1. தொடரியல் அணுகுமுறை நோக்கில் தொல்காப்பியம்:

நோம் சோம்ஸ்கி'யின் மாற்றிலக்கணத் தொடரியல் அணுகுமுறை (Transformational Grammar) 1950-60'களில் மொழியியல் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியபோது மரபிலக்கணங்களையும் தொடரியல் பின்னணியில் விளக்கும் முயற்சிகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டன. தொடர்களுக்கு இடையிலான உறவுகளை விளக்குதல், புறநிலைத் தொடர்களின் அகநிலை அமைப்பை விளக்கிச் சில மாற்றுவிதிகள் மூலம் புறநிலைத் தொடரை உருவாக்குதல், மயங்குமொழித் தொடர்கள் (Ambiguous Sentences) தரும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களுக்கு அவற்றுக்கு இணையாக ஒன்றுக்கு மேற்பட்ட அகநிலை அமைப்புகளை நிறுவிக் காட்டுதல் எனப் பல நிலைகளில் மாற்றிலக்கணம் மொழியமைப்பை விளக்கியது. அது மரபிலக்கணங்களில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இடம்பெற்றுள்ள தொடரியல் கருத்துகளை விரிவாக விளக்க உதவியது. அதன் பின்னணியில், தமிழ் மரபிலக்கணங்களை, குறிப்பாகத் தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ள தொடரியல் சார்ந்த விளக்கங்களை மொழியியல் நோக்கில் எடுத்துரைக்கும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. தொல்காப்பியத்தின் தொடரியல் கருத்துகளை மையமிட்ட இந்த ஆய்வுப் போக்கினைத் தொடக்கிவைத்தவர் ச.அகத்தியலிங்கம் எனலாம். முதன்முதலில் இந்தப் பொருண்மையிலான இவருடைய Tolkappiyar's Treatment of Syntax என்னும் தலைப்பிலான கட்டுரை 1966'இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற Grammatical Theories in Tamil என்னும் கருத்தரங்கில் வழங்கப்பட்டுப் பின்னர் 'ஆராய்ச்சி' இதழில் 1969'இல் வெளியாகியுள்ளது.

se vai sanmuganarமொழியியல் பின்னணியில் ஒலியியல் தொடங்கித் தொடரியல் வரையிலான பலதரப்பட்ட நோக்குகளில் தொல்காப்பியத்தை விளக்கும் ‘தொல்காப்பிய மொழியியல்' என்னும் தொகுப்பு நூல் ச.அகத்தியலிங்கம் மற்றும் க.முருகையன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 1972'இல் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள சுப.அண்ணாமலை எழுதிய ‘தொல்காப்பியரின் தொடரியல் கொள்கை' என்னும் கட்டுரையும் க.வெள்ளைவாரணரின் 'தொல்காப்பியம் கூறும் தொடர்மொழியமைப்பு' என்னும் கட்டுரையும் தொடரியலை மையமாகக் கொண்டு வெளியானவை. இவற்றுடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள செ.வை.சண்முகம் எழுதிய ‘வேற்றுமை பற்றித் தொல்காப்பியர்', பொன்.கோதண்டராமனின் 'பெயரெச்சம் பற்றித் தொல்காப்பியர்', ச.அகத்தியலிங்கம் எழுதிய ‘வினையெச்சம் பற்றித் தொல்காப்பியர்' போன்ற கட்டுரைகளும் தொடரியல் விளக்கக் கட்டுரைகளாகவே கொள்ளத்தக்கன.

இம்முயற்சிகளைத் தொடர்ந்து 1978'இல் வெளியான 'Studies in Early Dravidian Grammars' என்னும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள ச.அகத்தியலிங்கம் எழுதிய Tolkappiyar's Concept of Syntax என்னும் கட்டுரையும் க.பாலசுப்பிரமணியம் எழுதிய The Concept of Sentence Structure in Tolkappiyam என்னும் கட்டுரையும் கு.சிதம்பரம் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு 2014'இல் ‘தொடரியல் கோட்பாடுகளின் வளர்ச்சி-தொல்காப்பியத்தை முன்வைத்து' என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் தொல்காப்பியத் தொடரியல் ஆய்வுகளில் குறிப்பிடத்தகுந்தவை. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள தொடரியல் கருத்துகளை விளக்கும் வகையில் பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த நிலையில் முழுமையான ஆய்வாகச் ச.அகத்தியலிங்கம் அவர்களை நெறியாளராகக் கொண்டு க.திலகவதியின் Treatment of Syntax in Tolka:ppiyam என்னும் தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேடு(1980) அமைந்தது. எழுவாய்-பயனிலை இயைபு, சொற்களின் வரிசைமுறை, வேற்றுமை, தொடரிலக்கணத்தில் இடைச்சொற்களின் பங்கு, தொகைச்சொற்கள், ஆகுபெயர்களின் தொடரமைப்பு, மயங்குமொழித் தொடர்கள் போன்றவற்றை விளக்குவதாக அவ்வாய்வு அமைந்தது.

