சமீபத்தில் மத்திய அரசு, பேக்கிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீதம் வரி விதித்து அதை நடைமுறைக்கும் கொண்டு வந்திருக்கின்றது.

அதையும் சமானிய உழைக்கும் மக்களை பட்டினிச் சாவை நோக்கி தள்ளும் திட்டத்தோடு மிகத் தந்திரமாக கொண்டு வந்துள்ளது. இந்த ஜிஎஸ்டி விலை உயர்வைப் பொறுத்தவரை, முன்பு பதிவு செய்யப்பட்ட பிராண்டட் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ப்ரீ பேக்கிங் மற்றும் லேபிள் ஒட்டப்பட்ட அனைத்துப் பொருட்களும் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

nirmala seetharaman and poor boyஅதே சமயம், 25 கிலோ அல்லது 25 லிட்டருக்கு உட்பட்ட உணவுப் பொருட்களுக்கு மட்டுமே இந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 25 கிலோவுக்கு அதிகமான அரிசி, கோதுமை, பருப்பு வகைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. நுகர்வோர்கள் தலா 10 கிலோ என 3 பேக்கிங் உணவுப் பொருளை வாங்கினாலும் அதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஒரே மூட்டை 25 கிலோவுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஜிஎஸ்டி வராது.

பேக்கிங், லேபிள் ஒட்டப்படாத உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு தொடரும் என்று கூறப்பட்டிருந்தாலும், தற்போது பெரும்பாலான கடைகளில் ஒரு கிலோ, இரண்டு கிலோ அரிசி கூட ஏற்கெனவே பொட்டலமாக லேபிள் ஒட்டித்தான் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு தொழிற்முறை திருடனுக்கே உரிய நேர்த்தியோடு இந்த வரி உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் கொழுத்த வருமானத்தை பார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய போது இந்தியாவில் உள்ள 80 கோடி ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்று மத்திய அரசு கூறியது.

அதே போல 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் பட்ஜெட் அறிவிப்புக்கு முன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான திட்டக் கமிஷன் குழு வறுமைக்கோடு குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 36.3 கோடி பேர் ஆகும்.

நகர்ப்புறத்தில் நாளொன்றுக்கு 47 ரூபாயும் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும் செலவிட முடியாதவர்கள்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று ரங்கராஜன் கமிட்டியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

80 கோடி பேர் ஒப்பீட்டு வறுமைப் பிரிவிலும், 36.3 கோடி பேர் நிரந்தர வறுமைப் பிரிவிலும் வருகின்றனர். இவர்கள்தான் இந்த ஜிஎஸ்டியில் இலக்காக்கப் பட்டிருக்கின்றார்கள். இவர்கள் யாரும் ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசியையோ, கோதுமையையோ வாங்கி இருப்பு வைத்துக் கொள்பவர்கள் அல்ல. தினம் தினம் கிடைக்கும் அற்பக் கூலியில் வாழும் அன்றாடம் காட்சிகள்.

மாத சம்பளம் வாங்குபவர்களே ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசியை ஒட்டுமொத்தமாக வாங்க முடியாத நிலைதான் உள்ளது. வீடுகளில், மாதச் சம்பளத்தில் சமையல் வேலைகள், தோட்ட வேலைகள், வீட்டுக்காவலர்கள் போன்று வீட்டு வேலைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படும் முறைசாராத் தொழிலாளர்கள் மற்றும் அரசு வேலை, தனியார் தொழிற்சாலைகளில் நிரந்தர வேலையில் இருப்பவர்கள் என அனைத்து மாதச் சம்பளம் பெறும் ஊழியர்களையும் சேர்த்தாலே இவர்கள் இந்தியாவில் உள்ள மொத்த வேலை வாய்ப்பில் 21 முதல் 22 சதவீதம் வரைக்கும்தான் இருக்கின்றார்கள்.

இந்த எண்ணிக்கை கூட கொரோனோ காலத்தில் 15 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்தியாவில் தினக்கூலி தொழிலாளர்களே பெரும்பான்மையினர்.

இவர்களால் ஒருபோதும் மொத்தமாக அரிசி, கோதுமை போன்ற அடிப்படை உணவு தானியங்களை வாங்கி வைத்துக் கொள்ள முடியாது என்பதோடு, தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியால் கிலோவுக்கு 3 முதல் 5 ரூபாய் வரை உயரும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகி இருக்கின்றது.

வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் எளிய மனிதர்களிடம் அடித்துப் பிடுங்கும் கொடிய பாசிச அரசாக மோடி அரசு மாறியுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த Welt hunger hilfe மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த Concern Worldwide ஆகிய அமைப்புகளால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டுக்கான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது. இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும்..

