தமிழகத்தில் பெருமழையின் பசிக்கு இதுவரையிலும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் இரையாகி உள்ளார்கள் என நம்பப்படுகிறது. இது குறித்து இறுதிசெய்யப்பட்ட அரசின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இறந்துபோன தனது தாயின் உடலோடு வெள்ளப்பெருக்கில் வீட்டுமாடியில் இருபது மணிநேரமாக கதறிக் கொண்டிருந்த மகளின் துயரம் இன்னும் நம் செவிகளில் கேட்கிறது. மழையின் பசி தீர்ந்த பாடில்லை. தன் தீரா பசியின் தாகம் தீர்க்க மழை பெய்து முடித்திருக்கிறது. அருவியின் சாரலையும், கடலின் அலைத்துளிகளையும் வியக்க வியக்க ரசித்த கண்களுக்கு ஒரு மாயா பிரளயம் தெரிந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக் தண்ணியில் தமிழக குடும்பங்களே தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் வடகிழக்கு பருவமழைத் தண்ணீரில் சென்னையும், கடலூரும், திருவள்ளூரும் மூழ்கித் திணறியது. இதில் டாஸ்மாக் கடைகளும் விதிவிலக்கின்றி மூழ்கின. அலைபாய்ந்து, குடும்பமிழந்து, பதினெட்டு லட்சம் மக்கள் பரிதவித்தனர். மாடிகளே மூழ்கியிருக்கும் போது நூற்றுக்கணக்கான அடித்தட்டுமக்கள் வசித்த சேரிகள் என்னவாயிருக்கும். அம்மக்கள் என்னவாகி இருப்பார்கள்...
சென்னையைச் சுற்றியுள்ள முப்பத்தைந்து ஏரிகளும் மழைநீரால் நிறைந்து வெள்ளம் மறுகாலெடுத்தும் உடைப்பெடுத்தும் ஓடி நகரை தின்றடித்தது. அனைத்து வடிகால் கால்வாய்களும் தனது சுயத்தை இழந்துள்ளன. சாலைப்போக்குவரத்து முற்றிலும் நின்று போயின. சாலையின் வெள்ளப்பெருக்கிலிருந்து மீள படகுகள் அங்குமிங்கும் நகர்ந்தன. இந்திய கப்பற்படை கப்பல் மருந்துகளோடும், மருத்துவர்களோடும், படகுகளோடும், நீர்மூழ்கி வீரர்களோடும் சென்னையை மீட்க முயன்றன.
ரியல் எஸ்டேட் பெருமுதலாளிகளும் கூட்டத்தோடு கூட்டமாய் பாய்களையும், பெட்ஷீட்டுகளையும் வீசி னார்கள். புதுவீடுகள் கட்டுவதற்கு பன்னாட்டு குழும கார்ப்பரேட்டுகள் மாஸ்டர் திட்டங்கள் போட்டு முடித்திருப்பார்கள்.
நிவாரண முகாம்கள், மீட்புக் குழுக்கள், உணவுப்பொட்டலங்கள், தற்காலிகமாகக் கிடைத் தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்றே தெரிகிறது. வீடுகளின் தரைத்தளம் ஆள் உயரத்திற்கு வெள்ளக்காடு ஆகும் போது பத்து இருபது ஆண்டுகால உழைப்பில் சேர்த்து வைத்திருந்த உடைமைகளும் முற்றிலுமாக அழிந்து போயுள்ளன. மின்சாரத் துண்டிப்பால் எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் ஆனது. செல்போன்கள் சார்ஜ் பண்ணமுடியாமல் ஓய்ந்து கிடந்தன. சமைத்து உண்ண பொருட்கள் இல்லை. சமைக்க ஸ்டவ்கள் இல்லை. காசு எடுக்க ஏடிஎம்கள் இல்லை. காசிருந்தால் வெளியில் போய் சாப்பிட கடைகள் இல்லை. தண்ணீர் பெருக்கால் வெளியில் போகவும் முடியவில்லை. நெஞ்சளவுக்கு தண்ணீர் தேங்கிய பகுதிகளில் ஆண்கள் கடந்து செல்ல முற்பட்டார்கள். பெண்கள் குழந்தைகள் என்ன செய்திருப்பார்கள். நமது பிள்ளைகள் வெள்ளப்பெருக்கில் சிக்கியிருக்கிறார்கள். தூரத்திலிருக்கும் நாமே என்ன பாடுபடுகிறோம்!
