EWS பிரிவினருக்கு சிறப்பு சலுகைகளும் இட ஒதுக்கீடும் வழங்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள 103வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பது கண்கூடு. மேலும் இச்சட்டத் திருத்தத்தை சட்டப்பூர்வமாக மட்டுமே எதிர்த்தால் அது நம்மை தீர்வு காண இயலாத, ஒரு புதிய அரசியலமைப்பு சிக்கலுக்குள் கொண்டு போய் விடும் என்ற அச்சமும் உள்ளது. இச்சட்டத்திருத்தத்தை அதன் சட்டப்பூர்வ எல்லைக்குள் நின்று கொண்டு எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிய, மாநில அரசுகள் EWS இட ஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பதையும் சேர்த்தே விவாதிக்க வேண்டும். எனினும், இச்சட்டத் திருத்தத்தை எதிர்கொள்வதற்கான சரியான வழிமுறை இன்னும் வகுக்கப்படவில்லை என்பதால் இதில் எழும் சட்டபூர்வமான கேள்விகளை ஆராயலாம். அவ்வகையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக எழும் கேள்விகளை மட்டுமே ஆராய்வோம்.

103 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினால் சேர்க்கப்பட்ட அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15(6), EWS பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான உரிமையையும், கல்வி நிலையங்களில் அதிகபட்சமாக 10% இட ஒதுக்கீடு தருவதற்கான உரிமையையும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கொடுத்திருக்கிறது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 16(6), பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வழிவகை செய்கிறது. இந்த 10% EWS இட ஒதுக்கீடு பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட (SC, ST, OBC) பிரிவினருக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. குடும்ப வருமானம் உள்ளிட்ட பொருளாதார அளவுகோல்களை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கண்டறியும் அதிகாரத்தை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இச்சட்டத்திருத்தம் தருகிறது. அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 15(4), 15(5), 16(4) ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த 10% EWS இடஒதுக்கீட்டின் கீழ் வரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே வரும் ஏழைகளாக இருந்தாலும், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு EWS இட ஒதுக்கீடு கிடையாது. அந்த வகையில் EWS இட ஒதுக்கீடை உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு என அழைப்பதே சரியாக இருக்கும்.reservation in state govtஇந்திரா சகானி வழக்கு: 

பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை என்னவாக இருக்கிறது என்பதில் இருந்து தொடங்கி அரசியலமைப்பு சட்டத்தை ஆராயலாம். இந்திரா சஹானி (நவம்பர் 1992) வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 8 நீதிபதிகள், நரசிம்ம ராவ் கொண்டு வந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டு ஆணை (அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் அல்ல) அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தார்கள்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிராகரிக்க நீதிபதிகள் கூறிய காரணங்களில் முக்கியமானது என்னவெனில் வருமானத்தையும் சொத்து மதிப்பையும் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க முடியாது என்பதே. மேலும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்றுவதையே முதன்மையாக அக்கறையாக அரசியலமைப்புச் சட்டம் கொண்டுள்ளது.

நரசிம்மராவ் கொண்டு வந்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா இல்லையா என்பதை அடிப்படையாக வைத்தே இந்திரா சஹானி வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டது. தற்பொழுது பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை ஆராய வேண்டும். பாராளுமன்றத்திற்கு பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்தம் கொண்டு வருகிற அதிகாரம் இருக்கிறதா என்பதல்ல நமது வாதம். மாறாக, இச்சட்டத்திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்தோடு பொருந்திப் போகிறதா என்று பார்க்கப் போகிறோம். நமக்கு எழும் கேள்வி என்னவெனில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் உள்ளதா என்பது மட்டுமே.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள 'பின்தங்கிய நிலை' (Backwardness) என்ற சொல்லுக்குள் சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் மட்டும் தான் அடங்குவார்கள் என்ற உறுதியான விடை இல்லை. அது குறித்த பாராளுமன்ற அவையின் (Constituent Assembly) விவாதங்களும் சரியான விளக்கத்தை நமக்கு தரவில்லை. அந்த வகையில், பொருளாதார அளவுகோலை மட்டுமே அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்திற்கு எதிரானது என்ற முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. EWS இட ஒதுக்கீடு வறுமையை ஒழிக்கப் போவதில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். இருப்பினும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு வறுமையை ஒழிக்கும் என்ற சிலர் கற்பனை செய்வதை நாம் தடுக்கவில்லை. கற்பனைக்கு ஏது எல்லை? இந்திய அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடும் சமத்துவ உணர்வை இந்த 10% EWS இட ஒதுக்கீடு எப்படி மேலும் மேம்படுத்தப் போகிறது என்று விளக்குவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமல்ல. அதாவது EWS இட ஒதுக்கீடு வறுமையையும் ஒழிக்கவும் உதவாது. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவ உணர்வையும் (spirit of equality) மேம்படுத்தாது.

