கீற்றில் தேட...

பொருளாதாரம் முடக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. தொழில்துறை, உற்பத்தி, வணிகம் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு மொத்த வழங்கலும் குறைந்துள்ளது. அரசு தரப்பில் விவசாயத் துறையில் எந்த பாதிப்புமே இல்லாமல் அதிக விளைச்சலால் விவசாய உற்பத்தி அதிகமானது போல் காட்டப்படுகிறது. ஆனால் உண்மை என்னெவென்றால் ஊரடங்கு அறிவித்து மூன்று நாட்களுக்கு பிறகே, மார்ச் 27 அன்று, விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், வேலையாட்கள் இல்லாததால் பெரும்பாலான விவசாய மண்டிகள் மூடப்பட்டிருந்தன. அறுவடைக்கும் வேலையாட்கள் சரியாகக் கிடைக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் விவசாய விளைபொருட்களை விவசாயிகளால் சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

முன் பருவ மழையினால், திறந்த வெளியில் சேமிக்கப்பட்ட தானியங்களும், விவசாய விளைபொருட்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த வருடம் நல்ல விளைச்சல் இருந்த போதிலும், அரசின் சரியான முன்தயாரிப்பு / திட்டமிடல் இல்லாததால் அறுவடைப் பணிகள் பாதித்ததாலும், அரசு கொள்முதல் நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளாததாலும் விவசாயிகள் கடுமையான இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அடுத்து வரும் பருவங்களிலும் விவசாயம் பாதிக்கப்படவுள்ளது.

saktikanta das RBI governorவிவசாயிகளுக்கான பிரதமர் உதவித் தொகையான 6000 ரூபாயும் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. மாறாக அதை வங்கிகள் வங்கிக் கடனுக்கு வரவு வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் துயருற்றுள்ளனர். பொது விநியோகத்தில் வழங்கப்பட வேண்டிய பருப்பும் நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை. கை சுத்திகரிப்பு மருந்துகளை தயாரிப்பதற்காகவும், பெட்ரோலில் கலப்பதற்காகவும், இந்திய உணவுக் கழகத்தில் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் தயாரிக்க அரசு அனுமதித்துள்ளது. விவசாயக் கழிவுகளிலிருந்தே எத்தனாலை தயாரிக்கலாம் எனும் போது மக்கள் உணவு கிடைக்காமல் அல்லாடும் இந்த நெருக்கடி நிலையில் இப்படி ஒரு ஆடம்பரம் அவசியமா? இந்தியாவில் 3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களுக்கு வட்டி மானியம் 2-3 சதவீத வட்டி மானியம் அளிப்பது மட்டும் போதாது.விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்களின் வங்கிக் கடன்களை ஓராண்டிற்காவது தள்ளுபடி செய்ய வேண்டும். இங்கிலாந்து போன்ற மற்ற நாடுகளில், வங்கிக் கடன்களை ஓராண்டிற்கு தள்ளுபடி செய்துள்ளனர்.

மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கவேண்டிய தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தியுள்ளது அதிகாரப் பரவலை எதிர்க்கும் எதேச்சதிகாரப் போக்காகும். கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் அந்தந்தத் தொகுதிகளின் குறிப்பிட்ட தேவைகளை அறிந்து நிறைவேற்ற தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரித்திருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தியது கடும் கண்டனத்திற்குரியது

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 23.8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் வேண்டல்/நுகர்வு, வழங்கல் இரண்டுமே கடுமையாக வீழ்ந்துள்ளது. மத்திய அரசு அளித்த முதல் நிதித் தொகுப்பின் 1.75 லட்சம் கோடியில், 1.02 லட்சம் கோடி இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தொகையிலிருந்தே பெறப்பட்டுள்ளது. அதனுடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது வெறும் 73,000 கோடி மட்டுமே. பல உலக நாடுகளில் மக்களைக் காக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 5-15% அளவிலான நிதித் தொகுப்புகளை அளித்துள்ளனர். ஆனால் இங்கே இன்னும் இரண்டாவது நிதித் தொகுப்பை அளிக்காது தாமதப்படுத்தி வருகின்றனர்.

பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி வங்கிக்கடன் வீதத்தை, தலைகீழ்-வங்கிக் கடன் வீதத்தைக் குறைத்தாலும் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவதால் கடன் அளிக்கத் தயங்குவதாலும் வங்கிகளிடமிருந்து மற்ற நிதி நிறுவனங்கள் கடன் பெறும் வீதம் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் இப்பொழுது கூட மாநில அரசுகளுக்கு மலிவுக் கடன் கிடைக்காமல் வட்டிச் சுமையால் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளன. தற்பொழுது கடன் சந்தையில் முதலீட்டாளர்கள் கடன் வாங்க முன்வராத நிலையிலும் மாநிலங்கள் பெறும் கடன்களுக்கு அதிக வட்டிச் சுமை உள்ளது. மாநிலங்கள் தங்களது மொத்தப் பொருள் உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 3% மட்டுமே கடன் பெற வேண்டும் எனும் வரம்பு உள்ளது. இதை 5 சதவீதமாக அதிகரிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மத்திய அரசின் கடன் பத்திரங்களைக் காட்டிலும் மாநிலங்கள் தங்களது கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டியைச் செலுத்தும் நிலையில் துயருறுகின்றன. கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மத்திய அரசு மட்டுமல்லாது நேரடியாக மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கிக்குக் கருவூலப் பத்திரங்கள் விற்க அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

அரசின் வரி வருவாய், வரி அல்லாத வருவாய், ஏற்றுமதி வருவாய், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடமிருந்து பெறும் வருவாய் என அனைத்தும் குறைந்துள்ள நிலையில், தேவையற்ற செலவினங்களைக் குறைந்தது 20 சதவீதமாகக் குறைக்குமாறு மத்திய அரசு அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அரசு கடன் பெற்றாவது மக்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்க வில்லை என்றால் பொருளாதாரத்தை ஒரு போதும் மீட்டெடுக்க முடியாது. இதற்கான நிதியை உடனடியாகப் பெற ரிசர்வ் வங்கிதான் முன்வந்து பணத்தை அச்சிட்டு அரசுக்கு அளிக்க வேண்டும். 1997 வரை இந்திய அரசிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் போது அரசு தற்காலிகக் கருவூலப் பத்திரங்களை வெளியிடும், அதை ரிசர்வ் வங்கி முதன்மைச் சந்தையில் நேரடியாக வாங்கிக் கொண்டு அதன் மதிப்பிற்கு நிகராக பணத்தை அச்சிட்டு அரசிற்கு நிதியளிக்கும். நவீன தாராளமயச் கொள்கையின் அடிப்படையில் அரசு நிதிச் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 1997 ஏப்ரல் 1இல் இந்த நடைமுறை அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரங்கராஜனால் நிறுத்தப்பட்டது. ஆனால் அதே ரங்கராஜன் தற்போதுள்ள நெருக்கடியில் அரசின் நிதிப் பற்றாக்குறையை ரிசர்வ் வங்கி பணமாக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்பதால் ரிசர்வ் வங்கி பணத்தை அச்சிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸைத் தவிர மற்ற முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்களும், பொருளாதார நிபுணர்களும் இதே கருத்தையே தெரிவித்துள்ளனர். ஆனால் ரிசர்வ் வங்கி ஆளுநர் மட்டும் மௌனம் காக்கிறார். எதனால் என்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக நிதிப் பற்றாக்குறை அதிகமாகிவிட்டால் தர மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையின் தர மதிப்பீட்டைக் குறைத்து விடும். அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையை விட்டு வெளியேறி விடுவார்கள் என்ற அச்சம்தான்.

