chennai flood 601

சென்னை உட்பட அய்ந்து மாவட்டங்களில் கடும் வெள்ளப் பாதிப்பு. ஒட்டுமொத்த சென்னை மாநகரமே மூழ்கி நின்ற அவலம். பல இடங்களில் பத்து அடி உயரத்திற்குத் தண்ணீர் நின்றதால் தரைத்தளம், முதல் தளம் மூழ்கிய பாதிப்பு.

மனிதர், விலங்கு, பணம், நகை, பொருட்கள், வாகனங்கள், குடிசை, ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்ற இழப்பு. தப்பி வீட்டில் நின்றவையும் நனைந்து, குலைந்து, பயன்படா நிலைக்குள்ளான நிலை.

வெள்ளம் சில நாள்கள் வடியாமலே நின்றதால், அடுக்குமாடியில் குடியேறியோர் அங்கேயே தவித்தனர். தரைத்தளம், குடிசையில் இருந்தோர் அடுத்த வீட்டிலும், பள்ளி, கல்லூரி என்று பலவிடங்களிலம் தஞ்சம் புகுந்தனர்.

ஆங்காங்கே தங்கியவர்களுக்கு குடிநீர், பால், உணவு, உடை என்று எதுவும் கிடைக்காது தவித்தனர். குழந்தைகளுக்குக் கூட பால் கிடைக்காத கொடுமை. கழிவறையில்லாததால் இயற்கை கழிவிறக்கங்கூட செய்யமுடியாத வேதனை!

போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு, மருத்துவ வசதியில்லை, மருந்து இல்லை, மின்சாரம் இல்லை. குளிரும், கொசுவும் கூட்டு சேர்ந்து நடுங்கச் செய்தன.

இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லவும், உதவி கேட்கவும், தொடர்பு கொண்டு உயிரோடு உள்ளோம் என்று உரியவர்க்குச் சொல்லவுங்கூட தொலைத்தொடர்பு இல்லை!

பலர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று உயிரையாவது காப்பாற்றுவோம் என்று சொந்த ஊருக்கு ஓட முயன்றனர். அதற்கும் வாகன வசதியில்லாது வாகன நிலையங்களில் வாடி வதங்கினர்.

சுருங்கச் சொன்னால் சென்னை மாநகரம் வெள்ளத்தால் வீழ்த்திக் குதறப்பட்டு, சின்னாபின்னமாக சிதறிக் கிடந்தது.

ஏன் இந்த அவலமும், பாதிப்பும்? எதிர்பாராத பலத்த மழை காரணமா?

உண்மை அறியாதவர்கள் அல்லது திசைதிருப்பும் பேர்வழிகள் சொல்லும் காரணம் இது. இத்தமிழகம் இதைவிட பல மடங்கு மழை வெள்ளங்களைச் சந்தித்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மழைக் காலங்களில் தெருக்களில் நடக்க முடியாது. மூன்று மாதம் தொடர்ந்து மழை பெய்யும். தெருக்களில் சேறு அல்லது உளை காணப்படும். உளை என்றால் கெட்டியான சேறு. காலை வைத்தால் முழங்கால், இடுப்புவரை பதிந்துவிடும். ஒரு காலை இழுத்தால் இன்னொருகால் மாட்டிக்கொள்ளும்.

தொடர்ந்து மழை பெய்வதால் வீட்டின் தரை, சுவர் எல்லாம் ஓதம் ஏறி நிற்கும். தரையில் வைக்கோல் போட்டு பாய்போட்டு படுப்பர். அப்போதுகூட வெள்ளப்பாதிப்பு அதிகம் இருக்காது. அப்படிப்பட்ட மழையா இப்போது பெய்துவிட்டது? இல்லையே! இரண்டு நாள் கடும் மழை. இரண்டு நாள் மழையை வரலாறு காணாத மழை. மூன்று மாத மழை மூனறு நாளில் பெய்தது என்பதெல்லாம் திசைதிருப்பும் தந்திரம்.

உண்மையான காரணங்கள் எவை?

நாம் உண்மை இதழில் அண்மையில் எழுதியதுபோல், நீர் மேலாண்மையை புறக்கணித்து, சாராயத்தை ஓடவிட்டு அரசின் வருவாய் முழுவதையும் இலவசங்களுக்குக் கொட்டிச் செலவிட்டதுதான்!

1. தூர்வாரலும் வடிகால் வசதியும்: இருக்கின்ற ஏரிகளைத் தூர் வாரினால் அதன் கொள்ளளவு அதிகமாகும். பெய்யும் மழை நீரையெல்லாம் அது வாங்கிக் கொள்ளும். தெருக்களுக்கு வெள்ளம் வராது. ஆனால், எந்த ஏரியும் கால்வாயும், ஆறும் தூர்வாரப்படவே இல்லை. எல்லா நீர்நிலைகளும் பாதிக்குமேல் தூர்ந்துபோய் கிடக்கின்றன. எனவே, மழை பெய்ததும் உடனே அவை நிரம்பி வழிந்து வீடுகளுக்கு வந்துவிடுகின்றன.