2. செ.வை.சண்முகம் அவர்களின் தொல்காப்பியத் தொடரியல்

தொல்காப்பியத்தை மையமாகக் கொண்டு அதன் தொடரியல் கருத்துகளை விளக்கும்போது அந்நூலுக்கு உரை வழங்கிய உரையாசிரியர்களின் கருத்துகளும் இன்றியமையாத தரவுகளாகக் கொள்ளத்தக்கன. உரையாசிரியர்களின் விளக்கங்களில் பல மொழியியல் கருத்துகள் புதைந்துள்ளமை பற்றி மொழியியலாளர்கள் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர் (சுபாஷ் சந்திரபோஸ், 2018:118 & சண்முகம், 1972:290). உரையாசிரியர்களின் விளக்கங்கள் மூலநூலில் உள்ள கருத்துகளின் பின்னணியை விளங்கிக் கொள்வதற்குத் துணைபுரிகின்றன. எனவே, தொல்காப்பியத்தை உரையாசிரியர்களின் விளக்கங்களுடன் தொடரியல் பின்னணியில் விளங்கிக்கொள்வது என்பது தொல்காப்பியப் புரிதலுக்கான ஒரு வழியாகும். இப்புரிதலை உண்டாக்கும் முயற்சியாக செ.வை.சண்முகம் அவர்களின் தொல்காப்பியத் தொடரியல் நூல் கொள்ளத்தக்கது. தொடரியல் கோட்பாட்டுப் பின்னணியில் உரையாசிரியர்களின் விளக்கங்களின் ஊடாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைப் புரிந்து கொள்வதற்கான நூலாக இதனைக் கருதலாம்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒன்பது இயல்களும் தொடரமைப்பின் ஒரு குறிப்பிட்ட வகையினை (பெயர்த்தொடர், வினைத்தொடர், வேற்றுமை, தொகை, எச்சம்...) ஆய்விற்கு உட்படுத்தி விளக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவ்வகையில், கிளவியாக்கத்தின் பேசுபொருள் பற்றித் தொல்காப்பிய நூற்பாக்களில் இடம்பெற்றுள்ள கருத்துகளையும் உரையாசிரியர்கள் கூறும் கருத்துகளையும் ஒப்பிட்டு செ.வை.சண்முகம் வழங்கும் விளக்கங்கள் தொல்காப்பியப் புரிதலுக்குத் துணைசெய்யுமாற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

3. கிளவியாக்கத்தின் பேசுபொருள்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் முதல் இயலான கிளவியாக்கம் எதைப் பற்றி விளக்குகிறது என்பதில் உரையாசிரியர்களிடையே மூன்று விதமான கருத்துகள் அல்லது நோக்குகள் காணப்படுகின்றன. அவை,

               1. சொல்லியல் நோக்கு

               2. வழு நோக்கு

               3. தொடரியல் நோக்கு

என்பனவாக அமைகின்றன(சண்முகம், 2004:23).

3.1. சொல்லியல் நோக்கு

இளம்பூரணரும் கல்லாடனாரும் கிளவியாக்கம் சொற்களை ஆக்கிக்கொள்ளும் முறைமை பற்றிப் பேசும் சொல்லியல் நோக்கினை முதன்மையாகக் கொண்டது என்னும் கருத்தினர்.

கிளவிகள் பொருள் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து. என்னை? ஒருவன் மேலாமாறிது, ஒருத்தி மேலாமாறிது, பலர் மேலாமாறிது, ஒன்றன் மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழு ஆமாறிது, வழுவமைதி ஆமாறிது எனப் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையின் இப்பெயர்த்து ஆயிற்று. (தொல்.சொல்.1, இளம்.)

என்பது இளம்பூரணர் உரையாகும். இதனை மேலும் விளக்கும் வகையில் கல்லாடனார் உரை அமைந்துள்ளது.

கிளவி என்பது சொல்; ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பேர் பெற்றது. (தொல்.சொல்.1, கல்.)

