கடந்த மாதம் 28 ஆம் தேதி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் மரணமடைந்தார். சினிமா நடிகர்கள் யாராவது இறந்தால் யாருக்கு ஆதாயம் இருக்கின்றதோ இல்லையோ ஊடக வியாபாரிகளுக்கு அது பெரிய ஆதாயம் தரக்கூடிய நிகழ்வு ஆகும்.

தமிழ்நாட்டில் போன் போட்டால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட காலதாமதமாகலாம். ஆனால் ஒரு பிரபலம் சாகக் கிடக்கின்றார் என்று வதந்தி பரவினால் கூட கேமாராவையும், மைக்கையும் தூக்கிக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்து விடுகின்றார்கள்.

வந்தவுடம் கேமாரவை ஆன் செய்து லைவ் போட்டு “இந்த மருத்துவமனையில்தான் அந்த பிரபலம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் மண்டையைப் போட்டுவிடுவார் எனப் பேசிக் கொள்கின்றார்கள்” என ஆரம்பித்து, எவனையாவது பிடித்து “இந்த பிரபலம் பிழைப்பாரா? பிழைக்க மாட்டாரா? அத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? அத எப்படி பீல் பண்ணுறீங்க?" என சாவுக்கு முன்பே ஒப்பாரி வைக்கத் துவங்கி விடுவார்கள்.

இவை எல்லாம் கொஞ்சம் அதீதமாக உங்களுக்குத் தெரியலாம். நீங்கள் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்துகொண்டு இறந்ததில் இருந்து, அதற்கு முன்பும் பின்பும் ஊடகப் பிணந்தின்னிகள் எப்படி தனிமனிதர்களின் சுய உரிமைகளின் மீது கேவலமான தாக்குதலை நடத்தி உள்ளார்கள் எனப் பார்த்தால் நமது விமர்சனம் குறைவாகவே தோன்றும்.sarathkumar pays homage to vijaykanthஉலகில் எல்லா மனிதர்களுக்கும் இறப்பு என்பது இயற்கையானது. ஆனால் முதலாளித்துவ ஊடகங்கள் சிலரின் இறப்பை மாபெரும் இழப்பாக சித்தரிப்பதன் மூலம் தங்களின் கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொள்கின்றன. எந்த அளவிற்கு பிணத்தைக் காட்டுகின்றோமோ அந்த அளவிற்கு அவர்களுக்கு லாபம் அதிகம்.

விஜயகாந்தின் அரசியல் வரவு, ஏதோ சமூகத்திற்கு ஒரு மாற்று அரசியலைக் கொடுக்க வேண்டும் என்பதில் இருந்து தோன்றியதல்ல.

கோயம்பேடு நூறடி சாலையின் அருகே விஜயகாந்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்யாணம் மண்டபம் 1 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது. அந்த இடம் பாலம் கட்டத் தேவைப்படுவதாகக் கூறி மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விஜயகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்

இதுதொடர்பாக, வழக்கு நடத்தி அதில் தோல்வி அடைந்த விஜயகாந்த், அந்த கல்யாண மண்டப இடத்தை அரசிடம் ஒப்படைத்தார். அதற்கு முன்னதாக, தன்னுடைய மண்டபத்தை இடிக்க வேண்டாம் என அப்போதையை முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால் அதை திமுக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

மொத்தம் இருந்த 1 ஏக்கர் நிலத்தில் 56 சென்ட் நிலம் நெடுஞ்சாலை துறையால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வரலாற்று துயரத்திற்கு பழி வாங்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் கட்சியையே ஆரம்பித்தார்.அதற்கு முன்பே கட்சிக்கான திட்டமிடலும் முன்தயாரிப்பும் செய்து வந்தாலும் அந்த நிகழ்வு அவரை உந்தித் தள்ளியது.

இதை அடுத்து 2005 இல் தேமுதிக என்ற சித்தாந்தக் குழப்பமான அந்தக் கட்சி பிரசவிக்கப்பட்டது. நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து தேசிய ‘முற்போக்கு’ திராவிடர் கழகம் என்ற அந்த கருமமான பெயரில் கட்சி தொடங்கினார்.

 ஏற்கெனவே திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் மீதும் கடும் அதிருப்தியில் இருந்த கணிசமான மக்களுக்கு விஜயகாந்த் ஒரு மாற்றாகத் தெரிந்தார்.

2006ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அந்த கட்சி 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. அந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். 2009 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 10.3 சதவீத வாக்குகளைப் பெற்றது.

 அதுவரை கடவுளோடும் மக்களோடும்தான் கூட்டணி என சொல்லி வந்த விஜயகாந்த் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்தார்.