ஏதிலிகளின் துயரம்
மூழ்கிய வீடுகளிலிருந்தும், பெருவெள்ளத்திலிருந்தும் பெண்களையும், குழந்தைகளையும் , முதியவர்களையும் மீட்புப் பணி செய்த செயல் போர்க்குணம் மிக்க மனிதாபிமானமாகும். இந்த மீட்புப்பணி முதலில் உயிர்களைக் காக்கும் பணியாகும். இரண்டாவது உயிர்மீட்கப்பட்ட மக்கள், பிஞ்சுகள் பசியாலும், பட்டினியாலும் செத்துவிடாமலிருக்க ஏதுமில்லாத ஏதிலிகளான இவர்களுக்கு உணவு வழங்குவதாகும். உடுப்பதற்கு மாற்றுத் துணியில்லாமல் இருக்கும் மக்களுக்கு ஆடை வழங்குவதுமாகும்.
மூன்றாவது பல நாட்களாகத் தேங்கிக்கிடக்கும் சாக்கடைகலந்த வெள்ளத்தை வெளியேற்றி தொற்று நோய்களிலிருந்து மக்களையும் பெருங்குப்பைக்கூளங்கள் கழிவுகளிலிருந்தும் தெருக்களையும், வீடுகளையும், சுற்றுப் புறங்களையும் பாதுகாக்கவேண்டிய பேரிடர் துயர்துடைப்புப் பணி.
தேசிய பேரிடர் மீட்புப்படை NDRF உயிர்காக்கும் இப்பணிகளில் தனது அயராத செயலை நிகழ்த்தியுள்ளது. என்றாலும் கூட நிவாரண நடவடிக்கைகளில் அரசின் மெத்தனத்தை கலைக்கும் வகையில் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, ஜைன தன்னார்வ குழுக்களின் செயல்பாடு மிகவும் வீரியமிக்கதாய் நிகழ்ந்தது. முஸ்லிம் அமைப்புகளின் துப்புரவுப்பணியும் நமது காலத்தின் மிகச் சிறந்த மனித நேய அடையாளமாகும்.
நிவாரணப்பணியில் மீட்புப்பணியும், துப்புரவுப் பணியும் முக்கியமானது. தெருக்களில் குவிந்துகிடக்கும், அழுகல்களை, குப்பைக்கூளங்களை, இறந்துபோன கால்நடைகளின் சடலங்களை அகற்றுவது என்பதும் மிகவும் உன்னதமானபணி. சாக்கடைகளுக்குள் இறங்கி அவற்றையும் உயிரைப் பணயம் வைத்து சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் பணியினை இந்த நேரத்தில் நாம் நினைத்துப்பார்க்க வேண்டி இருக்கிறது.
நாங்கள் அழுக்காகிறோம்
தெருக்கள் சுத்தமாகின்றன.
சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் இருபத்தைந் தாயிரம் உடல் உழைப்பு துப்புரவுப்பணியாளர்கள் துப்பரவுப்பணியை மேற்கொண்டதை இப்படியும் சொல்லலாம். வெளி மாவட்டங்களிலிருந்து ஐயாயி ரத்திற்கும் மேற்பட்ட துப்பரவுப்பணியாளர்கள் பங்கேற்றனர். பல்லாயிரம் கோடிகள் மீட்புப்பணிக்கு உலக மக்கள் சமுதாயமே வாரிவழங்கிக் கொண்டிருக்கும் போது இவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக இரண்டாயிரம் வழங்கப்படும் என்பதான அறிவுப்புகள் கூட ஒருவகையில் அர்ப்பணிப்போடு பணிபுரியும் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு தொழிலாளர் மக்களை சிறுமைப்படுத்துவது போல்தான் தெரிகிறது. இதெல்லாம் சொல்லாமலே வாரி வழங்கப்பட வேண்டிய விசயம். இணையவெளி முகநூல் குறிப்பில் தமிழச்சி இவ்வாறு எழுதுகிறார்.
உங்கள் மலத்தை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். உங்கள் குப்பையை அள்ள ஒரு சாதி இருக்க வேண்டும். அதைக் காக்க ஒரு அரசு இருக்க வேண்டும் என்றால் இந்த சாதி ஆணவம் இன்னும் வாழத்தான் வேண்டுமா? அந்தப் பெருவெள்ளம் சாதி ஆணவத்தை அழித்தொழிக்காமல் சாதி சமூகத்தை விட்டுச் சென்றிருக்கிறதே... இந்த ‘சாதி குப்பை’ச் சமூகத்தை சுத்தப்படுத்த இன்னும் எத்தனை பெரியார்களும் அம்பேத்கர்களும் வர வேண்டும்?