ஆனால் இந்தியாவில் மார்ச்சிலிருந்தே 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை வீழ்ந்த போதும், அந்நியச் செலாவணி இருப்புகள் அதிகமிருப்பினும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க இயலவில்லை. கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்று மைனஸ் - 37.63 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை 60% க்கும் மேல் குறைந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, இந்திய முதலீட்டாளர்களும் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். இந்திய முதலாளியாக இருந்தால் என்ன, வெளி நாட்டு முதலாளியாக இருந்தால் என்ன, எந்தத் தேசியத்தை சார்ந்திருந்தாலும் அவர்களின் வர்க்க புத்தி ஒன்றுதான் என்பதை நிருபித்த இன்னொரு தருணம் இது. இது இந்தியாவில் மட்டும் நிகழவில்லை வளரும் நாடுகள் அனைத்திலிருந்தும் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுகின்றன. இதைத் தடுக்க மூலதனங்கள் குறுகிய காலத்திற்குள் வெளியேறாதவாறு கட்டுப்பாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்தவேண்டும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் நிதிப் பற்றாக்குறையை பணமாக்கத் தயங்குவதற்கான இரண்டாவது முக்கிய காரணம் இதனால் பணவீக்கம் அதிகரித்து விடும் என்பதுதான். இப்பொழுது பொருளாதாரத் தேவை / நுகர்வு வீழ்ந்து, வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் பணவீக்கம் பெரிதாக அதிகரிக்க வாய்ப்பே இல்லை. பண வீக்கத்தைப் பற்றி நவீன தாராளமயம் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்று பார்த்தோமானால் பணவீக்கம் அதிகமானால் நிதி மூலதனத்தின் லாபம் குறைந்து விடும். அதனால் நிதி மூலதனத்தின் ஆட்சியைக் பாதுகாக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் மட்டுமே பெருமப் பொருளாதாரம் நிலைத்தன்மை பெறும் என்று கூறி வருகிறார்கள்.

இந்திய வருவாய்த் துறையைச் சேர்ந்த 50 இளம் அதிகாரிகள் பாராட்டுதலுக்குரிய முறையில் முன்முயற்சியை எடுத்துள்ளனர். பெரும் பணக்காரர்களுக்கான வரிவிதிப்பு வரம்பை அதிகரிப்பதன் மூலமும், கரோனா துயர்தணிப்பு வரி (செஸ்) விதிப்பதன் மூலமும் அரசு கூடுதலாக வருவாய் திரட்ட முடியும் எனப் பரிந்துரைத்துள்ளனர். அவர்களது பரிந்துரையில் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 40 சதவீதம் வருமான வரி விதிக்கலாம் என்றும், ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்குச் சொத்து வரி விதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு வரிவிதிப்புகள் மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் கூடுதலாக கோவிட்-19 துயர்தணிப்பு செஸ் என 4 சதவீதம் விதிப்பதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏழைகளுக்கு நிவாரண நிதியாக ஒரு மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். மேலும் 1-10 கோடி ரூபாய் வரை வருமானம் பெறும் பன்னாட்டு நிறுவனங்களின் வருமானத்தில் கூடுதல் கட்டணத்தை 2 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும், ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் பெறும் நிறுவனங்களுக்கும் 5 சதவீதக் கூடுதல் கட்டணத்தை வசூலிக்குமாறும் பரிந்துரைத்துள்ளனர். இது தொடர்பான பரிந்துரையை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு (சிபிடிடி) அளித்துள்ளனர். இவர்களது ஆலோசனைகளைப் பரிசீலிக்காமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டுகிறது நிதியமைச்சகம்.

