தமிழில் முதலில் கிடைத்த இலக்கண நூல் தொல்காப்பியம். முதல் இலக்கண நூல் மட்டுமல்ல, முழுமையாகக் கிடைத்துள்ள இலக்கண நூலும் ஆகும். மேலும் தமிழில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான இலக்கண நூலும் ஆகும்.
இறையனார் களவியல் உரை என்ற நூல் தொல்காப்பியத்தின் முதன்மையையும் தொன்மையையும் மறுக்கின்றது. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக அகத்தியம் இருந்ததாகக் குறிப்பிடுகின்றது. அகத்தியரிடம் கற்ற தமிழின் வெளிப்பாடே தொல்காப்பியரின் இலக்கண வெளிப்பாடாகும். கி.பி.1 ம் நூற்றாண்டில் உருவான தொல்காப்பியம் குறித்து கி.பி.7 ம் நூற்றாண்டில் உருவான இறையனார் களவியல் உரை கூறும் ஜாதகம் இது.
அகத்தியரிடம் தமிழ் பயின்ற பன்னிரு மாணவர்களில் தொல்காப்பியரே தலைமை சீடராகத் திகழ்ந்தாரென புறப்பொருள் வெண்பாமாலையும் பன்னிரு படலமும் கூறுகின்றது. (சு.ஆனந்தன். ப-14)
முச்சங்கம் அமைந்து தமிழ் வளர்ந்ததாக இறையனார் களவியல் உரை கதை கூறுகிறது.
முதல் சங்கம் தென்மதுரையில் 4440 ஆண்டுகள் இயங்கியது. சிவபெருமான், முருகன், அகத்தியர் உட்பட 4449 புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அகத்தியரின் அகத்தியம் என்ற இலக்கண நூலே நடைமுறையில் இருந்துள்ளது.
இடைச்சங்கம் கபாடபுரத்தில் 3700 ஆண்டுகள் இயங்கியது. அகத்தியர் இச்சங்கத்திலும் புலவராகத் தொடர்கிறார். அகத்தியர், தொல்காப்பியர் உட்பட 3700 புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக நடைமுறையில் இருந்துள்ளன.
கடைச்சங்கம் மதுரையில் 1850 ஆண்டுகள் இயங்கியது. அகத்தியரும் தொல்காப்பியரும் இடம்பெறாத 449 புலவர்கள் தமிழ் வளர்த்தனர். தொல்காப்பியம் இலக்கண நூலாக நடைமுறையிலிருந்துள்ளது.
‘திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்
குன்றமெறிந்த குமரவேள்’ (கா.சிவத்தம்பி. ப-74)
தலைச்சங்கத்தில் இறைவர்களின் சகப்புலவராகப் புகழ் பெற்ற அகத்தியர் குறித்து எத்தனை இலக்கியங்கள் வெளிவந்திருக்க வேண்டும். அகத்தியர் இலக்கணம் படைப்பதற்கு மூலப்பொருளாக எத்தனை இலக்கியங்கள் உருப்பெற்றிருக்க வேண்டும். அகத்தியமும் கிடைக்கவில்லை, அகத்தியத்திற்கு வழியமைத்த இலக்கியங்களும் கிடைக்கவில்லை. 4400 ஆண்டுகள் தலைச்சங்கத்தில் தமிழ்த் தொண்டாற்றிய அகத்தியர் இடைச்சங்கத்திலும் தொடர்ந்து தொண்டாற்றுவது பெரும் புகழ் அல்லவா!
இடைச்சங்கத்தில் அகத்தியரின் தலைமைச் சீடராகத் தொல்காப்பியர் புகழப்படுகின்றார் எனில், தன்னைச் சீடராக ஏற்றுக்கொண்ட அகத்தியரைத் தொல்காப்பியர் எத்தனை புகழ்ச்சிக்கு ஆளாக்கியிருக்க வேண்டும். அகத்தியத்தை மிஞ்சிய புதிய இலக்கண நூலைப் படைத்த தலைக்கனத்தினால் புகழாது விட்டிருப்பாரோ. அப்படியெனில் அகத்தியம் என்ற இலக்கண நூல் எனது புதிய ஆக்கத்திற்கு ஒரு பொருட்டே அல்ல என்றளவாவது வெளிப்பட்டிருக்க வேண்டுமல்லவா. அல்லது அகத்தியம் என்ற நூலை வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யும் நோக்கில் தொல்காப்பியர் குறிப்பிடாமல் இலக்கணம் படைத்தாரா?
தமிழ் மொழியை அறிவியல் மொழியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலக்கண நூல் படைத்த தொல்காப்பியர்.
