farmers 600இந்தியாவில் கோதுமை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அதிக மானியம் வழங்கக் கூடாது என்று அமெரிக்க கோதுமை விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் முறையிடக் கோரி அமெரிக்க அதிபர் ஜோபைடனின் நிர்வாகத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 28 பேர் வலியுறுத்தி, அமெரிக்க வர்த்தக அமைச்சர் காத்தரின் டாய் மற்றும் வேளாண் அமைச்சர் டாம் வில்சாக் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது “இந்தியாவில் கோதுமையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அளவுக்கு அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organaisation (WTO)) விதிகளை மீறி 10 சதவீதத்திற்கும் அதிகமான மானியம் வழங்கப்படுவது, சர்வதேச வேளாண் சந்தையில் பாதகமாக அமைந்து விடும். எனவே இந்த விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கரும்பு விவசாயிகளுக்கு அதிக அளவில் மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த அளவுக்கு மானியம் விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடாது என்று ஆஸ்திரேலியாவும், பிரேசிலும் எதிர்ப்பு தெரிவித்தன. அதற்கான காரணம் என்னவென்றால் ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் உற்பத்தி செய்யும் சர்க்கரைகளுக்கான டிமாண்ட் உலக மார்க்கெட்டில் கடுமையாக சரிந்து விட்டதாம். எனவே, இந்திய கரும்பு விவசாயிகளுக்கு இந்திய அரசு கொடுக்கும் மானியங்களை நிறுத்தக் கோரி வழக்கு தொடுத்திருக்கிறது.

WTO அமைப்பு

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு இந்திய அரசு கொடுக்கும் மானியங்களை கொடுக்க கூடாது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் ஏன் வழக்கு தொடுக்கின்றன. அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். உலக வர்த்தக அமைப்பு என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும். சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு 1995 ஜனவரி 1ல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பானது அதில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குபடுத்துகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை வழங்குகிறது. இரு நாடுகளுக்கு இடையே எழும் தகராறுகளுக்கு உலக வர்த்தக அமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமூகமான தீர்வு காண வழிவகுக்கிறது. உதாரணமாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஒப்பந்த அடிப்படையில் பொருட்களை ஏற்றுமதியோ, அல்லது இறக்குமதியோ செய்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அதே பொருளை வேறு நாட்டிற்கு (பங்களாதேஷ்) ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ செய்தால் அதன் முறைகள் (விலை உட்பட) முற்றிலும் மாறும். இந்த முறையை மாற்றியமைத்து அனைத்து நாடுகள் மற்றும் பொருள்களுக்கான பொதுவான சட்ட விதிகளை ஏற்படுத்தி அதனடிப்படையில் வர்த்தகம் நடக்கதக்க தோது செய்யும் ஏற்பாடே உலக வர்த்தக அமைப்பு. இந்த அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாகவும், பார்வையாளர்களாகவும் உள்ளன.

விவசாய மானிய வகைகள்

தொழில்துறை சார்ந்த அனைத்து நாடுகளுக்கான வர்த்தக அமைப்பாக தொடங்கப்பட்ட அமைப்பு உலக வர்த்தக அமைப்பாக உருவெடுத்த பின் வேளாண்மையும், அதன் ஒரு பகுதியாயிற்று. அதற்கான ஒப்பந்தம் AOA (Agreement on Agriculture (விவசாய ஒப்பந்தம்) என்பதன் சுருக்கமே AOA என்பதாகும்) என்று அழைக்கப்படுகிறது.. 1995க்கு முன்பு வரை வேளாண்துறை இத்தகைய வர்த்தக அமைப்புகளின் கவனத்தை பெரிதாகப் பெறவில்லை. ஆனால் உலக வர்த்தக அமைப்பு (WTO) துவங்கிய போதே விவசாய ஒப்பந்தம் (AOA) அதன் பகுதியாயிற்று. அதன்படி ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் உணவு வர்த்தக சந்தையை பாதிக்கும் மானியங்களை படிப்படியாக குறைக்க ஒப்புக் கொள்ள வலியுறுத்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டன WTO வை முன்னெடுத்த நாடுகள். அது மட்டுமல்லாது உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்படும் ஏற்றுமதி, இறக்குமதி வரிகளை ஒரு கட்டுக்குள் வைக்கவும் (AOA) வழி செய்தது. இந்த சட்டதிட்டங்களை ஏற்படுத்தும் போதே வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயத்தை பாதுகாக்கும் வண்ணம் பல சட்ட பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டு விட்டனர். வேளாண்மை துறைக்கு அளிக்கப்படும் மானியங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டன. அப்பிரிவை மூன்று வண்ணபெட்டிகளாக அடையாளப்படுதினர். பச்சை, நீலம், அம்பர் (பழுப்பு மஞ்சள்) ஆகியவையே அந்த வண்ணப்பெட்டிகள். பச்சை வண்ணப்பெட்டி மானியங்கள் வர்த்தகத்தை பாதிக்காத மானியங்கள் என வகைப்படுத்தப்பட்டன. ஆகவே, இத்தகைய மானியங்களை ஒரு நாடு தனது விவசாயிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். நீல நிறப் பெட்டி மானியங்கள் வர்த்தகத்தை ஓரளவு பாதிப்பவை. அம்பர் நிற பெட்டி மானியங்கள் வர்த்தகத்தை பெரிதும் பாதிப்பவை.