இதே நேரத்தில் வைர வியாபரி மெகுல் சோக்ஸி கடன் உள்பட வங்கியில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 50 பேருடைய ரூ. 68 ஆயிரம் கோடி கடனை “கணக்கியல் வழியில்” ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்த வாராக் கடன்களை வங்கிகள் வசூலிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கோவிட்19 சில ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலரது கண்களைத் திறந்துள்ளது. நிதி அயோக் கூட சில உருப்படியான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5% அளவிற்கு நிதி ஊக்கம் அளிக்க வேண்டும் என நிதி அயோக்கின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் முன்மொழிந்துள்ளார். ஏழைகளுக்கு வருமான ஆதரவு, சிறு, குறு நிறுவனங்களுக்குக் கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறையில் கூடுதல் முதலீடுகள் செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதை சரியான நேரத்தில் செயல்படுத்தத் தவறினால் மக்களின் வாழ்வாதாரங்களும், பொருளாதாரமும், நிதித்துறையும் மிகப் பெரிய சேதத்திற்குள்ளாகும், மிக மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். நம் பொருளாதாரத்தில் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு இல்லாத மிகப் பெரிய முறைசாரா துறையில் 93 சதவீதம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்குவது உட்பட இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை விட (முறைசாரா துறை ஊழியர்களுக்கு) அதிகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறைப் பணவீக்கம் மார்ச்சில் 5.91% ஆக உள்ளது. உணவுப்பொருட்களின் விலைவாசி 8.76% உயர்ந்துள்ளது. அதில் தானியப் பொருட்களின் விலைவாசி 5.3%, காய்கறிகளின் விலைவாசி 18.63% உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 15.85% உயர்ந்துள்ளது. மீன், இறைச்சியின் விலை 9.15%, முட்டை விலை 5.56% உயர்ந்துள்ளது. சராசரி பணவீக்கம் இந்தியாவில் 5.91% ஆகவும் தமிழ்நாட்டில் 6.46% ஆகவும் உள்ளது.

இந்தியாவின் விரைவு நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தித் திறன், மூலப்பொருட்களின் பற்றாக்குறையாலும், வேலையாட்கள் கிடைக்காததாலும் வீழ்ந்துள்ளது.

மார்ச்சில் தொழில் துறைகளின் வளர்ச்சிநிலை:

தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி முதன்மைத் தொழில்துறைகளின் வளர்ச்சி மார்ச் மாதத்தில் (-6.5%) குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் (-5.5%), இயற்கை எரிவாயு (-15.2%), சுத்திகரிப்பு பொருட்கள் (-0.5%), உரங்கள் (-11.9%), எஃகு (-13%), சிமென்ட் (-24.7%), மின்சாரம் (-7.2%) ஆகியவற்றின் உற்பத்தி வீழ்ந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி மட்டுமே 4% உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சென்ற நிதியாண்டில் 4.4%ஆக இருந்த உற்பத்தியானது இந்த நிதியாண்டில் 0.5 சதவீதமாக வீழ்ந்துள்ளது.

ஃபிப்ரவரியில் தொழில்துறைகளின் வளர்ச்சி நிலை:

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் படி ஃபிப்ரவரியில் (2020) தொழில் துறைகளின் உற்பத்தி அதற்கு முந்தைய நிதியாண்டின் பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல்-பிப்ரவரி (2019-20) வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியை விட 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டின் (2018-19) ஃபிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது சுரங்கத்துறை (10.0%), உற்பத்தித்துறை (3.2%) மற்றும் மின்சாரத் துறை (8.1%) உற்பத்தி அதிகரித்துள்ளது 2019-20இல் இந்த மூன்று துறைகளிலும் ஏப்ரல் முதல் ஃபிப்ரவரி வரையிலான ஒட்டுமொத்த உற்பத்தி முறையே சுரங்கத் துறையில் 1.9% ஆகவும், உற்பத்தித் துறையில் 0.6% ஆகவும் மற்றும் மின்சாரத் துறையில் 1.5% ஆகவும் அதிகரித்துள்ளது.

உற்பத்தித் துறையில் இருபத்துமூன்று தொழில்வகைகளில் 13 தொழிற்குழுக்கள் 2020 ஃபிப்ரவரியில் எதிர்மறை வளர்ச்சி காட்டியுள்ளன. அதாவது வளராமல் தேய்ந்துள்ளன. ‘அடிப்படை உலோகங்களின் உற்பத்தி’ 18.2 சதவீதமும், வேதியியல் பொருட்களின் உற்பத்தி’ மற்றும் உலோகம் அல்லாத கனிமப் பொருட்களின் உற்பத்தி’ 8.0 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