கிளவியாக்க நூற்பா ஒன்றினைக் கொண்டு இவர்களின் கருத்தினை விளக்கலாம்.

னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல் (தொல்.சொல்.5)

என்னும் நூற்பாவின்படி, னகர ஈறு சென்றான், படித்தான் என உயர்திணை ஆண்பால் வினைகளை உருவாக்குகிறது என்பது அவர்களின் விளக்கமாகும். அதற்கு ஏற்பவே கல்லாடனாரும் அந்நூற்பாவிற்கான உரையில்,

இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே மேற்கூறிய உயர்திணைச் சொல்லுள் ஆடூஉ அறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.(தொல்.சொல்.5, கல்.)

எனக் கூறியுள்ளார். எனினும், இந்நூற்பாவும் இதனைத் தொடர்ந்து வரும் பெண்பால் ஈறு, பலர்பால் ஈறு, ஒன்றன் பால் ஈறு, பலவின்பால் ஈறு ஆகியவற்றை விளக்கும் நூற்பாக்களும் அடிப்படையில் பெயரும் வினையும் திணை, பால் ஆகியவற்றில் பொருந்தி வரவேண்டும் என்னும் தொடர் இயைபினை (Concordance) விளக்கும் நூற்பாவினை அடியொற்றி வருபவை என்பதே தொல்காப்பியக் கருத்து என்று செ.வை.சண்முகம் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில், இளம்பூரணர், கல்லாடனார் இருவரும் கொண்ட சொல்லியல் நோக்கு என்பது கிளவியாக்கத்தின் பேசுபொருளாக அமையாது என்பதையும் குறிப்பிடுகிறார்.

உருபன்களைக் கண்டறியும் ஐந்து சூத்திரங்கள் கூடத் தொடரியலுக்கு உறுதுணையாக-கருவியாக அமைக்கப்பட்டன என்பதைப் புலப்படுத்தி விடுகின்றன. எனவே, 'கிளவிகள் பொருள் மேலாமாறு உணர்த்தினது கிளவியாக்கம்' என்ற இளம்பூரணர் கருத்தும் அதை ஒட்டிய பிற உரையாசிரியர்கள் கருத்தும் சிறப்பானதாகக் கொள்ள முடியாது (சண்முகம், 2004:26-27) என்பது அவர் முடிபாகும்.

3.2. வழு நோக்கு

மரபிலக்கணங்கள் பொதுவாக மொழித்தூய்மை, மொழிப்பாதுகாப்பு மற்றும் மொழித் திருத்தம் ஆகிய கருத்தியல்களின் அடிப்படையில் ஒரு மொழியின் அமைப்பை விளக்குகின்றன. எனவே, அவற்றுள் விளக்கமுறைப் பாங்கினைக் காட்டிலும் விதிமுறைப் பாங்கே மேலோங்கி இருக்கும் (இராசாராம், 2010:34). 'கடிசொல் இல்லைக் காலத்துப் படினே'(தொல்.சொல்.446) எனவும் 'வழுவல கால வகையி னானே'(நன்.462) எனவும் அவை மொழி மாற்றங்களுக்கு இடமளிக்கின்றபோதும் அவ்வக் கால மொழியமைப்பைப் பிழையின்றிப் பயன்படுத்தும் நோக்கில் அவற்றில் விதிமுறைப் பண்பே வெளிப்படுகிறது. இக்கோட்பாட்டுப் பின்னணியில்தான் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கிளவியாக்கம் வழுக் களைதலை நோக்கமாகக் கொண்டது என்று வழு அடிப்படையில் விளக்கியுள்ளனர். இருவரும் முற்கூறிய சொல்லியல் நோக்கும் இதில் அடங்குகின்றது என ஏற்பினும் அதற்கு இரண்டாம் இடமே அளித்துள்ளனர் என்பதை அவர்கள்தம் உரைவழி அறியலாம்.

வழுக் களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையால் இவ்வோத்துக் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து... சொற்கள் பொருள்கண்மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும். (தொல்.சொல்.1,சேனா.)

என்று சேனாவரையரும்

வழுக் களைந்து சொற்களை அமைத்துக் கோடலின் இவ்வோத்துக் கிளவியாக்கம் என்னும் பெயர் பெற்றது. இனிச் சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்று பெயர் பெற்றது என்றுமாம். (தொல்.சொல்.1,நச்சர்.)

