2026 அக்டோபர் 28 அன்று அதிகாலை 5 மணிக்கு வீட்டின் கதவுகள் தட்டப்பட்டபோது, சீருடை அணியாத காவல்துறையினர் தன்னைக் கைது செய்ய வாடகை வண்டியில் வந்திருக்கிறார்கள் என்பதைப் பொருளியல் அறிஞரும் பேராசிரியருமான கலையரசன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் தனது ஆடைகளை மாற்றிக்கொள்ளக் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை, அவரது கைபேசி பறிக்கப்பட்டது, ஒரு தீவிரவாதி போல் கைது செய்யப்பட்டார். பல மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு, குற்றமற்றவர் என்று அறிந்து வீட்டில் கொண்டு விடப்பட்டார் என்று அவர் டிஜிபியிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை கூறும் காரணம்
ஓர் இன்ஸ்டாகிராம் கணக்கில், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் குறித்து அவதூறாகப் பதிவிடப்பட்டிருந்ததாகவும் அதில் அவரது புகைப்படம் இருந்ததாகவும் அதனால் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார். பொருளாதார அறிஞரும், சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தின் (MIDS) பேராசிரியருமான கலையரசன் உலக அளவில் புகழ்பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்களோடு தொடர்புடையவர். இந்தியாவின் திட்டக்குழுவின் உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழ்நாடு திட்டக்குழுவின் சில உபகுழுக்களிலும் பணியாற்றியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரைக் கைது செய்த முறை, கைதுக்கான காரணம், கைது செய்த நேரம், காவல்துறை நடந்துகொண்ட விதம் இவையனைத்தும் குறிப்பிட்ட இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு பதிவை முன்வைத்து அச்சுறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு செய்யப்பட்டதாகவே தெரிகிறது.
தனக்கு இன்ஸ்டாகிராம் ஐடி எதுவும் இல்லை என்றும் தனது புகைப்படத்தைப் யாரோ தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும், காவல்துறை இவற்றுக்கெல்லாம் செவிசாய்க்கவில்லை என்பது ஏதோ ஒரு மறைமுக நோக்கத்திற்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்பதற்காகவே காவல்துறை இப்படி நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு அந்த குறிப்பிட்ட வலைத்தள கணக்கைத் தொடங்கியது யார்? பதிவிட்டது யார்? புகார் அளித்தது யார்? காவல்துறையினர் உரிய விசாரணையையும், வழிமுறைகளையும் பின்பற்றாமல் துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டது ஏன்? அவர்களுக்கு இந்த உத்தரவை அளித்தது யார்? என்பது குறித்து உரிய முறையில் விசாரித்துத் தவறிழைத்த அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தானே நியாயம்!
உண்மையான காரணம்
கலையரசன், அண்மையில் ஊடக நேர்காணல்களில் தவெக (TVK) தலைமையிலான தமிழக அரசு மீது முன்வைத்த முக்கிய பொருளாதார விமர்சனம் யாதெனில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்ததாகும். அவர் முன்வைத்த பொருளாதாரக் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் பின்வருமாறு:
- தமிழகத்தின் பணவீக்க விகிதம் என்பது தேசிய சராசரியை விட அதிகமாக உயர்ந்து கொண்டே செல்வது "கவலைக்குரியதாக" உள்ளது என எச்சரித்துள்ளார்.
- பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தவெக ஆட்சியில் அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
- தவெக அரசின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள், நிர்வாகச் செயல்பாடுகள் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு தொய்வடைந்து வருகிறது என்று அவர் தனது கருத்துகளை ஆக்கப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.