தமிழ் மொழியின் தனித்துவமான இலக்கண விதிகளை பெரும் நூலாக கட்டமைத்த தொல்காப்பியர். தனது மீப்பெரும் புகழ் மிக்க இச்செயல்பாட்டிற்கு வரலாற்றுக் காப்புரிமை பெறுவதற்கான நியாயம் இருந்திருந்தும், தன்னை ஒரு பெயராகவும் பொருட்டாகவும் ஓரிடத்திலும் முன்னிருத்திக்கொள்ளவே இல்லை. மாறாக, என்மனார் புலவர், மொழிமனார் புலவர், உணர்ந்திசினோரே, அறிந்திசினோரே, உள என மொழிப, தம் மரபினவே, வழக்கியல் மரபே, இயல்பு உணர்ந்தோரே, சொல்லவும் படுமே, நெறிப்படுத்தினரே என்பதாக தன்னை முன்னிலைப்படுத்தாமல் விவரிக்கின்றார்.
இத்தகைய பண்புமிக்கப் பெருந்தகை அகத்தியரின் தலைமை மாணவர் என்பது உண்மையெனில், பன்னிரு சக மாணவர்களில் ஒருவர் என்பது உண்மையெனில், தன் ஆசிரியராகிய அகத்தியரையும் சக மாணவர்களையும் அவர்களோடு பயின்ற சூழலையும் அல்லது அகத்தியர் பயிற்றுவித்த சூழலையும் குறிப்பிடாமல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் இலக்கண நூலைப் படைத்திருக்கச் சாத்தியம் இல்லை.
1. 6.கூட்டி எழூதல் என்மனார் புலவர்
2. 33. நரம்பின் மறைய என்மனார் புலவர்
3. 53. எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்
4. 130. இன்மை வேண்டும் என்மனார் புலவர்
5. 146 வினையோ ரனைய என்மனார் புலவர்
6. 158 உறழாகுநவும் என்மனார் புலவர்
7. 222 அவ்வியல் திரியாது என்மனார் புலவர்
8. 283 மெய் அவன் ஒழிய என்மனார் புலவர்
9. 331 ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்
10. 333 அன்ன இயல என்மனார் புலவர்
11. 353 தோற்றம் இல்லை என்மனார் புலவர்
12. 369 புகரின்று என்மனார் புலமையோரே
13. 474 முற்கிளந்தன்ன என்மனார் புலவர்
14. 478 முதனிலை இயற்கை என்மனார் புலவர்
15. 483 நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்
16. 521 இயற்பெயர் வழிய என்மனார் புலவர்
17. 558 அதன் பால என்மனார் புலவர்
18. 564 ஆறன் பால என்மனார் புலவர்
19. 569 வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர்
20. 570 நோக்கோ நனைய என்மனார் புலவர்
21. 609 தாம் விளி கொள்ளை என்மனார் புலவர்
22. 633 முற்கிளந்தன்ன என்மனார் புலவர்
23. 641 சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
24. 649 அன்ன இயல என்மனார் புலவர்
25. 689 அவ்வியல் திரியாது என்மனார் புலவர்
26. 709 சொல் ஓரனைய என்மனார் புலவர்
27. 716 வினை ஓரனைய என்மனார் புலவர்
28. 723 அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்
29. 726 விரைந்த பொருள என்மனார் புலவர்
30. 760 தகுநிலை யுடைய என்மனார் புலவர்
31. 773 எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர்
32. 841 இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்
33. 879 பாங்குற உணர்தல் என்மனார் புலவர்
34. 886 நாட்டல் வலிய என்மனார் புலவர்
35. 931 தன்னிடத்து இயலும் என்மனார் புலவர்
36. 952 கூதிர் யாமம் என்மனார் புலவர்
37. 957 உரியதாகும் என்மனார் புலவர்
38. 969 கடி வரை இல புறத்து என்மனார் புலவர்
39. 999 உரியதாகும் என்மனார் புலவர்
40. 1021 தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்
41. 1029 ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்
42. 1043 ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்
43. 1047 இன்னவை நிகழும் என்மனார் புலவர்
44. 1053 கிளவோள் மேன என்மனார் புலவர்
45. 1095 ஆவயின் நிகழும் என்மனார் புலவர்
46. 1096 தோழிக்குரிய என்மனார் புலவர்
47. 1113 பின்னிலை தோன்றும் என்மனார் புலவர்
48. 1118 கலங்கலும் உரியன் என்மனார் புலவர்
49. 1125 சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர்
50. 1141 அசை திரிந்து இயலா என்மனார் புலவர்
51. 1153 அவ் எழுவகைய என்மனார் புலவர்
52. 1170 நிலத்திரிபு இன்று அஃது என்மனார் புலவர்
53. 1192 தோன்றா மரபின என்மனார் புலவர்
54. 1220 என்றிவை இன்மை என்மனார் புலவர்
55. 1260 மேற்கிளந்தன்ன என்மனார் புலவர்
57. 1336 யாப்பின் வழியது என்மனார் புலவர்
58. 1374 செந்தூக்கு இயல என்மனார் புலவர்
59. 1386 அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்
60. 1456 சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்
61. 1604 துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்
62. 413 நடை ஆ இயல என்மனார் புலவர்
இவ்வாறாக 62 இடங்களில் தொல்காப்பியரால் குறிப்பிடப்படும் என்மனார் புலவர் அகத்தியரைக் குறிப்பதாகவோ சக மாணவர்களைக் குறிப்பதாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை.
