தொல்காப்பியப் பொருளதிகாரம்-மரபியல்:

            தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கடைசி இயல் மரபியல் ஆகும். உயர்திணை, அஃறிணை ஆகியவைகளின் ஆண்பால், பெண்பால், இளமைக்குரிய மரபுப்பெயர்களைப் பற்றி இந்த இயல் பேசுகிறது. முக்கியமாக அஃறிணையில் ஓருயிர் முதல் ஐந்துயிர் வரையான உயிர்களின் ஆண்பால், பெண்பால், இளமைக்குரிய மரபுப்பெயர்கள் ஆகியன பற்றி இவ்வியல் விரிவாகப்பேசுகிறது. இதன் இறுதியில் பொது மரபுநிலை குறித்தும், நூல்கள் மரபுநிலை திரியாமல் எழுதப்படவேண்டும் என்பதாலும், பண்டைய விடயங்களை, மரபுகளை பாதுகாத்து வைப்பதும் நூல்கள்தான் என்பதாலும் நூல்கள் குறித்தும் இந்த மரபியல் விரிவாகப் பேசுகிறது எனலாம். மக்கள்தான் உயர்திணை என்பதையும் அவர்களின் ஆண்பால், பெண்பால், இளமைப் பெயர்கள் என்பன ஆண், பெண், பிள்ளை எனவும் மரபியல் குறிப்பிடுகிறது. மரபியலில் மொத்தம் 112 பாக்கள் உள்ளன. அதில் 72 முதல் 86 வரையான 15 பாக்கள் சமூக வகுப்புப் பிரிவுகள் குறித்துப் பேசுகிறது. புறத்திணை இயலில் வாகைத்திணையில் தமிழ்ச் சமூகத்தின் 7 பாகுபாடுகளும் அவர்களுக்குரிய கடமைகளும் ஒழுக்கங்களும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்ச் சமூக வகுப்புப் பிரிவுகளின் மரபியல் அடிப்படையிலான உரிமைகள் குறித்து மரபியலில் உள்ள 72-86 வரையான பாக்கள் பேசுகிறது எனலாம்.

      kaniyan balan book on tamil history  இங்கு முதலில் அந்தணருக்குரிய மரபுரிமைகளைப் பற்றிப் பேசாமல் அவர்களிடம் இருக்கும் உரிமைப்பொருட்கள் சொல்லப்படுகின்றன. அவை முப்புரி நூல், கமண்டலம், முக்கோல்தண்டு, அமரும் பலகை ஆகியன. அடுத்ததாக அரசருக்குரியன என படை, கொடி, குடை, முரசு, குதிரை, களிறு, தேர், மாலை, முடி முதலியன சொல்லப்பட்டுள்ளன. முதலிருவருக்கும் இவை இவை உடையன எனச்சொல்லிய பின் வணிகருக்கு வணிக வாழ்க்கையும், 8 தானியங்களை விளைவிக்கவும், விற்கவும் உரிமையுண்டு எனவும் சூடும் பூவும், குலத்திற்கான பூவும் வணிகருக்கு உண்டு எனவும் கூறுகிறது.  வேளாளர்களுக்கு உழுது, உணவை பிறருக்கு அளித்தல் பணி மட்டும் உண்டு எனவும் வேந்தன் மூலம் படையும் மாலையும் பெற வேளாளர் உரிமை பெற்றவர் எனவும் கூறுகிறது. வணிகர் வேளாளர் அல்லாத பிற மக்கள் வேந்தனின் அனுமதியோடு வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகியவைகளைப்பெற உரிமையுடையவர்கள் என்பதும், இழிந்தோர்க்கு இந்த உரிமைகள் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.  நான்கு வகுப்பில் இடையிலுள்ள அரசர், வணிகர், வேளாளர் எனப்படும் நிலக்கிழார்கள் ஆகியோர் படை வைத்துக்கொள்ளும் உரிமை கொண்டவர்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. இதில் வேளாளர் அரச அனுமதியோடு படையும் கண்ணியும் வைத்துக்கொள்ளலாம் என்பது தனியாகச் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83). ஆனால் வணிகர்கள் படை வைத்துக்கொள்வதற்கான உரிமை குறித்து தனியாகச் சொல்லப்படவில்லை. இவை மரபியலில் 72-86 வரையான 15 பாக்களில் சொல்லப்பட்டுள்ளன(10).