என்று நச்சினார்க்கினியரும் உரைத்துள்ளனர். இவர்கள் வழு நோக்கிற்கே முதன்மை அளித்துள்ளமை இதன்வழி அறியலாம். உள்ளபடி கிளவியக்கத்தின் நூற்பாக்கள் அனைத்தும் வழாநிலை, வழு, வழுவமைதி பற்றிப் பேசுகின்றனவா என்பதே கேள்விக்குரியது. நன்னூல்,

திணையே பாலிடம் பொழுது வினாவிறை

மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே (நன்.375)

என்று வெளிப்படையாக வழு வகைகளைப் பற்றிக் கூறியதைப் போன்று தொல்காப்பியம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும், ஒரு தொடரமைப்பு வழுவானது என்றும் வழுவமைதியாகக் கொள்ளத்தக்கது என்றும் கொள்வதற்கு அத்தொடரமைப்பிற்கு வழாநிலை என்றொரு நிலை இருத்தல் வேண்டும். வழாநிலை ஒன்று இருக்கும் பட்சத்தில்தான் அதிலிருந்து மாறுபட்டு நின்ற அமைப்பினை வழு என்றோ வழுவமைதி என்றோ கொள்ள முடியும். கிளவியாக்கத்தில் உரையாசிரியர்கள் வழுவமைதி என்று விளக்கும் நூற்பாக்கள் சிலவற்றுக்கு இயல்பான வழாநிலை என்றொரு நிலை இல்லை. சான்றாக,

பால்மயக் குற்ற ஐயக் கிளவி

தானறி பொருள்வயின் பன்மை கூறல்                             (தொல்.சொல்.23)

என்னும் நூற்பா உயர்திணை என்று திணை அறியப்பட்டுப் பால் பாகுபாடு அறியப்படாமல் ஒருவனோ என்றும் ஒருத்தியோ என்றும் உயர்திணையின் ஆண்பாலும் பெண்பாலும் வினாப் பொருளில் விரவி வரும்போது அத்தொடருக்குப் பயனிலையாக ஆண்பால் வினை வருதலும் பெண்பால் வினை வருதலும் அமையா என்றும் உயர்திணைப் பன்மை வினையே வருதல்வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இதற்குச் சான்றாக,  

ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றா நின்றார்?

என்னும் தொடரை உரையாசிரியர்கள் காட்டியுள்ளனர். இவ்வாறு வருவது வழுவமைதி என்றே சேனாவரையர் விளக்கியுள்ளார். இத்தொடர் வழுவமைதி எனக் கொண்டால், இத்தொடருக்கு இணையான வழாநிலைத் தொடர் என்று மொழியில் ஒரு தொடர் இடம்பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், அவ்வாறு வழாநிலைத் தொடர் என்று எதுவும் மேற்சுட்டிய அமைப்பிற்கு இல்லை. இதனைக் கீழ்வருமாறு விளக்கலாம்.

வழாநிலை ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றா நின்றான்.                              பால் வழு      

ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றா நின்றாள்.                                     பால் வழு      

ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றா நின்றார்.                                      பால் வழுவமைதி

அட்டவணை 1 : வழாநிலை - வழு - வழுவமைதி

               இவ்வாறு வழாநிலை என்று ஒன்று இல்லாதபோது வழுவமைதி என்று ஒரு தொடரமைப்பைக் கொள்ள இயலாது. இதிலுள்ள இடர்ப்பாட்டைச் சேனாவரையர் அறிந்திருந்தும் தம் கொள்கைப்படி ஒருவாறு இதனை வழுவமைதிக்குள் அடக்கிக்காட்டுகிறார்.

ஒருமையாற் கூறல் வழுப்படுதல் நோக்கிப் பன்மை கூறல் என வழாநிலை போலக் கூறினாரேனும் ஒருமையைப் பன்மையாற் கூறுதலும் வழுவாகலின் ஐயப்பொருண்மேல் சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தால் பால் வழு அமைத்தவாறாம். (தொல்.சொல்.23, சேனா.)

