“கனம் கோர்ட்டார் அவர்களே! ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் தூங்கும் போது அவர் காலை நக்கலாமென்று போனேன். அதே மாதிரிச் செய்தேன்! அவர் திடீரென்று விழித்துக் கொண்டு, “சீ! நாயே” - என்று அதட்டி, காலால் உதைத்தார்! ஆதலால் பக்தி வரும் போதெல்லாம் அவர் காலை நக்குவதற்கு எனக்குப் பிரஜா உரிமை வழங்க வேண்டும்”- என்று உயர் திருவாளர் உதவாக்கரைப் பிள்ளை வழக்குத் தொடர்ந்தாராம்!
நீதிபதி கே. எஸ். பி. அய்யங்கார் என்பவர் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தாராம்:-
“ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் தூங்கும் போது அவர் காலை நக்குவதற்கு உமக்கு உரிமை கிடையாது. அந்த உரிமை நாய்க்குத் தானுண்டு. ஆதலால் தான் அவர் உம்மை “சீ! நாயே!” என்று எட்டி உதைத்தார். பக்தி மிஞ்சினால் அவர் அநுமதி பெற்று அவர் மலத்தை வாரிக் கொட்ட வேண்டுமென்றாலும் வாரிக் கொட்டலாம். கோர்ட்டாருக்கு ஆட்சேபணையில்லை!” -இந்த அற்ப சங்கதிக்காக எந்தக் கிறுக்கனாவது கோர்ட்டுக்குப் போவானா என்று சிலர் கேட்கலாம்.
இதோ, படியுங்கள்! கிருஷ்ணசாமி முதலியார் என்பவரும் அவர் மனைவி தாயாரம்மாளும் ரமணரிஷியின் சமாதியைத் தொட்டு வணங்க வேண்டுமென்று கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தனர்!
“அர்ச்சகர் மூலமாக இல்லாமல் இவர்கள் தாங்களாகவே சமாதி பூஜை செய்தது தவறு; இனி அவ்விதம் செய்தால் போலீசார் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்,” - என்று நீதிபதி ஏ. எஸ். பி. அய்யர் தீர்ப்புக் கூறி விட்டார்.
‘என்ன அக்கிரமமான தீர்ப்புப் பார்த்தீர்களா? சமாதியைத் தொட்டுப் பூஜை செய்ய உரிமை யில்லையாமே’ என்று சிலர் ஆத்திரப்படலாம்!
எதற்காக ஆத்திரம்? அது தானே நம் நிலைமை? அர்ச்சகன் தொடுகின்ற குழவிக் கல்லையோ பொம்மையையோ நீங்களும் நானும் தொட முடியுமா? அய்யர் - அய்யங்கார் தவிர மற்றவர்கள் நம் கடவுள்களைத் தொட்டால் உடனே அவைகள் அப்படியே கீழே விழுந்து செத்துப் போய் விடுமே!
ரமணரிஷி சமாதிமேல் காக்கை உட்கார்ந்து மலங்கழிக்கலாம்! பல்லியும், கரப்பையும், ஈயும் உட்கார்ந்து அவைகள் இஷ்டம் போல் செய்யலாம்! ஆனால் பகவான் ரமண ரிஷியின் பரம பக்தரான கிருஷ்ணசாமி முதலியார் - தாயாரம்மாள் மட்டும் அந்தச் சமாதியைத் தொடக் கூடாது!
ஆகவே ஈ-காக்கையை விட ஈனப் பிறவிகள் இந்த நாட்டிலிருக்கிறார்களா? இல்லையா? ஓ! பக்த சிகாமணிகளே! உங்களைத்தான் கேட்கிறேன். சுயமரியாதைக்காரன் மீது வெறிநாய் போலப் பாய்கின்ற கடவுள் பக்தர்களே! “ஆரியராவது? திராவிடராவது?” என்று கேட்கின்ற சாட்சாத் அக்கிரகாரக் கூலிகளே! சரித்திரம் படிக்காத சவுண்டிகளே! அநுபவம் உணராத அவசரக் குடுக்கைகளே! சமரசம் பேசுகின்ற சந்தர்ப்பவாதிகளே! உங்களைத்தான் கேட்கிறேன்!