வணிகரும் வேளாளரும் மூன்றாவது வகுப்பினர்:

          உரையாசிரியர்கள் பொதுவாக வணிகர்கள் மூன்றாவது வகுப்பு எனவும், வேளாளர்கள் நான்காவது வகுப்பு எனவும் பின் இறுதியில் வருபவர்கள் இழிசனர் என்றும் கூறுகிறார்கள். வணிகர், வேளாளர் தவிர இதரர்கள் குறித்து உரையாசிரியர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தொல்காப்பிய பொருளதிகார மரபியல் இதரர் குறித்தும் பேசுகிறது(மரபியல்-85). தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் உள்ள வாகைத் திணையில் ஏழு பாகுபாடுகள்(புறத்திணையியல்-16) சொல்லப்பட்டுள்ளன. முதலாவது அந்தணர், இரண்டாவது அரசர், மூன்றாவதில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரும் இருப்பதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பின்னர் 4.அறிவர், 5.தாபதர், 6.போர்வீரரான பொருநர், 7.அனை நிலை வகை எனும் இதர வெற்றிவகையாளர்கள் என ஏழு பாகுபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன்படி மூன்றாவதாக வருபவர்கள் வணிகரும், வேளாளரும் ஆவர். மொத்தம் நான்கு வகுப்புகள்தான் என்பதால் புறத்திணையியலுக்குரிய வாகைத்திணையின் ஏழு பாகுபாட்டில் உள்ள அறிவர், தாபதர் ஆகியவர்கள் சான்றோர்கள் என்பதால் அவர்கள் அந்தணர்களின் முதல் வகுப்பிலும், போர்வீரர்கள், இதர வெற்றி வகையாளர்கள் ஆகியோர் நான்காம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்(11).

        மரபியலில் முன்பு கூறியவாறு முதலில் அந்தணர், இரண்டாவது அரசர், மூன்றாவதாக வணிகர், நான்காவதாக வேளாளர் கூறப்படுகின்றனர். ஐந்தாவதாக வேளாளர், வணிகர் அல்லாத பிறர் குறித்தும்(மரபியல்-85) இறுதியாக இழிசனர் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதன்படி இழிசனர் இல்லாது ஐந்து வகுப்புகள் ஆகின்றன. ஆனால் இழிசனர் இல்லாது நான்கு வகுப்புகள்தான் இருக்கின்றன என்பதால், புறத்திணையியலில் வாகைத் திணைப் பாகுபாட்டில் உள்ளவாறு வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் ஒரே வகுப்பாக ஆக்கும்பொழுது 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர், 4.பிறர் அல்லது ஏனையோர் என நான்கு வகுப்புகள் ஆகின்றன. இறுதியாக இழிசனர் வருகின்றனர். ஆகையால் மூன்றாவது வகுப்பில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது..

    மேலும் படை வைத்துக்கொள்ளும் உரிமை இடைப்பட்ட இரண்டாவது, மூன்றாவது ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டுமே உண்டு என்பது மரபியலில் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-78). அதற்கு உரையாசிரியர்கள் அரசர், வணிகர் ஆகிய இருவருக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு எனக் கூறியுள்ளனர். ஆனால் வேளாளர் அரசனின் அனுமதியோடு படை வைக்கும் உரிமை உடையவர் என்பது சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83). வணிகருக்கு அந்த உரிமை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே இடைப்பட்ட இரு வகுப்புகளில் மூன்றாவது வகுப்பைச்சேர்ந்த வணிகரைவிட வேளாளர்தான் படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கின்றனர் எனலாம். வேளாளர், வணிகர் இருவருமே அரச அனுமதி இல்லாது படை வைத்துக்கொள்ள இயலாது. வேளாளர் எனப்படும் நிலக்கிழார்கள் ஊர்க்காவலுக்காகவும், போரின்போது அரசருக்கு உதவும்பொருட்டும் படைகளை வைத்திருக்கவும், வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கான பொருட்களைப் பாதுகாக்கும்பொருட்டு படைகளை வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே. ஆனால் அரச அனுமதி இன்றி இவைகளை யாரும் வைத்திருக்க இயலாது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் நிலமானியத் திட்டங்களில் நிலக்கிழார் எனப்படும் நிலப்பிரபுக்கள் படை வைத்திருந்தனர். நமது பழந்தமிழ் அரசுகள் நகர்மைய, நகர அரசுகளாக இருந்தன. நகர்மைய அரசுகளில் நகரத்தைச்சுற்றி நூற்றுக்கணக்கான ஊர்கள் இருந்தன. இந்த ஊர்களின் பாதுகாப்புக்காக நிலக்கிழார்கள் பொறுப்பில் ஊர்க்காவல்படைகள் இருந்தன.

