“சாதலும் புதுவது அன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே”

எனும் கணியன் பூங்குன்றன் சொல்வழி “திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்” இக்கட்டுரை வரைய தூரிகை எடுத்தே விட்டேன்!

               நாம் ஒரு புகைப்படத்தினுள் அடைபட்டுப் போகவும் நமது மொத்த வாழ்வும் நமது இருப்பும் சிலரது நினைவலைகளாகிப் போவதற்கும் ஒரு நொடி போதுமானது. அந்நொடி ஒளித்து வைத்திருக்கும் திகில், நமக்குத் தெரிந்தவர்களின் மரணத்தைக் கடந்து செல்ல நேர்கையில் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்லும். யாரேனும் மறைந்த செய்தி கேள்வியுறுகையில் உண்டாகும் அதிர்ச்சியுடன் சேர்ந்து எழும் இயல்பான கேள்வி “அவரது குடும்பம் அவரை இழந்து இனி எப்படி?”. பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தாண்டி உளவியல் ரீதியிலான அவர்களது இழப்பிலும் பாதிப்பிலும் விளையும் கேள்வி. ஆனாலும் காலச் சக்கரம் சுழன்று கொண்டேதான் இருக்கிறது; நாட்கள் உருண்டோடிக் கொண்டேதான் இருக்கின்றன… அவரது குடும்பத்தார்க்கும்.

எனில், நான் இல்லையென்றால் இந்த உலகம் ஒன்றும் முடிவுக்கு வந்துவிடப்போவதில்லை. என்னைச் சார்ந்தவர்களின் அன்றாடப் பணிகள் எந்தவிதத்திலும் தடைபடப் போவதில்லை. அவ்வப்போது எனது நினைவுகள் மின்னலெனக் குறுக்கிடுவதைத் தவிர. உலகம் வழமையான பரபரப்புடன் இயங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறது. எனது இருப்பின்மை எவ்வித மாற்றத்தையும் உண்டாக்கப் போவதில்லை. வாசகர்களின் நலன் கருதி, எழுத்து நாகரிகம் கருதி, ‘நான்’, ‘எனது’ என்று குறிப்பிட்டு முன்னிலையைத் தவிர்த்துள்ளேன். “இவ்ளோதான் வாழ்க்கை… நீ என்பது காற்றில் கரைந்து போகும் ஒரு பிடி சாம்பல். அவ்வளவே! அப்புறம் ஏன் வாழும் போது இவ்வளவு ஆட்டம்?” – ஒவ்வொரு மரணமும் பறையடித்துக் கூறும் செய்தி இது. இதை நானும் கூற ஆசைதான். ஆனால் குதியாட்டம் போடுபவர்களும் பெரிய மகான் ஆகி இதைக் கூறிவிட்டு அடுத்த ஆட்டத்தைத் துவக்குகின்றனர் ஆதலால் நான் இதை மறுமொழியாமல் விட்டுவிடுகிறேன்.

ஏனோ எனது மரணம் பற்றிய சிந்தனைகள் ஒருபோதும் என்னைப் பாதித்தது இல்லை. எனது அன்புக்குரியோரின் இழப்பைத்தான் தாங்கும் தைரியமில்லை எனக்கு. அதுவே பெரும் பீதியைக் கிளப்புகிறது.

எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம்… அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி போதும் போதும் என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…. எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். எனது மரணம் வலியில்லாததாய் இருக்க வேண்டும். ஒரு நல்ல மகிழ்ச்சியான நிகழ்வுக்குப் பிறகு மனநிறைவுடன் கூடிய இரவில் வாய்க்கும் அமைதியான நித்திரை நிரந்தரமானதாகிப் போக வேண்டும். மிக முக்கியமாக என்னைச் சார்ந்தோருக்குப் பாரமாய் இல்லாமல் அவர்களின் மனதில் ‘Why now?” என்ற கேள்வியை விட்டுச் செல்வதே சாலச் சிறந்தது. “Why not now?” என்ற கேள்வி தரும் உணர்வை விடவும் கொடூரமானதொன்று இவ்வுலகில் இருக்க முடியுமா?