இதனால் அவர் மீதான மக்களின் நம்பிக்கை சரியத் துவங்கியது. திமுகவும் அதிமுகவும் ஊழல் அரசியல் கட்சிகள் என்று இதுவரை பிரச்சாரம் செய்துவிட்டு ஊழல் கட்சியோடு கூட்டணி போட்டதால் அந்த தேர்தலில் தேமுதிகவின் வாக்கு சதவீதம் 7.9 சதவீதமாகக் குறைந்தது. எனினும் அதிமுக வாக்குகளும் கிடைத்ததால் 29 எம்எல்ஏக்களைப் பெற முடிந்தது.

மேலும் இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்ட தேமுதிகவே எதிர்க்கட்சியாக உட்கார வேண்டிய கூத்து அரங்கேறியது.

எப்படியும் ஒரு கைக்கூலியை எதிர்க்கட்சியாக உட்கார வைத்து விட்டோம் என இருந்த ஜெயலலிதாவுக்கு விஜயகாந்தின் செயல்பாடுகள் கடும் எரிச்சலைக் கொடுத்ததும், ஒருகட்டத்தின் மோதல் முற்றி சட்டசபை சிரித்துப் போனதும் அனைவருக்குமே தெரியும்.

அரசியலில் குறுக்கு வேலைகள் செய்வதில் கைதேர்ந்தவரான ஜெயலலிதா கடைசியில் விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே குற்றுயிரும் குலை உயிருமாக தேமுதிக-வை மாற்றினார். அந்தக் கட்சியின் பல ஓடுகாலிகள் வளமான பகுதிக்கு நகர்ந்து சென்றார்கள்.

ஏற்கெனவே அதிமுகவோடு கூட்டணி வைத்து மகேசனோடு கூட்டணியை முறித்துக் கொண்டதால், 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இதனால் மேலும் பல்லிளித்துப் போனது விஜயகாந்த்தின் யோக்கியதை. அந்தத் தேர்தலில் தேமுதிக வாக்கு சதவீதம் 5.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

2016 சட்டமன்றத் தேர்தலில் அது 2.4 சதவீதமாக அதலபாதாளத்தில் வீழ்ந்தது. விழுப்புரத்தில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வி அடைந்தார். விஜயகாந்த் தலைமையில் உருவான மக்கள் நலக் கூட்டணி மண்ணைக் கவ்வி மயானத்தை நோக்கிச் சென்றது.

2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 0.43% வாக்கு வங்கியை மட்டுமே பெற்றது. இதன் மூலம் விஜயகாந்த் இறப்பதற்கு முன்பே அவரது கட்சி மரணித்துப் போனது உறுதியானது.

ஆனால் உண்மை இப்படி இருக்க, கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் விஜயகாந்தின் இறப்பிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து “இன்று நம் தலைவரை இழந்திருக்கிறோம். ஆனால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நமது தலைவரின் கனவை நிச்சயமாக வெற்றி பெறச் செய்து வெற்றிக்கனியை அவர் பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள் தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை இந்த ‘நல்ல நாளில்’ நாம் அனைவரும் சேர்ந்து சூளுரைப்போம். உறுதியேற்போம்.” என பிரேமலதா பேசி இருக்கின்றார்.

சமூகத்திற்கு எந்தப் பங்களிப்பையும் வழங்காத, எந்த மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்காத பிரேமலாதாவும், சுதீசும், விஜயகாந்தின் மகன்களும் எந்த தைரியத்தில் அரசியல் பேசுகின்றார்கள்?

தர்மபிரபு அரசியல், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசியல் என எல்லா ஏமாற்று அரசியலும் புதைக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இனியும் தர்மபிரபு வேடமும், வள்ளல் வேடமும் மக்களிடம் எடுபடாது.

 வள்ளல்களுக்கே அந்த நிலைமை என்றால், வள்ளலின் அடிபொடிகளுக்கு சொல்லவே தேவையில்லை. மக்களுக்கு சோத்து மூட்டைகளைக் காட்டி பண மூட்டைகளை கட்டிக்கொண்டு போகத் துடிப்பவர்களின் காலம் முடிவுக்கு வரப் போகின்றது.

நம்மைப் பொறுத்தவரை விஜயகாந்திற்கு முன்பே தேமுதிக அடக்கம் செய்யப்பட்டு விட்டது. பிணங்கள் ஒரு போதும் உயிர்பெறாது என்பதால் தேமுகவுக்கும் அந்த வாய்ப்பு இல்லை.

- செ.கார்கி

Pin It