நான் ஒரு பெரியார் பற்றாளன்; பகுத்தறிவுவாதி. பழைய முறைப்படி நான் ஒரு இந்து வன்னியர் வகுப்பைச் சார்ந்தவன். இந்திய அளவில் காந்தி தீண்டாமை ஒழிய வேண்டும் என்று மேம்போக்காகக் கூறினார். தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் 1920 முதலே சாதி ஒழிய வேண்டும்; தீண்டாமை ஒழிய வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொண் டார். அதற்காகவே தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

எங்கள் கிராமம் சிறிய கிராமம். அதில் வன்னியர், உடையார், முதலியார், யாதவர், ஆதித் திராவிடர் ஆகிய உள்சாதிகள் உள்ளன. அதில் சாதி இந்துக்கள் என்ப வர்கள் சுமார் 1500 மக்கள் தொகையும் ஆதித் திராவிடர்கள் 500 மக்கள் தொகையும் உண்டு. ஆனால் சாதி இந்துக்கள் தெருவில் ஆதி திராவிடர்கள் குதி புரள வேட்டி கட்டிக் கொண்டோ, செருப்பு அணிந்து கொண்டோ, தெருக்களில், வண்டியில் உட்கார்ந்தோ, சைக்கிளில் உட்கார்ந்து கொண்டோ செல்லக்கூடாது. கீழ்ச்சாதிப் பெண்களும் பொதுக் குளத்தில், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. அவர்கள் கரையில் பானையை வைத்து இந்துப் பெண்களிடம் தண்ணீர் ஊற்றுமாறு கெஞ்சுவார்கள். விருப்பப்பட்டவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள்; சிலர் வெறும் பானையை எடுத்துச் செல்வார்கள்.

ஆண்கள் இந்துக்களுக்கு அடிமை வேலை செய்ய வேண்டும். இந்துக்கள் வீட்டில் யாராவது இறந்து விட்டால், ஆதித் திராவிடர்கள் எழவு சொல்ல, மேளம் அடிக்க, குழிவெட்ட, எரிப்பதாயின் கட்டை அடுக்க என்று அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். அவர்களுக்கு உண்டான நியாய கூலி கொடுப்பதில்லை.

எங்கள் கிராமத்தில் சாதி இந்துக்களுக்கு என்று 8 நாட்டாண்மைக்காரர்கள், 8 கொத்து என்பார்கள். அதில் என் தந்தையும் ஒருவர். இடுகாட்டுக்குச் சென்றால் நாட்டாண்மைக்காரர்கள் வந்தால் அவர்களையும் உட்கார வைத்து காசு மாற்றுவார்கள். என் தந்தைக்குப் பின் அந்தப் பொறுப்பு என்னிடம் வந்தது.

ஒரு இறப்பிற்கு நானும் சென்றிருந்தேன். காசு மாற்றல் என்ற நிகழ்வுக்குப் பச்சமுத்து படையாட்சி என்பவர் தலைவர். என்னையும் உட்கார வைத்தார் கள். தலைவர் குறைந்த கூலியாகக் கொடுத்தார். ஆதித் திராவிடர்கள் கொஞ்சம் கூட்டிக் கொடுக்க கெஞ்சினார் கள். தலைவர் அதற்கு இது தான் மாமூல்; இதைத் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கடிந்தார். நான் கூறினேன், இப்போது ஒரு ஆண் கூலி 12 அணா, முக்கால் (¾) ரூபாய் பழைய முறை என்றால், அவர்களுக்கு 2ஙூ அணா தான் வருகிறது. அதனால் தற்காலக் கூலியைக் கொடுக்கும்படிக் கூறினேன். அதற்கு அவர் இதுதான் மாமூல்; இதற்குமேல் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். அவர்களும் பேசாமல் போய்விட் டார்கள்.

1948 வாக்கில் நான் எனது அத்தான் வீடு இலந்தங்குழி என்ற கிராமத்தில் இருந்தது. அங்குச் சென்றேன். அப்போது பெரியார் அரியலூர் வருவதாக அக்கிராமத்தினர் அரியலூர் புறப்பட்டார்கள். நானும் அவர்களோடு அரியலூர் சென்றேன். தந்தை பெரியார் சமுதாய இழிவைப் பற்றியும் அதற்கு ஆதாரமான புராணங்கள் பற்றியும் கடவுள்கள் பற்றியும் விளக்க மாகப் பேசினார். அவர் பேச்சு எனக்குக் கோபமாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் இருந்தது. ஏனென்றால் நான் அப்போது ஆஸ்திகன். காலையில் எழுந்தவுடன் வெளிக் காட்டுக்குப் போய்விட்டு, குளத்தில் குளித்துவிட்டு, சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தான் வீட்டு வேலைகளைக் கவனிப்பேன். என் தந்தைகூட, திட்டு வார்கள். அதைப் பொருள்படுத்துவது இல்லை. அதனால் எனக்குப் பெரியார் பேச்சு என்னை கோபத்திற்குள்ளாக் கியது. பெரியார் பேசி முடியும் தறுவாயில், “நான் சொல் வதை நம்பாதீர்கள்; உங்கள் மனதிற்குப்பட்டதைச் சிந்தித்து உணருங்கள்” என்ற வார்த்தையில் நான் சிந்திக்கலானேன். என் மாமா வீட்டில் பல புராணங் கள் இருந்தன. அதை வரகூர் எடுத்து வந்து, இரவு நேரங்களில் படிக்க ஆரம்பித்தேன்.

