surajit mamzarநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (14)

சமூக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றும் போது சமூகம் இரு வர்க்கங்களாகப் பிரிகிறது. ஒரு வர்க்கம் உற்பத்திச் சாதனங்களைத் தன் முற்றுரிமையாக்கிக் கொண்டது. இன்னொரு வர்க்கம் தன் உழைப்புச் சக்தியை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த இரு வர்க்கங்களும் ஒன்றுக்கொன்று இடையுறவு கொண்டுள்ளன.

முதலாளி ஒருவர் உற்பத்திச் சாதனங்கள் மீதான அதிகாரமும், தனியார் சொத்துரிமையும் கொண்டிருப்பது மட்டுமே இதற்குப் போதுமானது அல்ல. ஒவ்வொரு முதலாளியும் முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்த மற்ற முதலாளிகளால்தான் முதலாளியாக உள்ளார். அவருடைய வெற்றி மற்ற முதலாளிகளுடன் பிணைந்துள்ளது. முதலாளிகள் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளனர்.

முதலாளிகள் ஒன்று சேர்ந்தவாறு வர்க்கமாகவே முற்றுரிமையை பெற்றுள்ளனர். நிலக்கிழாரிய அமைப்பில் பண்ணையார்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒவ்வொரு வெற்றிகரமான மறுவுற்பத்தியும் அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதைப் பொறுத்துத்தான் அமைந்துள்ளது.

அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுகின்றனர். போட்டி என்ற வலுவந்தமான விசையே முதலாளி முதலாளியாக செயல்படுவதை உறுதி செய்கிறது. அவர் பெருந்தன்மையுடையவராக இருந்தாலும் போட்டி அவரை முதலாளியாகச் செயல்பட நிர்ப்பந்திக்கிறது. அதுவே முதலாளிக்கும், தொழிலாளிகளுக்கும் இடையிலான உற்பத்தி உறவுகளையும் நிர்ணயிக்கிறது.

தொழிலாளரின் வர்க்க நலன்கள் முதலாளியின் வர்க்க நலன்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. முதலாளியின் வர்க்க நலன் தொழிலாளியிடம் எவ்வளவு அதிகமாக உபரிமதிப்பைச் சுரண்டுவது என்பதாக உள்ளது. உபரிமதிப்பு உருவாக்கத்தைத் தொடரச் செய்யும் சுரண்டலின் பொறிமுறையானது, அரசியல் அதிகாரத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளது.

பொருளாதார அடிப்படையில் நிர்ப்பந்திப்பதால் மட்டுமே முற்றுரிமை என்பதைப் பாதுகாத்திட முடியாது. முதலாளி வர்க்கத்தின் தனியார் சொத்துடைமையைப் பாதுகாப்பதற்குப் பொருளாதாரச் சக்திகளுக்கும் கூடுதலாக வலுவந்தப்படுத்தும் அதிகாரம் தேவைப்படுகிறது. அதற்கான அதிகார மையமாகவே அரசு உள்ளது.

அரசு எந்திரம் இல்லாமலே அதைப் பாதுகாக்க முடியும் என்ற புதுச் செவ்வியல் (neoclassical) கருத்தாக்கம் தவறானது. பொதுவாக அரசு தனியார் சொத்துடைமையைப் பாதுகாக்கிறது. முதலாளி வர்க்கத்தின் அனைத்து தனிச் சொத்துடைமையையும் பாதுகாக்கிறது அம்பானியுடையதை மட்டும் அல்ல. முதலாளிகளின் சொத்துடைமை, சொத்துரிமையைப் பாதுகாப்பதாக மட்டும் இருப்பதில்லை, முதலாளிகளிடையே அச்சுறுத்தல்களையும் சொத்துச் சண்டைகளையும் ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு முதலாளியும் மற்ற முதலாளிகளால் அச்சுறுத்தப்படுகிறார். முதலாளித்துவத்தில் அரசு தனியாகப் பிரிந்து நிற்கிறது. தோற்றத்தில் பொருளாதார அமைப்பும், அரசியல் அமைப்பும் தனித்தனியாக பிரிந்து காணப்படுகின்றன. முதலாளித்துவ அரசமைப்பு அதற்கு முன்னிருந்த அரசமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது.

முதலாளித்துவ அரசு யாருடைய நலன்களுக்காக செயல்படுகிறதோ அவர்களிடமிருந்து தனித்துப் பிரிந்திருப்பது போல் காணப்படுகிறது. அரசே முதலாளி வர்க்கத்தின் அதிகாரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கிறது. அரசு தன் ஆதிக்க சக்தியை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பது தூலமான நிலைகளை பொருத்தே அமைகிறது.

