பாணர் மரபிலிருந்து விடுபட்டுப் பாடல் என்பது பிரக்ஞை பூர்வமான ஒரு புலமைத் தொழிற் பாடாகக் கருதப்படும் நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியுள்ளது. - கார்த்திகேசு சிவத்தம்பி

பண்ணத்தி இது தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்று. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழு வடிவங்களையும் யாப்பின் வழியது என்றுரைத்த தொல்காப்பியர் தொடர்ந்து நான்கு நூற்பாக்களில் பண்ணத்தி எனும் வடிவத்தை விளக்குகின்றார்.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின் இயல பண்ணத் திய்யே”                                           (செய்யுளியல் -173)

“அதுவே தானும் பிசியொடு மானும்.”                                  (செய்யுளியல் -174)

“அடிநிமிர் கிளவி யீரா றாகும்.                 

அடியிகந்து வரினும் கடிவரை யின்றே”                              (செய்யுளியல் -175)

175 ஆம் நூற்பாவின் முதலடியினை ஒரு நூற்பாவாகவும் இரண்டாமடியினை மற்றொரு நூற்பாவாகவும் கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்.

பொதுநிலையில் செய்யுட்களைப் பற்றிச் சொல்லி வரும் தொல்காப்பியர், செய்யுளியலில் அடிவரையறை யில்லாத செய்யுட்கள் இன்னவை என்று கூறுமிடத்து, 

“பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,

அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,

வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர்”.                                  (செய்யுளியல் -75)

“எழுநிலத்து எழுந்த செய்யுள் தெரியின

அடிவரை இல்லன ஆறென மொழிப”                                   (செய்யுளியல் -157)

என்கிறார்;. “அகமும் புறமுமாகிய எழுநிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின் அடிவரை யின்றி வரும் இலக்கணத்தன ஆறாம் என்றவாறு” என்பது பேராசிரியர் உரை.

தொடர்ந்து அடிவரையறை யுள்ள செய்யுட்களின் இலக்கணத்தை விரித்துக் கூறிவந்த தொல்காப்பியர், பின்னர் அடிவரையறை இல்லாத இலக்கிய வகைகள் இன்னவை என்று பட்டியலிடும் பொழுது ஆறென மொழிப என்கிறார்.

         “அவைதாம்

         நூலி னான, உரையி னான,

         நொடியொடு புணர்ந்த பிசியி னான,

         ஏது நுதலிய முதுமொழி யான,

         மறைமொழி கிளந்த மந்திரத் தான,

         கூற்றிடை வைத்த குறிப்பி னான”                                           (செய்யுளியல் -158)

இந் நூற்பாவில் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி என்னும் ஆறு இலக்கிய வகைகள் சொல்லப்படுகின்றன. நூல் என்பது இலக்கணம்;, அது புலவரால் படைக்கப்படுவது. உரை என்பது உரைநடை. பிசி என்பது விடுகதை அல்லது புதிர். முதுமொழி என்பது பழமொழி. மந்திரம் என்பது தமிழிலே வழங்கிய மந்திரம் நூல். குறிப்பு மொழி என்பது குறிப்பால் பொருளை உணர்த்தும் வகை.

இப்படி முன்னோர்; வகுத்த இலக்கிய வகைகளை விரித்துக் கூறிய பிறகு தொல்காப்பியர் புதிதாகப் பண்ணத்தி என்ற இலக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். அடிவரையறை யில்லாத இலக்கிய வகைகளை விளக்கிக் கூறிவிட்டுப் பண்ணத்தியைக் கூறுவதனால் இதுவும் அடிவரையறை யில்லாதது என்று கொள்ள வேண்டும். அன்றியும், வழக்கு மொழியாக நிலவும் இலக்கிய வகைகளின் பின் சொல்வதனால், இப் பண்ணத்தியையும் ஒரு வகை வாய்மொழி இலக்கியமாகக் கருத வாய்ப்புள்ளது.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின் இயல பண்ணத் திய்யே”                                           (செய்யுளியல் -173)

“பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி

மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப, இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்ப வென்பது. அவையாவன: நாடகச் செய்யளாகிய பாட்டு மடையும் வஞ்சிப் பாட்டும், மோதிரப் பாட்டும் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதே போலப் பாட்டென் னாராயினர், நோக்கு முதலாயின உறுப்பு இன்மையின் என்பது. அவை வல்லார் வாய்க் கேட்டுணர்க”

