எதற்கும் எப்போதும் தயார் நிலையில் உள்ளது இந்திய ராணுவம் என்ற செய்திகளை நாம் அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். இயற்கை பேரிடர்களை சந்திக்க தயார் நிலையில் உள்ளது நமது அரசாங்கம் என்ற செய்தி தற்போது வருடத்திற்கு குறைந்தது இருமுறையாவது கேட்க நேரிடுகிறது.
இந்த வருட துவக்கத்தில் ஜனவரி -2024 ஆம் மாதத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை (ம) வெள்ளத்தின்போது மழைநீர் தன்பாதை எது என நமக்கு காட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் தாலுகாவில் உள்ள மேம்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள முக்காணி – ஆத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலம் ஓட்டை விழுந்தது. திருச்செந்தூர் தாலுகாவில் காயல்பட்டணம் நகராட்சியில் 90 செ.மீ. மழை பதிவானது. ஆனால் மழை பெய்து முடித்த அடுத்த ஒருவாரத்திற்கு மின்சாரம், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். மழை வெள்ளத்தின் வேகத்தில் சாய்ந்த மின்கம்பங்கள் சில நாட்களில் மின் ஊழியர்களின் உழைப்பால் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் குடிக்க தண்ணீர் தட்டுப்பாடான நிலை இருந்தது. பல்லாயிரம் கனஅடி தண்ணீர் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள புன்னக்காயல் பகுதியில் கடலில் வருடந்தோறும் கலக்கிறது. ஆனால் மழைக் காலங்களில் நீரேற்றும் நிலைங்களில் போதிய முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை இல்லாத காரணத்தினால் நமக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நீரேற்றும் நிலையங்களில் வெள்ள நீர் உயரும் காலங்களில் தண்ணீர் பம்ப் செய்து வீடுகளுக்கு வழங்கும் விதத்தில் எவ்வித முன்னேற்பாடும் செய்யப்படுவதில்லை. அதனால் மழை வந்தாலே குடிக்க சுத்தமான குடிநீரைக்கூட வழங்க தயார் இல்லாத பொறுப்பற்ற நிலையில்தான் டிஜிட்டல் இந்தியாவில் ஆளும் அரசுகள் உள்ளது.
கேன் வாட்டருக்கும், மழை காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் வண்ணம் விநியோகத்தை நிறுத்தி விடுகின்றன தனியார் கம்பெனிகள்.
இது போன்ற வெள்ளம் ஏற்படும் காலங்களில்தான் இந்த நிலை என்றால், வெயில் காலங்களில் வறட்சி எனக் கூறி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
வெள்ளம் வந்தாலும், வறட்சி காலங்களிலும் சீராக குடிநீர் கிகை்க வழிவகை செய்ய ஏன் இந்த அரசுகள் தயாராக இல்லை. சில வருடங்களுக்கு முன்னால் அ.தி.முக. ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஒருவர் வைகை ஆற்றில் தெர்மாகோல் விட்டதைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். அந்த அமைச்சர் தெர்மாகோல் விட்டதை ஒரு முயற்சியின் துவக்கமாகப் பார்த்தால் சிரிப்பு வராது.
மக்களின் நலனுக்காக முன்கூட்டியே யோசனை செய்து நிகழ்கால அவசர நிலைகளை சமாளிக்கத் திட்டமிடாமல் மக்கள் பணத்தை உருப்படியில்லாத ஓட்டைப்பாலம் கட்டும் ஆளும் அரசாங்கங்கள் மக்களை அழ வைக்கின்றன.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் மின்சாரக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியது ஆளும் அரசுகளின் கடமை. பேரிடர் மேலாண்மைத் துறை என்று பெயரளவுக்கு வைத்துக் கொண்டு நிதி ஒதுக்கீடு மற்றும் பணியாளர் நியமனம் இன்றி எதையும் செய்ய இயலாது என்பதை ஆளும் வர்க்கம் உணர வேண்டும்.
மணிநீருடம் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையதரன்.
water is lifes matter and matrix, mother and medicine. There is no life without water.
- சுடலைமாடன்