EWS பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு அளிக்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என நவம்பர் 7 2022 ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வின் 3 நீதிபதிகள் அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுத்துச் சொல்லப்பட்டுள்ள நீதி, சமூக, பொருளாதார, அரசியல் என்னும் கருத்தாக்கத்துடன் இத்தீர்ப்பு ஒத்துப் போகிறதா? இல்லை எனில் இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகாதா? 1973ஆம் ஆண்டில் கேசவானந்தபாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள நோக்கங்கள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு ஆகும்.

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளை விலக்கி வைத்து உயர்சாதி ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது பாகுபாடு காட்டும் செயல் இல்லையா? இந்த கேள்வியை EWS இட ஒதுக்கீடு வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் ரவீந்திர பட், யு யு லலித் ஆகியோர் எழுப்பியுள்ளனர். சமுக ரீதியாக பின்தங்கிய மக்களில் ஏராளமானவர்கள் ஏழைகளாகவும் உள்ளனர் என்பது உண்மை அல்லவா?

supreme court 255இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1992 ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்பதையும் இத்தீர்ப்பு மீறுவதாகாதா? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16A ல் குறிப்பிடப்பட்டுள்ள பின்தங்கிய நிலை என்பது சமூக ரீதியாக பின்தங்கியவர்களையே குறிக்கும் என அத்தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. உயர் சாதிகளான குஜராத் பட்டேல்கள், மகாராஷ்டிரா மராத்தாக்கள், அரியானா ஜாட்கள் உள்ளிட்ட பல ஆதிக்க சாதிகள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட EWS வழக்குத் தீர்ப்பு வழிவகுக்காதா? 10% EWS இட ஒதுக்கீட்டை ஆதரித்தால் இத்தனை ஆண்டு காலம் உச்ச நீதிமன்றத்தால் சொல்லப்பட்டு வந்த 50 விழுக்காடு உச்ச வரம்பைத் தாண்டி இட ஒதுக்கீடு செல்லும் அபாயம் உள்ளதென EWS வழக்கில் சிறுபான்மை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரவீந்திர பட், யு யு லலித் எச்சரித்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் (1931) பின், 90 ஆண்டுகளாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்காத நிலையில், நிலவிய, சமூக, பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல் உயர்சாதினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு எப்படி தரப்பட்டது? உண்மையாகவே பாதிக்கப்பட்டுள்ளவர்களை முன்னேற்றுவதை தவிர்த்துவிட்டு, ஒன்றியத்தில் ஆளும்கட்சியாக உள்ள பாஜக தனது வாக்கு வங்கியை கணக்கில் கொண்டே EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளதாகத் தெரிகிறது.

காலங்காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்நிலையை உயர்த்த சிறப்புத்திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமாதன்று. இட ஒதுக்கீடு (Reservation) என்ற பெயரில் இந்தியாவில் வழங்கப்படும் சிறப்புத்திட்டங்களுக்கு அமெரிக்காவில் நேர்மறையான செயல்பாடு (Affirmative Action) என்ற பெயரில் செயல்படுத்தப் படுகின்றன. ஐரோப்பாவில் நேர்முறையான பாகுபாடுகள் (Positive Discrimination) என்ற பெயரில் அறியப்படுகிறது. ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாய்ப்புகளை உறுதி செய்ய வழங்கப்படும் இத்தகைய பாதுகாப்புப் பாகுபாடுகள் (Protective Discrimination) இட ஒதுக்கீடு என்ற பெயரில் கல்வி நிலையங்களிலும், அரசுப்பணிகளிலும் செயல்படுத்தப்படுகின்றன. ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் (Social Protection) திட்டங்களை இஸ்லாமிய மக்களுக்கு வழங்க ராஜிந்தர் சச்சார் குழு (2006) செய்த பரிந்துரை மற்றொரு வகையான சிறப்புத்திட்டமாகும். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சச்சார் குழு பரிந்துரை செய்திருந்தால் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதரீதியிலான வெறுப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை சச்சார் குழு தவிர்த்து விட்டது.

இந்தியாவில் ஊடகங்கள், கல்வி நிலையங்கள், நீதித்துறை, நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்துமே இருபிறப்பாளர்களான பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைஸ்யர்களை உள்ளடக்கிய உயர்சாதியினர் வசமே உள்ளன. 10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் நம் நாட்டில் நீதித்துறையில் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் உள்ளதை உணர முடியும்.