கம்பீரமாக வாழ்வது போலவே கம்பீரமாக மரணத்தையும் வரவேற்கவே உத்தேசம். மரணம் என்னைத் தழுவும் போது… ஆமா, அது ஏன் தழுவுது? மரணத்துடன் கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் செய்ய விருப்பமில்லை எனக்கு. பாரதி கூறியதைப் போல் “காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா ! சற்றே உனை மிதிக்கிறேன்” என்று மரணத்தை எட்டி உதைக்கவும் வேண்டாம் எனக்கு. மரணம் என்னை அழைத்துச் செல்ல வருகையில், “அட! கொஞ்சம் இருப்பா… போர்ன்விட்டா குடிச்சிட்டு தெம்பா வரேன்” என்று கூறி ஆற அமர கடைசி கோப்பையை ரசித்து அருந்திவிட்டு, “அப்புறம் என்ன? கெளம்புறது” என்றவாறே மரணத்தின் தோளில் கையைப் போட்டுப் பகடி செய்தவாறே அந்நீண்ட யாத்திரையை இனிதே துவங்க வேண்டும். என் மரணத்திற்குப் பிறகு அன்பர்கள் கடைபிடிக்க வேண்டியவை.

  • என் நினைவாக வீட்டில் நடுநாயகமாக (பூஜை அறையில் அல்ல!) மாட்டப்பட வேண்டிய புகைப்படம் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். பட்டுப்புடவையின் முந்தானையை ஒய்யாரமாக ஒரு கையில் ஏந்தியவாறு மறுகையை இடுப்பில் வைத்து, “இதுவே என் கட்டளை; என் கட்டளையே சாசனம்” என்பதான பார்வையோடு ராஜமாதா சிவகாமிதேவி போல் கம்பீரமாக யான் காட்சி தரும்(!) நிழற்படம் தலைமுறைக்கும் எனது குணாதிசயத்தைப் பறைசாற்றட்டும். செம இல்ல, அடடா! நினைத்துப் பார்க்கவே குதூகலமாக இருக்கிறது.
  • என் மண்ணில் கலந்து கரைந்து போகவே விழைகிறேன். எனவே என்னை திராவிட மரபின் படி புதைக்குமாறு ஆணையிடுகிறேன். என் மீது ஓங்கி உயர்ந்து படர்ந்து வளரும் மரத்தின் கன்று ஒன்றை நட்டு வையுங்கள். நல்ல வாசனை தரும் பூ மரமாக இருத்தல் சிறப்பு. அதன் கிளைகளில் வந்து அமரும் பறவைகள் எனக்காக இசையை மீட்டித் தந்து செல்லட்டும். என் பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகளும் அவ்வப்போது என்னை வந்து கண்டு செல்ல வசதியாய் நிறைய நிழல் தரும் மரமாக இருத்தல் அவசியம்.
  • ஆண் பெண் பேதமின்றி எனக்கானோர் அனைவரும் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டு புதைக்கும் இடம் வரை வர வேண்டும். மிக முக்கியமாக என்னவனோ வேறு யாருமோ மொட்டை அடித்துக் கொள்ளக் கூடாது. ‘மயிரே போச்சு’ என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கப்பிடாது. முடியும் எடுக்கப்பிடாது!
  • ‘வாழ்வின் ஒட்டு மொத்த ஆச்சரியங்கள், அதிசயங்கள், ரகசியங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாமும் இவளோடு புதைக்கப்பட்டிருக்கின்றன’ – எனது கல்லறைக் கல்லில் இப்படி ஏதாவது புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் கொசகொசன்னு எழுதி வச்சு ‘It’s deep’னு நாலு பேரு கண்ணுல தண்ணி வர வைக்கணும்.
