திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் எனச் சொன்னார்கள். ஆனால் சாராய ஆறு மட்டுமே 24 மணி நேரமும் தமிழ்நாட்டில் தடை இன்றி ஓடிக் கொண்டு இருக்கின்றது. சாமானிய உழைக்கும் மக்களை எல்லாம் குடி நோயாளியாக மாற்றி, அவர்களின் குடும்பத்தை அழித்து, அந்த பாவக் காசில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, இன்னும் ஒரு படி மேலே போய், அந்தத் தொழிலாளர்களின் உழைப்பை முதலாளிகள் ஒட்ட சுரண்டி அவர்களை சாகடிக்கவும் துணிந்திருக்கின்றது.

அதற்காக தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில் (Factories Act 1948) திருத்தங்களைச் செய்யும் சட்ட முன்வரைவை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா சட்டமாக மாறினால், சட்டத்தின் 51, 52, 54, 55, 56 மற்றும் 59 ஆகிய பிரிவுகளில் மாற்றம் கொண்டு வர முடியும்.

பிரிவு 51ன் படி, எந்த ஒரு வாரத்திலும் 48 மணிநேரத்திற்கு மேல் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளி வேலை செய்யத் தேவையில்லை. பிரிவு 52ன் படி எந்த ஒரு தொழிலாளியும் வாரத்தின் முதல் நாளில் வேலை செய்யத் தேவையில்லை.

பிரிவு 54ன் படி எந்த நாளிலும் ஒன்பது மணிநேரத்திற்கு மேல் தொழிற்சாலையில் வேலை செய்யத் தேவையில்லை. பிரிவு 55 இன் படி, எந்தவொரு தொழிலாளியும் குறைந்தபட்சம் அரை மணி நேர இடைவெளி இன்றி ஐந்து மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.

பிரிவு 59ன் படி, ஒரு தொழிலாளி ஒரு தொழிற்சாலையில் ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் அல்லது வாரத்தில் 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் போது, அந்த கூடுதல் நேர வேலைக்கு தொழிலாளியினுடைய சாதாரண ஊதியத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.laboursஇந்தப் பிரிவுகளில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்த முடியும்.

ஏற்கெனவே பல தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் மலிவான கூலிக்கு 12 மணி நேரங்களுக்கு மேல் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள். அது போன்ற தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமை கூட கிடையாது.

இதற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளும், இயக்கங்களும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றர். ஆனால் கார்ப்ரேட்களின் அடியாளாக செயல்படுவதையே தொழில் வளர்ச்சி என நம்பும் கட்சிகள் இந்தக் கோரிக்கையை கண்டு கொண்டதே கிடையாது.

பிஜேபியை எதிர்க்கின்றோம் என்று தேர்தலில் ஓட்டு வாங்கிய திமுக அரசு, அந்த பிஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விரோத புதிய தொழிலாளர் சட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்த வேலை செய்துகொண்டு இருக்கின்றது.

மோடி அரசு கடந்த 2020 ஆண்டு 'தொழில்துறை உறவுகள் சட்டம் 2020’, ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020’, ‘பணியிட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்டம் 2020’ ஆகிய மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இதன் மூலம் கார்ப்ரேட்டுகளுக்கு தொழிலாளர்களை சுரண்டுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் தொழில் துறைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்களின் பணி நேரத்தை அதிகமாக்க முடியும்.

ஓவர்டைம் என்பதற்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் கூடுதல் ஊதியம் இல்லாமல் கட்டாய ஓவர்டைம் வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

பெண் தொழிலாளர்கள் அனுமதியோடு இரவு ஷிப்டில் அவர்களைப் பணியில் ஈடுபடுத்தலாம்.

அபாயகரமான பணி நிலைமைகள் என்னவென்று திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசுகளும் மாநில அரசுகளும் அறிவிப்புகள் மூலம் அவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

80 நாட்கள் பணிபுரிந்தால் தான் மகப்பேறு விடுமுறை உறுதி செய்யப்படும்.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வசிக்குமிடம், உணவு ஆகியவற்றை நிர்வாகம் உறுதி செய்யத் தேவையில்லை.

குறிப்பிட்ட கால அளவு வேலைவாய்ப்பு (Fixed Term Employment – FTE) மூலம் ஒப்பந்த தொழில்முறை சட்டபூர்வமாக்கப்பட்டது. அதே போல FTE தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது சட்டப்படி பணிநீக்கம் என்று கருத இயலாது.

300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள ஆலைகளில் மட்டுமே தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய அனுமதி பெற வேண்டும். சம்பந்தபட்ட அரசு 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அனுமதி வழங்கப்பட்டதாக நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

துப்புரவு, காவல் போன்ற நிலையான வேலைகள் முக்கிய செயல்பாடுகளாகக் கருதப்படாது.