உணவுப்பொருட்களின் உற்பத்தி (-)6%, 'கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் தயாரிப்புகளின் உற்பத்தி' (-)14.8%, உலோகப் புனைபொருட்களின் உற்பத்தி (-)9.9%, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி(-6.9%) மற்றும் 'மோட்டார் வாகனங்களின் உற்பத்தி' (-)15.6% குறைந்துள்ளன. ஏப்ரல்-ஜனவரி வரையிலான உலோகப் புனை பொருட்களின் உற்பத்தி (-)12.8%, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி (-)10.1%, மின் உபகரணங்களின் உற்பத்தி (-) 1.7%, ஜவுளித்துறையில் உற்பத்தி (-)1.2% குறைந்துள்ளன.

பயன்பாட்டு அடிப்படையில் மூலதனப் பொருட்களின் உற்பத்தி (-)9.7%, நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி (-)6.4% குறைந்துள்ளன. உடனடி நுகர்வு பொருட்களின் உற்பத்தியில் மாற்றமில்லாமல் 0.0% உள்ளது முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 7.4%, இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 22.4% மற்றும் உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி 0.1% கூடியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் 40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமைக்கு உள்ளாக நேரிடும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளவில் முறைசாரா பொருளாதாரத்தில் சுமார் 160 கோடி தொழிலாளர்கள், உலகளாவிய தொழிலாளர் சக்தியில் கிட்டத்தட்ட பாதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், இவர்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் என்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 பாதிப்பால் 19.5 கோடி முழுநேர வேலைகள் அழிய உள்ளதாக ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் சர்வதேசப் பண நிதியத்திடம் கொரோனாவினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சர்வதேசப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குனரும் சிறப்பு வரைவு உரிமைகளை(SDR) வழங்க வேண்டும் என ஆதரவளித்துள்ளார். சிறப்பு வரைவு உரிமைகள் என்பது சர்வதேசப் பண நிதியத்தால் வரையறுக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் துணை அந்நியச் செலாவணி இருப்புச் சொத்துக்கள். உலக நாடுகள் அளிக்கும் நிதிப் பங்கீட்டிற்கு நிகராக அந்தந்த நாடுகளுக்கு வழங்கக் கூடிய ஒரு சர்வதேச அந்நியச் செலவாணி. வேறு வழிகளில் கடன் பெற்றால் வட்டியுடன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் சிறப்பு வரைவு உரிமைகளைப் பெறும் நாடுகள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் இது எந்தப் புதிய கட்டுப்பாட்டு விதிகளையும் நாடுகளின் மீது விதிப்பதில்லை. இதற்கான முன்னெடுப்பை அமெரிக்காவும், இந்தியாவும் எதிர்த்துள்ளன.

அமெரிக்கா தன் சுயலாபத்திற்காக, டாலர் விற்பனைக்காக எதிர்த்துள்ளது. ஆனால் இந்தியாவிற்கும், மற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஆதரவான இந்த ஜனநாயக வழிப்பட்ட முன்னெடுப்பை இந்திய அரசு எதிர்த்துள்ளது பெரிய வெட்கக்கேடு. உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது தொடர்ந்த வழக்கை அமெரிக்கா இன்னும் திரும்பப் பெறவில்லை. இந்திய மக்கள் மற்றும் மூன்றாம் உலக நாட்டு மக்களின் நலன்களைக் காவு கொடுத்துத்தான் பாஜக அரசு அமெரிக்காவின் மீதான தன் விசுவாசத்தைக் காட்ட வேண்டுமா? பாஜகவின் “தேசபக்தி” எவ்வளவு போலியானது என்பதை நிரூபிக்க இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை. அமெரிக்க அரசின் கூடாநட்பால் நம் பொருளாதாரத்தின் மீதும் நம் சுதந்திரத்தின் மீதும் விழுந்த மிகப் பெரும் அடியாக, இன்று இந்தியா உலகளவில் இராணுவத்திற்கு அதிகம் செலவளிக்கும் மூன்றாவது நாடாக உள்ளது.

- சமந்தா