வைகோவைப் போலச் சுயநலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைபாட்டையும் மாற்றிக்கொள்பவர்தான் வைகோ என்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அண்மைக்கால அவரின் தடித்த பேச்சுகள் இதை உறுதி செய்வதாக இருக்கின்றன.

தே.மு.தி.க.வை ஒரு தடவை அழைத்தார் கலைஞர். அதற்காக வசைபாடிய வைகோ, பல தடவை அழைத்து, அழைத்து தன் கூட்டணியில் சேர்த்துக்கொண்டார்.

போகட்டும். இனி அவருடைய தே.மு.தி.க. விஜயகாந்த கூட்டணி எப்படித் தேர்தலைச் சந்திக்க போகிறது, மக்களின் அவர்களின் திட்டங்கள் என்ன என்று தன்னுடைய வேலையை பார்க்க வேண்டியது வைகோவின் வேலை.

அதை விட்டுவிட்டு விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்க்க 500 கோடி ரூபாயும், 80 தொகுதிகளும் தருவதாகத் தி.மு.க. பேரம் பேசியது என்று தேவையில்லாமல் வசைபாடியிருக்கிறார்.

கலைஞரும், தளபதியும் அதை மறுத்தனர். விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவே வைகோவின் கூற்றை மறுத்துவிட்டார்.

ஆனாலும் வைகோவின் நாக்கு சும்மா இருக்குமா?

மத்தியில் அமைச்சர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக பா.ஜ.க பேரம் பேசியது விஜயகாந்திடம் என்று இன்னொரு திரியை கொளுத்திப் போட்டார் வைகோ.

தி.மு.க. தரப்பிலும் பா.ஜ.க தரப்பிலும் எழுந்த கண்டனங்களுக்கு இதுவரை வைகோவால் விளக்கம் தர முடியவில்லை.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணலுக்கு வைகோ சென்றிருந்தார். அப்போது நேர்காணல் செய்தவர் வைகோவிடம், தே.மு.தி.க.வுக்கு 500 கோடியும் 80 சீட்டும் தருவதாகத் தி.மு.க. பேரம் பேசியதாகச் சொல்லும் நீங்கள், அ.தி.மு.க.வின் 'பி' டீமாகச் செயல்படுவதற்கு உங்களுக்கு 1500 கோடிப் பணம் கொடுக்கப்பட்டது... என்று கேள்வியை முடிக்காமல் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, முகம் கடுகடுப்பாக மாறி தடாலென எழுந்தார்.

சட்டையில் மாட்டியிருந்த ஒலி வாங்கிச் சிறு கருவியை பிடுங்கிப்போட்டார். அதே கடுகடுப்புடன் அறையை விட்டு வெளியேறினார்.

இது அவை நாகரிகம் அன்று 'யாகாவாராயினும் நாகாக்க', 'கனியிருப்பக் காய்கவர் தற்று' என்னும் குறள் வரிகளை வைகோ சொல்லக் கேட்டிருக்கிறோம். அறிவுரை அவருக்கு அன்று, பிறருக்குதானோ!

500 கோடி என்று தி.மு.க.வை குறைசொல்லும் இவர், தன் மீதுள்ள 1500 கோடிக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் தர வேண்டாமா.

 தன் வினை தன்னைச் சுடும் என்றார் பட்டினத்தார்.  சுட்டுவிட்டது.

Pin It