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் சமத்துவமான பரிவர்த்தனை நடப்பது போல் வெளியே தோன்றினாலும், அதன் பின்னே உபரிமதிப்பாக்கம் ஒளிந்துள்ளது. முதலாளி வேலை நாளை நீட்டித்துக் கொண்டும் கூலியைக் குறைத்துக் கொண்டும் இருப்பாரானல் தொழிலாளரால் உயிரோடு நீடிக்க முடியாது.

போராட்டத்தில் ஈடுபடுவார், இவ்வாறு தொடருமானால் முதலாளித்துவ உற்பத்தி முறை தானாகவே அழிந்து விடும். ஆகையால் உழைப்புச் சுரண்டலைத் தொடர ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது. வேலையில்லா சேமப் பட்டாளத்தை நீடிக்கச் செய்வதே இதற்கான பொறிமுறையாகிறது. குறைந்தபட்ச ஊதியம், வேலை நாளை நீட்டித்தல், வேலையின்மைப் படி, இவை அனைத்துமே தொழிலாளர்களை ஒழுங்கு நிலைப்படுத்துவதற்கான கருவிகளே. இயந்திரமாக்கம் உழைப்பாளி மீது அதிக ஒழுங்குமுறையைப் பிரயோகிக்கிறது.

வரையறுக்கப்பட்ட சிறப்பு எல்லைகளுடன் மேற்கு ஐரோப்பா முதலாளித்துவத்தின் தொட்டிலாக இருந்தது. முதலாளித்துவம் உருவாகி விட்டால் எந்தப் பகுதியும் அதன் தாக்கத்துக்கு உட்படாமல் இருக்க முடியாது.. முதலாளித்துவம் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. தேச அரசுகளுக்கிடையேயான பல முரண்பாடுகள் உள்ளன.

தேசங்களுக்குள் பல முரண்பாடுகளும் வேறுபட்ட படிநிலைகளும் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகளுடனும், படிநிலைகளுடனுமே போராட்டங்களைத் தொடர வேண்டும்.

முதலாளித்துவத்தில் வளர்ச்சி சமச்சீராக இல்லை. முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். பல்வேறு வழிகளில்  முதலாளித்துவம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவில் ஆதிக்க மிகுந்த முதலாளித்துவ சக்திக்கும், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பிற்குமான இடைச்செயலின் விளைவாக முதலாளித்துவம் தோன்றியது. முதலாளித்துவத்துடனேயே முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு அதன் மாறுபட்ட வடிவத்தில் நீடிக்க முடிந்தது. இந்திய முதலாளித்துவம் மெர்கண்டலிசப் பண்புகளுடன் படு பிற்போக்கானதாகக் காணப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உற்பத்தியானது சமூகமயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தியின் மீதான ஒழுங்குமுறை சமூகமயமாக்கப் படவில்லை. சண்டைகளுக்குத் தீர்வுகாணும் முறைகளும் சமூகமயமாக்கப் பட வேண்டும். முதலாளித்துவம் என்ற வர்க்கச் சமூகத்திலிருந்துதான் வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.

தனியார் சொத்துடைமையை அழிப்பதன் மூலம் சமூகச் சொத்துடைமையை ஏற்படுத்த வேண்டும். முதலாளித்துவத்திலேயே சொத்து மீதான கூட்டுடைமை ஏற்பட்டுள்ளது. அவை சமூகமயமாக்கப்பட வேண்டும்.

மார்க்சியக் கோட்பாடானது அரசியலமைப்பு குறித்தும், முதலாளித்துவ ஆதிக்கத்தின் உலகக் கண்ணோட்டம் குறித்தும் மாறுபட்ட புரிதலைக் கொண்டுள்ளது. புதிய செவ்வியல் பொருளாதாரத்தில், மதிப்பு என்பது வேண்டல் வழங்கலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், சந்தையில் சமநிலையும், ஒத்திசைவும் ஏற்படுவது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

செவ்வியல் அரசியல் பொருளாதாரம் கொச்சை அரசியல் பொருளாதாரத்தைப் போல் மேல்மட்டத்துடன் நின்று விடுவது இல்லை.  முதலாளித்துவத்தை மாற்றுவதற்கான நடைமுறைச் செயல்முறையானது முதலாளித்துவ உற்பத்தி முறையை முழுமையாகப் புரிந்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது.

(தொடரும்)

- சுராஜித் மஸூம்தார்

Pin It