எனத் தொல்காப்பியம் கூறும் அமைப்பே இச்சூழலுக்கு இயல்பான அமைப்பு(வழாநிலை) என்று தோன்றினாலும் அதனைப் பால் வழுவமைதி என்பதற்குள் அடக்குகிறார். உண்மையில், மொழிப்படுத்தப்படும் பொருள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு மொழியில் அவற்றுக்கெனத் தனித்தனியான இலக்கணக் கூறு அமைந்திருப்பதில்லை. அந்த இடைவெளியை ஈடுசெய்ய ஏற்கனவே ஒன்றுக்கு வரையறுக்கப்பட்ட இலக்கணக் கூறு தனக்கெனத் தனித்த இலக்கணக் கூறு இல்லாத அமைப்பிற்கும் பயன்படுத்தப்படும். இது உலக மொழிகளில் காணப்படும் பொதுவான பண்பேயாகும். சான்றாக, உயர்வு ஒருமைக்கென்று தமிழில் தனியான இலக்கணக் கூறு இல்லை. இருப்பினும் பன்மைக்கென்று வரையறுக்கப்பட்ட இலக்கணக் கூறினைக் கொண்டே உயர்வு ஒருமை புலப்படுத்தப்படுகின்றது(அரசர் வந்தார்; தொல்காப்பியனார் வந்தார்). இவ்விளக்கம் மேற்சுட்டிய சான்றுக்கும் பொருந்தும். ஐயப் பொருளில் ஆண்பாற் சொல்லும் பெண்பாற் சொல்லும் விரவி வரும்போது அதற்கென்று தனித்த வினை விகுதி வரையறுக்கப்படாமல் பன்மை விகுதியே பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு ஓர் இலக்கணக் கூறு, தனியான இலக்கணக் கூறு வரையறுக்கப்படாத மற்றொரு சூழலில் பயன்படுத்தப்படுவது என்பது வழு என்றோ வழுவமைதி என்றோ கொள்ளலாகாது என்றும்; அதனை மயக்கம் என்று கொள்ளவேண்டும் என்றும் வ.சுப.மாணிக்கனார் குறிப்பிடுவது இங்குச் சுட்டிக்காட்டத் தகுந்தது.

se vai sanmuganar bookஉள்ளவற்றுள் ஒன்றினை ஒன்றுக்குமேல் பயன்படச் செய்யும்போது மயக்கம்-கலத்தல் எனப் பெயர் பெறும்... இருதிணை தம்முள்ளும் ஒருதிணைப் பால்கள் தம்முள்ளும் முக்காலம் தம்முள்ளும் செப்புக்கள் தம்முள்ளும் கொடுத்து வாங்கிக் கொள்ளுதல் ஒரு மொழிக்குடும்பத்தில் வழுவில்லை. போக்கின்று, புகரின்று, வரைநிலையின்று, கடிநிலையின்று, ஒல்வழியறிதல், நோக்கோரனைய, சிறப்பத்தோன்றும் மயங்குமொழிக் கிளவி என்று நூல் முழுதும் வரும் தொல்காப்பியத் தொடர்களால் இவ்வுறவு மொழிக்குள் இயல்பானது என்பதனை விளங்கிக்கொள்ளலாம். (மாணிக்கம்,2017:67-68)

இதனை வெளிப்படையாகக் குறிப்பிடா விட்டாலும் பல நூற்பாக்களில் எது வழு என்பதை விளக்குவதில் உரையாசிரியர்களிடையே காணப்படும் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியும் பிற மொழியியல் விளக்கங்களைக் கொண்டும் செ.வை.சண்முகமும் கிளவியாக்கம் வழுக் களைதலை முதன்மை நோக்கமாகக் கொள்ளவில்லை என்னும் முடிவினையே தருகிறார்.

(தொல்காப்பியர்) பல இடங்களில் மாற்று வடிவங்களைக் குறிப்பிட்டுள்ளாரே தவிர, அவைகளை உரையாசிரியர்கள் போல வழு அமைதி என்று கொள்ளவில்லை.            (சண்முகம், 2004:26-27)

என்பது அவர் கருத்தாகும்.

3.3. தொடரியல் நோக்கு

கிளவியாக்கம் தொடரியல் நோக்கில் அமைந்தது என்னும் கருத்தினை வலியுறுத்தும் உரையாசிரியர் தெய்வச்சிலையார் ஆவார். உள்ளபடி, தொல்காப்பியச் சொல்லதிகாரத்தைத் தொடரியல் நோக்கில் விளக்கும் வகையில் அவர் உரை அமைந்துள்ளது. அக்கோட்பாட்டின் பின்னணியில் கிளவியாக்கமும் தொடரியல் நோக்கு உடையது என்றே அவர் கருதியுள்ளார். பிற உரையாசிரியர்களைப் போன்று இவரும் சில நூற்பாக்களை வழுநோக்கின் அடிப்படையில் விளக்கினாலும் கிளவியாக்கம் என்பது தொடரியல் விளக்கத்தையே அடிப்படையாகக் கொண்டது என்பது அவர் கருத்தாகும்.

...முதற்கண்ணது கிளவியாக்கம். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி என்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண் மேலாகும் நிலைமையைக் கிளவியாக்கம் என்றார். (தொல்.சொல்.1, தெய்.)

