இந்த கட்டுரை எழுதுவதற்கு முன்பு முகநூலில் பதிவு ஒன்று பதிவிட்டிருந்தேன். அதாவது காந்தியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? எனப் பதிவிட்டு பதிலுக்காக காத்திருந்தேன். வழக்கம் போல நேர்மறையான பதில்கள் தான் கிடைத்தது. ஜீவகாருண்ய சீலர், அகிம்சா மூர்த்தி என்றெல்லாம் போற்றப்படக் கூடியவரை ஏன் இப்படி வெறுக்கிறார்கள்? சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய களப்போராளி (மன்னிக்கவும் காந்தியை இங்கு வார்த்தைக்காக மட்டும் தான் போராளி என்று குறிப்பிட்டுள்ளேன். அதற்கான காரணம் என்பதை இந்தக் கட்டுரையின் கடைசியில் கூறுகிறேன்). இந்திய ரூபாய் நோட்டில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு இந்திய நாடே அவரது பெருமையை உலகறியச் செய்துள்ளது. சிறு குழந்தைகள் முதற்கொண்டு சுதந்திரத்திற்குப் போராடியவர்கள் யார் என்று கேட்டால், முதலில் வரும் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. இவ்வளவு ஏன் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று வந்தால் பள்ளி மாறுவேடப் போட்டியில் பங்கேற்கும் முதல் வேடம் காந்தியுடையதாகத் தான் இருக்கும். அப்படி அனைவராலும் தாத்தா, தாத்தா என்று அழைக்கப்படும் ஒருவர் மீது ஏன் இந்தத் தாக்குதல் என்று காந்தி குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.
இந்தியா தற்போது வரை மதச்சார்பாற்ற நாடு. இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினருக்கு தற்போது வரை பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இதற்குக் காரணம் பாசிசவாதிகளின் 'ஒரு நாடு ஒரு மொழி ஒரே மதம்' என்ற கோஷம் தான். இதில் வருத்தம் என்னவென்றால் இந்தக் காரியத்தை சிறுபான்மையினரை வைத்தே அவர்கள் சாதிப்பது தான். ஒருவர் தான் விருப்பப்பட்ட மதத்திற்கு மாறுவதற்கு உரிமை உண்டு. அதற்கு யாரும் தடை போட முடியாது. மதம் மாறுவது என்பது பெரிய தேசத்துரோகம் கிடையாது.
அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் காந்தி என்ற பிம்பம் மிகப்பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டு விட்டது. நீங்கள் காந்தி குறித்து என்ன கூறினாலும், எப்படி கூறினாலும் அதனை ஏற்க மாட்டார்கள். காந்தி சுதந்திரம் பெறுவதில் காட்டிய ஆர்வம் அடித்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெறக்கூடாது என்பதில் தீவிரம் காட்டினார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம், பின்வரக்கூடிய கருத்துகள் யாவும் இட்டுக் கட்டப்பட்டு கூறியது கிடையாது. காந்தி எழுதிய கடிதத்தில் இருந்து தான் இந்தத் தகவல்களை திரட்டியுள்ளேன்.
மதமாற்றம்
இந்துக்கள் யாரும் வேற்றுமதம் மாறிவிடக்கூடாது என்பதில் காந்தி மிகவும் கறார். அதிலும் கிறிஸ்தவத்தின் மீது என்ன ஒரு கோபம் என்று புரியவில்லை. ஒரு முறை ஸ்ரீ ஏ.ஏ.பால் மதமாற்றம் குறித்து காந்தியிடம் ஒன்பது கேள்விகளைக் கேட்டார். அதற்கு காந்தி அளித்த பதில்களைப் பார்க்கலாம். "அனைத்து சமய நூல்களையும் நான் பயபக்தியுடன் படிக்கிறேன். அதில் உள்ள சிறப்புகளை அறிந்து கொள்வதில் எனக்கு கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் என் சமயத்தை மாற்றிக் கொள்ள என்னால் முடியாது. அப்படி என் மனமும் எண்ணாது. அதிலும் ஹரிஜனம் மக்களின் மதமாற்றத்தை ஏற்க முடியாது.