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வர்ணாசிரம் முறையில் சூத்திரர்கள் என்றழைக்கப்ட்ட இன்றைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பட்டியலின, பழங்குடியின மக்களுமே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அதன் அடிப்படையிலே மத்திய இந்தியாவின் ((BIMARU)) பல மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக உள்ளனர். 1980ஆம் ஆண்டில் வெளியான மண்டல் குழு அறிக்கையின்படி நாட்டின் மக்கள் தொகையில் 52% பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே. 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி பட்டியல் வகுப்பினர் 16.6 விழுக்காடும் , பழங்குடியினர் 8.6 விழுக்காடும் உள்ளனர். மதச் சிறுபான்மையராக உள்ள இஸ்லாமியர்கள் 14.2%, கிறித்துவர்கள் 2.3% உள்ளனர். அரசிடம் உள்ள புள்ளிவிவரங்களின்படி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட இத்தகைய பிரிவினர் மொத்தம் 93.7 விழுக்காடு உள்ளனர். புத்தர், கன்ஷிராம் மொழியில் பகுஜன் (Bahujan) என அழைக்கப்படும் சொல்லின் பொருள் பெரும்பான்மை என்பதாகும். சமுகவியல் அறிஞர் காஞ்சா இலையாவின் மொழியில் தலித்பகுஜன்கள் (Dalit Bahujan) என நாட்டின் 93% உழைக்கும் பெரும்பான்மை மக்களில் பலரால் அரசு வேலைகளிலும், ஊடகங்களிலும், கல்வி நிலையங்களில் நுழைய முடியாத அவல நிலை இந்தியாவில் உள்ளது. இந்திய மக்கள்தொகையில் 6.3 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு, ஊடகம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் வாய்ப்புகளையும் ஏற்கனவே அனுபவிக்கும் உயர்சாதியினருக்கு மேலும் 10% இட ஒதுக்கீடு தருவது பாதுகாப்புப் பாகுபாடு (Protective Discrimination) வகையின் கீழ் வருமா? வராது என்பதே உண்மை.

காலங்காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ் நிலையை பாதுகாக்கவே பாதுகாப்புப் பாகுபாடு பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் அதிகாரம், கல்வி, பதவி, சமுகத் தொடர்பு ஆகியவற்றின் காரணமாக கல்வி, சமூக, பொருளாதாரம் போன்ற வாய்ப்புகளை ஏற்கனவே அனுபவித்து வரும் சில சமூகப் பிரிவுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு தருவதை, மார்க் காலண்டர் (Marc Galenter) போன்ற நிபுணர்கள் குறிப்பிட்டதைப் போல, முன்னுரிமை செயல்திட்டம் (Preferential Treatment) எனலாம். ஏழைகள் என்ற பெயரில் உயர்சாதியினருக்கு தரப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீடு ஆதிக்க சக்திகளுக்கு தரப்படும் முன்னுரிமை செயல்திட்டம் ஆகும்.

இந்தியாவின் 10% EWS இட ஒதுக்கீட்டைப் போன்றே, இலங்கையில் சிங்களர்களும், மலேசியாவில் மலாய்களும் அங்கே ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரான இருந்தும் அரசுப்பணிகளில் முன்னுரிமையை அனுபவித்து வருகின்றனர். கல்வி, சமூகப் பொருளாதார அடிப்படையில் நல்ல வளர்ச்சி அடைந்த பிறகும் கூட முன்னுரிமை பெற்ற வகுப்பினருக்கே மீண்டும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. பாதுகாப்புப் பாகுபாடு (Protective Discrimination) ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்கிறது. முன்னுரிமை பாகுபாடு (Preferential Treatment) ஏற்கனவே வாய்ப்புகளைப் ஆக்கிரமித்துள்ள உயர்சாதியினருக்கு சலுகைகளை அள்ளித் தருகிறது.

நமக்கு நன்கு அறிமுகமான சொற்களில் சொன்னால், சாதி ரீதியாக தரப்படும் SC, ST, MBC, BC இட ஒதுக்கிடு வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க பயன்படும். EWS பிரிவினருக்கு வழங்கப்படும் 10% இட ஒதுக்கீடு ஏழையை ஏழையாகவே வைத்திருக்கவும், பணக்காரனை இன்னும் பணக்காரனாகவும் உயர்த்தவும் தரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு என்றே புரிந்து கொள்ள முடிகிறது. உச்ச நீதிமன்றம் 10% EWS இட ஒதுக்கீட்டை தடை செய்து தீர்ப்பளித்திருந்தால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் முறையாகவும், அமைதியாகவும் தொடர்ந்திருக்கும். மறு சீராய்வில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- டாக்டர் கில்பர்ட் செபாஸ்டின்

நன்றி countercurrents.org இணையதளம்

(2022, நவம்பர் 9 வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: செ. ஜெயக்குமார்.

Pin It