இத்தனைக்கும் இந்தத் தீர்ப்பு கடவுள் என்று கூறப்படும் கல்லுச் சாமிக்காகக் கூட அல்ல! பல டாக்டர்கள் பார்த்தும் முடியாமல், புழுப் புழுத்துச் செத்த ஒரு நாலாந்தரப் பார்ப்பானின் சமாதியை நம் ஆட்கள் தொட முடியவில்லையே!
இந்த ஆசாமியினால் நாட்டுக்கு ஒரு இம்மியளவேனும் நன்மை யுண்டா? இவர் “சக்தி” யினால் ஒரு தற்குறியைப் படிப்பாளியாக்கிக் காட்டியிருப்பாரா? சாகின்ற ஒருவனையாவது காப்பாற்றியிருப்பாரா?
பொய்யையும் புளுகையும் கூறி, ஊரார் பணத்தையெல்லாம் சுரண்டி, லட்சம் லட்சமாகச் சேர்த்து வைத்து, ஒரு ஆஸ்பத்திரியோ, ஒரு பள்ளிக் கூடமோ கட்டாமல், அத்தனை சொத்தையும் தன் தம்பி குடும்பத்துக்கு எழுதி வைத்து விட்டுப்போன ஒரு நாலாந்தரப் பார்ப்பானுக்குச் சமாதியாம்! எத்தனையோ நாயன்மார்கள், ஆழ்வார்கள், அவதார புருஷர்கள் ஆகியவரின் கட்டுக்கதைகள் இருக்கின்றனவே! எதிலாவது இந்தப் “பகவானை”ப் போன்ற ஒரு பித்தலாட்டமான “மகரிஷி” யைப் பற்றிப் படித்திருக்கிறோமா? பகவானுக்கு 10 லட்ச ரூபாய்க்குச் சொத்து எதற்காக?
உண்மையான துறவியென்றால் வடலூர் ராமலிங்கரைப் போலவோ- பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்ட காந்தியாரைப் போலவோ - ராஜ்யத்தை வெறுத்து ஓடிய புத்தர் பெருமானைப் போலவோ - தமக்கோ, தம் குடும்பத்துக்கோ ஒரு தம்பிடிகூடத் தேடிக் கொள்ளாதவரல்லவோ துறவி? இவர்களல்லவோ, செயற்கரிய செய்த பெரியார்கள்?”
ஊரைக் கொள்ளையடித்துப் பணஞ் சேர்த்தவன் ஒரு துறவியாம்! அவன் ஒரு ரிஷியாம்! பகவானாம்!
அவன் எப்படியோ போகட்டும்! நம் ஆட்கள் ஏன் தங்கள் மூளையை அடகு வைத்து விட்டு அவன் சமாதியை நாடிக் கொண்டு ஓடுகிறார்கள்? வேண்டுமானால் நம்மவர்களுக்குள்ளே வேறு துறவிகள் - ஞானிகள் இல்லையா? நூற்றுக்கணக்கில் இருக்கிறார்களே!
அந்த ஆள் மட்டும் மோட்சத்துக்கு என்ன குறுக்கு வழி காட்டிவிட்டுப் போயிருக்கிறான்? அப்படி அவசரமாக இந்த உலக பாசத்தைவிட்டு வெளியேற வேண்டுமென்று யாரேனும் ஆசைப்பட்டால், கால் அவுன்ஸ் நைட்ரிக் ஆசிட் அல்லது கால் தோலா கவுரி பாஷாணம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மறு உலகத்துக்குச் செல்லலாமே!
நமது உயர் திரு. உதவாக்கரைகள் மற்றவன் காலை நக்கும் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றனவே! மற்றவனைக் குற்றஞ் சொல்லிப் பயனென்ன?
- குத்தூசி குருசாமி (08-07-1952)
நன்றி: வாலாசா வல்லவன்