என்று பண்ணத்திக்கு உரை வரைந்துள்ளார் பேராசிரியர். மெய் வழக்கல்லாத புற வழக்கினைப் பண்ணத்தி என்ப என்று தமிழ்நாட்டில் இருந்த ஒரு வழக்கைப் பேராசிரியர் குறிக்கிறார். பேராசிரியர் குறிப்பிடும் மெய்வழக்கு, புறவழக்கு முதலான சொற்களின் பொருள் இன்னது என்று திட்ட வட்டமாகத் தெரியவில்லை எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்கள் என்ற கூடுதல் விளக்கம், எழுதும் செய்யுளாக்க முறைமைக்கு முந்தைய வாய்மொழி மரபினைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

              பிறகு பண்ணத்திக்கு உதாரணம் கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச் சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு;, இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில் வாய் மொழியாக வழங்கியவை போலும். நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை பாட்டும் உரையும் கலந்து அமைவன என்பதால் பாட்டு என்று சொல்லாமல் பாட்டின் இயல என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளதாக அவர் கருதியிருக்க வேண்டும். க.வெள்ளை வாரணார் தம் தொல்காப்பியச் செய்யுளியல் உரைவளப்பதிப்பில் பண்ணத்தி என்பது, எழுத்து வடிவம் பெறாது நாட்டில் பொதுமக்களிடையே வழங்கும் நாடகச் செய்யுள் வகையெனப் பேராசிரியர் தரும் விளக்கம் கூர்ந்துணரத் தகுவதாகும் என்பார்.

              புலவர்களின் பாட்டிலே வரும் பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்;. ஆனால் அதில் வருவது போலப் புலமைத் தொழிற்பாடு இருக்காது. அதனால், பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும் பாட்டென்றே சொல்லத்தக்கது, ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், பாட்டின் இயல என்றார். இந்த இரண்டு விளக்கங்களையும் நோக்க, புலவரால் செய்யப்படும் பாடல் வகையினின்றும் மாறுபட்ட வாய்மொழித் தன்மை வாய்ந்த ஓர் இலக்கிய வகையைப் பண்ணத்தி என்ற சொல் குறித்ததாகக் கொள்ள முடியும். பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். பண்ணமைந்த பாடல் என்று சொல்லாமல் பண்ணத்தி என்றதனால் இவ்விலக்கிய வகை இசைப்பாடல் வகையிலிருந்து வேறுபட்டது என்பதனை விளங்கிக் கொள்ள முடியும்.

  1. பாட்டிடைக் கலந்த பொருளை உடையது
  2. பாட்டின் இயல்பினைக் கொண்டது
  3. பண்ணை விரும்புவது

இந்த மூன்று தன்மைகளையும் பண்ணத்தி என்ற பெயரும், பாட்டிடைக் கலந்த பொருள என்ற இலக்கணமும், பாட்டின் இயல என்பதும் புலப்படுத்துகின்றன.

                              இந்த இலக்கணங்களாலும், வாய் மொழியாக வழங்குவனவற்றோடு சார்த்திச் சொன்னமையாலும் பண்ணத்தியென்பது புலவர் இலக்கியங்களிலிருந்து வேறுபட்டது என்று கொள்ளலாம். தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்த அல்லது மெல்ல வழக்கொழிந்து வந்த, தவிர்க்கமுடியாத ஓர் இலக்கிய வடிவத்தையே பண்ணத்தி என்னும் சொல்லினால் அவர் அடையாளப் படுத்தியிருக்கக் கூடும்.

“பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின் இயல பண்ணத் திய்யே”                                           (செய்யுளியல் -173)

“அதுவே தானும் பிசியொடு மானும்.”                                  (செய்யுளியல் -174)

“அடிநிமிர் கிளவி யீரா றாகும்.                 

அடியிகந்து வரினும் கடிவரை யின்றே”                               (செய்யுளியல் -175)

  • பாட்டினிடைக் கலந்த பொருளை உடைத்தாகிப் பாட்டின் இயல்பை உடையது பண்ணத்தி.
  • பிசியோடு ஒத்த அளவினை உடையது.
  • நாற்சீரடியில் மிக்குவரும் பன்னிரண்டு அடிகளைக் கொண்டது.
  • பன்னிரண்டு அடிகளுக்கு மேல் மிக்கு வருபனவும் கொள்ளப்படும்.

