சமூகம் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்நிலையில் பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதுதானே?

இடஒதுக்கீடு என்பது, ஏற்கனவே கல்வியிலும் சமூக ரீதியாகவும் பின்தங்கி உள்ள மக்களுக்கு அவர்களுடைய வாய்ப்பைக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உறுதி செய்யக்கூடிய ஒரு ஏற்பாடு அல்லது சட்டப்பாதுகாப்பு. ரிசர்வேஷன் என்பது சலுகையல்ல உரிமை. நாம் ரயிலில் செல்லும் பொழுது நம்முடைய இடத்தை உறுதி செய்வது, சலுகை என்று சொல்லப்பட முடியாது. அதைப்போல நம்முடைய சமுதாயத்தில் இடஒதுக்கீடு என்பது வர்ணாசிரம ரீதியாக, மனு தர்மத்தின் மூலமாக மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த இடஒதுக்கீடானது கோயில், அக்ரஹாரம், குடியானவர் தெரு, வியாபாரிகள் தெரு, அடுத்து ஊருக்கு வெளியில் இருக்கும் சேரி என்பதாக ஊரைப் பிரித்து, அவர்கள் இருக்க வேண்டிய இடத்தை உறுதி செய்தது. அதைப்போல குடிக்கிற நீரும், குளிக்கிற குளமும், புதைக்கப்படுகிற சுடுகாடும்கூட இப்படியாகப் பிரித்து இடஒதுக்கீடு செய்யப்பட்டதுதான்.

arulmozhi dkஇந்த இட ஒதுக்கீட்டின் காரணமாக, பள்ளிக்கு வரக் கூடாதவர்கள், படிக்கக் கூடாதவர்கள் என்று ஒரு பெரும் சமூகம் ஒதுக்கப்பட்டு விட்டது. அந்தச் சமூகத்திலேயே ஒரு பிரிவு பார்க்கப்படக்கூடாதவர்கள், தீண்டப்படாதவர்கள் என்ற பிரிவுக்குத் தள்ளப்பட்டு அவர்கள் ஊருக்கு வெளியிலேயே வாழ வைக்கப்பட்டார்கள். இந்தப் பிரிவினையால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய குறைபாடு, உள்ளத்தில் ஏற்பட்ட ஊனம் என்று வேண்டுமானால் அதை எடுத்துக் கொள்ளலாம். அது முன்னேறிய உயர் ஜாதியினரைப் போல, குறிப்பாகப் பார்ப்பனர்கள், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஒரு சில ஜாதியினரைப் போல பரம்பரையாகக் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பை இந்தப் பெரும் சமூகத்திற்கு மறுத்து, அவர்களை ஒதுக்கி விட்டது. ஆனால் ஒரே கல்வி ஒரே தேர்வு என்று வரும் பொழுது, இப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து முதல் முறையாக இரண்டு மூன்றாம் தலைமுறையில் கல்வியை நோக்கி வருகிறவர்கள், அதேபோன்ற மதிப்பெண்ணையோ, போட்டித் திறன்களையோ வெளிப்படுத்த முடியாது என்கிற காரணத்தினால், அவர்களுக்கு எப்படி இந்த ஒரு பாதுகாப்பைக் கொடுப்பது என்ற ஆலோசனையில், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அளவீட்டில்தான் இடஒதுக்கீடு முதல் சட்டத் திருத்தத்தில் இடம் பெற்றது.

அதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் இருந்த, அப்போதைய சென்னை ராஜதானியில் நடைமுறையிலிருந்த கம்யூனல் G.O, வகுப்புவாரி உரிமைக்கு இந்த அளவீடுகள் எல்லாம் தேவைப்படவே இல்லை. இந்த இடத்தில் நாம் ஒன்றை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வகுப்புவாரி உரிமை என்பது எல்லோருக்குமான, உயர் ஜாதிகள் அவர்களிலும் உயர்ந்த ஜாதிகள் ஆகிய எல்லோருக்குமான இடங்களை உறுதிப்படுத்தியது. 12 இடங்கள் என்றால் அதில் இரண்டு இடங்கள் பார்ப்பனருக்கு, இரண்டு இஸ்லாமியருக்கு, இரண்டு கிறிஸ்தவருக்கு என்று ஒதுக்கப்பட்டது. மற்ற சமூகங்களைப் பிரிக்கும் பொழுதும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் 5 பேர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்ற ஒரு சுழற்சி என்பது எல்லோரையும் உள்ளுக்குள் எடுத்துக் கொண்டது. ஆகவே அப்போது பிற்படுத்தப்பட்டவர் என்கிற பெயரோ, அதற்கு என்ன அளவீடு என்கிற கேள்வியோ அளவுகோலோ தேவைப்படவில்லை. ஆனால் கம்யூனல் G.O செல்லாது என்று செண்பகம் துரைராஜன் வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்ட பிறகு, கம்யூனல் G.O சட்டப்படியாக அழிக்கப்பட்ட பிறகு, எந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற விவாதம் எழுந்து, அரசியல் சாசனத்தினுடைய முதல் சட்டத்திருத்தத்தைச் செய்யும் பொழுது, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அளவீடு செய்வதற்கான விவாதம் நடந்தது.

எது அளவுகோல் - பொருளாதாரமா? கல்வி, சமூக நிலையா? என்ற விவாதத்தில், சமூக நிலை என்பதை எல்லோருமே ஒப்புக் கொண்டுவிட்டார்கள். அடுத்த காரணி என்பது எக்கனாமிக்கலா எஜுகேஷனலா? இதில் எக்கனாமிக் ஸ்கேல் என்பது ‘elasticity’ நெகிழும் தன்மை கொண்டது. ஒருவருடைய வருமானம் உயர்ந்தால் அவரது நிலை மாறிவிடும். ஆனால் ஒருவருடைய ஜாதி மாறுவதில்லை. அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு மாறுவதில்லை. எனவே பொருளாதார அளவுகோல் என்பது நெகிழ்வுத் தன்மை உடையது, நிலைத்த அளவீடு அல்ல, அதை ஒரு கணக்கீடாக எடுத்துக்கொண்டால் மிக முரண்பட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும். அதில் பல்வேறு விதமான குழப்பங்கள் வரும் என்பவையெல்லாம் விவாதிக்கப்பட்டதுதான் பொருளாதார அளவுகோல் தேவையில்லை, socially and educationally என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதிலும்கூட அது and-ஆ or-ஆ என்பதற்குக் கூட விவாதங்கள் நடந்திருக்கின்றன.

இவ்வளவு விவாதங்கள் நடந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கீட்டு முறையை போகிறபோக்கில் புறக்கணித்துவிட்டு, உயர்ஜாதி ஏழைகள் என்று பிஜேபி கருதக்கூடிய அல்லது காங்கிரஸில் இருக்கக்கூடிய உயர் ஜாதியினர் கருதக்கூடிய அல்லது பொதுவுடைமை இயக்கத்திலோ வேறு எந்த தேசிய இயக்கத்திலோ இருக்கக்கூடிய பார்ப்பனத் தலைமையும், அவர்களுக்கு நிகரானவர்களும் வழிநடத்துகிற இடத்தில் இருக்கும் அனைத்துத் தேசியக் கட்சிகளும் ஒருசேர ஆதரித்து, மிகப்பெரிய விவாதங்கள் நடத்தும் அவற்றைப் புறக்கணித்து விட்டு இந்த 103ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டு வந்தாலும் கூட நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தும் போது, நீதிமன்றம் இதனைப் பல்வேறு கோணங்களில் பரிசீலிக்கத் தவறிவிட்டது. அதன் விளைவாக 5 நீதிபதிகளும் ஒரு கருத்தில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஒன்று பொருளாதார அளவுகோல் என்பது தவறல்ல, சரியானதுதான் என்பதில் ஐந்து நீதிபதிகளுக்குள் முரண்பாடு இல்லை. இரண்டாவது இப்படி ஒரு சட்டத் திருத்தத்தையும் ஒரு புதிய சட்டத்தையும் கொண்டு வருவது அரசியல் சாசனத்தின் முகப்புரைக்கு, அதனுடைய அடிக்கட்டுமானத்திற்கான அந்த முன்னுரைக்கு எந்த வகையிலும் முரண்பாடாக இல்லை என்றும் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஐவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்.