விவசாய ஒப்பந்தத்தில் (AOA) வளரும் நாடுகள் தங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் பண மானியங்களை பச்சைபெட்டி மானியங்கள் என வகைப்படுத்தியுள்ளன. ஆனால் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை அம்பர் நிற பெட்டி மானியம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை உணவு வர்த்தகத்தை மிகவும் பாதிக்கும் மானியம் என கருதப்படுகிறது. இத்தகைய சட்டம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உணவு வர்த்தகப் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. 1986 - 88 ஆண்டுகளில் நிலவிய உணவுப் பொருட்களுக்கு அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் தற்போது கூடுதலாக அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை மானியமாகக் கருதப்படும். இத்தகைய மானியம் அதன் உற்பத்திச் செலவில் 10 சதவீததிற்கு மேல் இருக்கக்கூடாது. முப்பந்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமே அனுமதிக்க முடியும். அதற்கு மேல் கொடுக்கப்படும் ஆதரவு விலை மானியமாக கணக்கிடப்படும் என்று உலக வர்த்தக அமைப்பின் வேளாண் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் வழங்கும் முறை

இந்தியாவில் விவசாய மானியம் முதன்மையாக உரம், நீர்ப்பாசனம், உபகரணங்கள், கடன் மானியம், விதை மானியம், ஏற்றுமதி மானியம் போன்ற மானியங்களை கொண்டுள்ளது. உரங்களுக்கான மானியம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் 1986-88 ஆண்டுகளில் உற்பத்தி செய்த விளை பொருட்களின் மொத்த மதிப்பில் 10 சதம் வரையிலும், வளர்ந்த நாடுகள் 5 சதம் வரையிலும் மானியம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா தன்னுடைய நாட்டு விவசாயிகளுக்கு மானியத்தை அள்ளி அள்ளி கொடுக்கிறது. அதெல்லாம் விளைச்சலை அறுவடை செய்து, வியாபாரத்திற்குத் தயார்படுத்தும் முன்பாக வழங்கப்படும் மானியங்கள் அதையெல்லாம் மானியக் கணக்கில் சேர்க்காமல் ஊக்கத்தொகை என்கிற பெயரில் கணக்கு காட்டுகின்றன. இதே போல் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ஊக்கத்தொகை என்றே கணக்கு காட்டுகின்றன. இதுமட்டுமல்ல விவசாயம் செய்யாமலிருக்கக் கூட அங்கெல்லாம் அரசாங்கம் மானியம் தருகிறது. அதெல்லாம் மானியம் என்கிற கணக்கில் வராதாம். உதாரணமாக அமெரிக்காவில் ஒருவருக்கு ஊக்கத் தொகை என்கிற பெயரில் 3.9 மில்லியன் டாலர் மானியம் கொடுக்கிறார்கள். உண்மையில் அந்தப் பயிருக்கான உற்பத்தி செலவு 3.4 மில்லியன் டாலர்தான். அதற்கு மேலேயே மானியம் கொடுக்கிறார்கள், ஊக்கத்தொகை என்கிற பெயரில். இந்நிலையில் அந்த பொருள் என்ன விலைக்கு விற்றாலும் விற்காமல் போனாலும் கூட அமெரிக்க விவசாயிகளுக்கு லாபமே!

இந்தியாவில் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரிசி, கோதுமை கொடுப்பதற்குகாக விவசாயிகளிடமிருந்து கொஞ்ச அளவில் தான் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. அதாவது விளைச்சலில் 30 சதம் மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து இந்திய அரசாங்கம் வாங்குகிறது. ஆனால் இது கூட அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது. இந்தியாவின் உணவுப்பாதுகாப்புக்காக 82 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் முறையை கூட அமெரிக்கா எதிர்க்கிறது. விவசாயம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஏக்கருக்கு 1000 முதல் 2500 டாலர்கள் வரை ஊக்கத்தொகை என்கிற பெயரில் தன்நாட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திக் கொண்டிருக்கின்றன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அரசுகள். பால் விவசாயி என்று பதிவு செய்தாலே போதும் பால் கறந்தாலும் கறக்காவிட்டாலும் நேரடியாக பணம் போய் சேர்ந்துவிடும். திராட்சை விவசாயிகள் எத்தனை ஏக்கர் விவசாயம் செய்கிறேன் என்று பதிவிட்டாலே போதும் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை ஏறிவிடும். இதே போல் பல பயிர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இப்படி அள்ளிவிடப்படுவதெல்லாம் மானியம் என்கிற கணக்கில் வராதாம். இந்தியாவில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்று கொடுக்கப்படும் பிச்சைக்காசு மட்டும் மானியம் கணக்கில் வருகிறதாம்.