- தவெக அரசின் விலைவாசி உயர்வைக் கடுமையாக வெளிச்சமிட்டுக் காட்டியதற்காகவே பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டார் என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
சமூகப் பொறுப்பு
ஒரு பொருளியல் அறிஞரின் சமூகப் பொறுப்பு என்பது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடுவது மட்டுமல்ல. வளர்ச்சியால் யார் பயனடைகிறார்கள், அதன் சுமைகளை யார் தாங்குகிறார்கள், சிலரிடம் செல்வச்செழிப்பும் பலரிடம் வறுமையும் ஏன் காணப்படுகிறது? என்பதைக் கேள்விக்குள்ளாக்குவதாகும். வேலையின்மை, சமத்துவமின்மை, பொதுச் செலவினம், பொருளாதார வளங்களின் பகிர்வு ஆகியவற்றின் மீதான விமர்சனம், சனநாயகப் பொறுப்புக்கூறலின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். ஓர் அரசாங்கம் விமர்சனத்திற்கு உடன்படாமல் இருக்கலாம். அது சான்றுகளை எதிர்க்கலாம், முடிவுகளை மறுக்கலாம் அல்லது தனது கொள்கைகளைப் பாதுகாக்கலாம். ஆனால், அமைதியான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கைது செய்து அச்சுறுத்தி எச்சரிப்பது சனநாயக மரபுகளுக்கு முரணானது ஆகும். ஒரு பொருளியல் அறிஞரின் கடமை, பொருளாதார அநீதியைக் கேள்வி கேட்பதாகும். ஒரு சனநாயகத்தின் கடமை, அந்தக் கேள்விகளைக் கேட்பதற்கான சுதந்திரத்தை வழங்குவதாகும்.
அரசமைப்பு விதி மீறல்
இந்திய அரசமைப்புச் சட்டம் காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கவில்லை என்பது கவனத்திற்கொள்ளத் தக்கது.
- சரத்து 19(1)(a), சரத்து 19(2) ஆகிய இரண்டும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்து உறுதியளிக்கிறது.
- சரத்து 21, நேர்மையான, நியாயமான நடைமுறைகள் மூலம் தனி மனித சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
- சரத்து 22, கைது செய்யப்பட்டவரிடம் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும், சட்ட ஆலோசகரை அணுக அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. கலையரசன் கைதின் போது மேற்கூறப்பட்ட நடைமுறைகள் எதுவும் கிஞ்சித்தும் பின்பற்றப்படவில்லை என்பது கண்கூடு.
டி.கே. பாசு தீர்ப்பின் மீறல்
டி.கே. பாசு எதிர் மேற்கு வங்க அரசு (1997) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, காவல்துறை கைது, காவலில் நிகழும் அதிகார வரம்பு மீறல்கள் போன்றவற்றிற்கு எதிரான பாதுகாப்புகளை நிறுவியது. கைது செய்யும் அதிகாரிகளை முறையாக அடையாளம் காண்பது, கைது தொடர்பான ஆவணங்களைத் தயாரிப்பது, உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் தொடர்புகொள்வது, காவல் பதிவேடுகளைப் பராமரிப்பது, பொருத்தமான மருத்துவப் பாதுகாப்புகள் ஆகியன இதில் அடங்கும். கலையரசன் வழக்கில் காவல் துறையினர் சீருடை அணியாமல் வந்தது, வாடகை வாகனத்தில் அழைத்துச் சென்றது, யாருக்கும் தகவல் சொல்ல அனுமதிக்காமல் செல்போனைப் பறித்தது போன்றன டி.கே. பாசு தீர்ப்பைப் பின்பற்றாத சட்ட விதி மீறல்களாகும். சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு நேர்மை தவறாமல் நடவடிக்கை எடுக்கவே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது, மீறல்கள் நிரூபிக்கப்பட்டால், பொறுப்புக்கூறல் பின்பற்றப்பட வேண்டும்.
மனித உரிமை மீறல்
1948-இல் பெரும்பாலான உலக நாடுகளால் ஏற்புறுதி செய்யப்பட்ட அகில உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights - UDHR), மனித மாண்பிற்கான ஓர் உலகளாவிய தார்மீக நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
- சரத்து 3, சுதந்திரம், தனி மனித பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
- சரத்து 9, தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் இரண்டையும் நிராகரிக்கிறது.