என்று உரைப்பதன்வழி இதனை அறியலாம். பிற உரையாசிரியர்கள் வழு அடிப்படையில் விளக்கிய நூற்பா ஒன்றினைத் தெய்வச்சிலையார் தொடர் அடிப்படையில் விளக்கி உள்ளமையும் இங்குக் கருதத்தகுந்தது.

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி

ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்றே                         (தொல்.சொல்.12)

என்னும் நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் கூறும் திரள்கருத்துப் பின்வரும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளது.

உரையாசிரியர்கள்             திரள்கருத்து              

இளம்பூரணர்             எய்தியது விலக்குதல்        

சேனாவரையர்        வழுவற்க      

தெய்வச்சிலையார்             ஐயம் அறுத்தல்       

நச்சினார்க்கினியர்            வழுவற்க      

கல்லாடனார்             வழுவமைதி

அட்டவணை 2 : நூற்பா 12'இன் திரள்கருத்து

இளம்பூரணர், தெய்வச்சிலையாரைத் தவிர்த்து ஏனைய உரையாசிரியர்கள் யாவரும் இந்நூற்பாவினை வழுவுடன் தொடர்புபடுத்தியே விளக்கியுள்ளனர். தெய்வச்சிலையார் தொடரமைப்பில் பேடி என்னும் பெயர்ச்சொல் எவ்வாறு வினைவிகுதி ஏற்கும் என்னும் ஐயத்தினை அகற்றுவதாகக் கொண்டுள்ளார். இது தொடரமைப்புச் சார்ந்த விளக்கமாகும். இதேபோன்று, செப்பு, வினா பற்றிய கிளவியாக்க நூற்பாக்கள் மரபு வழாநிலை பற்றிப் பேசும் நூற்பாக்களாக நச்சினார்க்கினியர், கல்லாடனார் இருவரும் கொள்ளும் நிலையில் தெய்வச்சிலையார் அவற்றை வழுநோக்கிற்குள் அடக்கவில்லை. மேற்காட்டிய பால் மயக்குற்ற ஐயக் கிளவி நூற்பாவையும் தெய்வச்சிலையார் தொடராக்கத்தில் தோன்றும் ஐயத்தை நீக்குவதாகவே கருதியுள்ளார். இச்சான்றுகளின்வழித் தெய்வச்சிலையார் கிளவியாக்கம் தொடராக்கம் பற்றி விளக்கும் தொடரியல் நோக்கினை அடிப்படையாகக் கொண்டது என்னும் கோட்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதை அறியலாம்.

வ.சுப.மாணிக்கம் கூறியதைப் போன்று வழுக்களைதல் என்னும் நோக்கில் கிளவியாக்க நூற்பாக்களை விளக்குதல் பொருந்தாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் தெய்வச்சிலையார் கூறுவதைப் போன்று கிளவியாக்கத்தைத் தொடராக்கம் பற்றி விளக்குவதாகக் கொள்வதும் சிந்தித்தற்குரியது என்பது செ.வை.சண்முகம் அவர்களின் கருத்தாகும். தொடராக்கம் என்பது பெயர்த்தொடர், வினைத்தொடர் என ஒரு வாக்கியத்தின் கூறுகளை விளக்குவதாகவோ ஒரு முழு வாக்கியத்தின் அமைப்பினை விளக்குவதாகவோ அமைதல்வேண்டும். அவ்வாறு, வண்ணச்சினைச் சொல், சிறப்புப் பெயர்-இயற்பெயர் வரிசைமுறை, பேடி என்னும் சொல் ஏற்கும் வினைவிகுதி, எழுவாய்-பயனிலை இயைபினைப் பேசும் ‘வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்' என்னும் நூற்பா போன்றவை தொடரமைப்பினை விளக்கும் நூற்பாக்கள்தாம். ஆனால், கிளவியாக்கம் தொடரியல் என்பதைத் தாண்டிச் சில நூற்பாக்களில் கருத்தாடலின் இலக்கணம் பற்றியும் பேசுகிறது. அது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் தொடர்ந்து வரும் நிலையை விளக்குகிறது. எனவே, தொடரியலைக் கடந்த கருத்தாடல் அமைப்பைப் பற்றியும் கிளவியாக்கம் பேசுகிறது. இதற்கு, இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும் எவ்வாறு வருதல் வேண்டும் என்பதை விளக்கும் நூற்பாவைச் சான்றாகக் கொள்ளலாம்.

