periyar annaaஅரசியல்வாதி அடுத்த தேர்தலை எண்ணுவான் அறிஞன் அடுத்த தலைமுறை பற்றி எண்ணுவான் என்கின்ற சிந்தனைப் போக்கின் அடிப்படையில் செயல்பட்டு தான் அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்திய துணைக்கண்டம் முழுவதும் மாநில சுயாட்சி பேசினார். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி காங்கிரஸ் இல்லையென்றால் சுதந்திரம் சாத்தியமில்லை என்று எண்ணியிருந்த மக்களிடம் அந்த எண்ண ஓட்டத்தை மாற்றி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையைத் தெளிவுபடுத்தி, காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சார வலிமையை உண்டாகச் செய்து, சுதந்திரம் - காங்கிரஸ் எனும் எண்ண ஓட்டத்தை தாண்டி திராவிட அரசியல் களம் இன்று வரையிலும் தமிழகத்தில் நிற்பதற்கு மிகப்பெரிய காரணம் அண்ணாவே. எண்ணிப்பாருங்கள் அப்போதைய சூழலில் பாரம்பரியம் மிக்க சுதந்திரத்திற்கான கட்சி என்னும் விதையை, பிம்பத்தை மாற்றி " சுதந்திரம் வாங்கியாச்சு இனி நடப்பதை பார்ப்போம் " என மக்களின் சுதந்திரம் பேசி மக்களின் அரவணைப்பில் திமு கழகத்தை உருவாக்கி வென்றெடுத்து என்று திராவிட இயக்கத்தின் பிடியில் தேசிய கட்சிகளை அண்டவிடாமல் ஆட்சியை உருவாக்கி நமக்கெல்லாம் உரிமை கிடைத்திட செய்தார் அண்ணா.அவரின் உழைப்பு அவ்வளவு எளிதன்று.

தமிழ்நாட்டில் அறிவுப்பாதைக்கென்று , சுயமரியாதை உணர்வுக்கென்று, பாதை காட்டி இயக்கம் கண்ட தந்தை பெரியாரின் விருப்ப சீடனாகவே அண்ணா இருந்தார். எப்போதும் இருந்தே வந்திருக்கிறார். பெரியாரின் புரட்சிகர சிந்தனைக்கு வலுவூட்டும் ஆற்றலாளர் என்கின்ற அளவுக்கு அண்ணாவின் எழுத்து, பேச்சு, எண்ணம், அவரின் அன்பு, மரியாதை, நன்மதிப்பு, மொழிப்பற்று, ஆதிக்க எதிர்ப்பு, ஜாதி, கடவுள், மூட நம்பிக்கை எதிர்ப்பு, என ஐயாவின் அரசவையில் முன்னிலை தளபதியாய் என்றும் இருந்தே வந்திருக்கிறார். ஐயா விற்கும் அண்ணாவிற்கும் 1949 வரையிலான தொடர்பு மிகச் சுவையானது. 1949 அய்யா அண்ணா கருத்து வேறுபாட்டால், அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து விலகி திமுகழகத்தினை தோற்றுவித்தார். திமு கழகம் தோன்றியதற்கான காரணங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் திமு கழகத்தின் கொள்கைப் பிரகடனம் திராவிடர் கழகத்தின் கொள்கை பிரகடனமே.

திமு கழகம் தேர்தலில் நிற்கும் முன்பு வரை அதாவது 1956 திருச்சி திமுக 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்கின்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் போட்டியிடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. (அது ஜனநாயகத்தின் ஊன்றுகோலாக பார்க்கிறோம் இன்றுவரையில் )

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொத்த செயல்திட்டமும் இந்தி எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை பரப்புதல், என்று அடிப்படை வேலைகளை செய்து கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை. திமு கழகம் தேர்தல் பாதைக்கு வந்த பிறகும்கூட கொள்கையில் இருந்து மாறுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால் 1967 அண்ணா முதல்வர் பதவி ஏற்ற போது " இந்த அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை ஆக்குகிறேன்" என்று முழங்கினார். முழங்கியதோடு மட்டுமல்லாமல் செயலிலும் செய்து காட்டினார். பெருமைமிகு அண்ணா முத்தான மூன்று சட்டம் மட்டுமல்லாமல் கொள்கை வழிநின்று தேர்தல் பாதையிலும் " நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் " என்று, தன் இலட்சிய கனவுகளுக்கு பாதை அமைத்திட்டார் அறிஞர் அண்ணா. கட்சி வேறானாலும் குறிக்கோள் ஒன்றேயாதலின் இரு கட்சிகளும் " இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்" என்றார் அண்ணா. அந்த வகையில் அண்ணாவிற்கு பிறகு கலைஞரும், கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமு கழகம் என்ற அளவில் மக்கள் விடுதலைக்கு திராவிடர் கழகத்தோடு தோளோடு தோளாக நிற்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

திராவிடக் கலை வேறு, ஆரியக்கலை வேறு, நம்பமுடியாத கதைக்களமும், ஆபாசமும், திராவிடர்களின் உரிமை, பண்பு, பண்பாடு, சுதந்திரம், என அனைத்தையும் அடக்கி ஒடுக்கவே ஆரியக்கலை உருவாயிற்று என்று அடுக்கடுக்காக ஆதாரங்களோடு வரலாற்றைச் சொன்னவர் அறிஞர் அண்ணா. தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோதே திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் 1922-ல் மனு தர்மத்தையும், இராமாயணத்தையும், தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கியவர். இதற்கு கண்ணகியின் காவலர்கள் ஆகிய தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொறுப்பாரா பெரியாரின் தளபதி கருத்துப் போர் புரிய அறைகூவல் விட்டார்.