2. வடிகால் வசதி செய்யாமை: அதிகப்படியான நீரை உடனே வெளியேற்ற வடிகால் வசதி வேண்டும். ஆனால், வடிகால் ஆதாரங்களும் செடிகொடிகளாலும், சாக்கடைச் சேற்றாலும் தூர்ந்துபோய் கிடந்ததால் மழைநீர் வெளியேற வழியில்லாமல், வீட்டிற்குள் நுழைந்தது.

3. முகத்துவாரத் தூர்வாரல்: பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரை கடல் எளிதில் கொள்ளும். ஆனால், கடல் அலை ஓட்டத்தில் அடிக்கடி மணல் மேடாகி, நீர் கடலுக்குள் செல்லாது தேங்குவதால், கடலுக்குள் செல்ல வேண்டிய நீர் நகருக்குள் புகுந்து நாசப்படுத்துகிறது.

எனவே, முகத்துவாரத்தில் மணல் தேங்குவதை அடிக்கடி அப்புறப்படுத்தி, ஆற்றுப் பெருக்கு கடலுக்குள் கலக்க வகை செய்தால் வெள்ளப்பெருக்கை பெருமளவு குறைக்கலாம்.

முட்டுக்காடு பகுதியில் இப்பணியைச் செய்த அரசு, கூவம், அடையாற்றுப் பகுதிகளில், முகத்துவாரத்தில் செய்யாதது சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கு முதன்மைக் காரணம்.

4. ஆற்றுமணல் கொள்ளை: ஆற்று மணல் என்பது நீரை உறிஞ்சி கோடைக் காலத்திலும் கொடுக்கும் நீர்க்கலம். அதை அளவின்றி கொள்ளையடித்துச் சுரண்டியதனால், நீர் உறிஞ்சப்படாது வெள்ளமாக விரயமாகிறது.

5. ஆக்கிரமிப்பு: நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்கூடங்கள் கட்டுவதால், நீர் தேங்க (வாங்க) வழியின்றி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. நீர் தேங்க வேண்டிய இடங்களில் கட்டிடங்கள் வந்தால், நீர் நகருக்குள் வரத்தானே செய்யும். இதை மறைத்து மழை கனமாகக் கொட்டிவிட்டது என்று காரணம் சொல்வது ஏமாற்றும் முயற்சியே!

6. கழிவுகள், குப்பைகள்: ஆறுகள், ஏரிகளில் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டுவதால் நீர் நிற்கும் (நிறையும்) ஆதாரங்கள் குப்பை மேடாகி, நீர் தேங்க வழியின்றி நகருக்குள் நகர, வெள்ளம் வீட்டிற்குள் வந்து நம்மைத் தண்டிக்கிறது.

7.  செம்பரம்பாக்கம் ஏரியை உரிய காலத்தில் திறந்து விடாமல் காலதாமதமாகத் திறந்துவிட்டதுதான் பேரழிவுக்கு முக்கிய காரணம் என்ற கருத்தும், தகவலும் பரவலாக உறுதிப்படுத்தப்படுகிறது.

தீர்வுகள் எவை?: 

1. தூர் வாருதல்: உடனடியாக நீர்நிலைகளைத் தூர்வாரி, அதன் உண்மையான பரப்பளவையும், கொள்ளளவையும் நிலைநாட்ட வேண்டும். அதில் உள்ள செடி, கொடிகளை அறவே அகற்ற வேண்டும். ஆழப்படுத்தும்போது தோண்டியெடுக்கப்படும் மண்ணை ஏரி, குளம், ஆற்றுக்கரைகளை உயர்த்த, பலப்படுத்த பயன்படுத்த வேண்டும்.

2. முகத்துவாரத்தில் மணல் மேடகற்றல்: ஆறுகள் கலக்கும் கடற்பகுதியில் ஆற்றுநீர் விரைந்து சென்று கலக்கும் வகையில் அங்குள்ள மணல் மேடுகளை அடிக்கடி அகற்ற வேண்டும்.

3. ஆக்கிரமிப்பு அகற்றல்: நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி அதன் உண்மையான பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். நீர்நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது.

4. கழிவுகள், குப்பைகள் கொட்டுதல்: கழிவுகளைத் தனியேயும், குப்பைகளைத் தனியேயும் கொண்டு சேர்க்க வேண்டும். நீர்நிலைகளிலோ, மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலோ கொட்டாமல் நகரின் புறத்தே இடத்தைத் தேர்வு செய்து கொண்டு சேர்க்க வேண்டும். அதற்குக் குப்பை வாகனங்களை நிறைய வாங்க வேண்டும். இதற்குச் செலவிட அரசு தயங்கவே கூடாது.

5. மக்களின் கடமை: பொதுமக்களும், கழிவுகள், குப்பைகளை கண்டபடி வெளியேற்றாமல், உரிய முறையில் பொறுப்புடன் வெளியேற்ற வேண்டும். பொது நலம் கருதாது போனாலும், தன்னலம் கருதியாவது இதைப் பின்பற்ற வேண்டும். இந்தத் தண்டனைக்குப் பிறகாவது நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

எல்லா சீர்கேட்டிற்கும் இலவசங்களே காரணம்! தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட முடியாது அரசு தயங்கக் காரணம், இலவசத் திட்டங்களுக்கு அத்தொகை முழுவதும் செலவிடப்படுவதுதான். இலவசங்களை நிறுத்தினால் மதுக்கடைகளை மறுநாளே மூடலாம்.

