கட்ந்த வார கீற்று இதழில் கட்டுரைகள் பகுதியில் "இடதுசாரி இயக்கங்கள் தேங்கி கிடப்பது ஏன்?" என்ற தலைப்பில் "தமிழ்த் தேச இறையாண்மை" என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.
எழுதுகின்றவர்களின் பெயரில்தான் கட்டுரை வெளியிட வேண்டும். தமிழ் தேச இறையாண்மை என்பது ஒரு அமைப்பின் பெயரா? ஒரு இதழின் பெயரா? ஒரு நபரின் பெயரா? என்று கூட இல்லாமல் தம்மை மறைத்துக் கொண்டுள்ளனர்.
அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற ஆய்வுரைகள் அனைத்தும் அது இன்னொரு அமைப்பின் அரசியல் கொள்கை ஆவணமாக நிறைவேற்றப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் -இலெனினிஸ்ட்) தமிழ்நாடு அமைப்புக் குழுவின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றம் வந்த பொழுது தமது வரலாற்றை மீளாய்வு செய்து தொகுத்து முன்வைத்து தமிழ்நாடு மார்க்சிய இலெனினிய கட்சியாக 1992 ஆம் ஆண்டு உருவாகும்போது முன்வைத்த நிலைப்பாட்டு ஆவணங்களாகும்.
இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளவர்கள், ஒரு துளி கூட நேர்மை இல்லாமல் செயல்பாட்டில் உள்ள ஒரு அமைப்பின் நிலைபாடுகளை தமது நிலைப்பாடுகள் போல் கீற்று இதழில் கட்டுரையாக பதிவு செய்திருப்பது ஒரு மோசடியான வேலையாகும்.
ஒரு கட்சி செயல்பாட்டில் தற்பொழுது இருந்து வருகிறது அவர்கள் தமது செயல்பாடுகளை "புரட்சிகர இளைஞர் முன்னணி" என்ற வெகுமக்கள் அமைப்பின் பெயரில் தமிழ்நாடு முழுவதும் கட்டமைத்து செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சியின் பொதுச் செயலாளராக தோழர் கார்முகில் செயல்பட்டு வருகிறார்.
தோழர் கார்முகில் அவர்கள் தான் 1980 களில் இந்திய பொதுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் -இலெனிஸ்ட்) மாநில அமைப்பு குழுவிற்குள் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக பல்வேறு அரசியல் கொள்கை நிலைப்பாடுகளை முன்வைத்து இ.பொ.க (மா.இலெ) தமிழ்நாடு அமைப்புக் குழு என்ற அமைப்பை நிறுவி அந்த அமைப்பின் கீழ் மக்கள் மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலாச்சார கழகம் போன்ற அமைப்புகளை வைத்து 1986 இல் கோவையில் பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயக மாநாட்டை நடத்தினார்கள்.
பிறகு 1988 ஆம் ஆண்டு பாசிச எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு அமைப்பை முறையாக தொடங்கி ஈரோட்டில் ஐந்து முழக்கங்களை வைத்து இரண்டு நாள் மாநாடு -பேரணி இவைகளை நடத்தினார்கள்.
அதில் குறிப்பான முழக்கம்
1) பஞ்சாப் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்
2) இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்
3) ஊழல் இராஜீவ் மீது பகிரங்க விசாரணை நடத்த வேண்டும்
4) அனைத்து கருப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்
என்பது போன்ற முழக்கங்களை வைத்து ஜார்ஜ் பெர்னாண்டஸ், நீதிபதி கிருஷ்ண ஐயர், பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன் போன்ற ஆளுமைகளை இணைத்து அந்த மாநாடு நடத்தப்பட்டதை நாடறியும். அதற்கான மலரும் வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக "மன ஓசை" என்ற இலக்கிய இதழையும், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக "கேடயம்" என்ற அரசியல் இதழையும் இந்த அமைப்பு நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். மன ஓசை இதழில் தமிழ்நாட்டின் ஆகப்பெரும் இலக்கிய ஆளுமைகள் தொடர்ந்து எழுதியும் விவாதித்து வந்தது பல்வேறு தளங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு இந்திய சமூக நிலைமைகளில் உள்ள பார்ப்பனியம் குறித்தான பார்வையில் இந்திய பொதுவுடமை இயக்கத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து 1992 ஆம் ஆண்டு முன்வைத்து முறையான உட்கட்சி விவாதங்கள் நடத்தியது.
1992ல் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி இந்திய பொதுவுடமை இயக்க வரலாற்றில் உள்ள பிரச்சனைகளை தொகுத்துக் கூறி தேசிய இனங்களுக்கு என்ற தனிக்கட்சி உருவாக்க வேண்டும் என்ற முடிவெடுத்தது.
அந்த முடிவின் அடிப்படையிலேயே அதுவரை இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட்- இலெனினிஸ்ட் ம தமிழ்நாடு அமைப்புக்குழு -CPI (ML) TNOC என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை மாற்றி தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சி என்று பெயர் மாற்றமும் கொடி மாற்றமும் செய்து கொண்டது.
கட்சியின் மாநாட்டில் பொதுச் செயலாளராக தோழர் .கார்முகில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கட்சி மாநாட்டின் பிரதிநிதியாக நானும் கலந்து கொண்டு இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு மார்க்சிய இலெனியக் கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள் அனைத்தும் "புரட்சிக்கனல்" என்னும் தோழர் கார்முகில் அவர்களை ஆசிரியராகக் கொண்ட இதழின் மூலம் முறையாக வெளியிடப்பட்டும் உள்ளது.
தோழர் .கார்முகில் அவர்களால் எழுதப்பட்டு முன்வைக்கப்பட்டு தமிழ்நாடு மார்க்சிய இலெனினியக் கட்சியின் கொள்கை ஆவணமாக இன்றளவும் உள்ள ஆவணத்தில் உள்ள செய்திகளைத் தான் 'தமிழ்த் தேச இறையாண்மை' என்ற பெயரில் கீற்று தளத்திற்கு அனுப்பி உள்ளனர்.
ஒரு கட்சியின் கொள்கை நிலைப்பாட்டு ஆவணத்தில் உள்ள அடிப்படை செய்திகளை வேறொரு பெயரில் ஏதோ அவர்கள் கண்டறிந்ததைப் போல் வெளியிட்டிருப்பது மிகத் தவறானதாகும்.
"கீற்று "போன்று கொள்கை சார்ந்த இணைய இதழையும், இது போன்ற இதழை வாசித்து வரும் தமிழ் வாசகர்களையும் ஏமாற்றும் மோசடி செய்யும் ஒரு இழிவான செயலாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேற்கண்ட செய்திகளை இதே கீற்று இதழில் நான் இ.பொ .இயக்க வரலாறு என்பதாகத் தொகுத்து கீற்று இதழ் வெளியிட்டுள்ளதை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
கட்டுரையில் கண்டுள்ள ஆவணங்கள் மற்றும் அனைத்து நிலைப்பாட்டு ஆவணங்களும் கீழ்கண்ட மின்னிதழ் பதிவில் உள்ளது.
"கேடயம்- மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மின்னிதழ்" https://kedayam.wordpress.com
- கி.வே.பொன்னையன்