         ஆகவே இவைகளை வைத்துப்பார்க்கும் பொழுது இடைப்பட்ட இரு வகுப்புகள் மட்டும்தான் படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர்கள் எனும்பொழுது வேளாளர் இடைப்பட்ட மூன்றாவது வகுப்பில் வந்துவிடுகிறார். வேளாளருக்கு அரச அனுமதியோடு படை வைத்துக்கொள்ளும் உரிமை சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83) என்பதை முன்பே குறிப்பிட்டோம். ஆகவே படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர் என்ற அடிப்படையில் வேளாளர் வணிகருடன் சேர்ந்து மூன்றாவது வகுப்புக்குரியவராக ஆகின்றார்.  இறுதியாக ஏனோர் அல்லது பிறர் உரிமை குறித்து மரபியல் 85ஆம் செய்யுள் பேசுகிறது. ஆகவே இந்தப் பிறர்தான் 4ஆம் வகுப்பினர் ஆவர். வேளாளர் 4ஆம் வகுப்பு எனில் இந்தப்பிறர் அல்லது ஏனோர் என்பவர்கள் 5ஆம் வகுப்பாக ஆவார்கள். அதன்பின் இறுதியாக இழிசனர் வருகின்றனர். அப்பொழுது இழிசனர்போக மொத்தம் 5 வகுப்புகள் இருக்கும். ஆனால் இழிசனர் இல்லாது மொத்தம் நான்கு வகுப்புகள்தான் இருக்கவேண்டும் என்பதால் வேளாளர்கள் மூன்றாம் வகுப்புக்குரியவர்களாக ஆகின்றனர்(12).   

     தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியலில் உள்ள 28ஆம் பாடல் கல்வியும், தூதும் உயர்ந்தவர்களுக்குத்தான் எனக் கூறுகிறது. அதன் 34ஆம் பாடலுக்குப் பொருள்தரும் இளம்பூரணர் நாட்டைக்காப்பதற்கான கடமையில் வேந்தனை அடுத்து தூது போன்ற பணியைச் செய்வதற்கு உரியவர்கள் வணிகரும் வேளாளரும் தான் என்கிறார். தூது போவதற்கு உரியவர் வேளாளர் என்பதால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகின்றனர். அதன் 32ஆம் பாடல்படி காவற்பிரிவின்போது மன்னருக்குத் துணையாக இருக்கும் உரிமை வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது என்கிறார் இளம்பூரணர். அதே சமயம் அதன் 33ஆம் பாடல் கல்விற்கான பிரிவு உயர்ந்தோருக்கு உரியது என்கிறது என்பதால் அப்பாடலுக்கு கல்வி கற்பதற்கான பிரிவு வணிகருக்கு மட்டுமே உரியது எனப் பொருள் கூறுகிறார் இளம்பூரணர். ஆனால் கல்வியும், தூதும் உழுவித்து உண்ணும் வேளாளருக்கும் உரியது என நச்சினார்க்கினியார்(தமிழ் இலக்கணப்பேரகராதி, அகம்-4, ப-74) கூறுவதாகக் கூறுகிறார் முனைவர் ச.சுபாசு சந்திரபோசு(13). உழுவித்து உண்ணும் வேளாளர்கள் என்போர் நிலத்தில் மற்றவர்களைக் கொண்டு வேளாண்மை செய்பவர்கள், அதாவது நிலக்கிழார்கள் ஆவர். பொருளதிகாரத்தின் அகத்திணையியலில் உள்ள 28, 32, 33, 34 ஆகிய நான்கு பாடல்களையும், அதற்கான உண்மைப்பொருளையும், அதற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியவர் தந்த பொருளையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கல்வி, தூது, மன்னருக்கு உறுதுணையாக இருப்பது, நாட்டைக்காக்கும் கடமை செய்வது ஆகியன வணிகர், வேளாளர் ஆகிய இருவருக்கும் உரியது என்பதால் இருவரும் உயர்ந்தவர்கள் ஆகின்றனர் எனலாம். ஆகவே இப்பாடல்களின் படியும் வணிகரும், வேளாளரும் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த உயர்ந்தவர்கள் ஆகின்றனர். வைதீகச் சிந்தனைப்படி வேளாளர் சூத்திர வகுப்புக்குரியவர்கள் என்ற கருத்தில் உரையாசிரியர்கள் இருந்ததால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறான பொருளைக்கூறியுள்ளனர். வணிகரும் வேளாளரும் மூன்றாம் வகுப்பைச்சேர்ந்த உயர்ந்தோர்கள் எனக் கொள்ளும் பொழுது இப்பாடல்கள் தெளிவான பொருளைத்தரக்கூடியவனாக ஆகும்.