மேலே சுட்டப்பட்ட நூற்பாக்களை விளக்குவதில் இளம்பூரணரும் பேராசிரியரும் வேறுபடுகின்றனர். இந்த நூற்பாக்களுக்குரிய நச்சினார்க்கினியர் உரை கிடைக்கவில்லை.

இளம்பூரணர், பண்ணைத் தோற்றுவித்தலால் பண்ணத்தி எனக் காரணப்பெயர் கொண்டதாக விளக்குகின்றார். தாழிசை, துறை, விருத்தம் ஆகிய பாவினங்கள் இசைநலம் கொண்டவை யாதலால் அவற்றையே பண்ணத்தி எனச் சுட்டுகிறார். இத்துடன் இசைத்தமிழைச் சார்ந்த சிற்றிசையையும், பேரிசையையும் பண்ணத்தியைச் சார்ந்தவைகளாக இனம் காண்கிறார். இளம்பூரணரின் பார்வையில் தொல்காப்பியர் காலப் பண்ணத்தியே பின்னர் பாவினங்களாக விரிவடைந்தது. ‘பண்ணத்தியெனினும் பாவினமெனினு மொக்கும்.” (இளம்). பண்ணத்தியையும் பாவினத்தையும் ஒரு பொருளைக் குறிக்கும் இரு சொற்களாக அவர் இனம் கண்டார்.

‘அதுவே தானும் பிசியொடு மானும்’

என்ற நூற்பாவிற்குப் பண்ணத்தி பிசி போல இரண்டடியால் வரும் என்று இளம்பூரணரும் பண்ணத்தி பிசி போல் செவிலிக்குரியதாகும் என்று பேராசிரியரும் விளக்கமளிக்கின்றனர்.

‘அடிநிமிர் கிளவி ஈரா றாகும்

அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே.’

இந்நூற்பாவிற்கு உரை வரையும் இளம்பூரணர் அடிநிமிர் கிளவி ஈராறு என்பதனைப் பாவினங்களாகப் பட்டியலிடுகிறார்.

“நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே (செய்யுளியல்-41) யென்றமையான் அடியென்பது நாற்சீரான் வருவதென்று கொள்க. நாற்சீரடியின் மிக்குவரும் பாட்டுப் பன்னிரண்டும் அவ்வழி அவ்வடியின் வேறுபட்டு வருவனவுங் கொள்ளப்படும் என்றவாறு. இதனாற் சொல்லியது இருசீரடி முதலிய எல்லா வடிகளானும் மூன்றடிச் சிறுமையாக ஏறிவரும் பாவினம் என்றவாறாம்.

பன்னிரண்டாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனச் சொல்லப்பட்ட நான்கு பாவினோடுந் தாழிசை துறை விருத்தமென்னு மூன்றினத்தையும் உறழப் பன்னிரண்டாம். அவற்றுள், தாழிசையாவது: ஆசிரியத்தாழிசை, வஞ்சித்தாழிசை, வெண்டாழிசை, கலித்தாழிசை என நான்காம். துறையாவது: ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, வெண்டுறை, கலித்துறை என நான்காம். விருத்தமாவது: ஆசிரியவிருத்தம், வஞ்சி விருத்தம், வெளிவிருத்தம், கலிவிருத்தம் என நான்காம்.”

தொல்காப்பியத்தின் மற்றொரு உரையாசிரியரான பேராசிரியர்,

“அப்பண்ணத்தியின் அடிப் பெருக்கம் கிளக்கும்கால் பன்னிரண்டாம். ஆகும் என்பதனாற் சிறுபான்மை அப்பன்னிரண்டடியின் ஏறியும் வரப்பெறும் என்பது. ஈராறாகும் என்றதனால் இது நெடுவெண் பாட்டாகி வருமெனவும் அதுபோல் ஆறடியின் இழிந்து வாராதெனவும் கொள்க.

அது முழுதும் அடியாகிவராது இடையிடை ஒரோவடி பெற்று அல்லுழியெல்லாம் பரந்துபட்டு வரவும் பெறும். அவை முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பது.” என்று உரையெழுதுகின்றார்.

