எந்த ஒரு சமூகமாயினும் அச்சமூகம் நன்கு வளர்ச்சி பெற்ற, அறிவு முதிர்ச்சி அடைந்த சூழலிலும், சமூக ஒழுங்கு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் தானே இலக்கணம் என்பது உருவாக்க இயலும்? இதற்குச் சிறப்பு வாய்ந்த சூழலிலேயே தொல்காப்பியம் எனும் நூல் இயற்றப்பட்டிருக்கிறது.
தொல் + காப்பு + இயம் = தொல்காப்பியம் என்பர். அதற்கு ‘தொன்மையை காத்து இயம்பும் நூலெனப் பொருள்’ கொள்வர். தொன்மையை காப்பது என்றாலே பழமையை காப்பது என்று பொருள். நூல் பெயரே அதன் பழமையை எடுத்துரைக்கிறது. அப்படி எனில், தமிழ் மொழியின் தொன்மை எத்தகைய பழமை உடையது, எத்தகைய சிறப்புடையது என்பதை நன்கு உணர முடிகிறது.
மேலும், “தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலமும் சூழலும் கற்றறிந்த அறிஞர் பெருமக்களின் காலமாக இருந்திருக்கிறது. சிறப்புப் பாயிரத்தின் வழியாக இந்நூல், நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அதங்கோட்டாசான் முன்னிலையில் நூல் நெறிப்பட இயற்றப்பட்டு இருக்கிறது என்றால் நூல் படைக்கும் சூழல் எத்தகைய சிறப்புடையதாக இருந்திருக்கும் என்பது நன்கு விளங்கும். ஒரு மொழியை முழுமையும் நன்கு ஆராய்ந்து, முன்னோர் கூறிய நெறிப்படியும், ஒரு மொழி பேசும் மக்களின் இயற்கை, சமூகச் சூழலையும் நன்கு ஆராய்ந்து சான்றோர்களின் நெறிப்படியும் இந்நூல் எழுதப்பட்டிருக்கும் பாங்கு வியக்கத்தக்கதாகும்”. ஆசிரியரின் தனிச்சிறப்பும் அறிவும் இந்நூலின் மூலமே அறிந்து கொள்ள முடியும்.
நூற்பெயர்க் காரணமும் தோற்றமும்:
நூலுக்கான பெயர் காரணத்தைப் பற்றி குறிப்பிடும் தமிழண்ணல்,
“அவ்வாசிரியனது பண்பு, திறமை, அறிவு, பட்டறிவு எல்லாம் நூலின் வழி வெளிப்படுதலால், நாம் அவ்வாசிரியனை நூலில் கண்டு பழகி மகிழ முடிகிறது. இதனால்தான் நூலாசிரியன் பெயரியே நூலுக்கிட்டு வழங்கும் வழக்கம் உலகங்கும் காணப்படுகிறது. தொல்காப்பியம் எழுதிய நூலும் தொல்காப்பியர் என்றே அழைக்கப்பட்டதை பனம்பாரனார் எழுதிய பாயிரம் குறிப்பிடுகிறது (தமிழண்ணல், தொல்காப்பியர், பக். 15)” என்று தொல்காப்பிய நூல் பெயர்க் காரணம் பற்றி குறிப்பிடுவார். இந்நூல் தோன்றுவதற்குரிய காரணமாக,
“எந்த ஒரு பெருநூலும் ஏதோ அறிவுச்சூழல் இல்லாத வெட்ட வெளியிலோ அல்லது வெறும் சூனியத்திலோ தோன்றுவதில்லை. சிறந்த சூழலும் அறிவு பெருக்கும் ஆய்வு நிறைவும் இருக்கும்போதுதான் தொல்காப்பியம் போன்ற பெருநூல்கள் தோன்ற முடியும்” (அகத்தியலிங்கம், தொல்காப்பிய உருவாக்கம், ப. 21) என்பார் அகத்தியலிங்கனார்.
மேலும், ”தொல்காப்பியம் வாழ்க்கை இலக்கணம் என்று சிலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் முழுக்க முழுக்க கவிதை இலக்கணமே என்பதைப் பல நூறு சான்றுடன் அறிவித்து உறுதி செய்கிறார்; எனவே தொல்காப்பியம் முதலில் தோன்றிய கவிதை நூல்” (அகத்தியலிங்கம், தொல்காப்பிய கவிதையியல், ப. 5) என்று உரைக்கின்றார்.
இந்நூல் தோற்றம் பற்றி குறிப்பிடும் நா. சுப்புரெட்டியார்,
“தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் மூன்று கடல்கோள்களைக் குறித்துள்ளனர். அவற்றில் முதலாவது கி.மு. 2378 ஆண்டிலும், இரண்டாவது கி.மு. 504 ஆம் ஆண்டிலும், மூன்றாவது கி.மு. 306 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்ததாகக் கூறுவர். இம் மூன்றில் முதலாவது கடல்கோல் குமரி நாட்டின் பெரும்பகுதியை விழுங்கியது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு நிகழ்ந்தது. இதனால் தமிழகத்தின் தென்பாலமைந்த பெரு நிலப்பரப்பும் தமிழ் நூல்கள் பலவும் அழிந்துபட்டன.