வறுமை ஒழிப்பை தனது முதன்மையான கடமையாக ஒரு அரசு கருதினால், அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுக்க அரசுக்கு பொருளாதார நிலை ஒரு அளவுகோலாக அமையும். ஆனால் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தருவதற்கு பொருளாதார அளவுகோலை பயன்படுத்தினால், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற கேள்வி எழுவது இயல்பே. இருப்பினும் வறுமை பல கடுமையான தீமைகளையும், பாதகங்களையும் ஏற்படுத்துவதால், வறுமையை ஒழிக்க சிறப்புச் சலுகைகளையும் இட ஒதுக்கீட்டையும் அறிமுகப்படுத்த அரசு தனது சிறப்பதிகாரத்தை பயன்படுத்தினால், அவ்வகையான சிறப்பு நடவடிக்கைகள் 'அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு' கோட்பாட்டிற்கு எதிரானது என்று சொல்ல முடியுமா என்ற கேள்வி எழும். இருப்பினும் புதிதாக சேர்க்கப்பட்ட 16(6) சட்டப் பிரிவின் உதவிகொண்டு, பொது வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் விதத்தை மாற்றுவதால், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தோடு நியாயப்படுத்த இயலாது.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட (SC, ST, OBC) பிரிவினருக்கு அரசு வேலைகளில் ”போதுமான பிரதிநிதித்துவம்” இல்லை என்பதால் அவர்களுக்கு பிரிவு 16(4) இன் கீழ் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த போதுமான பிரநிதித்துவம் இல்லாதவர்கள் என்ற அடிப்படை EWS இட ஒதுக்கீட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டப்பிரிவு 16(6) ல் சேர்க்கப்படவில்லை. இப்புதிய சட்டப்பிரிவு 16(6) சமூக ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதற்கு பதிலாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பொதுத்துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை வழங்குவதை எளிதாக்கி இருக்கிறது. இது சமத்துவத்தின் பொதுவான அடிப்படை நெறிமுறைகளை வெடிவைத்து தகர்ப்பதைப் போன்றதாகும். இந்த புதிய சட்டப்பிரிவு 16(6), ஒருபுறம் பல முனைகளில் சமுக ரீதியாக பின் தங்கியுள்ள SC, ST, OBC பிரிவினருக்கு எதிரானது. மறுபுறம் SC, ST, OBC பிரிவினருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகள், EWS பிரிவினருக்கு கிடைக்கப்போகும் நியாயமற்ற இட ஒதுக்கீட்டால் மேலும் கடினமாக மாறிவிடும். EWS இடஒதுக்கீட்டின் நோக்கம் 'போதுமான பிரதிநிதித்துவத்தை பகிர்ந்தளிப்பது' என்பதாக இல்லை. 'போதுமான பிரதிநிதித்துவம்' என்கின்ற கருத்தாக்கம் பிரிவு 16(4) குறிப்பிடும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே தங்கள் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட கூடுதலான இடங்களை அரசு வேலைகளில் ஆக்கிரமித்துள்ள உயர்சாதியினருக்கு 'போதுமான பிரதிநிதித்துவம்' என்ற கருத்தாக்கம் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் தேவைக்கு அதிகமான இடங்களை ஏற்கனவே பிடித்துள்ளனர் என்பது கண்கூடு.