தூர்வாருதல், துப்புரவு செய்தல், புதிய நீர்நிலைகள் அமைத்தல் போன்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய நிதி முழுவதும் இலவசத் திட்டங்களுக்கே செலவிடப் படுவதால், இவற்றைச் செய்ய நிதியின்றி போக, வெள்ளம் வீட்டிற்குள் வந்து, கொடுத்த இலவசத்தையும் கொண்டுபோய் விட்டது.

இலவசங்களால் எந்தப் பயனும் இல்லை: அரசின் வருவாயில் பெரும்பகுதியைக் கொட்டிக் கொடுக்கப்படும் இலவச விசிறி, கிரைண்டர், மிக்சி எதுவும் ஓராண்டு கூட உழைக்காமல் பரணைக்குச் செல்கின்றன. அரசு ஓர் ஆய்வு மேற்கொண்டால் இந்த உண்மையை உணரலாம்.

எனவே, பயனற்ற இந்த இலவசப் பொருட்களைக் கொடுத்து, மக்களுக்குப் பயனின்றிப் போவதைவிட, அத்தொகையை மேற்கண்ட மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிட்டால், மக்கள் பல வகையில் பயன்பெறுவர்.

ஒருங்கிணைப்பு வேண்டும்: இதுபோன்று இயற்கைப் பாதிப்புகள் ஏற்படும்போது, ஓர் ஒருங்கிணைந்த செயல்திட்டம் வேண்டும். ஆனால், இந்த அரசு தன்னிச்சையாகச் செயல்படுவதையே பெருமையாகக் கருதி தான்தோன்றித்தனமான செயல்பாடுகளைச் செய்வதால், முறையான செயல்பாடும் விளைவும், தீர்வும், நலமும் இல்லாமல் போகிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசியம் : முக்கிய செயல்பாடுகள் மேற்கொள்ளும் போது, அனைத்துக் கட்சித் தலைவர்கள், வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள் போன்றோரை அழைத்து, கருத்துப் பரிமாற்றம் செய்து, தீர்க்கமான தெளிவான, உறுதியான முடிவை எடுத்து, எல்லோரின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் எதையும் எளிதில் எதிர்கொள்ளலாம்; வெல்லலாம்!

மழை வெள்ளத்தில் மலர்ந்த மனிதநேயம்: மதம் கடந்து, ஜாதி கடந்து, மாநிலம் கடந்து மனிதர் என்ற பற்றால் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட பாங்கு மனிதம் மரிக்கவில்லை என்பதை வெளிக் காட்டிற்று.

குறிப்பாக இளைஞர்கள் தன்னார்வமாக, தங்கள் உயிரையும் துச்சமென எண்ணி வெள்ளப் பெருக்கில் பல மணிநேரம் நீந்தி பொருட்களை, மருந்துகளை, உணவுகளைக் கொடுத்து மக்களைக் காத்ததோடு மனிதத்தையும் காத்தது போற்றவேண்டிய தொண்டாகும்.

இந்தத் தொண்டு உள்ளங்கள் இல்லையென்றால் இந்தப் பேரிடரை நாம் எதிர்கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை!

குப்பைக் கழிவு அகற்றல்: நகரம் முழுவதும் தேங்கி நிற்கும் குப்பைகளை விரைந்து அகற்றி வேறு உரிய இடத்தில் கொட்ட வேண்டும். பிளிச்சிங் பவுடர் எல்லா பகுதிகளிலும் தெளிக்கப்படுதல் வேண்டும். தேங்கி நிற்கும் நீரை உடனே வெளியேற்ற வேண்டும்.

வெள்ளநீர் தேங்கிய வீடுகளில் நோய்த் தொற்று நீங்க பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்து பினாயில் தெளிக்க வேண்டும். பொருட்களையும் அவ்வாறே தூய்மை செய்ய வேண்டும்.

மருத்துவ வசதி: கழிவுகளால், நீர்த் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும். எனவே, உடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும், மரத்துவ முகாம்களையும் மேற்கொள்ள வேண்டும். தடுப்பு ஊசி போடவேண்டும்.

பாடம் பெறுவோம்: இந்த வெள்ளப் பாதிப்பை ஒரு பாடமாகக் கொண்டு, அரசு, மக்கள், அலுவலர்கள், தொண்டு அமைப்புகள் என்று பலதரப்பினரும் படிப்பினை பெற்று, தவற்றைத் திருத்தி சரி செய்து, உரிய வழியை, திட்டங்களைச் செயல்படுத்தி, இனி இதுபோன்ற சீர்கேடுகள் நிகழாமல் தடுக்க இப்போதிருந்தே முற்படுவதுதான் சரியான உரிய வழி! குறிப்பாக அரசுதான் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்!

Pin It