கோஸ்டாரிகா, கயானா, நிகராகுவா, கானா, எத்தியோப்பியா, சூடான், ருவாண்டா போன்ற பின்தங்கிய ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் இந்தியாவைவிட பட்டியலில் மேம்பட்ட நிலையில் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 92வது இடத்திலும், சீனா 5வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும், இலங்கை 65வது இடத்திலும், பர்மா 71வது இடத்திலும் உள்ளன. மேலும் உலகில் வளர்ச்சிக் குறைபாடான குழந்தைகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில்தான் உள்ளனர்.

தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பானது இந்தியாவை பட்டியலின் கடைசி இடத்துக்குக் கொண்டுபோய் நிறுத்தி மோடி அரசுக்கு புகழை தேடித் தரும் என்பதில் அய்யமில்லை.

2022-ம் ஆண்டிற்கான ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் 40 பில்லியனர்கள் அதிகரித்துள்ளனர். கோவிட் நெருக்கடியின்போது இந்தியாவில் வாழும் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கி, கிட்டத்தட்ட $720 பில்லியன் சொத்து மதிப்புகளைக் கொண்டுள்ளனர். இந்த மதிப்பு மொத்த மக்கள் தொகையில் 40% ஏழை மக்களின் சொத்து மதிப்பைவிட அதிகமாகும்.

தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்தை அதானி பிடித்திருக்கின்றார். அவரின் சொத்து மதிப்பு 115 பில்லியன் டாலர் (ரூ. 9.2 லட்சம் கோடி) ஆகும்.

அதே சமயம் அதானி குழுமம் குஜராத்தின் முந்த்ராவில் நிலக்கரியிலிருந்து பிவிசி தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்காக எஸ்.பி.ஐ.,யிடம் ரூ.14,000 கோடி கடன் கேட்டிருக்கின்றது.

அதானி, அம்பானிகளை வளர்த்துவிட பொதுமக்களின் பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, பின்பு அதை வாராக்கடன் எனத் தள்ளுபடி செய்யும் மோடி அரசு, இன்னொரு பக்கம் உயிர் வாழ்வதே சவாலான ஒன்றாக இருக்கும் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து பணம் பிடுங்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றது.

“நான் நிறைய வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதில்லை; எனவே அதைப் பற்றி கவலையில்லை. வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்திலிருந்து நான் வருகிறேன்” என பார்ப்பன சாதித் திமிரோடு மக்களவையில் பேசிய நிர்மலா சீத்தாரமன் இப்போது அவாள் வழித்து வழித்து நெய் ஊற்றித் தின்னும் அரிசியிலேயே கைவைத்திருக்கின்றார்.

இந்த விலை உயர்வை பார்ப்பன, பனியா தொந்திகள் வேண்டுமென்றால் எளிமையாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் ஒருவேளை சோற்றுக்காக ஒட்டிய வயிறோடு உயிரையும் உடலையும் கரைத்து உழைக்கும் எளிய மக்கள் எப்படி சமாளிப்பார்கள்?.

அரசுக்கு இரு வகைகளில் வரி வருகிறது. ஒன்று நேர்முக வரி. மற்றொன்று மறைமுக வரி. ஒரு நேர்மையான அரசு என்பது, மறைமுக வரியைக் குறைவாகவும், நேர்முக வரியை அதிகமாகவும் வைத்திருக்க வேண்டும். நேர்முக வரி என்பது பணம் உடையவர்கள், நிறுவனங்களுக்கே விதிக்கப்படும்.

ஆனால், இந்த அரசு மறைமுக வரியை அதிகமாக வைத்துக் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்தது. 2019ல் மோடி அரசு கார்ப்ரேட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைத்தது. இதனால், அரசின் வருவாயில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி குறைந்தது. இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டுமென பெட்ரோலுக்கும், டீசலுக்கும் கடுமையாக வரி விதிக்கப்பட்டது.

ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் மோடி அரசு தற்போது ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கும் மக்களின் சாப்பாட்டுத் தட்டில் கை வைத்திருக்கின்றது.

இலங்கையைப் போன்ற ஒரு கடுமையான நெருக்கடி சூழலுக்கு இந்திய மக்களை மோடி அரசு தள்ளிக் கொண்டு இருக்கின்றது. என்ன செய்தாலும் நாட்டு மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வார்கள். அப்படி இல்லை என்றால் ஏதாவது மத வன்முறைகளைத் தூண்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஏழை எளிய மக்களின் மீது கொடுந்தாக்குதலை மோடி அரசு தொடுத்து வருகின்றது.

பாசிஸ்ட்கள் எப்போதுமே வரலாற்றின் இயக்கவியல் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. அவர்கள் அனைத்தையுமே நிலைமாறா கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்கின்றார்கள்.ஆனால் வரலாறு ஒவ்வொரு முறையும் பாசிஸ்ட்களின் அழிவைப் பற்றி பாடம் எடுத்தே வந்திருக்கின்றது.

- செ.கார்கி

Pin It