           ஆகவே பல கோணங்களில் ஆய்வு செய்யும்பொழுதும் வேளாளர்கள் எனப்படும் நிலக்கிழார்கள் மூன்றாம் வகுப்புக்குரியவர்களாகவே ஆகின்றனர். புறத்திணையியலில் உள்ள வாகைத் திணையின் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்த்து மூன்றாவது வகுப்பினராகவே உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். வைதீக மரபுப்படி வேளாளர்கள் ‘சூத்திரர்’ என்பதால் தொல்காப்பியம் உருவாகி, 1500 வருடங்களுக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் வைதீகச் சிந்தனையின் அடிப்படையில் வேளாளர்களை நான்காவது வகுப்பாக, அதாவது கீழோராகக் கொண்டு உரை எழுதியுள்ளனர் எனலாம். மேலும் இதில் செய்யப்பட்ட இடைச்செருகல்களும், திருத்தங்களும் இதற்குக் காரணமாகலாம்.

நான்காம் வகுப்பு:

         நான்காம் வகுப்பில் மக்களில் பெரும்பாலோர் வருவர். வேளாளர்களில் உழுவித்து உண்ணும் பெரும் நிலக்கிழார்கள் மட்டுமே மூன்றாம் வகுப்புக்குரியவர்கள் ஆவர். அவர்களில் சொந்த நிலத்தில் உழுது உண்ணும் சிறு குறு உழவர்களும், மற்றவர்களும், வேட்டுவர், இடையர், மீனவர் போன்ற நால்வகை நிலத்து வேளாண்மை மக்களும் நான்காம் வகுப்புக்குரியவர்களே ஆவர்.  அதுபோன்றே பெருவணிகர்கள் தவிர, சிறு குறு வணிகம், தொழில் போன்றனவற்றைச் செய்பவர்களும், கருமான், தச்சர் போன்ற சொந்தக்கருவிகளைக்கொண்டு சொந்தமாகத் தொழில் செய்பவர்களும் நான்காம் வகுப்புக்குரியவர்களே ஆவர். பாணர், கூத்தர் போன்றவர்களும், சிற்பி, ஓவியர் போன்ற பல்வேறு கலைஞர்களும் இதில் அடங்குவர். பார்ப்பனர்களும் நான்காம் வகுப்பினரே என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. வீரர்கள், அரசின் பணியாளர்கள் போன்றவர்களும் இதில் அடங்குவர். பொதுவாக முதல் மூன்று வகுப்பில் இல்லாதவர்கள் இதில் அடங்குவர். அதனால்தான் தொல்காப்பியர் பொருளதிகார மரபியல் 85ஆம்பாடலில் ஏனோர் எனக்குறிப்பிட்டார். அதாவது முதல் மூன்று வகுப்பில் சொல்லப்படும் உயர்ந்தோர்கள் அல்லாத பிறர் அனைவரும் இதில் அடங்குவர் என்பதே அதன் பொருளாகும். மரபியலில் அடுத்த 86ஆம் பாடலில் இழிசனர்கள் தனியாகச்சொல்லப்படுவதால் இழிசனர்கள் இதில் அடங்கார். ஆகவே உயர்ந்தோர்கள், இழிசனர்கள் ஆகிய இருவரும் இல்லாத ஏனையவர்கள் நான்காம் வகுப்புக்குரியவர்கள் எனலாம். மிகக்கேவலான அருவருப்பான தொழிலைச் செய்பவர்களே இழிசனர்கள் எனப்படுவதால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். ஆகவே மக்கள்தொகையில் பெரும்பாலோனோர்கள் இந்த நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்களே ஆவர். நான்காம் வகுப்புக்குரியவர்கள் கீழோர் எனப்பட்டாலும், கல்வி பெறல், தொழில் செய்யல், சொத்து சேர்த்தல் போன்ற அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருந்தன. ஆதலால் கீழோர் மேலோர் ஆவது இயல்பானதாக இருந்தது. அதனால்தான் அவர்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகியனவற்றைப் பெறும் உரிமை உடையவர்கள் என மரபியலின் 85ஆம் பாடல் கூறுகிறது.