பழம்பாட்டினோடு கலந்த பொருளைத் தனக்கும் பொருளாகக் கொண்டு வருவது பண்ணத்தி எனப் பொருள் கொண்டார். பாட்டினையும், உரையினையும் போல் பண்ணத்தி படைக்கப்பெறும் என்பது பேராசிரியர் கருத்து. பாட்டின் கூறும், உரையின் கூறும் பண்ணத்தியில் கலந்திருக்கும். நாடகச் செய்யுளாகிய பாட்டும், வஞ்சிப்பாட்டும், மோதிரப்பாட்டும், கடகண்டும் பண்ணத்திக்கு எடுத்துக்காட்டுகள் என்கின்றார். கடகண்டு தவிர ஏனையவை வாய்மொழி வடிவங்கள். பேராசிரியரின் உரைவிளக்க அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் இடம்பெறும் பாட்டு மடைகள் பண்ணத்தியாதல் வேண்டும். பாட்டு, நோக்கு போன்ற உறுப்புகளின் துணைகொண்டு பொருள் உணர்த்துவது. பண்ணத்தியோ வெளிப்படை யாகவே பொருள் உணர்த்துவது. அவை ‘வல்லார்வாய்க் கேட்டுணர்க’ என்றும் அவை “முற்காலத்துள்ளார் செய்யுளுட் காணாமையில் காட்டாமாயினாம். இக்காலத்து உள்ளனவேற் கண்டுகொள்க. இலக்கணம் உண்மையின் இலக்கியம் காணாமாயினும் அமையுமென்பது” என்றும் பேராசிரியர் பண்ணத்தி இலக்கியத்திற்கு உரிய எடுத்துக்காட்டுகளைக் காட்ட இயலாமல் தவிப்பதிலிருந்து உரையாசிரியர்கள் காலத்தே பண்ணத்தி என்ற இலக்கியவகை முற்றிலும் வழக்கொழிந்த நிலையில் இருந்துள்ளமையை உணரமுடிகின்றது.

தொல்காப்பியத்திற்கு ஆராய்ச்சி உரை வரைந்த ச.பாலசுந்தரனார்,

“இசைத்தமிழ் மரபில் தோன்றி இயற்றமிழ்ப் பகுதியாக வழங்கும் பண்ணத்தி என்னும் பாவகை என்றும் இப்பாவகையாவது கழனி உழவர் பாட்டும் மழைப்பாட்டும், வெள்ளப்பாட்டும், ஏர்ப்பாட்டும், நடவுப்பாட்டும், நெற்களப்பாட்டும், கிணைப்பொருநர் பாடும் போர்க்களப்பாட்டும், வெற்றிப்பாட்டும், கட்டும் கழங்கும் காண்பார் பாடும் பாட்டும் போலவனவாகும். நாட்டுப்பாடல் என இக்காலத்து வழங்கும் பாடல்கள் இப்பண்ணத்தி வழி வந்தவைகளே. பள்ளு முதலாய சிற்றிலக்கியங்கள் இதன்வழித் தோன்றியவை எனலாம் என்று விளக்குவர்.”

தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைச் சுட்டுவதாக, கி.வா.ஜகந்நாதன், நா.வானமாமலை முதலியோர் குறிப்பிடுகின்றனர். இதனை மறுத்து, புலன் என்பதுதான் நாட்டுப்புறப் பாடல்களைக் குறிப்பதாக ஆறு. அழகப்பன் தம் ஆய்வேடு ஒன்றில் குறிப்பிடுகின்றார். மேற்சொன்ன இரண்டு கருத்துக் களையும் ஒருங்கிணைத்து நாட்டுப்புறப் பாடல்களுள் இசைப் பாடல்கள் பண்ணத்தி என்றும் இசை குறைந்த பாடல்கள் புலன் என்றும் சு. சண்முகசுந்தரம் விளக்குகின்றார். பெரும்பாலும் இக்கருத்தினை ஒட்டியே தமிழ் ஆய்வுலகம் தொல்காப்பியர் குறிப்பிடும் நாட்டுப்புறப் பாடல் இலக்கியம் பண்ணத்தியே என்பதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றது.