இந்தியாவில் உள்ள பெரிய பண பலம் உள்ள கிறிஸ்தவ சமய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இந்தியர்களை மதமாற்றம் செய்யாமல் ஜீவகாருண்யத் தொண்டில் மட்டும் ஈடுபட்டால் அவர்கள் தான் உண்மையான தொண்டு செய்தவர்கள். கிறிஸ்தவ சமய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளங்கபடமற்ற கிராமவாசிகளையாவது கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றாமல் சமுதாய அமைப்பை சீர் கெடுக்காமல் இருக்கலாம்.
கிராமவாசிகளின் சமுதாய அமைப்பில் எவ்வளவு குற்றம் குறைகள் இருப்பினும், அதனை எத்தனை காலங்களாக உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் சமாளித்து வந்துள்ளனர்."
இது 28.09.1935ம் ஆண்டு ஹரிஜன் பத்திரிகையில் மகாத்மா காந்தி எழுதியது.
அதாவது இதன் மூலம் அவர் என்ன கூற வருகிறார் என்றால் நீங்கள் தொண்டு செய்கிறேன் என்ற பெயரில் எதற்காக கிராமவாசிகளின் சமுதாய அமைப்பை உடைக்கிறீர்கள். அவன் பண்ணயாரிடம் கூலியாக இருந்து வேலை செய்கிறான்.அவனிடம் கல்வி , மருத்துவம் என்றெல்லாம் எதற்குப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார். அது மட்டுமின்றி அவர்களுக்குள் குற்றம் குறை இருந்தால் அவர்கள் சமாளித்து வந்துள்ளனர். நீங்கள் யார் அவர்களுக்கு போதனை செய்ய என்று கேட்கிறார்.
இத்தோடு அவர் நிற்கவில்லை நேர்மையான மதமாற்றம் என்றால் என்ன என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
"நான் யாரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்ய மாட்டேன். எனது சமயத்தைத் தழுவ வேண்டும் என ரகசியமாக பிரார்த்திக்க மாட்டேன். சிலர் அந்தராத்மாவின் திருப்திக்காக தங்களுடைய வளர்ச்சிக்காக மதம் மாற விரும்பினால் அவர்கள் அப்படி செய்யட்டும்." இது எங் இந்தியா பத்திரிகையில் 19.01.1928 ம் ஆண்டு காந்தி எழுதியது.
காந்தியின் மதமாற்றம் குறித்த செய்தி பத்திரிகையில் பிரசுரமாகி அவருக்கு எதிரான கருத்துகளைப் பரப்பியது. பலர் நீங்கள் பேசியது சரிதானா என கேள்வி எழுப்பினர். காந்தியின் முன்னாள் சக ஊழியரான ஜார்ஜ் ஜோசப் கோபத்துடன் காந்திக்கு கடிதம் எழுதினார். “நோயாளிகளுக்கு ஜீவாகாருண்யம் கொண்டு ஏழைகளுக்கு உதவி கல்வி, மருத்துவம் என செய்து மதமாற்றம் செய்யும் பாதிரிமார்களை நாட்டை விட்டு திருப்பி அனுப்பி விடுவேன். அவரவர்களுக்கு அவரவர் மதம் சிறந்தது. இந்திய மக்களுக்கு இங்குள்ள மதம் சமயம் போதுமானது. என்னுடைய இந்தக் கருத்தை நான் ரகசியமாக வைத்தது கிடையாது. பாதிரிமார்கள் இருந்த சபையில் கூட என்னுடைய இந்தக் கருத்தை கூறியிருக்கிறேன்.” மேற்கூறியவை தான் அந்த செய்தி.