10% EWS இடஒதுக்கீடு அளித்ததின் மூலம் உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் நிர்ணயித்த உச்சவரம்பாகிய 50 விழுக்காட்டை தற்போதைய இட ஒதுக்கீடு மீறுவதை பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இது வலுவான வாதமில்லை. இச்சட்டத்திருத்தம் 50% உச்சவரம்பை மீறவில்லை என்று சொல்வது மிக எளிது. எப்படிப் பார்த்தாலும் 50% உச்சவரம்பு விவாதம் செல்லுபடியாகும் என்று சொல்வதற்கில்லை. இந்திரா சஹானி வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் 50% உச்சவரம்பு ஒரு பொது விதியாக இருக்கவேண்டும் என்றும், 'அசாதாரணமான சூழ்நிலைகளில்' மட்டுமே 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறலாம் என்றும் குறிப்பிட்டார்கள். அந்த அடிப்படையில், இந்திரா சஹானி வழக்கில் தீர்க்கப்படாத உச்சவரம்பு விவாதத்தில் இருந்து 50% இட ஒதுக்கிடு உச்ச வரம்பு எனும் வாதம் எழுகிறது. இட ஒதுக்கீடு என்பது ”விதிவிலக்கல்ல”, மாறாக சமத்துவத்தின் ஒரு ”பகுதி” என்று இந்திரா சஹானி வழக்கின் பெரும்பான்மை நீதிபதிகள் அரசியமைப்புச் சட்ட நிலைப்பாட்டுக்கு உறுதியளித்தாலும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் சம வாய்ப்புக்கும் மற்ற அனைவரின் சம உரிமைக்கும் இடையே சரீயிடு (Act of Balancing) என்ற கருத்தையும் துணைக்கழைக்கின்றனர்.

ஒன்றிய, மாநில அரசுகள் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் போது இட ஒதுக்கீடு உச்ச வரம்பு 50 விழுக்காட்டை தாண்டும். அதனை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உச்சநீதிமன்றத்திற்கு ஏற்படும். சமத்துவத்திற்கான வழி இட ஒதுக்கீடென்றால், இட ஒதுக்கீட்டினால் பயனடைய வேண்டிய மக்களின் கூட்டுத் தொகை 50 விழுக்காட்டை தாண்டும் போதும் இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50% என நிறுத்திக் கொள்வதை எப்படி நியாயப் படுத்த இயலும்? அரசியலமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டிற்கு 'விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை’ (Proportional representation) அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, மாறாக போதுமான பிரதிநிதித்துவதையே (Adequate representation) அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும், மேலே விவாதிக்கப்பட்ட படி, EWS இட ஒதுக்கீட்டு விதிமுறைகளில் ”போதுமான பிரதிநிதித்துவம்” என்ற கருத்தாக்கத்தை கை விட்டிருப்பதால், 50% உச்ச வரம்பு வரம்பு தெளிவற்றதாக மாறுகிறது.

10% EWS இட ஒதுக்கீட்டிற்காக செய்யப்பட்ட 103 ஆவது சட்டத்திருத்தும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்தை மீறுகிறதா என்ற தேர்வில் வெற்றிபெற்றுவிடும் என்ற போதும், ஒன்றிய, மாநில அரசுகள் 10% EWS ஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பது மிக பெரிய கேள்வி. ஏனெனில், 'யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்' என்று வரையறுப்பது அவ்வளவு எளிதல்ல. கட்சிகள் தங்கள் வாக்குவங்கி அரசியலின் தேவைக்கேற்ப அதிக அளவிலான மக்களை EWS பிரிவுக்குள் கொண்டு வர முயல்வார்கள். அந்த அளவுகோல் எந்த அளவிற்கு விரிவடைகின்றதோ அந்த அளவிற்கு அரசியலமைப்பிற்கு ஆபத்து. உதாரணத்திற்கு, ரூ 8 லட்சத்திற்கும் கீழான வருமானம் உடையவர்கள் அனைவரையும் இந்த அளவுகோலில் கொண்டு வந்தால், அரசியலமைப்பின் அடிப்படை உடைந்து நொறுங்க வாய்ப்புண்டு. வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் ஒருவரையம், 8 லட்சம் குடும்ப வருமானம் உள்ள ஒரு ஒருவரையும் ஏழை என்ற ஒரே பெயரில் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் கொண்டு வந்தால், அரசியலமைப்புச் சட்டம் அளவிலாத குழப்பத்திற்கு உள்ளாகும். ஆனாலும் அது போன்ற குழப்பங்கள் நிகழ்ந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கு நமது அரசியலமைப்புச் சட்டவியல் வரலாறு நம்மை நன்றாக தயார்படுத்தி வைத்திருக்கிறது.

அனுப் சுரேந்திரநாத்

நன்றி: The Hindu ஆங்கில நாளிதழ் (2019, ஜனவரி 22 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: சுமதி, ஆஸ்திரேலியா

Pin It