கடல்கோள்களுக்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் மக்கள் முத்தமிழ் நூல் பரப்பின் அமைதியை அறியும் ஆற்றல் அற்றவராய் இருந்தனர். வடநாட்டினரால் பேசப்பெறும் ஆரிய மொழிக்குமுள்ள இயல்புகளுள் ஒன்று மற்றொன்று உறழ்ந்து விரவும் வகையில் வடவரும் தென்னகத்தாரும் அளவளாவி உறவு கொண்டனர். முத்தமிழின் ஒன்றன் இயல்புகள் பிரிதொன்றன் இயல்புகளுடன் இயைந்து உரைக்கப் பெற்றன. தமிழ் மொழியின் திறத்தையும், அதன் பொருட் பாகுபாட்டையும் பகுத்துணரும் ஆற்றல் பொதுமக்களிடம் வளராது இருந்தது. இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பினை எல்லாருக்கும் விளங்க எடுத்துரைக்கும் இயற்றமிழ் இலக்கண நூல் ஒன்று தோன்றுவது இன்றியமையாததாக இருந்தது. இச்சூழ்நிலையில் தொல்காப்பியர் மொழிப் பணியைத் தன் வாழ்க்கைப் பணி என்று கருதி அதில் இறங்கினார்; நாம் இன்று தமிழ் மக்களின் கண் போற்றும் தொல்காப்பியத்தை ஆக்கித் தந்தார்” (நா. சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பக். 3)
என்று நூல் தோன்றுவதற்குரிய காரணத்தைப் பண்டைய கால மக்களுக்கான மொழியின் தேவை, சிறப்பு போன்றவற்றை உய்த்துணர்ந்து விளக்குவதைக் காண முடிகிறது. இதே போல் பல்வேறு திறனாய்வாளர்கள் நூல் தோற்றத்திற்கான காரணத்தை விளக்குவர். இந்நூலைப் பற்றி இரா. இளங்குமரன் தொல்காப்பியம் நூலுரையில் குறிப்பிடுவதாவது,
“தமிழ்மொழி இன-பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டு வைக்கப்பட்டதும் ஆகும். தொல் பழங்கால கல்வெட்டுகளைத் தேடிப்போய் காணவும், துருவி துருவி பார்த்துக் கொள்ளவும், பொருள் உணரவும் இடர்படுவது போல் அல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால் ஓதி உணர்ந்து பிறருக்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம்” (இரா. இளங்குமரனார் உரை, தொல்-பொருள், நச்சினார்க்கினியர் உரை, பகுதி-1, முன்னுரை)
என்று நூலின் பழமையும் சிறப்பையும் எடுத்துரைப்பார். இதன் வழி தொல்காப்பியத்தின் காலம், நூல் தோன்றுவதற்குரிய காரணம், அந்நூல் பெருமை என்று தமிழறிஞர்கள் பல்வேறு முறையில் தொல்காப்பியத்தைப் பற்றிக் கூறுகின்றனர். மூல மொழியாம் தமிழ் மொழியின் தனிப்பெரும் சிறப்பை உலகிற்கு எடுத்துரைக்கும் தொல்காப்பியம் மூல நூலும் முதல் நூலும் ஆகும். இதனை,
“வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல், தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்திற்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகள் இடையறாது வாழ்ந்து வரும் பெருமையும் பேரிலக்கணப் பெரும் பரப்பும் கொண்டு திகழ்வது. தனிமாந்தப் பண்பை முன்னுறுத்திப் பேசும் தலையிலக்கண நூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்து கொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத்திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல்காப்பியம் ஒன்றுதான்” (இரா. இளங்குமரனார் உரை, தொல்-பொருள், நச்சினார்க்கினியர் உரை, பகுதி-1, முன்னுரை) என்று கோ. இளவழகன் அவர்கள் அதன் பெருமையைப் பறைசாற்றுகின்றார்.
சான்றாதார நூல்கள்:
- ச. அகத்தியலிங்கம், தொல்காப்பிய உருவாக்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-08, மு.ப.-2001.
- ச. அகத்தியலிங்கம், தொல்காப்பிய கவிதையியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-08, மு.ப.-1999.
- இரா. இளங்குமரனார் உரை, தொல்காப்பியம், தி.வை. கோபாலையர் பதிப்பு, தமிழ் மண் பதிப்பகம், சென்னை, மு.ப.-2003.
- ந. சுப்புரெட்டியார், தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, பழனியாப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் ரோடு, சென்னை-14, மு.ப.-1963.
- முனைவர் பா.பிரபு பாலு.,M.A.,M.Phil.,Ph.D, உதவிப் பேராசிரியர், இரெமோ பன்னாட்டுக் கல்லூரி, சென்னை-16