இதற்கு எங் இந்தியா பத்திரிகையில் 23.04.1931 ம் ஆண்டு காந்தி பதில் எழுதுகிறார். அவர் எழுதிய பதில் கடிதத்தில் "ஜீவகாருண்ய தொண்டை மதம் என்ற போர்வையில் மாற்றும் வேலை ஆன்மீகத்திற்கு முரண்பாடானது. சமயம் என்பது ஒருவருடைய சொந்த விஷயம். ஒரு கிறிஸ்தவ டாக்டர் என்னுடைய நோயைக் குணப்படுத்துகிறார் என்றால் அதற்காக அவருடைய மதத்திற்கு நான் மாற முடியாது?. டாக்டர் வைத்தியம் மட்டும் பார்க்கட்டும். அதனால் வரும் வெகுமதி அவருக்குப் போதுமானது. என்னிடம் இருந்து மதம் மாறுவதை அவர் ஏன் எதிர்பார்க்க வேண்டும். அப்படி ஒரு யோசனையை அவர் ஏன் கூற வேண்டும். நான் கிறிஸ்தவப் பள்ளியில் கல்வி பயிலும் போது கிறிஸ்தவ போதனைகளை என் மீது ஏன் திணிக்க வேண்டும்?"
இப்படி கூறிவிட்டு காந்தி கடைசியில் கூறும் சப்பைக்கட்டு என்ன வென்றால் நான் மதமாற்றத்தை எதிர்க்கவில்லை, மதமாற்றம் செய்யும் நவீன முறைகளைத் தான் நான் எதிர்க்கிறேன். அதாவது தசாவதாரம் படத்தின் கிளைமேக்ஸில் கமல்ஹாசன் ஒரு வசனம் கூறுவாரே கடவுள் இல்லன்னு நான் சொல்லவில்லை. இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன். அப்படி ஒரு அந்தர்பல்டி அடித்தார். அதுமட்டுமா மதமாற்றம் வியாபாரமாகி விட்டது. சுயத்தூய்மையையும் தன்னை தானே அறிந்து கொள்ளும் ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்ட மாற்றந்தான் இப்போது தேவை எனக் கூறி அந்த கடிதத்தை முடிக்கிறார்.
இந்த இடத்தில் தான் கமல்ஹாசனும் காந்தியும் பின்னிப் பிணைந்து ஒத்துப் போகின்றனர். தேவர் மகன் திரைப்படம் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த படத்தின் கதைக் கரு என்பது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் பகை தான். அந்தப் பகையில் ஊர் வன்முறைக்காடாக மாறுகிறது. வெளியூரில் படித்து விட்டு வரும் கமல்ஹாசனுக்கு இவை எல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் கடைசியில் அதே வன்முறையில் தானும் ஊறி விடுகிறார். அந்தப் படத்தில் வரும் போற்றிப்பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் இன்று வரை தென் தமிழகத்தின் ஒரு சாதியரின் தேசிய கீதமாக உள்ளது. படத்தில் சாதியத்தின் உச்சத்தை தூக்கிப் பிடித்து விட்டு கிளைமேக்ஸில் நீங்களும் இப்படி ஆகிவிடாதீர்கள், பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்று கூறிவிட்டு சிறைக்குச் சென்று விடுவார். அதாவது ஒரு கூர்மையான கத்தியை எடுத்து ஒருவரைக் குத்திவிட்டு மன்னிப்பு கேட்பது போல உள்ளது. ஐய்யோ கத்தி குத்தும் என்றும், கத்தி குத்தினால் ரத்தம் வரும் என்றும் எனக்குத் தெரியாது என்பது போல கமல்ஹாசன் இருக்கிறார். காந்தியும் அதே போக்கில் தான் பேசியுள்ளார்.
காந்தியை கூட தனது உந்துகோலாக கமல்ஹாசன் எடுத்து இருந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக ஹேராம் படத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு இந்துவாக காந்தியால் தான் ஏமாற்றப்பட்டேன், குடும்பத்தை இழந்தேன் என்று காந்தியைக் கொல்ல சென்ற ராம் (கமல்) கடைசியில் காந்தியவாதியாக காந்தியிடமே சரணாகதியாகி விடுவார். காந்தி தான் நமக்கு வேலி என்பதை கமல் உணர்ந்திருப்பார். அதனால் இருவருக்கும் இப்படி நெருக்கம் இருக்கிறதோ என்னமோ புரியவில்லை.
