மதிப்பிற்குரிய அப்துல்லா அவர்களே...

வணக்கம். நீங்கள் 'திமுக அயலக தமிழர் நலத்துறைக்கு' பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது 'பிரவாசி லீகல் செல்' எனும் அயலக வாழ் இந்தியர்களுக்காக ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய அமைப்பின் 'ஆப்பிரிக்க கண்டத்தின் ஒருங்கிணைப்பாளர்' என்ற முறையில் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். சில முயற்சிகளில் உங்களுடன் பணியாற்றி இருக்கிறேன். வாழ்த்துக்கள்.

சமீபத்தில் பாராளுமன்றத்தில் நீங்கள் பெரியார் பற்றி பேசியவற்றை இடைமறித்து ஆளும் கட்சியினர் பேசியபோதும், ஆளும் கட்சியினர் காங்கிரஸை பார்த்து திமுகவைச் சேர்ந்த அப்துல்லா எனும் பாராளுமன்ற உறுப்பினர் பேசிய கருத்துக்களில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோது, கார்கே தெரிவித்த கருத்தும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்த கருத்தும் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்ததையும், ஜெயராம் ரமேஷ் மேலே காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்து சமூக வலைதளங்களிலும் கீற்று இதழிலும் நான் எழுதிய கட்டுரை (https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/46093-2023-12-13-20-16-24) இருக்கிறது. படித்துவிட்டு நன்றி கூறினீர்கள்.

இப்படி பல தருணங்களில் சரியான கருத்துக்களை ஏற்றுப் பாராட்டுவதும், தவறாகப் பேசும்போது கண்டிப்பதும் தான் ஒரு நல்ல சமூகப் போராளிக்கு அழகாக இருக்கும்.

அண்மையில் நீங்கள் பேசிய ஒரு காணொளியைப் பார்க்கும் போது, நீங்களா இப்படி தவறான பார்வையும் சிந்தனையும் கொண்டு இயங்குகிறீர்கள் என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்கத் தோன்றியது.

இயக்கம், கட்சி இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்த புரிந்த நீங்கள் மற்றவற்றைப் புரியவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் பேசியவற்றை அப்படியே Decode செய்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

Quote

ஆம் இந்தியாவில் தோன்றியது ஐந்து இயக்கங்கள் (Movement)

காங்கிரஸ் கட்சி: ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவது

இந்திய முஸ்லிம் லீக்: தனி நாடு வாங்குவதற்கு.

கம்யூனிஸ்ட்: தொழிலாளர்கள் முதலாளிகள் ஆகவேண்டும்

ஆர் எஸ் எஸ்: அகண்ட பாரதம்

திராவிட இயக்கம்: ஆர் எஸ் எஸ் சாகடிக்க

இதில் ஆர் எஸ் எஸ் இயக்கமும் திராவிட இயக்கம் மட்டும் தான் இப்போது இருப்பதாகவும், மற்ற இயக்கங்களின் தேவை பெரிதாக இல்லை என்று கூறி இருக்கிறீர்கள்.

1. காங்கிரஸ்

காங்கிரஸ் சுதந்திரம் வாங்கிய வரையில் இயக்கமாக இருந்தது. இப்போது அது கட்சியாக இருக்கிறது

2. இந்தியா முஸ்லீம் லீக்

இந்திய முஸ்லீம் லீக் பற்றி பேசும்போது அவர்கள் பாகிஸ்தான் தனி நாடாக வேண்டும் என்பதை சாதித்து விட்டதாகவும் இப்போது இருக்கும் அந்த அமைப்புகள் சிறுபான்மையினர் நலன்களுக்காக மட்டும் பாடுபடும் ஓர் இயக்கம் என்றீர்கள். நீங்கள் சார்ந்த உங்கள் மசூதி உங்கள் கருத்துக்களை ஏற்கிறதா?