கணக்கு அறிக்கைகளில் எந்த விதமான உயிரும் இல்லை.
சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பாதிப்புகளில் ஆட்பட்ட மக்களை மீட்டு 16081 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பதினாறு லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து ஐநூற்று அறுபத்தைந்து (16,97,565)மக்கள் இருக்கிறார்கள். ஒரு கோடியே பதின்மூன்று லட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்றுப் பதினேழு (1,13,69,617) உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. எத்தனை தடவை, ஒவ்வொரு தடவையும் எத்தனை பேருக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன, இந்த உணவுப் பொட்டலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 25, 551 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதில் 24,68,441 பேர் பயன் பெற்றுள்ளனர். 3657 கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. பத்து லட்சத்து முப்பத்தாறாயிரத்து நூற்றுப் பதினேழு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 590 மெட்ரிக்டன் பால் பவுடர் 40,050 லிட்டர் பால் நிவாரண முகாம்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் உள்ள பெண்களுக்கு பத்துலட்சம் சானிட்டிரி நாப்கின்கள் வழங்கப்பட்டன. அரசின் இதுபோன்ற கணக்கு அறிக்கைகளில் எந்த விதமான உயிரும் இல்லை. பொதுப்புத்திக்கு இந்த அறிவிப்புகள் எந்த நம்பிக்கையையும் தருவதாகவும் இல்லை.
சென்னையில் உணவுப்பற்றாக்குறையும் பட்டினியும் தலைவிரித்தாடியபோது ஒரு லிட்டர் பாக்கெட் பால் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. 20ருபாய் மினரல் வாட்டர் 150 ரூபாய்க்கும், காய்கறி விலை தக்காளி கிலோவிலை ரூபாய் 80, பீன்ஸ் ரூபாய் 90 விலைக்கும் விற்பனையானது நிகழ்ந்தது.
தமிழகத்திற்கு மேலும். ஆயிரம் கோடி ரூபாயை வெள்ள மீட்புப்பணிக்கு மத்திய அரசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 940கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1940கோடி ரூபாய்... இன்னும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கேட்கப் பட்டுள்ளன. நமது விருப்பமெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிவாரணம் சென்று சேரவேண்டும் என்பதுதான்... இதற்கான திட்டமிடுதலை மக்களுக்கு வெளிப்படையாக அரசு அறிவிக்க வேண்டும்.
பெருமழையின் கனிவும் துயரமும் - தோழர் நல்லகண்ணு
சென்னைப் பெருமழை அழிவின் பயங்கரங்களை உருவாக்கி விட்டது. என்றாலும் இது கனிவின் தடயங்களையும், கூடவே துயரங்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்கள் சென்னை சைதாப்பேட்டை சிஜடி காலனி குடியிருப்பில் வசித்துவருகிறார். கடந்த 2ஆம்தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் இவரது வீட்டிலும் வெள்ளம் புகுந்தது. அலைபேசி தொடர்பும் இல்லாத நிலையில் இவரை மீட்க கட்சி தொண்டர்களும் மாநகராட்சி ஊழியர்களும் சென்றபோது மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்ட பின்னால்தான் நான் வருவேன் என உறுதியாக வர மறுத்துவிட்டார். அப்பகுதி மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு விட்டோம் என்று உறுதியளித்த பின்னர்தான் தோழர் நல்லகண்ணு மீண்டுவந்தார். தோழரின் கருணை உணர்ச்சி நம்மில் சலனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இம்ரானின் மரணம்
திருவொற்றியூர் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு கரை சேர்த்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் மாணவன் இம்ரான். மீட்புப் பணியில் இருந்த இம்ரானை வெள்ளநீரில் வந்த விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது. வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட இம்ரானின் கை, கால்கள் செயல் இழந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத நிலையில் இம்ரான் மறுநாள் அதிகாலையில் உயிரிழந்தார். இம்ரான் விடுமுறை நாட்களில் தனது தந்தையுடன் சேர்ந்து வீடு வீடாக தண்ணீர் கேன் போட்டு வந்துள்ளார். இம்ரானின் மரணம் உண்மையிலேயே நம்மை வருத்தப்பட வைத்திருக்கிறது.