- சரத்து 10, ஒரு சுதந்திரமான, பாரபட்சமற்ற தீர்ப்பாயத்தின் முன் நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
- சரத்து 19, கருத்து மற்றும் பேச்சுரிமையைப் பாதுகாக்கிறது. அகில உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் (UDHR) கோட்பாடுகள் உலகளாவிய மனித உரிமைகள் தரநிலைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. காவல்துறையால் பேரா. கலையரசன் கைது செய்யப்பட்ட விதம், இந்தக் கோட்பாடுகளுடன் பொருந்தாத மனித உரிமை மீறலாக உள்ளது. மனித உரிமைக் காப்பாளர்கள், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சாமல் அரசாங்கக் கொள்கைகளைக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தால் வழங்கப்படும் சலுகை அல்ல. அது சனநாயக வாழ்வின் அடிப்படை உரிமையாகும்.
மறைமுகச் செய்தி
காவல்துறையின் கைது நடவடிக்கை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. பேரா. கலையரசன் கைது சொல்லும் மறைமுகச் செய்தி:
- பொருளாதார வல்லுநர்களை, அது எச்சரிக்கிறது: பொருளாதாரக் கொள்கையைக் கேள்வி கேட்காதீர்கள்.
- கல்வியாளர்களை, அது அறிவுறுத்துகிறது: அதிகாரப்பூர்வமான கூற்றுகளுக்கு சவால் விடாதீர்கள்.
- பத்திரிகையாளர்களை, அது எச்சரிக்கிறது: சங்கடமான உண்மைகளை ஆராயாதீர்கள்.
- சாதாரண குடிமக்களிடம், அது கிசுகிசுக்கிறது: அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள். அமைதியாக இருங்கள். மௌனமாக இருங்கள். எதையும் கேள்வி கேட்காதீர்கள்.
ஒரு சட்ட விரோதக் கைது தனி மனிதரைப் பற்றியதாக இருந்தாலும், அதன் விளைவுகள் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடையக் கூடும்; இதனால் ஏற்படும் அச்சத்தின் காரணமாகத் தங்கள் சொந்த எண்ணங்களையே தணிக்கை செய்யத் தொடங்குகிறார்கள். கட்டாய மௌனத்தில் ஒரு சனநாயகம் நிலைத்திருக்க முடியாது. அரசாங்கங்கள் அரசியல் அதிகாரத்தின் தற்காலிக ஆக்கிரமிப்பாளர்கள். அரசியலமைப்பு உரிமைகள் மக்களுக்குச் சொந்தமானவை. ஓர் அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது தேசத்தின் மீதான விரோதம் அல்ல. பொருளாதாரக் கொள்கையைக் கேள்வி கேட்பது சனநாயகத்தின் மீதான தாக்குதல் அல்ல. அமைதியான எதிர்ப்பு. நீதி மௌனமாகும்போது, சனநாயகம் தன் குரலை இழக்கிறது. பேரா. கலையரசனின் கைது வெளிப்படையான சட்டரீதியான ஆய்வைக் கோருகிறது. குற்றச்சாட்டுகள் நேர்மையாக ஆராயப்பட வேண்டும், மேலும் அரசமைப்பின் விதி மீறலுக்குக் காவல்துறை பொறுப்பு கூற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மிகப்பெரிய ஆபத்து என்பது ஒரு பொருளியல் அறிஞர் கைது செய்யப்பட்ட செய்தி என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு எச்சரிக்கையை அனுப்பியது. ஆம்.... அரசாங்கத்தை விமர்சிக்காதீர்கள்; நீங்கள் பாதுகாப்பாக இருக்க விரும்பினால் மௌனமாக இருங்கள்.
விமர்சனங்களை அடக்கி பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என்பதை அரசதிகாரம் உணர வேண்டும். அரசதிகாரம் ஒரு குரலைத் தற்காலிகமாக அடக்கக்கூடும். ஆனால், அந்தக் குரல் எழுப்பிய நேர்மையான கேள்விகளை எவராலும் அடக்க முடியாது. குடிமக்கள் அரசதிகாரத்திற்கு அஞ்சும்போது சனநாயகம் வலுப்பெறுவதில்லை. அரசாங்கம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் போது குடிமக்களின் நம்பிக்கையும் சனநாயகமும் வலுப்பெறுகிறது. இது காலம் சொல்லும் வரலாற்றுச் செய்தி!
- வழக்குரைஞர் சண்முகம் சுதாகர்