இத்தோடு நின்றாரா மகாத்மா, ஹரிஜன் பத்திரிகையில் 04.05.1934 ம் ஆண்டு ஒரு கடிதம் எழுதுகிறார். சரித்திரத்தில் காணும் ஏசு நாதருக்கும், கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு நாதருக்கும் வேற்றுமை உண்டு. உங்கள் கற்பனையில் ஏசு நாதர் உங்களுக்கு உயிர்க் கடவுளாக இருக்கிறார். அது போல என் கற்பனையில் கிருஷ்ணன் இருக்கிறான், அவர்களுக்கும் கடவுளுக்கும் வேற்றுமை இல்லை. சரித்திர கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் அவருக்கு முரண்பாடான சாட்சியங்கள் இங்கு உள்ளன. அதனால் தான் ராமா என்ற பெயரை விட நாமா என்ற பெயர் மகத்தானது என துளசிதாசர் நாமாவைத் துதித்தார். நான் வணங்குகிற கிருஷ்ணன் இவர் இல்லை என ஒரே போடாய் போட்டு அனைவரையும் குழப்பி விட்டார்.
இது மட்டுமா இதே ஹரிஜன் பத்திரிகையில் 03.08.1947 ல் எழுதுகிறார், மதம் மானத்தை விட மேலானது. எப்படிபட்ட சூழ்நிலை வந்தாலும் சமயம் மாறாமல் இருக்க வேண்டும் என்கிறார்.
மதமாற்றம் தேச குற்றமா?
மதம் மாறுகிறார், மதம் மாறுகிறார் என்று கூவுகிறார்கள். எதனால் மாறுகிறார்கள், ஏன் மாறுகிறார்கள் என்று யோசித்தது உண்டா? கிராமவாசிகளை மதம் மாற்றாதீர்கள், ஹரிஜனங்களை நெருங்காதீர்கள் என்றெல்லாம் எச்சரிக்கை விடுக்கிறார். சரி தென்தமிழகம் குறித்து யோசித்து இருக்கிறாரா, கிராமத்திற்குச் சென்றுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது. ஒரு குட்டி பிளாஷ்பேக் பார்க்கலாம். தமிழகத்தில் பெரும்பாலும் பணக்கார கடவுள் வழிபாட்டை விட நாட்டார் தெய்வ வழிபாடு பிரசித்தி பெற்றது. தமிழகத்திலும் சாதிய ஆதிக்கம் என்பது தலைவிரித்து ஆடிய காலம். ஊருக்குப் பொதுவான தெய்வங்களாக இருந்தாலும் அதனை வழிபடும் உரிமை ஆதிக்க சாதிகளுக்கு இருந்ததே தவிர, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடையாது. ஊரைச் சுற்றி வரும் தெய்வம் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிக்கு வருவது கிடையாது. ஆனால் திருவிழா சார்ந்த உடல் உழைப்புகளுக்கு மட்டும் அவர்கள் தேவைப்பட்டனர். களத்தை சுத்தம் செய்தல், ஊர்க்கழிவுகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகள் செய்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.
இவர்களுக்கு தெய்வத்தை வணங்க உரிமை இல்லை. ஆனால் உடல் உழைப்பு மட்டும் தேவைப்படுகிறது என்று வருத்தத்தில் இருந்தனர். இப்படி கிடைக்கும் மரியாதையை அவர்கள் விரும்பவில்லை. அதனால் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பும் மரபு வழி வந்த முறையை மாற்றக்கூடாது, ஒடுக்கப்பட்ட சாதியினர் தான் திருவிழாவில் உடல் உழைப்பு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று அதிகார வர்க்கத்தினர் வற்புறுத்தினர். இப்படி இருக்க 1830களில் கிரசன்ட் பத்திரிகையினை வாங்கி நடத்திய லெட்சுமி நரசு செட்டி தலைமையிலான சென்னை நகரத்து மேல்சாதி மக்கள் கம்பெனி அரசாங்கத்தோடு முதலில் முரண்பட நேர்ந்தது. அப்போது கம்பெனி அரசாங்கம் ஊர்த் திருவிழாக்களில் மதம் மாறிய கிறிஸ்தவ மக்களை அடிமை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. இதனை மேல் சாதி மக்கள் எதிர்த்தனர். அதிகார மரபுகள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களால் மீறப்பட்டது தான் தமிழக வரலாற்றில் முதல் சான்று .