3. கம்யூனிஸ்ட்

கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் தேவை வெகுவாக குறைந்து விட்டது. இன்றைக்கு எம்என்சி-லே பார்த்தீர்கள் என்றால் அவர்கள் போனஸ் கொடுக்கும் போது ஷேர்களாகத் தருகிறார்கள். கம்யூனிஸ்ட் அதைத் தானே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். தொழிலாளியும் முதலாளி ஆக வேண்டும் என்று. குறைந்தபட்ச சம்பளம் உறுதி செய்யப்பட்டது விட்டது. போராடக்கூடிய நிலையில் இல்லை. இன்றைக்கு ஸ்ட்ரைக்கே இல்லையே. நாங்கள் எல்லாம் சின்னபிள்ளையாக ஸ்ட்ரைக் ஸ்ட்ரைக் என்பார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ஸ்ட்ரைக் என்றால் என்னவென்றே தெரியாது. அந்த அளவுக்கு எல்லாமே அவர்களுக்கு உறுதி செய்து விட்டார்கள். அவர்களது தேவை இன்றைக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது.

4. இந்துத்துவ இயக்கம்

அவர்களுக்கு ராமர் கோவில். அதை கட்டிட்டாங்க. ஹிந்தியை பொது மொழியாக ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை மதம், அகண்ட பாரதம். எங்கே இருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து பங்களாதேஷ் வரை.. இதெல்லாம் சேர்த்தால் முஸ்லீம் மெஜாரிட்டி உள்ள COUNTRY ஆகிடும். அதை இன்னும் அவனுங்க கணக்கு பண்ணல. அதை இன்னும் சரியா கணக்கு பண்ணல. கணக்கு பண்ணினா அஜெண்டாவுல இருந்து அகண்ட பாரதம் expel ஆகிடும். எடுத்துறுவான். அகண்ட பாரதம் இப்படி ஏகப்பட்டது சொல்றான். There are Certain Things to be achieved. அவர்கள் இன்னும் movement ஆக தான் இருக்கான். ஹிந்துத்துவா இயக்கம் இன்னும் movement ஆக தான் இருக்காங்க.

5. திராவிட இயக்கம்

அதாவது திராவிட இயக்கம். நம்ம. அவன் என்னைக்கு இறக்கிறானோ அன்னைக்கு தான் நாம சாவோம். அவன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம உயிரோடு இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

அப்போ 2 தான் இயக்கமா இந்த நாட்டிலே மிச்சம் இருக்கு. ஒண்ணு பாசிசம் பேசக்கூடிய அவர்கள். இன்னொன்னு அவர்களை எதிர்க்க கூடிய நம்ம.

இந்த இந்திய துணைக்கண்டத்தில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் நம்ம மட்டும் தான் அவர்களை எதிர்க்க முடியும். கருத்தியல் ரீதியாக நம்ம மட்டும் தான் எதிர்க்க முடியும். மம்தா பேனர்ஜியால எதிர்க்க முடியாது. கேசிஆர் கே எஸ் ஆர் ஆல எதிர்க்க முடியாது. எதிர்க்க முடிந்தது நாம தான். அது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. அவர்கள் பேசுவது எதிர்ப்பு அரசியல். நம்ம பேசுறது அன்பு.

Unquote

அப்துல்லா அவர்களே, பாசிச அரசியலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அதை எதிர்க்க சித்தாந்த ரீதியில் திராவிட இயக்கத்தால் மட்டுமே முடியும், மற்றவர்களால் முடியாது என்பது தான் மடமைத்தனம் என்கிறோம்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை திராவிட இயக்கம் இருக்கிறதா? காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் இவர்களின் சித்தாந்தம் என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு பேசுவதற்கு முயலுங்கள்.