அக்குழந்தைக்கு யூனூஸ் என்று பெயர்
சென்னை கிரசெண்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் இளைஞர் யூனுஸ், ஊரப்பாக்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மோகன் மற்றும் அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ரா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கியிருந்தனர். இவர்களை இளைஞர் யூனுஸ் காப்பாற்றி பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் சேர்த்தார். அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் தன் குடும்பத்தை சரியான நேரத்தில் தன் நிலையை பொருட்படுத்தாமல் மீட்ட யூனூசுக்கு நன்றி சொல்லும் விதமாகக் குடும்பத்தினர் அக்குழந்தைக்கு யூனூஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பதினெட்டு நோயாளிகளின் மரணம்
சென்னை மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்த பதினெட்டு நோயாளிகள் பரிதாபமாக இறந்திருக்கிறார்கள் என்பதான ஒரு செய்திக்குறிப்பும் வெளியானது. மின்சார துண்டிப் பாலும், மழைவெள்ளம் உள்ளே புகுந்ததால் ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதாலும் செயற்கை சுவாசம் கிடைக்காமல் ஒவ்வொருவராக இறந்துள்ள கொடுமை மிக மிகத் துயரமானது. நமது பேரிடர் மீட்புப் பணியின் மிகப்பெரிய பின்னடைவாக இதைக் கருதலாம். மியாட் நிர்வாகத்தின் பொறுப்பின்மையும் காரணம்தான். எல்லாம் முடிந்த பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மூன்று லாரிகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாராக இருப்பதாக அறிக்கை விடுவது நமது இயலாமையின் விளைவாகவே அமைந்துவிட்டது.
எதிர்பாராத இயற்கை பேரிடரா?
சென்னை பெருமழை பருவநிலை மாற்றத்தின் விளைவா இல்லை இயற்கை பேரிடர் வெளிப்பாடா என்றொரு கேள்வி எழுப்பப்படுகிறது. சென்னையைப் பொறுத்தமட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் இடையில் (1969, 1976, 1985, 1996, 1998, 2005,) அதிகபட்சம் 450மிமீ மழை பெய்துள்ளது.
ஆனால் சென்னையில் 2015 நவம்பரில் 1049.3மிமீ மழை பெய்துள்ளது. இதைவிட அதிக அளவில் நூற்றாண்டின் துவக்கத்தில் 1918 நவம்பர் மாதத்தில் 1088.4மிமீ மழை பெய்துள்ளது. ஏன் இப்போது மட்டும் பெரும் வெள்ளச் சேதம் என்ற கேள்வி எழுகிறது.
பருவநிலை மாற்றத்தால் பெருமழை எனப்படும் கருத்தில் ஒன்று ஒரு மாதத்தில் பரவலாகப் பெய்ய வேண்டிய 1049.3 மிமீ மழை ஓரிரு நாட்களில் மொத்தமாகப் பெய்துவிட்டது என்பதாகும். மேலும் சராசரி மாத மழையளவு 440மிமீ ஆக இருக்கும் நிலையில் 1049.3மிமீ என்பது 238சதவிகிதம் அதிக மழையாகப் பெய்துள்ளது எதிர்பாராத இயற்கை பேரிடராகும்.
நீராதாரங்களின் தேய்மானம்
கடந்த 1906ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி சென்னையில் ஏரி, குளம் என 474 நீர் நிலைகள் இருந்துள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு அதுவே 43 ஆகக் குறைந்துள்ளது. தற்போது அதிலும் 96 சதவீத நீர்நிலைகளைக் காணவில்லை அல்லது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்கிறது.
தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாகச் சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின.
சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன. சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால் களும் இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன
பெருநகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால் களை அழித்துள்ளன. இந்த நகரமயமாக்கல் புதிய விமான நிலையம், பேருந்து நிலையம் ஐ.டி நிறுவன கட்டுமானங்கள், பொறியியல் கல்லூரிகள், ஆட்டோமோபைல், டெலிகாம் நிறுவனங்கள், குடியிருப்பு கட்டுமானங்கள் என்பதான பெருநகர உருவாக்கத்தின் விளைபொருளாகவே இத் துயரத்தின் நீட்சி அமைந்துள்ளது.