒத்து இணைந்த தேசிய இனங்களால் ஆன பல்தேசிய கூட்டு வளர்ச்சியே இந்திய துணைக்கண்டத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும்.

- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு

Pin It