09-02-1943 ல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் அண்ணாவுக்கும் ஆர், பி சேதுப்பிள்ளை விவாதம்.

14-03-1943 ல் சேலத்தில் அண்ணாவுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார்க்கும் விவாதம். அண்ணா பிரித்துவிட்டார் ராமாயணத்தை. திகைத்து திரும்பினார் சோமசுந்தர பாரதியார். ஈரோடு தயாரிப்பு அல்லவா அறிஞர் அண்ணா.

தென்னாட்டு ராவணனை தில்லி அரசாங்கம் எரிக்கும்போது பிரதமர் நேரு கோவில் பூசாரி அல்ல, கோலேந்தியவர் என்றார் அண்ணா. ராவணனை எரிக்கும்போது நமது உள்ளம் எல்லாம் பதறுகிறது என்று இதமான உணர்வை வெளிப்படுத்தினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் பிறந்த காஞ்சியில் ராமாயண, மகாபாரத, பெரியபுராணம் ஆகியவற்றை இருந்த இடம் தெரியாமல் செய்ய வேண்டும் என்று சுயமரியாதை உணர்வு தீயில் சுழன்று கொண்டிருந்தவர் அறிஞர் அண்ணா. விடுதலை நாளிதழின் துணை ஆசிரியரான பின் " ரிப்பன் கட்டிடத்து சீமான்கள்" என்று தலையங்கம் எழுதியதை படித்து பெரியாரே பாராட்டியுள்ளார். அறிஞர் அண்ணாவே இத்தகைய சிறப்புகளுக்கும், இனமான உணர்வுக்கும் சொந்தக்காரர். கொள்கைவாதி, சுயமரியாதை, பகுத்தறிவு, மாநில உரிமை கோரும் சமத்துவ வாதி, தமிழ் - தமிழர் உரிமை என்று அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் பயணம் இன்றும் தொடர்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அண்ணாதுரை தமிழரே இல்லை, என்ன செய்துவிட்டது திமு கழகம்?? என்று கையை உயர்த்தி அண்ணாவை விமர்சிக்கும் அரசியல் அறிவற்ற பார்ப்பன அடிமைகள் கூட அண்ணாவை விமர்சித்துவிட்டு அண்ணாவின் கொள்கைகளை தான் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆம் மாநில சுயாட்சி, மாநில உரிமை, தமிழ், தமிழர் பண்பாடு, மொழி உரிமை என அனைத்து தளங்களிலும் அண்ணாவின் உழைப்பு மிக அதிகம். அண்ணாவை எதிர்த்து, இழிவாக பேசியவர்கள் கூட அண்ணாவின் அரசியலையே இன்றுவரை செய்து வருகிறார்கள் என்று சொன்னார் அண்ணா எதிரிகள் இடத்திலும் வாழ்கிறார், துரோகிகள் இடத்திலும் வாழ்கிறார், திராவிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்றுதான் அர்த்தம். இன்னும் சொல்லப்போனால் திராவிடத்தை அழிக்க நினைப்பவர்கள் கூட அந்த திராவிடத் தத்துவத்தின் அடிநாதத்தை தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

பெரியார் சொல்வார் " எனக்கு விளம்பரமே என் எதிரி " என்று அதுபோல அண்ணா இறந்து நூற்றாண்டுக்குப் பிறகும் திராவிடர் இயக்கம் இலை உதிராமல் இருக்கிறதே என்கின்ற உறுத்தல் இருக்காதா என்ன ? 47 ரக துப்பாக்கிகாரர்கள் அறிஞர் அண்ணா ஏய்த்து பேசலாம், ஆனால் அண்ணா அவர்கள் முன்வைத்த அரசியலை ஒரு போதும் புறந்தள்ளிவிட முடியாது. அண்ணா அவர்கள் திராவிட தத்துவம் என்று பேசியதை தான் இன்று தமிழ்த்தேசியம் என்று பேசுகின்றனர். திராவிடமும் தமிழும் ஒன்றே. பிரிப்பவரே காணாமல் போவர், என்பதே அப்போது முதல் இப்போது வரை தெளிவாக தெரிகிறது. அண்ணா அவர்களின் கட்டுமானத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

மறுக்கமுடியாத, புறந்தள்ள முடியாத தமிழர் நிலத்தின் அணையா விளக்கே அறிஞர் அண்ணா ..

- த.மு.யாழ்திலீபன்

Pin It