அந்தணர்களின் மரபியல் உரிமைகள்:        

      அந்தணர்களிடம் இருந்ததாகச் சொல்லப்படும் கமண்டலம், முக்கோல் தண்டு, அமரும் பலகை ஆகியன தாபதர் எனப்படும் துறவிகளிடமும், அறிவர், கணியர் போன்றவர்களிடமும் இருந்துள்ளன. குறுந்தொகை 277ஆம் பாடலில் அறிவரான கணியர் ஒருவரிடம் சேமச்செப்பு எனப்படும் கமண்டலம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அந்தணர்களுக்கு உரியவையாகச் சொல்லப்பட்டவை அந்தணர், அறிவர், தாபதர் ஆகியவர்களுக்கும் உரியவையாக இருந்துள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே இதன்படியும் அந்தணர் எனப்படும் சான்றோரில் அறிவர், கணியர், தாபதர் ஆகியவரும் அடங்குவர் எனலாம். அந்தணர் எனப்படும் சான்றோரில் அறிவர், கணியர், தாபதர் ஆகியவர் அடங்குவர் என்பது முன்பே விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல், ஆய்வு செய்தல், அறிவுரை கூறுதல், பிரச்சினைகளை, தகராறுகளைப் பேசித்தீர்த்து வைத்தல், அரசர் முதல் அனைவராலும் மதிக்கப்படுதல் போன்றவைகளே அந்தணர் எனப்படும் சான்றோர்களின் மரபியல் உரிமைகளாக இருக்க முடியும். ஆனால் இங்கு சொல்லப்பட்ட உரிமைப்பொருட்கள் பொருத்தமாகப் படவில்லை.

          மரபுப்படி சான்றோர்கள் வேந்தனுக்கும் அறிவுரை கூற உரிமை உடையவர்கள் என்பதை சங்க இலக்கியம் பேசுகிறது. ஆனால் இங்கு அந்தணர்களுக்குச் சொல்லப்பட்ட உரிமைப்பொருட்கள் வைதீகக் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட இடைச்செருகல்களாகத் தெரிகிறது. பார்ப்பனர்களும் இப்பொருட்களை வைத்திருந்தனர் என்பதை குறுந்தொகை 156ஆம் பாடல் பதிவு செய்துள்ளது. அதில் முள்முருங்கை மரத்தில் செய்த தண்டும், கமண்டலமும் வைத்திருந்த பாங்கனான பார்ப்பனனிடம் ‘எழுதப்படாத உனது வேதத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மந்திரம் ஏதாவது இருக்கிறதா’ எனக் கேலியோடு பாண்டியர் தலைவன் வினவுகிறான். ஆகவே சங்ககாலத்தில் பார்ப்பனர்களும், வேதமும் மதிக்கப்படவில்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது. எனினும் பார்ப்பனர்கள் தாங்கள் சங்க காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்று, உயர்தோர்களாகவும் இருந்தோம் எனக் காட்ட இடைச்செருகல்கள், திருத்தங்களின் மூலம் முயற்சி செய்தனர் என்பதை இந்த உரிமைப் பொருட்கள் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

அரசரும், அந்தணரும்:

         அரசர், அந்தணர் ஆகிய இவர்களில் அந்தணர் முதல் வகுப்பாகவும் அரசர் இரண்டாம் வகுப்பாகவும் சொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் அந்தணருக்கு உரியவை அனைத்தும் அரசருக்கும் உரியவை என்பது சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-74). அதே சமயம் அரசனுக்கு உரிய படை, குடை முதலியவைகள் அந்தணருக்கு உரியவை ஆகா. மேலும் நெடுந்தகை, செம்மல் முதலிய புகழுரைகள் பாடாண்திணை மரபுப்படி அரசருக்கு மட்டுமே உரியவை எனவும் அவை அந்தணருக்குப் பொருந்தி வாராது எனவும் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-75). அதே சமயம் அரசருடைய கருமங்களில் வரையரை இல்லாமல் பங்குகொள்ள மட்டுமே அந்தணர்கள் உரிமை உடையவர்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-84). இந்த விளக்கங்களின்படி அரசன் அந்தணரைவிட உயர்ந்தவனாகவே கருதப்பட வேண்டியவன் ஆவான். சங்க இலக்கியச்சான்றுகளின் படியும் நடைமுறையில் அரசன் அந்தணர்களைவிட மிக உயர்ந்தவனாகவே இருந்துள்ளான். அப்படி இருந்தும் முதலாவதாக அந்தணரும், இரண்டாவதாக அரசரும் சொல்லப்பட்டுள்ளனர் என்பது வைதீகச் சிந்தனைகளின் விளைவாக ஏற்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம்.   ஆகவே 1.அரசர், 2.அந்தணர், 3.வணிகர்&வேளாளர், 4.இதரர் அல்லது ஏனோர் என்கிற வரிசை முறையே தொல்காப்பியகால வரிசை முறை எனலாம்.

மேலோர், கீழோர், இழிசனர்:

          தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள 31, 142, 626, 633, 634 ஆகிய ஐந்து பாக்கள் மேலோர், கீழோர், இழிசனர் ஆகியனர் குறித்துப் பேசுகிறது. இதன் அகத்திணையியலில் உள்ள 31ஆம் பாடல் “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” எனக்கூறுகிறது. இதன் மூலம் மொத்தம் நான்கு வகுப்புகள்தான் சொல்லப்படுகின்றன என்பது உறுதியாகிறது. இதன் கற்பியலில்(பா-2) உள்ள 142ஆம் பாடல், “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கும் ஆகிய காலமும் உண்டே” என்கிறது. இதன்படி நால்வரில் மூவர் மேலோர் என்பதும் நான்காம் வகுப்புக்குரியவர் கீழோர் என்பதும் சொல்லப்படுகிறது. இதன் பொருளதிகார மரபியலில்(பா-78) உள்ள 626ஆம் பாடல், “இடை இருவகையோர் அல்லது நாடின் படைவகை பெறாஅர் என்மனார் புலவர்” என்கிறது. ‘இடை இருவகையோர்’ என்பதன் மூலம் மொத்தம் நால்வர் என்பது இங்கும் உறுதியாகிறது. அதே பொருளதிகார மரபியலில்(பா-85) உள்ள 633ஆம் பாடலின் இறுதி வரி “மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய” என்கிறது. இப்பாடல் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்களுக்குப்பின் வருகிறது. ஆகவே இந்த நால்வர் போக ஐந்தாவதாக ஏனையோர் அல்லது பிறர் இருந்தனர் என்பதை இப்பாடல் சொல்கிறது. உரையாசிரியர்களும் வேளாளர் அல்லாத பிறர் எனத் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த நால்வர் அல்லாத பிறர் இருந்தனர் என்பது உறுதியாகிறது. அதே பொருளதிகார மரபியலில்(பா-86) உள்ள அடுத்த 634ஆம் பாடல், “அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை” என்கிறது. இதன் மூலம் இந்தப் பிறருக்குப்பின் இழிசனர் என்பவர் இருந்தனர் எனத்தெரிகிறது. மேற்கண்ட ஐந்து பாடல்கள் போக அதே பொருளதிகாரத்தில் 28, 33, 36, 213 ஆகிய நான்கு பாடல்களில் உயர்ந்தோர் என்ற சொல், மேலோர் என்ற பொருளில் வருகிறது. இதில் முதல் மூன்று பாக்கள் அகத்திணையியலிலும், இறுதிப்பாடல் பொருளியலிலும் வருகிறது(14).

         மேற்கண்ட பாடல்களின் மூலம் மேலோர், கீழோர், இழிசனர் ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன எனவும் மொத்தம் நான்கு வகுப்புகள் எனவும்  தெரிகிறது. நாம் முன்பு செய்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவின்படி மூன்றாவது வகுப்பில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்க்கும் பொழுது, 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர் ஆகிய மேலோர் மூவர் எனவும் கீழோரான நாலாவது வகுப்பில் இதரர், போர்வீரர், பார்ப்பனர், பாணர் போன்றவர்களும் வருவர். இறுதியாக இழிசனர் என்பவர்கள் வருவர். இம்முறைதான் இப்பாடல்களில் உள்ள விடயங்களுக்குப் பொருந்தி வருகிறது என்பதோடு வேளாளரை வைதீகச் சிந்தனைப்படி நான்காவது வகுப்பாகக் கொண்டதுதான் பல குழப்பங்களுக்குக் காரணம் எனவும் தெரிகிறது. படை வைத்துக்கொள்வதும், தூது செல்வதும், வேந்தனுக்கு உதவுவதும் வேளாளர் கடமை எனும்பொழுது தொல்காப்பியர் வேளாளர்களை மேலோர் எனக்கொண்டே இவைகளைக் கூறியுள்ளார் எனலாம்.