பெரியார்சொன்ன கருத்துப்படி கடவுள் பிறப்பு நடவடிக்கைகள் மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டிருப்ப தையும் உணர்ந்தேன். அதிலிருந்து சுயமரியாதை உடையவனாக வாழ்ந்து வருகிறேன். அவர் தீண்டா மையைப் பற்றியும் பல கூட்டங்களில் விளக்கினார். அதிலிருந்து நான் தீண்டாமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி ஆதித் திராவிடர் தெருவுக்குப் போய் சாதி இந்துக்களுக்கு அடிமை வேலை செய்வதை, விட்டுவிட அறிவுறுத்துவேன். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடிப்பேன். சிலர் தண்ணீர் கொடுக்க மறுப்பார்கள். அவர்களிடம் சண்டையிட்டுத் தண்ணீர் குடிப்பேன். சாதி இந்துக்கள் ஆதித் திராவிடர் தெருவுக்குச் சென்று வந்தால் குளித்து விட்டுத்தான் வீட்டினுள் நுழைவார்கள். நான் அவர்களை தொட்டுக் கொண்டு குளிக்காமலேயே வீட்டுக்குச் செல்வேன்.

நான் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதுகூட, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தால், பள்ளிக்குப் போன உடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு, வேறு துணி கட்டிக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு, பள்ளித் துணி யைக் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவ்வளவு தீண்டாமைக் கொடுமை. ஆதித் திராவிடப் பெண்களையும் குளத்தில் இறங்கி தண்ணீர் மொள்ள தைரியம் சொல்லியும், சாதி இந்துக்களுக்குப் பயந்து குளத்தில் இறங்கி தண்ணீர் மொள்ள மாட்டார்கள்.

நான் ஆதித் திராவிடர் தெருவுக்குப் போய் அடிமை வேலை செய்வதை நிறுத்தச் சொன்னால், “பரம்பரை யாகச் செய்த  வேலையை எப்படிங்க விடுவது” என்று முதியவர்கள் கூறுவார்கள். அவர்கள் காலமானபின், இளைஞர்கள் நான் சொல்வதைக் கேட்டு, நாங்கள் வேலைக்கு வந்தால் தற்போது வழங்கும் கூலி கொடுத் தால் வேலைக்கு வருவதாகக் கூறியதை அடுத்து. கூலியாகக் கொடுத்து வேலை வாங்கினார்கள். பெண் களையும் குளத்தில் இறங்கித் தண்ணீர் எடுக்க துணிவு கொடுத்தேன். அவர்கள், அவர்கள் தெருவில் 2 நபர் கள் வீட்டில் செப்புக்குடம் இருக்கும். அவர்களை அழைத்து வந்து கரையில் பானையை வைத்து அக்குடத்தினால் தண்ணீர் மொண்டு ஊற்றி, எடுத்துச் செல்வார்கள்.

என் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ஆதித் திராவிடர் களுக்குச் சமபந்தி வைத்து உணவு கொடுத்தேன். மாணவர்களைச் சுதந்தர தின விழா கொண்டாட ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் பயன்படுத்தி ஆதித் திராவிட மாணவர்களையும் அழைத்து ஆலயப் பிரவேசம் செய்வித்தேன். பள்ளி மாணவர்கள் எல் லோரும் தண்ணீர் குடிக்க ஒரே பாத்திரத்தில் ஏற்பாடு செய்தேன். ஆதித் திராவிடர் என்பவருக்குத் திருமணம். சுயமரியாதைபடி அந்துர் கி.ராமசாமி, இரா.பொன்னு சாமி, ஆ.செ.தங்கவேல், நான் நால்வரும் திருமணம் செய்வித்து அவர் வீட்டில் உணவு உண்டு வந்த போது, என்னைச் சாதிக் கட்டுப்பாடு செய்ய கிராமப் பெருந்தனக்காரர்கள் ஏற்பாடு செய்து தோற்றார்கள்.

என்னை ஊராட்சித் தலைவராக வரப் பல இடையூறு செய்தார்கள். இவர்கள் எதிர்ப்பை மீறி நான் தலை வராக வந்து ஆதித் திராவிடர் குழந்தைவேல் என்பவர் பஞ்சாயத்துக் கூட்டத்திற்கு வந்த போது கீழே உட் காரப் போனார். அவரை இந்துக்களோடு சமமாக உட்கார வைத்தேன். இப்படியே அவர்களுக்கு விழிப் புணர்வு ஊட்டியதால் உற்சாகப்படுத்தி, அவர்கள் மேளம் அடிக்கவோ, அடிமை வேலை செய்யவோ வருவது இல்லை. சாதி இந்துக்களே அனைத்து வேலைகளை யும் செய்துகொள்கின்றனர். பெண்களும் பொதுக் கிணற் றில் குளத்தில் சமமாகத் தண்ணீர் எடுப்பார்கள். எங்கள் ஊர் தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தேன். தற்போது எல்லோரும் சமமாக உட்கார்ந்து தேநீர் அருந்துவது, சிற்றுண்டிக் கடைகளில் சமமாக உட்கார்ந்து உண்ணுவது போன்ற காரியங்கள் நடப்பில் உள்ளன.

எங்கள் கிராமத்தில் தற்போது தீண்டாமை என்பதே அறவே இல்லை. அதற்காக நான் பல துன்பத்திற்கும் இழப்பிற்கும் ஆளானேன். இருப்பினும் கிராமத்தில் தீண்டாமை ஒழிந்தது பற்றிப் பெருமையடைகிறேன்.

Pin It