அவர்களுக்குள் பிரிந்த இடம் எது என்றால், ஏழைகளுக்கு ஒதுக்கீடு வைத்த பிறகு அதில் பிற ஜாதி ஏழைகளை விட்டு விடலாமா என்ற கேள்வி மட்டும்தான். அடிப்படையில் இந்தக் கேள்வியும் கூட இந்த இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் எண்ணத்தில் ஏற்படுத்தப்படுவதுதான். நியாயமான முறையில் அணுகினால், பொருளாதார அளவுகோல் என்பதே ஒரு நிலைத்த உறுதியான அளவுகோல் இல்லை எனும்போது, அந்த அடிப்படையில் செய்யப்படும் எதுவுமே, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடிய உயர் ஜாதியினருக்கு நன்மை செய்கிற நோக்கத்தைக் கொண்டதுதான். அது பெரும்பாலான மக்களுக்கு எதிரானதுதான் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அதில் இரண்டு கருத்துக்கு இடமேயில்லை.

தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் இட ஒதுக்கீடு குறித்த புரிதல் போதுமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சியும் பொருளாதார இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. இந்திய அளவில் பொருளாதார இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சாத்தியம் உள்ளதா அல்லது சட்ட ரீதியான போராட்டம் மட்டுமே சாத்தியமா?

 இடஒதுக்கீடு மட்டுமல்ல மொழியுரிமை, மாநில சுயாட்சி, பெண்ணுரிமை - போன்ற பல்வேறு முன்னேற்றத் திட்டங்கள் கருத்துகளில் தமிழ்நாட்டினுடைய திராவிட இயக்க அரசியல் ஏற்படுத்தி இருக்கக்கூடிய அந்தப் புரிதலும் அறிமுகமும், தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறத் தெளிவும் வேறு மாநிலங்களுக்கு இல்லை என்பது நாம் இதுவரையில் பார்த்திருக்கக்கூடிய செய்திதான். ஆனால் இப்போது பல்வேறு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருக்கும் தலைவர்கள், அவர்களுக்காகச் செயல்படக்கூடிய இயக்கங்கள் இந்தப் பிரச்சனையில் இப்பொழுதுதான் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். நாம் தொடர்ந்து இதனை முன்னெடுத்து அரசு மூலமாகவும், இயக்கங்கள் மூலமாகவும் அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு சரியான நேரம். இந்த வாய்ப்பு உண்மையிலேயே, இந்த தேசியவாத ஆர்எஸ்எஸ் போக்குடைய ஆதிக்க வாதிகளையும் அவர்களுடைய நோக்கத்தையும் புரியவைப்பதற்கான நல்லதொரு வாய்ப்பு. இதனை நாம் அனைத்து முறைகளிலும் முயன்று அவர்களுக்குத் தெளிவுபடுத்தினால் - இன்று குஜராத்திலேயே GobackModi ஹேஷ் டேக் என்று உருவாகிறது - கண்டிப்பாக நம்மால் அவர்களுக்குத் தெளிவு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த முயற்சியில் நம்முடைய அனைத்து அமைப்புகளும் ஈடுபட வேண்டும். அவர்களை இணைத்துக்கொண்டு இயங்க வேண்டும் என்பது இன்றைய காலத்தின் தேவை.

Pin It