        சங்ககால இலக்கண இலக்கியங்களைக்கொண்டும் இன்ன பிற சான்றுகளைக்கொண்டும் பழந்தமிழகத்தில் நான்கு வகுப்புகளும் இறுதியாக இழிசனரும் இருந்தனர் என முடிவு செய்யலாம் அவைகளில் 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர், 4.இதரர் அல்லது ஏனோர் ஆகிய நான்கு வகுப்புகளை மட்டுமே தொல்காப்பியர் வகுப்புகளாகக் கூறுகிறார். இதில் இதரர், வீரர், பார்ப்பனர், பாணர் போன்றோர் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இழிசனர் எனப்படும் இறுதி வகுப்பினருக்குத் தொல்காப்பியர் காலத்தில் எந்த உரிமையும் இருக்கவில்லை எனத் தெரிகிறது. கிரேக்கத்திலும், உரோமிலும் அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோல் இங்கும் இழிசனர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனலாம். இறுதியாக அந்தணர், அரசர் என்ற வரிசை முறை மாற்றப்பட்டு, முதல்வகுப்பில் அரசரும், இரண்டாம் வகுப்பில் அந்தணரும் வைக்கப்படவேண்டும் என்பதே தொல்காப்பிய வரிசை முறையாகவும், பழந்தமிழ்ச் சமூகத்தின் வரிசைமுறையாகவும் இருந்திருக்கமுடியும்.

சங்ககாலக் கல்வியும், திருமணமும்:

      பழந்தமிழ்ச் சமூகத்தில் வகுப்புகள் இருந்தன. ஆனால் சாதிகள் இல்லை. வகுப்புகள் தொழில், செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை. ஆனால் சாதி என்பது அகமணமுறையைக்கொண்டதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும் ஆகும். ஆகவே சாதி, வகுப்பு இரண்டும் வேறு வேறானவை ஆகும். சங்ககாலத்தில் உடன்போக்கு என்பது சமூக அங்கீகாரம் பெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வாகும். சங்ககாலத்தில், நால்வகுப்பிலுள்ள அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகொண்டனர் என்பதை சங்கப்பாடல்கள் உறுதி செய்கின்றன. செல்வந்தர் மகள் ஏழையை மணப்பதும், ஏழைப்பெண் செல்வந்தனை மணப்பதும் நடைபெற்றதை சங்க இலக்கியம் பேசுகிறது. அதன்மூலம் அகமணமுறையும் சாதியும் சங்ககாலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது(15). அதுபோன்றே, மிகமிகச்சாதாரண மனிதர்களில் பெரும்பாலோர் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதோடு அவர்களில் பலர் சங்க இலக்கியப் படைப்புகளைப் படைக்கும் அளவு கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர்(16). பாணர், விறலி, குயத்தியர் போன்ற நான்காம் வகுப்புக்குரியவர்களும் சங்க இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியலில் உள்ள 33ஆம் பாடலுக்கான உரையில் நச்சினார்க்கினியர் கல்வி நால் வகுப்பாருக்கும் உரியது எனக்கூறியுள்ளார். வள்ளுவரும் மேல் குடிப்பிறப்பினராயினும், கீழ் குடிப்பிறப்பினராயினும் கல்லாதவருக்குப் பெருமை இல்லை எனக் கூறுகிறார்(குறள்-409). ஆகவே சங்ககாலத்தில் அனைவரும் கல்வி கற்பதற்கான உரிமை கொண்டவராக இருந்தனர் என்பது உறுதியாகிறது.