- 556 என்ன கிளவியும் அதன்பால என்மனார்
- 560 அருட்பொருட் கிளவியும் அதன்பால என்மனார்
- 562 அன்ன பிறவும் அதன்பால என்மனார்
- 566 அன்ன பிறவும் அதன்பால என்மனார்
இவ்வாறாக 4 இடங்களில் என்மனார் என்று குறிப்பிடப்படுவது அகத்தியரைக் குறிப்பதாகவோ சக மாணவர்களைக் குறிப்பதாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை.
- 904 பலர்சொல் நடைத்தென மொழிமனார் புலவர்
- 747 அப்பால் இரண்டென மொழிமனார் புலவர்
இவ்வாறாக 2 இடங்களில் மொழிமனார் புலவர் என்று குறிப்பிடப்படுவது அகத்தியரைக் குறிப்பதாகவோ சக மாணவர்களைக் குறிப்பதாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை.
- 601 உளவென மொழிப உணர்ந்திசினோரே
- 1358 ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே
- 643 ஆயிரண்டென்ப அறிந்திசினோரே
- 1469 ஆங்ஙனம் அறிப அறிந்திசினோரே
- நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே
- திறம்படத் தெரியும் காட்சியான
- 270 தக்க வழி அறிதல் வழக்கத் தான
- 295 செவ்விதென்ப சிறந்திசினோரே
- 418 அக்கிளை மொழியும் உள என மொழிப
- 494 மயங்கல் கூடா தம் மரபினவே
- 505 போக்கின்று என்ப வழக்கிலுள்ளே
- 530 எண்ணுங்காலும் அது அதன் மரபே
- 602 கிளந்தவற்றியலான் உணர்ந்தனர் கொளலே
- 624 வழுக்கின்று என்மனார் வயங்கியோரே
- 731 தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே
- 780 திரிந்து வேறு படினும் தெரிந்தனர் கொளலே
- 950 இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே
- 951 சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
- 958 புலன் நன்குணர்ந்த புலமையோரே
- 993 கொள்ளும் என்ப குறியறிந்தோரே
- 1159 உண்டன போலக் கூறலும் மரபே
- 1168 வருவகை தானே வழக்குஎன மொழிப
- 1179 உள்ளத்தூடல் உண்டுஎன மொழிப
- 1242 மரீஇய மரபின் வழக்கொடு படுமே
- 1259 வல்லிதிற் கூறி வழுத்துரைத் தனரே
- 1261 நேரும் நிரையும் என்றிசின் பெயரே
- 1282 நிலைக்குரித்தன்றே தெரியு மோர்க்கே
- 1355 பொழிப்பென மொழிதல் புலவர் ஆறே
- 1356 இருசீர் இடை இடின் ஒரூஉ என மொழிப
- 1370 எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே
- 1377 பொதுவாய் நிற்றற்கு உரித்தென மொழிப
- 1411 நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே
- 1442 மறையென மொழிதல் மறையோர் ஆறே
- 1497 புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே
- 1499 திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே
- 1519 ஆவும் எருமையும் அவை சொல்லப்படுமே
- 1526 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
- 1568 கடியலாகா கடன் அறிந்தோர்க்கே
- 1586 புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்
- 1590 மரபு வழிப்பட்ட சொல்லினான
- 1593 முதலும் வழியும் என நுதலிய நெறியின
- 1597 அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே
- 1600 சூத்திரத்து இயல்பு எனயாத்தனர் புலவர்
- 1602 மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்ததுவே
- 1610 நுணித்தகு புலவர் கூறிய நூலே
இவ்வாறாக 45 இடங்களிலும் தொல்காப்பியர் தன்னை முன்னிருத்தாமல் குறிப்பிடப்படுபவை அனைத்தும் அகத்தியரைக் குறிப்பதாகவோ சக மாணவர்களைக் குறிப்பதாகவோ கருதுவதற்கு எந்தச் சான்றுகளும் இல்லவே இல்லை.