இயற்பெயர்க் கிளவியும் சுட்டுப்பெயர்க் கிளவியும்

வினைக்கு ஒருங்கியலும் காலம் தோன்றின்

சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

இயற்பெயர் வழிய என்மனார் புலவர்               (தொல்.சொல்.38)

என்னும் நூற்பாவிற்கு இளம்பூரணர்,

கொற்றன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க

என்ற எடுத்துக்காட்டினை வழங்கியுள்ளார். உரையாசிரியர்கள் பிறரும் இதே அமைப்பிலான சான்றினையே காட்டியுள்ளனர். இந்த எடுத்துக்காட்டில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன.

               வா.1 : கொற்றன் வந்தான்

               வா.2 : (நீ) அவற்குச் சோறு கொடுக்க

இந்நூற்பா இரண்டு தொடர்களுக்கு இடையிலுள்ள இலக்கண அமைப்பைப் பற்றிப் பேசுவதால் இது தொடரியலையும் கடந்து கருத்தாடல் பற்றி விளக்குவதாகக் கொள்ளவேண்டும். இதேபோன்று, சுட்டு முதலாகிய காரணக் கிளவி பற்றிய நூற்பாவும் (தொல்.சொல்.40) கருத்தாடலின் கீழ் அடங்கும். கிளவியாக்கத்தின் வேறு சில நூற்பாக்கள் பொருண்மையியல் நோக்கமும் கொண்டவை என்பது செ.வை.சண்முகம் அவர்களின் கருத்தாகும்.

வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்                                     (தொல்.சொல்.45)

வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்                               (தொல்.சொல்.46)

போன்ற நூற்பாக்கள் பொருண்மையியலில் விளக்கப்படும் மீச்சொல் (Super ordinate terms) என்பதுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவை என்பது அவர் கருத்தாகும் (சண்முகம், 2004:45).

3.4. கிளவியாக்கத்தின் பேசுபொருள்

உரையாசிரியர்கள் மூலநூலை விளக்க முற்படும்போது அவர்கள் கொண்டுள்ள இலக்கணம், இலக்கியம், மொழி பற்றிய கருத்தியலின் தாக்கமும் அவர்களின் உரைகளில் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகிறது. தங்கள் கருத்தியலின் அடிப்படையில் மூலநூலை விளக்கும்போது அந்தக் கருத்தியலின் பின்னணியில்தான் மூலநூலும் இயற்றப்பட்டுள்ளது என்னும் முடிவினையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். பொருளதிகார உரையில் 'இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்துகொள்க'(தொல்.பொருள்.1) என இளம்பூரணர் தம் கருத்தைத் தொல்காப்பியர் கருத்தாக முன்வைப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, கிளவியாக்கம் இயற்றப்பட்ட நோக்கத்தைப் பற்றிய விளக்கத்திலும் உரையாசிரியர்களிடம் சொல்லியல் நோக்கு, வழு நோக்கு, தொடரியல் நோக்கு என மூன்றுவிதமான நோக்கங்கள் உள்ளமையை அறியமுடிகிறது. அவை தொல்காப்பியரின் நோக்கமாகவும் விளக்கப்பட்டுள்ளன. இந்நோக்கங்களையும் கிளவியாக்க நூற்பாக்கள் அனைத்தையும் மொழியியல் நோக்கிலும் குறிப்பாகத் தொடரியல் நோக்கிலும் அறிஞர்கள் பிறரின் கருத்துகளுடனும் ஒப்பிட்டு நோக்கும்போது செ.வை.சண்முகம் 'தொல்காப்பியத் தொடரியல்' நூலில் வழங்கும் விளக்கங்களும் முடிவும் முற்றிலும் ஏற்கத்தக்கனவாக உள்ளன. இது 'தொல்காப்பியத் தொடரியல்' நூல்வழித் தொல்காப்பியச் சொல்லதிகாரப் புரிதல் சாத்தியமாகிறது என்று முன்னர்ச் சுட்டிய கூற்றுக்குச் சான்றாக அமைகிறது.

கிளவியாக்கம் மொழி அமைப்புப் பற்றிய சில பொது உண்மைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கில் விளக்குகிறது என்றுதான் கொள்ள வேண்டும். (சண்முகம், 2004:46)

என்பது கிளவியாக்க உள்ளடக்கம் பற்றி அவர் தரும் முடிவாகும். ஒன்றுக்கு மேற்பட்ட நோக்குகள் என்னும்போது சொல்லியல், வழு, தொடரியல் என உரையாசிரியர்கள் குறிப்பிடும் நோக்கங்களுடன் பொருண்மையியல், கருத்தாடல், பயன்வழியியல் (Pragmatics) ஆகிய நோக்குகளும் இதன்கண் உள்ளன என்பது அவர் கருத்தாகும்.