பிசி (விடுகதை):-

மரபு வகை நாட்டார் வழக்காறுகளுள் நிலைத்த தொடர் அமைப்புடையது விடுகதையாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பிதிர், புதிர், வெடி என்ற பல்வேறு பெயரிட்டு வழங்கப்பட்டுவருகின்றது. நெல்லை மாவட்டத்தார் விடுகதையை அழிப்பாங்கதை என்று கூறுவார்கள். அதாவது விடுப்போரின் விடுகதைக்கு, கேட்போரின் மறுபதில் என்பதே அதன் பொருள். பிதிர், புதிர், வினோத வார்த்தை, எழுத்துக்கூட்டு, விகடப்பா, ஒளிவடிவ புதிர், சொற்புதிர், நொடிவினா, விடுகதை எனப் பலபெயர் இட்டு வழங்கும் விடுகதையைத் தொல்காப்பியர்,

ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவ கிளர்ந்த துணிவினானும்

என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே                            (தொல்.செய்-169)

தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பது விடுகதையே என்பதை அறிய உரையாசிரியர்களான இளம்பூரணரும், பேராசிரியரும் தரும் விடுகதைச் சான்றுகள் மூலம் தெளியலாம்.

(இளம்) அச்சுப் போல பூப்பூக்கும்

அமலே யன்ன காய்காய்க்கும் - பூசனிக்கொடி

(பேரா) பிறை கவ்வி மலை நடக்கும் - அது யானை

மேற்கண்டவாறு தொல்காப்பியர் குறிப்பிடும் பிசி என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் சான்றுகள் கொண்டு பிசி என்பது விடுகதையே என்றும், இது தமிழர் வாழ்வில் பொழுதுபோக்கிற்காகவும், அறிவுத்திறனைச் சோதிப்பதற்காகவும் போடப்பட்டு வந்தன என்றும் கூறலாம்.

பொய்மொழி (நாட்டுப்புறக் கதை):-

பண்டைய மக்களிடையே கதைசொல்லும் ஆர்வமும், கதைகேட்கும் ஆர்வமும் இருந்தன என்பதைத் தொல்காப்பியரது இலக்கணம் கூறுகின்றன. இதனைப்,

பொருளோடு புணராப் பொய்ம் மொழியானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்                       (தொல்.செய்-166)

என்ற நூற்பாவால் அறியலாம்.

இந்நூற்பாவிற்கு உரை கண்ட பேராசிரியர் ஒரு சிறுகதையைக் கூறி விளக்கம் தந்துள்ளார். யானையும், குருவியும் தம்முள் நட்புக்கொண்டு இன்ன இன்ன இடத்திற்குப் போய் இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் அதன்பால் அடங்குவன என்பார். இதனைப் பார்க்கும் போது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வழக்கில் வந்த கதைகள் தொல்காப்பியத்திலும் வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

முதுமொழி (பழமொழி):-

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகரீகம் வாய்ந்த மக்களிடமும், நாகரீகத்தில் பின்தங்கிய இனக்குழு மக்களிடமும் சுருங்கிய வடிவு கொண்ட, உருவகப் பண்புடைய அறிவுக் கூர்மையான பழமொழிகள் காணப்படுகின்றன. அத்தகைய பழமொழிகள் தொல்காப்பியத்திலும் பிரதிபலித்துள்ளன. இதனை உணர்த்த வந்த தொல்காப்பியர் முதுமொழி என்ற சொல்லால் குறிப்பிடுவார். இதனை,

நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்தப் பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏதுநுதலிய முதுமொழி.

என்ற நூற்பாவால் அறியலாம்.

கூறியதாய்ச் சுருங்கி, விழுமியதா எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்தப் பொருளொன்றனை முடித்தற்கு வருமாயின் அங்ஙனம் வந்ததனைப் பொருண் முடித்தற்குக் காரணமாகிய பொருளினைக் கருதுவது முதுமொழி என்று இந்நூற்பாவிற்கு பேராசிரியர் உரை எழுதுவார். நூற்பாவில் சுருக்கமும் நுண்மையும், ஒளியுடைமையும், மென்மையும், குறித்த பொருளை அழுத்தமாய் விளக்குவதற்கும், ஒரு சூழலில் காரணங்காட்டுவதற்கும் இப்பழமொழிகள் இன்றியமையாததாகின்றன. இதனால் பழமொழிகள் வழங்கக்கூடிய சமுதாயச் சூழலைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் எனலாம்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி -8

Pin It