4400 ஆண்டுகள் இயங்கிய தலைச்சங்கத்தில் இலக்கண நூலைப் படைக்கின்ற அறிவும் அனுபவமும் பெற்றிருந்த அகத்தியர், வாழ்வியல் அனுபவங்களைச் செறிவாகப் பெற்ற வயதுயர்ந்த முதுமையாளராகத் திகழ்ந்திருப்பார். மேலும், இவர் 3700 ஆண்டுகள் இயங்கிய இடைச்சங்க காலத்துப் புலவராகவும் தொடர்ந்தாரெனில் அகத்தியரின் வயது எத்தனை ஆயிரம்? கேள்வியும் விடையும் அறிவியல் தத்துவ வழியிலான வரலாற்று அணுகுமுறைக்கு பொருந்தாத வெறும் கற்பனை என்ற முடிவையே வழங்குகிறது.
பாண்டியரின் தலைச்சங்கத்தில் சிவபெருமான், முருகன் ஆகிய கடவுளர்களே அகத்தியருடன் வாழ்ந்த புலவர்களாகக் குறிப்பிடப்படுவது தலைச்சங்கமே வெறும் கற்பனை செய்தி என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
12000 நூற்பாக்களை உடைய அகத்தியம் என்ற இலக்கண நூலும் கிடைக்கவில்லை. அகத்தியம் என்ற இலக்கண நூல் தோன்றுவதற்கு அடிப்படையான இலக்கியங்கள் இருந்ததற்கான சான்றுகளும் இல்லை. மேலும், அகத்தியம் என்ற இலக்கண நூலில் உட்செறிவுக் கருத்தியலாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடம் போன்றவை இடம்பெற்றுள்ளன என்பதாக குறிப்பிடப்படுகின்றது. (சு.ஆனந்தன். ப-14)
அகத்தியத்தின் இக்கருத்தியல்களைத் தொல்காப்பிய இலக்கண நூலின் அறிவியல் தத்துவக் கருத்தியல்களோடு ஒப்பிட்டால் காலத்தால் பிந்தைய பிற்சேர்க்கையே அகத்தியம் என்பது நிரூபனமாகின்றது.
‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று பொருள்முதல்வாதமாகிய உலகாயத அறிவியல் தத்துவத்தை தொல்காப்பியம் முதன்மைப்படுத்துகின்றது.
‘முதலெனப் படுவது நிலமும் பொழுதும்’ என்ற நூற்பாவால் பரம்பொருள் என்று எந்தக் கடவுளையும் முதற்பொருளாக்காமல் நிலமும் பொழுதுமாகிய பருப்பொருளின் வெளியையே முதலென குறிப்பிடுகின்றது தொல்காப்பியம்.
இதனால் அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தையே தொல்காப்பியம் முதன்மைப்படுத்துகின்றது.
‘மாயோன் மேய காடுறை உலகமும்..’ என்ற நூற்பாவால் எந்தக் கடவுளும் முழுமுதற் கடவுளாகிய பரம்பொருளாக இல்லை. எல்லாக் கடவுளும் மக்களின் நிலத்திற்கும் வாழ்வியல் சூழலுக்கும் ஏற்ற வெவ்வேறு கருப்பொருள்களாக இருக்கின்றன என்று கடவுள் குறித்த அறிவியல் தத்துவத்தின் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை முதன்மைப்படுத்துகின்றது.
அகத்தியத்தின் கருத்தியலாகிய பார்ப்பனவியல், சோதிடவியல் போன்ற அறிவெதிர் தத்துவக் கண்ணோட்டங்கள் குறித்து தொல்காப்பியத்தில் எந்த ஏற்புமுறையும் மறுப்பு முறையும் இடம்பெறவில்லை. ஆதலால், அகத்தியர் என்ற கற்பனைக் குழந்தையைத் தொல்காப்பியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது நிரூபனம்.
இறையனார் களவியல் உரையின் காலம் எது?
கி.பி.7ம் 8ம் நூற்றாண்டுகளில் வெளிவந்த நூலே இறையனார் களவியல் உரை என்று இராமசுந்தரம் நிறுவியுள்ளார்.
(கா.சிவத்தம்பி. ப-73)
102 எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே
சாதிய வர்ணப் பாகுபாட்டைத் தொல்காப்பியத்திற்குள் புகுத்தும் முயற்சியாக இடைசெருகப்பட்ட நூற்பாக்களுள் அடங்கும் ஒரு நூற்பாவாக சந்தேகிக்க இடம் தருவது அந்தணர் மறைத்தே என்ற சொல் பயன்பாடாகும்.