இந்தியாவில் உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளி வர்க்கம் எல்லாமும் கொடுத்துவிட்டதாக முதலாளித்துவ சிந்தனையில் இருந்து பேசும் போக்கு வன்மையாக கண்டனத்துக்கு உரியது. ஒவ்வொரு நாளும் போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். கம்யுனிஸ்ட்கள் அவர்களோடு நிற்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தது கம்யுனிஸ்ட்கள். இன்று தமிழகத்தில் இருக்கும் போக்குவரத்துத் துறை, மின்வாரியத் துறை, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொருவரும் போராட்டங்களை அறிவித்து போராடி வருகிறார்களே!! அது கூட உங்கள் கண்களுக்குப் படவில்லை என்றால் நீங்கள் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறீர்கள் என்று பொருள். அரசே அவர்களுக்கான உரிமைகளை கொடுக்கத் தவறுகிறது எனும் நிலையில் தனியார் துறையினர் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் இதை நிறைவேற்றி வருகிறது என்று போகிற போக்கில் பொய்களை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறீர்கள்.

அடுத்ததாக சித்தாந்த ரீதியிலே பாசிசத்திற்கு திராவிட இயக்கம் தான் எதிரி என்கிறீர்கள். முதலாளித்துவத்தை உள்ளடக்கியது தான் பாசிசம். மத பிளவுவாதத்தை உள்ளடக்கியது தான் பாசிசம். ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொண்டு நடப்பது தான் பாசிசம். திராவிட இயக்கங்கள் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பதோடு நின்று விடுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து எதிர்ப்பது தான் கம்யூனிசம்.

இதுவரை பாசிச ஹிந்துத்துவா கும்பல்களின் கொலைவெறி தாக்குதல்களுக்கு நேரடியாக களம் கண்டு பலரது உயிரை தியாகம் கொடுத்து பாசிச ஹிந்துத்துவா கும்பல்களை நேருக்கு நேராக எந்த சமரசமும் இன்றி எதிர்த்து வருவது கம்யூனிசம் மட்டுமே. அப்படி திராவிட இயக்கம் பாசிச ஹிந்துத்துவா கும்பலுக்கு எதிராக செய்த செயல்கள் என்ன என்ன? என்பதைப் பட்டியலிடுவீர்களா? நாங்கள் இடத் தயார்.

ஆசிபா எனும் சிறுமி பாசிச ஹிந்துத்துவ கும்பல்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டபோது, திராவிட சித்தாந்தம் கொண்டு காஷ்மீரில் இருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை. அங்கே இருந்து எழுந்த குரல் 'முகமது யூசுப் தாரிகாமி' என்ற கம்யுனிஸ்டின் குரல் என்பதை மறந்து விட வேண்டாம்

அரசியல் கட்சி என்பது வேறு. இயக்கம் என்பது வேறு என்று கூறத் தெரிந்த உங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இயக்கங்கள் பற்றிய புரிதல் இல்லை.

எங்களது

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,

இந்திய மாணவர் சங்கம்,

இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,

அகில இந்திய விவசாயிகள் சங்கம்

போன்ற அமைப்புகள் இயக்கங்கள் நடத்தி இன்று வரை மக்களுக்காக உரிமைகளை மீட்டு வருகிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

கடலில் கடைசி அலை இருக்கும்வரை,

இவ்வுலகில் கடைசி மனிதன் வாழும்வரை,

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை

உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்டை ஏற்று நடப்பார்கள்

பாசிசம் என்பது மிகக் கொடிய மிருகம். இதை அனைத்து இயக்கங்களின் கூட்டு முயற்ச்சியால் மட்டுமே முறியடிக்க முடியும். திராவிட இயக்கம் என்பது தமிழக எல்லைக்குள்ளே மட்டும் முடங்கி கிடக்கிறது. அதனால் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாசிச ஹிந்துத்துவாவை எதிர்த்துப் போராடிவிட முடியாது என்பதை மனதில் கொண்டு இன்னும் நிறைய படித்து தெளிவு பெற்று, அதன் பின்னர் இதைப்பற்றி பேசலாம் என்பது எங்கள் வேண்டுகோள்.

- ஆர்.எம்.பாபு

Pin It