மானியமே இல்லாத நாடு இந்தியா

இந்தியாவில் விவசாயிகளுக்கு என்று எந்த மானியமும் இல்லவே இல்லை. உரமானியம் என்கிறார்கள் அது ஒரு நாளும் விவசாயிகளின் கைகளுக்கு வந்ததில்லை. உரக்கம்பெனிகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. சொட்டு நீர் மானியம் என்கிறார்கள். அது சொட்டு நீர் உபகரண கம்பெனிகளின் கணக்குத் தான் போகிறது. வேளாண் உபகரணங்களுக்கு மானியம் கொடுக்கப்படுகிறது. அதுவும் வேளாண் உபகரணம் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது. விதைக்கு மானியம் என்கிறார்கள் அதுவும் விதை உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்குத்தான் கிடைக்கிறது. ஆக இங்கேயும் கம்பெனிகாரர்களின் வளர்ச்சிக்காகவே மானியம் வழங்கப்படுகிறது.  இந்தியாவில் விவசாயிகளுக்கு மானியம் என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

2014ம் ஆண்டு பாலி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அன்றைய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து விவசாயிகள் எழுந்து வந்து விடக்கூடாது என்று மண் அள்ளிப் போட்டார். அதாவது இந்திய விவசாயிகளுக்கான மானியம் என்பது 10 சதக்கும் மேல் இருக்க கூடாது. இதை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் அதுவரையில் தான் குறைந்த பட்ச ஆதரவு விலை என்பது தரப்பட வேண்டும். அதன்பிறகு பொதுச்சந்தையில் மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது உலக வர்த்தக அமைப்பு. அன்றைய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு, இந்திய விவசாயத்திற்கு ஒட்டு மொத்தமாக சங்கு ஊதிவிட்டார். அந்த நான்கு ஆண்டுகள் கெடு முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத் தான் சொல்ல ஆரம்பித்துள்ளனர் அமெரிக்க எம்.பிக்கள். இனி உலக சந்தையில் தான் கொள்முதல் செய்ய வேண்டும். குறைந்தபட்ச அதரவு விலை கொடுத்து இந்திய விவசாயிகளிடம் கொள்முதல் செய்யக்கூடாது என்று கடிவாளம் போடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

போராட்டம்

அமெரிக்க எம்.பிக்கள் 28 பேரும் இந்தியாவில் கோதுமை விவசாயிகளுக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதே போல் ஆஸ்ரேலியாவும், பிரேசிலும் கரும்பு விவசாயிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இந்த ஓலம் நாளைக்கு நெல்லுக்கும், புல்லுக்கும் கூட வரலாம். ஆனால் ஆட்சியாளர்கள் இந்திய விவசாயிகளையோ அல்லது மக்களைப்பற்றியோ கவலைப்படாமல் வளர்ந்த நாடுகளின் வாலை பிடித்து அவர்களுக்கு சலாம் போட்டு வருகிறார்கள். 1991க்குப் பிறகு வேளாண் சமூகத்தை மூழ்கடித்திருக்கும் நெருக்கடியால் மிகவும் மோசமாக்கப்பட்டுள்ளன. வேளாண் வளர்ச்சி விகிதம் இந்தியாவில் குறைந்துள்ளது. அரசின் பொது முதலீடும் குறைந்துள்ளது. மானியங்கள் குறைக்கப்பட்டு இடு பொருள் விலை அதிகரித்திருக்கிறது. தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் மக்களை கொள்ளையடிக்கும் இறக்குமதியின் பெரும் வரவுக்கே வழி வகுத்து கொடுத்துள்ளன. அதன் விளைவாக பல பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்ததால் அனைத்து பயிர்களின் லாப விகிதம் சுருங்கி விட்டது. தடையற்ற வர்த்தகம் ஓர் அமைப்பாக இன்றைக்கு உலகம் முழுவதும் மதிப்பிழந்து நிற்குகிறது. வளர்ந்த நாடுகள் கூட நம்பகமான நிறுவனம் என்று உலக வர்த்தக அமைப்பை நினைக்கவில்லை. அதனால் தான் அதிக அளவிலான பிராந்திய இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அந்தந்த நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. உலக வர்த்தக அமைப்பு பயனுள்ளதாக இருக்குமென்றால் இத்தகைய புதிய ஒப்பந்தங்கள் ஏன் தேவைப்படுகின்றன?

ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆசியா முழுவதும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் வேளாண் சமூகங்களில் அழிவையே ஏற்படுத்தியுள்ளன. எனவே இந்திய அரசு உலக வர்த்த அமைப்பின் ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறி இந்திய விவசாயிகளை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான திசை வழியில் இந்திய அரசாங்கம் செல்வதற்கு நாம் வலுவான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

- கே.பி.பெருமாள்

Pin It