பிஎஃப், பென்ஷன், காப்பீடு, பணிக்கொடை, மகப்பேறு உதவி, விபத்துக்கான இழப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் சட்டரீதியாக உறுதி செய்யப்படாது.

வேலை நிறுத்தத்திற்கு முன்னர் 14 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும், தொழிலாளர் துறைக்கு 2 நாட்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும்.

தொழிலாளர் துறை சமரசப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால், வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளக்கூடாது.

வேலை நிறுத்தம் செய்யலாம் என்று கோரினாலோ, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலோ, அபராதம் அல்லது சிறை விதிக்கப்படும்.

புது நிறுவனங்களுக்கும், ‘சோதனை ஓட்டம்' (Trial Run) செய்யும் நிறுவனங்களுக்கும், ‘பல கட்ட' (Progressive Stages) உற்பத்தியில் உள்ள நிறுவனங்களுக்கும் போனஸ் அளிப்பதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்படுகிறது. புது நிறுவனங்களுக்கு 5 வருடகாலம் வரை இந்த விதி விலக்கு அளிக்கப்படும்; மற்றவர்களுக்கு எந்த கால வரம்பும் இல்லை.

300 தொழிலாளர்களுக்கு கீழே உள்ள நிறுவனங்களில் தொழில் உறவு சட்டத்தின் சில சரத்துகளில் இருந்து விலக்குகள் அளிக்கப்படுகிறது.

ஆலை விபத்தில் தொழிலாளர் இறக்கும் நிலையில் 5 லட்சம் அபராதம் அல்லது 2 வருடம் வரை சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட முடியும்.

ஆலையில் விபத்து ஏற்படுவதற்கு தொழிலாளர் மீது பழி சுமத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளருக்கு 1 லட்சம் அபராதம் அல்லது 1 வருடகால சிறைத் தண்டனை விதிக்கலாம்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை ஆலையில் நியமிப்பதற்கு முதன்மை நிர்வாகம் அனுமதி பெற வேண்டியதில்லை. ஒப்பந்ததாரர்கள் ஊதியம் முறையாக கொடுக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியதில்லை. ஒப்பந்ததாரர் கொடுக்கவில்லை என்றால் முதன்மை நிர்வாகம் ஊதியத்தை நேரடியாகத் தர வேண்டும்.

சிவில் நீதிமன்றங்களில் தொழிற்தாவாக்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க முடியாது.

தொழிலாளர்கள் நீதிமன்றங்களுக்குப் பதிலாக தீர்ப்பாயங்கள் வழக்குகளை விசாரிக்கும். தீர்ப்பாயங்களில் ஒரு நீதிமன்ற பிரதிநிதி, ஒரு அரசு பிரதிநிதி பங்கேற்பார்.

தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளை மாற்றவோ, நிராகரிக்கவோ அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. தொழிலாளர்கள் வழக்குகளை உயர்நீதி மன்றங்களுக்கு கொண்டு செல்லலாம்.

இவ்வளவு அபத்தங்கள் நிறைந்த இந்த சட்டத்தை கார்ப்ரேட்கள் அனைவரும் கொண்டாடினார்கள். பல ஆண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக நாசம் செய்யும் மோடி அரசின் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக இன்றுவரை கம்யூனிஸ்ட்கள் போராடி வருகின்றார்கள்.

ஆனால் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் திமுக, தொழிலாளர் விரோத போக்கில் தாங்கள் பாசிச பிஜேபிக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள்.

சுவீடன் போன்ற நாடுகளில் தினசரி வேலை நேரம் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் உற்பத்தித் திறன் அதிகரித்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆனால் இந்தியாவில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றுவதற்கும் தொழிலாளர்களை சட்டப்படியே முதலாளிகள் ஒட்ட சுரண்டுவதற்குமான ஏற்பாட்டை பாசிச கும்பல் செய்து கொண்டிருக்கின்றது.

பாசிசத்தை எதிர்ப்போம் என்று சொல்லும் திமுகவும், கார்ப்ரேட்டுகளின் நலனில் தாங்கள் பாசிஸ்ட்டுகளுக்கே சவால் விடக் கூடியவர்கள் என்பதை நிரூபித்து இருக்கின்றார்கள்.

அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை என்றால், ஏற்கெனவே குறைந்த பட்ச ஊதிய உத்திரவாதம் இன்றியும், தொழிற்சங்கம் வைக்கும் உரிமை இன்றியும் அற்ப ஊதியத்துக்கு 12 மணி நேரத்திற்கு மேல் சுரண்டப்பட்டும் தொழிலாளர்கள் இனி சட்டப்படியே அந்த சித்தரவதையை, சுரண்டலை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

- செ.கார்கி

Pin It