இந்நூற்பாவிற்கு கீழ்வருமாறு விளக்கம் தருகின்றார் அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்.
‘எல்லா எழுத்துக்களும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசைக் காற்றினால் வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது, உள்ளே உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக் காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும்; அதனை இங்குக் கூறாது வாயிலிருந்து வெளிவரும் ஓசைக்குரிய மாத்திரையை மட்டும் கூறியுள்ளேன்.’ (ச.வே.சு. ப-59)
பிறப்பியல் என்ற தலைப்பிற்குள் எழுப்பப்படும் ஒலிகளாகிய எல்லா எழுத்திசைகளும் நவீன மொழியியலாளர்களே வியக்கும் அளவிற்கு அறிவியல்பூர்வமாக முழுதளாவிய நிலையில் தொல்காப்பியர் விளக்கியிருக்கிறார். அறிவியலுக்கு முற்றிலும் பொருந்தாத அந்தணர் மறையில் உள்ளுறுப்பின் ஓசைக்கு கூறப்படும் மாத்திரை அளவினை இங்கு கூறவில்லை என்று ஏன் குறிப்பிடுகின்றார். கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் பிரதிநிதியாகிய தொல்காப்பியர் அந்தணராக இருந்திருக்க இடம் இல்லை. பிற்காலத்து அந்தணர் மறை தொல்காப்பியர் காலத்தில் இருக்க வாய்ப்பும் இல்லை. (புதியவன். தொல்காப்பியர் யார்?) அந்தணர் மறை நூலின் மாத்திரை அளவு குறித்து தொல்காப்பியத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமும் தொல்காப்பியருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பிற்காலத்து அந்தணர்களுக்குத்தான் அவசியம் ஏற்பட்டிருக்கலாம். உள்ளுறுப்புகளில் காற்று பட்டு வெளிப்படும் அனைத்து ஓசைகளையும் தொல்காப்பியர் குறிப்பிட்டதாலும், அந்தணர் இலக்கண நூல் குறிப்பிடும் உள்ளுறுப்பின் ஓசை எதுவென்று குறிப்பிடப்படாததனாலும் அவ்வோசை வயிறு கலப்பதால் ஏற்படும் ஓசையின் மாத்திரை அளவாக இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.
சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரை தொல்காப்பியரின் சகமாணவராகவோ அல்லது நண்பராகவோ கருத இடமில்லை.
“நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்தெரிந்து” (தொல்.சிறப்புப் பாயிரம்)
சிறப்புப் பாயிரம் பாடிய பனம்பாரனாரும் இறையனார் அகப்பொருள் தோன்றிய காலத்தைச் சேர்ந்தவரே. தலைச்சங்க பாண்டியர் அவையை குறிப்பிடுவதாலும், தொல்காப்பிய இடைச்செருகல்களாக உறுதிசெய்யப்பட்ட நான்மறை குறித்து பதிவிடுவதாலும் தொல்காப்பியரின் காலத்தவர் அல்ல என்பதை உறுதி செய்துகொள்ள முடிகின்றது. மேலும் தொல்காப்பியரின் எழுத்துக்களின் அறிவு நிலை முதல் ஆழ்மன பிரதிபலிப்புவரை அகத்தியர் மற்றும் பனம்பாரனார் குறித்து எந்தச் செய்திகளும் வெளிப்படவில்லை. எனவே, அறிவியல் மொழியாகத் தமிழைப் பெற்றுள்ள தமிழ்ச் சமூகச் சான்றோர்களே தொல்காப்பியரின் ஆசிரியர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். மாறாக பனம்பாரனாரின் தோழமைக்கோ அகத்தியரின் அரவணைப்பிற்கோ யாதொரு அவசியமும் இருந்திருக்க சாத்தியமில்லை.
துணை செய்தவை
- தமிழில் இலக்கிய வரலாறு – கார்த்திகேசு சிவத்தம்பி. 2000(1988). சென்னை.
- தொல்காப்பியம் தெளிவுரை. அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்.2019(2000).மணிவாசகர் பதிப்பகம். சென்னை.
- தமிழ் இலக்கிய வரலாறு – சு.ஆனந்தன். கண்மணி பதிப்பகம்.
- இலக்கிய அறிவியல்
'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 - 2991
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
- தொல்காப்பியர் யார்?
'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்! | ISSN 1481 – 2991
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5539:2019-12-07-14-29-43&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
- முனைவர் கே.சிவக்குமார், SSM கலை அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்