நீ அறிந்த வர்ணன் தான் பேசுகிறான்.

தூர தேச வர்ணனைக்கு தாவும் புது குரல் இது. குளக்கரையில் பூவாகி சிரிக்கும் இவளுக்கு.... நீர் தெளித்து நிலா காட்டவா. நீல வானம் கவிழ்த்தி கனா மூட்டவா. பூக்களால் செய்த ஞான பெருஞ்சுவர் இது. நடை பயிலும் சிறுமி சித்திரமானது... கூடவே ஊதா வண்ண புல்லாங்குழல் ஆனது... என்று தினம் தினம் ஊர்ந்து கொண்டிருக்கும் பெருந்தூர கோலம் இது.

உன் நினைப்பெல்லாம் நான் அறிவேன். சொட்டாங்கல் தவறும் நினைப்பில் காற்றில் மிதக்கும் சிறு புன்னகை அல்லவா அது. கால் இடரும் கனவின் கம்பியில் ஊர்ந்து போகும் யாக்கை சிறகல்லவா நீ. கன்னம் கொஞ்சி காணாமலா போனேன். கண்கள் திறந்து பார்... கழுத்தோர கற்றைக் கூந்தல் என்னைத்தானே அசைக்கிறது. மலரும் நாட்கள் இவை. ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறம் எனலாம். நிறமற்றும் இருக்க கற்ற இருபது அர்த்தங்களும் இருநூறு மொழிநடையின் பிள்ளைகள். அறியாயோ.

நிறக் காரணிகள் நித்தம் பேசும் பொழுதுகளை நோகாமல் இழுத்து வந்து கூட்டாஞ்சோறு ஆக்குகிறது... கூடிக் களித்த நினைவுகள். முடிந்த எதுவும் தொடங்கும் என்பது தானே அறிவியல். அதன் வழியே செப்பு வெச்சு விளையாடும் சித்தாந்தம் தானே யாவும். மேலும்... மேவும் மெல்லிசை மேற்கே ரெக்கை கட்டி முனங்கும். முழங்கால் கட்டிக்கொண்ட அடுத்த பத்தி இப்படித்தான் அவிழும்.

மலைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் மர்மம் இவன். மயக்கும் மாலை பொழுதென வா. மௌனம் கலைத்து மேற்கு சூரிய கொத்தோடு மேகத்தில் மிதக்கலாம். புதிர் நிறைந்த பூச்செடி இது. மடல் வழியே பனித் துளிகள் ஆகி உருள். சீக்கிரம் சீக்கிரம் விடியல் காண்பாய். சீக்கிரம் சீக்கிரம் விஜியும் காண்பாய். வியக்கும் விஷயமெல்லாம் மயக்கும் மாவிலை. சிரிக்கும் ரகசியமெல்லாம் ராத்திரியில் தோரணம்.

இந்த வனம் நீ கை விரிக்கும் இடம் வரைக்கும் விரியும். இந்த வானம் நீ சிறகடிக்கும் தூரம் வரைக்கும் இருக்கும். இந்த நதி நீ கடந்து முடிக்கும் வரை சிரிக்கும். இந்த மொழி நீ படித்து தீரும் வரை பிறக்கும். இரைச்சலை இசை ஆக்கும் இவன் வழி. கண்கள் கட்டிக் கொண்டும் கரை சேரலாம் உனது விழி. வெயில் திசையும் மலை திசையும் சந்திக்க ஒரு காலம் வந்திருக்கிறது. அதில் மஞ்சள் நீர் ஊற்றி விளையாட ஒரு நோம்பி வந்திருக்கிறது. சிந்தும் கவி சித்திரம் என்று யோகம் வந்திருக்கிறது. அதில் முந்தும் முத்தம் யாருடையது என்ற சிக்கல் ஒன்றிருக்கிறது.

இனிப்பு சங்கிலி இழுத்து போகும் உறவிது. இறுகப்பற்ற ஒரு தூக்கணாங்குருவி கனவு வேண்டும். படித்து பார்க்க நினைத்ததை மடித்து மனதிலும் கொள்ள ஆசீர்வதிக்கலாம் அலையாத்தி காடுகள். அங்கொரு கால் தடமென இருக்கும் நம் காலம். உன்னை சொல்லும் ஒவ்வொரு நினைப்புக்கும் நட்சத்திரம் மாட்டி விடுகிறேன். அசைந்தாடும் டிசம்பரை சீக்கிரம் இழுத்து வந்து கிறிஸ்மஸ் ஆக்கு. என்னை சொல்லும் உன் தோட்ட பூந்தொட்டிக்கு புது பெயர் வைக்கலாம் வா. மின்னும் நிறமி இவன் உச்ச உறுமி.

எந்த கடிதம் முடியும். இந்த கடிதம் முடிய. எந்த கனவு தொடங்கும். இந்த கனவு அடங்க. களவாட வந்தாலும் சரி.. கனவாட வந்தாலும் சரி. காற்றோடு காத்திருக்கும் மலை உச்சி மர்மம் இது. காதாட்டி உரசி போ... பெண் யானை பேரழகே. கை கோர்த்து நெற்றி முட்டு. என் நிலத்து நீர் உளியே.

முடிக்க மனமில்லை. இருந்தாலும் மூச்சு முட்டும் சிறு பிரிவொடு...

- கவிஜி

Pin It