  • ‘ஆவி வந்து தண்ணி குடிச்சிட்டுப் போகும்; ஆன்மா வந்து பிரியாணி சாப்டுட்டுப் போகும்’, ‘ஆன்மா சாந்தி அடையச் செய்யுறேன்; சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா தர்றேன்’ என்ற பெயரில் ‘காரியம் செய்றேன்; கருமாதி செய்றேன்’னு குடுமி வைத்திருக்கும் யாரையும் அழைத்து வந்து செத்துப் போன எனது பிராணனை மீண்டும் மீண்டும் வாங்காதீர்கள். கிழமை, 16வது நாள் விசேஷம் என வந்தேறிகளின் சடங்கு ஒன்று கூட இருத்தல் கூடாது. அவர்கள் பிழைப்பிற்கு என் சாவா கிடைத்தது?
  • ‘ஆவி சுத்தி சுத்தி வரும்; பிசாசு நடுவுல இருந்து பிச்சுக்கிட்டு வரும்’ என்றெல்லாம் கலர் கலராக நம்பும் அன்பர்களுக்கு: அப்படி சகல சக்திகள் யாவும் வாய்க்கப் பெற்ற ஆவி ஆகி காற்றில் பறந்து திரியும் பெரும் பாக்கியம் கிட்டுகிறதெனில் எனது அன்புக்குரியவர்களுக்கு அரணாக இருந்து அவர்களைக் காப்பேன். எனவே என்னை வழியனுப்பி வைக்கும் வைபவத்தைக் கைவிடுங்கள். என்னையும் எனது மன நிம்மதியையும் குலைக்கும் பொருட்டு என்னைப் பாடாய்ப் படுத்தியவர்கள் ‘ஜாக்க்க்க்கிரதை’. என்ன பில்லி சூனியம் வச்சாலும் போக மாட்டேன். வச்ச்ச்சு செய்வேன். பட்டியல் கொஞ்சம் பெருசு ஒறவுகளே… பாத்து பக்குவமா பத்திரமா நடந்துக்கோங்க! உயிருடன் இருக்கும் போதே இவ்வளாவு பிடிவாதத்துடன் இருப்பவள் இறந்த பின் எவ்வளவு பிடிவாதக்காரியாய் மாறுவேன் என்பதைத் தங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். என் பிடிவாதத்தின் முன் உங்கள் பில்லி சூனியம் எல்லாம் தவிடு பொடியாகி விடும் !
  • சடங்கு சம்பிரதாயம் என்று என்னைக் குளிப்பாட்டுதலோ உடை மாற்றுதலோ நடைபெறக் கூடாது. அக்காலத்தில் குளிரூட்டப்பட்ட பெட்டி கிடையாது. எனவே துர்நாற்றம் வீசக் கூடாது என இறந்தவரைச் சுற்றி நின்று சிலர் குளிப்பாட்டி உடை மாற்றி விடுவார்கள். அப்போது இறந்தவரின் உடல் படும் பாடு இருக்கிறதே! தலை ஒரு பக்கமாய் சரிய கை மறு புறம் பொத்தென விழ… காணவே பதைபதைக்கும் காட்சிகள் அவை. உயிருடன் இருக்கும் போது கலகலப்பான அன்னாரது முகம் ஒரு நொடி கண்திரை முன் வந்து மறையும் அத்தருணம் என் கண்களில் நீர் கோர்த்திருக்கிறேன் பல முறை. இக்கொடூரம் எல்லாம் எங்கிட்ட வேண்டாம்… ஆமா!
  • எல்லாவற்றிற்கும் மேலாக உயிருடன் இருக்கும் போது நான் காக்கும் கண்ணியத்தை என் மறைவிற்குப் பிறகும் பின்பற்ற விடுங்கள். உயிரில்லாதவருக்கு மானம் இல்லை என்று யார் சொன்னது? உடலைச் சுத்தம் செய்ய, என்னைத் தெரியாத தாதியரை வைத்து கண் மறைவில் செய்து விட்டுப் போங்களேன். ஒருவேளை சமூக வழக்கப்படி இவ்விடயத்தில் எனது விருப்பத்தை மீற எத்தனித்தால் அக்கணம் உயிர்த்தெழுந்து, “அடேய் அறிவிலிகாள்!” என்று வசவு பாடிவிட்டு மீண்டும் மீளாத் துயில் கொள்ள உத்தேசம்.
  • என் நேசத்துக்குரியவர்களுக்கு அன்போடு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்: I hate tears. என் மரணத்தை முழுமையாகக் கொண்டாடுவீர்களாக!
  • எனது அடுத்தடுத்த தலைமுறைக்கு பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரைச் சொல்லிக் கொடுங்கள்.

ஓரளவு நினைவுக்கு வந்தவற்றைப் பதிவிட்ட நிறைவு.

ஒருமுறை செத்துப் பிழைத்த உணர்வு.

மேலும் செத்துச் செத்து விளையாட விழைவு!

- சோம.அழகு

Pin It