நாட்டார் வழிபாட்டில் முக்கியமான நிகழ்வு முளைப்பாரி திருவிழா. முளைப்பாரி வளர்க்கும் மண் ஓட்டை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்து கொடுப்பார்கள். சில சமயம் முளைப்பாரி வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில் கூட வளர்க்கப்படும். தலித் மக்கள் முளைப்பாரி ஊர்வலம் வரும் தெருக்களை சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தினர். இவர்களுக்கு முளைப்பாரி தூக்குவதற்கு உரிமை இல்லை.
இதே போல தூத்துக்குடி மாவட்டம் அருகே வடக்கன்குளத்தில் தலித் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி அவர்களுக்கு கல்வி, மருத்துவம், சர்ச்க்கு உள்ளே சென்று வழிபடும் உரிமை எல்லாம் கிடைத்தது. ஆனால் அப்போது மேல் சாதியினர் விடவில்லை. அவர்களும் கிறிஸ்தவர்களாக மாறி தலித் மக்களை சர்ச்க்குள் வரக்கூடாது என்று கூறினர். சர்ச்க்கு இரண்டு வாசல் வைத்தனர். இதனைப் பார்த்த பாதிரியார் கடுமையாகக் கண்டித்தார். இப்படி எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு சென்றாலும் சாதி என்னும் பெயரால் விரட்டப்பட்டனர்.
ஆனால் காந்தி மதம் மாறாமல் நீங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல, இதனை விட காந்தியின் வர்ண ஆசிரம தரும போதனை எல்லாம் கேட்டால் இவரையா மகாத்மா என்று இந்த உலகம் போற்றுகிறது என்று எண்ணத் தோன்றும்.
கட்டுரையின் ஆரம்பத்தில் காந்தியைப் போராளி என்று கூறியது வெறும் வார்த்தைக்கு தான். ஆம் எழுத்தாளார் ஜெயமோகன் எப்படி தன்னை மட்டுமே ஒரு சிறந்த எழுத்தாளர் என்று கருதிக்கொண்டு மற்ற எழுத்தாளர்களை இழிவாகப் பார்ப்பார். அதுபோல இந்தியாவில் காந்தி ஒருவரின் போராட்டம் தான் உயர்ந்தது என்று போதித்தார். ரத்தமும் சதையுமாகப் போராடிய போராளிகளை இவர் துச்சமாகத் தான் மதித்தார். 12.02.1925 எங் இந்தியாவில் கடிதம் எழுதிய காந்தி, போலி பெருமைக்காக தூக்கு மேடை ஏறி இறப்பதை விட பட்டினி இருக்கும் மக்களிடையே சென்று பட்டினி விரதம் மேற்கொண்டு சிறிது சிறிதாக உடலை வருத்திக் கொள்வது அதிக வீரத்தனம் வாய்ந்தது. அது மட்டுமின்றி தன்னலத்தை அறவே மறந்து பணி புரியும் ஆற்றல் புரட்சியாளர்களுக்கு உண்டு. பொறுமையின்மை புரட்சியாளர்களின் விவேகத்தை மழுங்கச் செய்யும், அவர்களை வழி தவறிப் போகச் செய்து விடும் என்ற காந்தியின் பார்வை எந்த அளவு குறுகியது.
இப்போது வின்சென்ட் சர்ச்சில் காந்தி குறித்து கூறிய கூற்று சரி எனத் தோன்றும். காந்தியை ஆரம்பத்தில் இதனால் தான் பார்ப்பனர்கள் தூக்கிக் கொண்டாடினார்கள். ஆனால் நடுவில் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக எடுத்த முடிவு, தலித் மக்கள் எனப் பேசியது எல்லாம் அவர்களுக்கு காந்தி மீது வெறுப்பை உருவாக்கியது. காந்தி எவ்வளவு பெரிய மகான், மகாத்மா என்று தூக்கிக் கொண்டாடினாலும் அவர் தூக்கிப் பிடித்த வர்ணாசிரம சாதியம் நிறைகுட பாலில் கலந்த ஒரு துளி விஷம் தான்.
- சேவற்கொடி செந்தில்