        மேற்கண்ட விளக்கங்களின் காரணமாகக் கீழோர் எனப்படும் நாலாவது வகுப்பினர் வீரம், கல்வி, தொழில், வணிகம், செல்வம் ஆகியவைகளின் காரணமாக மேலோர் ஆவது என்பதும் மேலோர் கீழோர் ஆவது என்பதும் சங்ககாலத்தில் இருந்து வந்தது எனலாம். சிறந்த வீரர்கள் வேந்தர்கள் மூலம் நிலம் பெற்று நிலக்கிழார் ஆவதும், சாதாரண மக்களில் நன்கு கல்வி கற்றவர்கள் அறிவர், தாபதர், அந்தணர் என ஆவதும், தொழில், வணிகம் ஆகியவற்றைத்தொடங்கி அதில் பெரும் செல்வந்தவர்கள் ஆவதும் கீழோர் மேலோர் ஆவதற்கு வழி செய்தது எனலாம். மிக ஏழ்மை நிலையில் உள்ளவர் பெரும் செல்வந்தர் ஆகி சமூகத்தில் உயர்நிலையை அடைவதும், உயர்நிலையில் இருந்த பெருஞ்செல்வந்தர் வறியவர் ஆகி சமூகத்தில் கீழ்நிலையை அடைவதும் இன்றும் உலகெங்கும் இருந்து வருவதுபோல்தான் சங்ககாலத்திலும் இருந்து வந்தது எனலாம். கல்வி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்றும் உலகம் முழுவதும் வகுப்புகள் இருப்பது போல்தான் அன்றும் வகுப்புகள் இருந்தன.

முடிவுகள்:

           பழந்தமிழ்ச்சமூக வகுப்புகள் குறித்து இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் வழியாகக் கீழ்கண்ட முடிவுகளை நாம் வந்தடையலாம்.

1.அந்தணர்கள் என்பவர்கள் சான்றோர்கள் ஆவர். தாபதர், அறிவர், கணியர் போன்றவர்களும் இதில் அடங்குவர். அந்தணர்களும் பார்ப்பனர்களும் வேறு வேறானவர்கள். அந்தணர்கள் எனப்படும் சான்றோர்கள் உயர்ந்தோர்கள் ஆவர். பார்ப்பனர்கள் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்பினர் ஆவர்.

2.தொல்காப்பியர் காலத்தில் வேள்வி செய்தல் என்பது இருக்கவில்லை. வேள்வி செய்தல் என்பது வைதீகத்துக்கு மாறுபட்ட நாத்திகமும் கடவுள்மறுப்பும் கொண்ட மீமாம்சக் கருத்தியலாகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் ஒருசில தமிழக வேந்தர்களால் இது செய்யப்பட்டது. ஆனால் பொது மக்களிடத்தில் அது செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

3.அந்தணர், அறிவர், தாபதர் போன்ற சான்றோர்கள் முதல் வகுப்பையும் அரசர்கள் 2ஆம் வகுப்பையும் வணிகர்களும், வேளாளர்களும் மூன்றாம் வகுப்பையும் சேர்ந்த மேலோர்கள் ஆவர். பிறர் அல்லது ஏனையோரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர் போன்றவர்களும் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்புக்குரியவர்கள் ஆவர். இறுதியாக வருபவர்கள் இழிசனர் ஆவர். இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

4.அந்தணர்கள், அரசர்கள் என்ற வரிசைமுறை மாற்றப்பட்டு அரசர்கள் முதல் வகுப்பிலும் அந்தணர்கள் இரண்டாம் வகுப்பிலும் இருப்பதே முறையானது..

5.சங்ககாலத்தில் வகுப்புகள் இருந்தன. ஆனால் அன்று சாதிகள் இல்லை என்பதாலும், கல்வி அனைவருக்கும் உரியதாக இருந்தது என்பதாலும், நான்கு வகுப்பிலுமுள்ள அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களையும் மணந்து கொண்டனர் என்பதாலும், ஏழைகள் செல்வந்தர் ஆவது நடைபெற்றது என்பதாலும் கீழோர் மேலோர் ஆவதும், மேலோர் கீழோர் ஆவதும் நடைமுறையில் இருந்து வந்தது எனலாம்.

பார்வை:

10.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு மரபியல் - பக்: 327-330.

11, 12.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு புறத்திணையியலில் வாகைத்திணை, பக்: 52,53. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா, பாவை, டிசம்பர்-2007, பக்: 47-48.

13.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு அகத்திணையியல் பக்: 15,16. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா, பாவை, டிசம்பர்-2007, பக்: 14-16.

14.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016(ஆதார நூல்).

15 & 16. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:855-857 & 105-109.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It