தொகுப்புரை

  • மாற்றிலக்கணத் தொடரியல் அணுகுமுறை மொழியியலில் தாக்கத்தை ஏற்படுத்தியபோது மரபிலக்கணங்களைத் தொடரியல் நோக்கில் விளக்கும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
  • தமிழ்ச் சூழலில் ச.அகத்தியலிங்கம் தொடங்கி அறிஞர்கள் பலர் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு தொடரியல் கருத்துகளை விளக்கியுள்ளனர்.
  • உரையாசிரியர்களின் கருத்துகளின் ஊடாகவும் தொடரியல் கோட்பாட்டுப் பின்னணியிலும் தொல்காப்பியத் தொடரியல் கருத்துகளை விளக்கும் முதல் நூலாக செ.வை.சண்முகம் அவர்களின் தொல்காப்பியத் தொடரியல் நூல் அமைந்துள்ளது.
  • கிளவியாக்கத்தின் பேசுபொருள் பற்றி உரையாசிரியர்களிடையே சொல்லியல் நோக்கு, வழு நோக்கு, தொடரியல் நோக்கு என மூன்று வகையான நோக்கங்கள் இருந்துள்ளன.
  • கிளவியாக்க நூற்பாக்கள் முழுவதையும் ஆய்விற்கு உட்படுத்தும்போது மேற்கண்ட மூன்று நோக்கங்கள் மட்டுமல்லாமல் கருத்தாடல், பொருண்மையியல், பயன்வழியியல் என்னும் பிற நோக்கங்களும் இதில் அடங்கியுள்ளன என்பதைத் ‘தொல்காப்பியத் தொடரியல்' நூல்வழி அறியமுடிகிறது.
  • தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள தொடரியல் சார்ந்த பிற விளக்கங்களும் அடங்கியுள்ள நிலையில் தொல்காப்பியப் புரிதலுக்குக் குறிப்பாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரப் புரிதலுக்கு செ.வை.சண்’முகத்தின் ‘தொல்காப்பியத் தொடரியல்' நூல் துணையாக அமைகிறது.

சுருக்கக் குறியீட்டு விளக்கங்கள்

இளம். - இளம்பூரணர்; கல். - கல்லாடனார்; சேனா - சேனாவரையர்; சொல். - சொல்லதிகாரம்; தெய். - தெய்வச்சிலையார்; தொல். - தொல்காப்பியம்; நச்சர். - நச்சினார்க்கினியர்; நன். - நன்னூல்; பொருள். - பொருளதிகாரம்.

துணையன்கள்

அடிகளாசிரியர்,(பதி.ஆ.), (1998), தொல்காப்பியம்-சொல்லதிகாரம், இளம்பூரணர் உரை, தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

இராசாராம், சு., (2010), இலக்கணவியல் - கோட்பாடுகளும் மீக்கோட்பாடுகளும், நாகர்கோவில்: காலச்சுவடு.

இளவரசு, சோம.,(பதி.ஆ.).,(1990), நன்னூல் விருத்தியுரை, சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சண்முகம், செ.வை., (1972), வேற்றுமை பற்றித் தொல்காப்பியர், தொல்காப்பிய மொழியியல்,     அகத்தியலிங்கம், ச., & முருகையன், க., (பதி.ஆ.)., சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

---------------------------------, (2004), தொல்காப்பியத் தொடரியல், சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

சுந்தரமூர்த்தி, கு. (பதி.ஆ.)., (1965), தொல்காப்பியம்-சொல்லதிகாரம், கல்லாடனார் விருத்தியுரை, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

-----------------------------------, (1962), தொல்காப்பியம்-சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

-----------------------------------, (1971), தொல்காப்பியம்-சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, சிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

சுபாஷ் சந்திரபோஸ், ச., (2018), பழந்தமிழில் காலங்கள், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

தொல்காப்பியம்-பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, (1953), சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

மாணிக்கம், வ.சுப., (2017), சிந்தனைக் களங்கள், சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

வேங்கடாசலம், ஆர்.,(பதி.ஆ.), (1984), தொல்காப்பியம் - சொல்லதிகாரம், தெய்வச்சிலையார் உரை, தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

முனைவர் தி.மோகன்ராஜ்

Pin It